யூடியூப் விழியங்களோடு பேசும் இயந்திர தற்கற்றல் நுட்பம் தெரியும். ’புள்ளியியல் இயற்பியல்’ என்னும் துறை இருப்பது தெரிய வந்திருக்கிறது. இயந்திர கற்றலில் இயற்பியலும் சேர்ந்து நரம்பியல் பின்னலமைப்புகளும் பொறி பறந்து நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
இதை எல்லாம் இன்றைய #solvanam கட்டுரையில் அறிமுகம் செய்கிறார் அருணாச்சலம் ரமணன்.
இன்று செயற்கை நுண்ணறிவு காலம். விருதுக்காரர்கள் இலக்கியத்திற்கும் இயற்றறிவு (gen AI)க்கு கொடுக்கும் காலம் எந்த ஆண்டு என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். (என் கணிப்பு – 2030)
அதற்கு முன் சொல்வனத்தில் கட்டுரையை வாசித்து விடுங்கள்.
எனக்கு நம்பி கிருஷ்ணன். எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர். பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர். பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர். சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.
கோட் என்றால் ?
—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.
—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.
நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.
அவருக்கு பிறந்த நாள். ’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.
அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?
பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.
அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.
கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.
திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.
அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்
அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.
இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.
தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,
கூடுதல் கவனம்,
சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்
முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.
உதாரணமாக – S-O-R-R-Y
இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”
தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.
சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?
சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?
சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?
சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?
சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!
கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.
ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.
பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.
பெற்றோர்களுக்கு
பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.
வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.
அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.
ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை
வெந்நீர் சூடு போதுமா?
பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.
சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.
இன்னிக்கு சூடு போதலே என்பார்
இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.
ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.
அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.
அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.
இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.
ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.
ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.
வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…
அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.
அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.
தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.
தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்
தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை
ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!
சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.
வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.
இந்த 318ஆம் இதழைப் பார்த்தால் ஏழு கதைகள் ஏழு மொழியாக்கங்கள்
மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்: 1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்
2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.
3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.
4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.
5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.
கூடவே… யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?
இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்… நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.
சிறுகதை என்றால் அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும் ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும் இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.
இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.
நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?
ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.
நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?
இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா? தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.
இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.
ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”
பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.
கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.
யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன: 1. அந்தத் தற்கொலை எண்ணம் 2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது 3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது
அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.
காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?
எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.
இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.
அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.
So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.
My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…
மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.
விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!
அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.
ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.
அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.
ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது. ’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது. அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது. ’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”. ’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.
விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’. விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,
பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.
எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.
விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம். ’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம். சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம். யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம். நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்). அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.
சென்ற சில இதழ்களாக சொல்வனம் வழக்கமான பிரசுர நாட்களில் பிரசுரமாகவில்லை. இந்த இதழும் (307) தாமதமாக இன்று பிரசுரமாகியது.
அடுத்த இதழ் (308) டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரசுரமாகும்.
இதழ் எண் 309 டிசம்பர் 31, 2023, மாதத்தின் ஐந்தாம் ஞாயிறன்று பிரசுரமாகும். 2024 இலிருந்து வழக்கமான இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறுகளில் இதழ்கள் பிரசுரமாகும்.
நவம்பர் 27ஆம் தேதியிட்ட ‘தி நியு யார்க்கர்’ – தனிப்பட்ட வரலாறு (Personal History) என்னும் தலைப்பில் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.
சொல்வனம் தளத்திலும் அவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குவிமையம் இருக்கவேண்டும்.
உங்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான அடிப்பாடுகளை எழுதி அனுப்புங்களேன்.
அப்படியே அடுத்தடுத்த இதழ்களுக்கான தலைப்புகளையும் பரிந்துரையுங்களேன்.
வெர்னர் ஹெர்சாக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் 11வது பிராயத்தில் தான் தன் முதன் முதல் சினிமாவைப் பார்க்கிறார். அதன் பிறகு பின் வரும் காலத்தில் உலகம் மெச்சும் இயக்குநர் ஆகிறார். குட்டிப் பயலாக இருக்கும்போதே மண்டைக்குள் விதைகளை ஊன்றிவிட வேண்டும்.
அந்த மாதிரி சொர்ணம் சங்கரபாண்டி Sornam Valavan Sankar சின்னஞ்சிறிய வயதிலேயே பள்ளிகளில் திருக்குறளின் முழுப் பதிப்பையும் குறள்நெறிக் கதைகளையும் அந்தந்த வகுப்பிற்கேற்ப அறிமுகம் செய்யும் நூல்களை இல்லந்தோறும், கிராமமெங்கும் ஊராட்சி ஊராட்சியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் விலையில்லாமல் கொடுக்கிறார். தருவதுடன் நிற்காமல், முற்றோதல் போட்டிகளை முன்னெடுக்கிறார். குழந்தைகளின் வாழ்வில் மந்திரமாக, நினைவில் ஊறி நிற்கும் அறநெறிச்சாரமாக வள்ளுவரின் குறள்களை ஊன்றுகிறார்.
இந்த சந்திப்பு அதற்கானதல்ல. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை உருவாக்கியதற்கான விழா. அதன் பின் பல்வேறு அமெரிக்க, கனடா பல்கலைக்கழகங்களில் வெறுமனே தமிழ்மொழியை மட்டும் பயிற்றுவிக்கும் தமிழ்த்துறையாக மட்டும் இயங்காமல், நாற்காலி போட்டு தீவிரமாக தமிழாக்கங்களை புதினங்களை உலகெங்கும் உள்ள அயநாடுகளில் பல்வேறு பாஷைகளுக்கும் ”தமிழ் இருக்கை” முயற்சிகளைத் தொடரும் விழா.
அமெரிக்க பல்கலை எங்கும், பேராசிரியர்கள் மூலம் பல ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வுகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும் தமிழ் இருக்கைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன (“துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்” – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.)
ஹார்வார்டில் வெற்றிகரமாக தமிழுக்கு சிம்மாசனத்தை உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் எளிய விழா. மார்த்தா செல்பி (Martha Ann Selby) சிறப்புரை ஆற்றினார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்ன பிற மொழிகளுக்கும் தற்காலப் படைப்புகளையும் செவ்வியல் இலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்யும் முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டார். இரு மொழியிலும் ஆற்றல் பெற்றவர்களை மூன்று நான்கு மாதம் தங்கவைத்து மொழியாக்கம் செய்வது, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தமிழ் எழுத்தாளர்களை விருந்தினராக அழைத்து அவரின் நாவல்களைக் குவிமையமாக பார்வைக்கு உள்ளாக்கி விமர்சன விழாக்களை நடத்துவது, இலக்கியப் பயிற்சி முகாம் வழியாக மொழியாக்கங்களைப் பரவலாக பல எழுத்தாளர்களிடம் கொண்டு செல்வது, படைப்பாளிகள் பட்டறைகள் – என பல எண்ணங்களையும் திட்டங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்தார்.
இந்த விழாவில் பழைய நண்பர்களான ஃபெட்னா சிவா, சொர்ணம். சங்கர் போன்றவர்களை மீண்டும் பார்க்க முடிந்தது. இது வரை வாசித்து மட்டுமே அறிந்திருந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். போன்றவர்களை சந்தித்து மனம் விட்டு பேச முடிந்தது. அடிக்கடி பார்க்கும் ப்ராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், மாஸாசூஸெட்ஸ் தமிழ் மக்கள் மன்றம், நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் போன்ற பாஸ்டன் வட்டார உறவுகளை புதுப்பிக்க முடிந்தது.
ஹார்வர்டு இருக்கைக்கு அஸ்திவாரம் போட்டு நடத்தி முடித்து அதன் பின்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மருத்துவர் ஜானகிராமன் அவர்களையும், மருத்துவர் சம்பந்தம் அவர்களையும், நேரில் வாழ்த்த முடிந்தது.
பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.
இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?
இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):
1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF)) 2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP)) 3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF)) 4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.) 5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.) 6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.) 7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ) 8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP)) 9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)
இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:
1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்கள் 2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள் 3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள் 4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள் 5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்
சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!
கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.
இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்: 1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)
2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்
அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)
இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)
வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம் காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.
சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde