Monthly Archives: நவம்பர் 2019

சூரியனை சாப்பிடுவது

அறிவியலை மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கியிருக்கிறேன். அப்புறம் புரிந்தோ, புரியாமலோ கணக்கிட்டு அறிவியலில் பட்டமும் பெற்றேன். இப்பொழுது இந்த மாதிரி கவித்துமான நூல்களில் அறிவியலின் பிரும்மாண்டமும் சாத்தியங்களும் சற்றே புலப்படுகிறது:

Eating the Sun: Small Musings on a Vast Universe
by Ella Frances Sanders
160 பக்கங்கள்
ஏப்ரல் 2019 வெளியீடு

இந்த அண்டம் பேரதிசயங்கள் கொண்டது. கோடானுகோடியில் நீ ஒரு துகள். நீதான் அந்த மிக மிகச் சிறிய துகள். அந்தத் துகளுக்குள் கோடானுகோடி ஜீவராசிகள் வசிக்கின்றன. அவையே உன்னை வழிநடத்துகின்றன. அந்த நுண்கிருமிகளில் சில மறைந்து போனால் வாழ்க்கையே முடிந்துவிடும். எந்தக் கிருமியை வரவழைத்துக் கொள்கிறோமோ அதற்கேற்றது போல் கிரக மாற்றம் ஏற்பட்டு புத்தி மாறும்; உடல்நிலை ஆட்டம் காணும். இதெல்லாம் திருமூலர் போல் சித்தாந்த சித்துப் பாடலாகச் சொல்லலாம். ஸ்டீஃபன் ஹாகிங் போல் விதி வகுத்து பாடமாகச் சொல்லலாம். அல்லது இந்தப் புத்தகத்தை எழுதிய எல்லா ஃப்ரான்சஸ் சாண்டர்ஸ் போல் சுவாரசியமாகச் சொல்லலாம்.

சென்னையில் இரண்டே இரண்டு பருவகாலம் மட்டும்தான் இருக்கிறது. மழைக்காலம் & வெயில் காலம். ஆனால், பாடப்புத்தகத்தில் நான்கு காலம் இருப்பதாக சொல்வார்கள். தமிழ் முன்னோர்களும் ஒரு ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரிக்கிறார்கள்:

  1. பின்பனி காலம் – தை, மாசி மாதங்கள்
  2. இளவேனில் காலம் – பங்குனி, சித்திரை
  3. கோடை, முதுவேனில் காலம் – வைகாசி, ஆனி
  4. கார் (மழை) காலம் – ஆடி, ஆவணி
  5. இலையுதிர்காலம் – புரட்டாசி, ஐப்பசி
  6. முன் பனிக்காலம் -கார்த்திகை, மார்கழி

ஏன் இந்தக் காலங்கள் உருவாகின? எப்படி ஒவ்வொரு ஆண்டும் இது அப்படியே தொடர்கிறது? இரவில் தெரியும் நிலா, சில சமயம் காலையிலும் எப்படி தென்படுகிறது?

நான் உட்கார்ந்திருக்கும் அறையில் சில சமயங்களில் மட்டும் வெயில் சுள்ளென்று கணினியின் மேல் அடித்து சிரமப்படுத்தும். எல்லாக் காலங்களிலும் இவ்வாறு நிகழாது. அது எப்படி குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் பூமி சாய்ந்து விடுகிறதா?

மேகங்களில் வரைபடங்கள் பார்த்தவன் நான். சில சமயம் பசு மாடு போல் மேகம் தென்படும்; சில மேகங்கள் குண்டுப் பூனைகள்; மற்றும் சில ஒன்றோடன்று சண்டையிட்டுக் கொள்ளும் அசுரர்கள்! கொடைக்கானலில் காலுக்குக் கீழே மேகம். பனிக்காலத்தில் குளமெல்லாம் மேகம். ஏன்? எதற்கு?? எப்படி???

Art from Eating the Sun: Small Musings on a Vast Universe by Ella Frances Sanders

குறிப்பிட்ட காலத்தில் பூப்பூக்கும்; இப்போதைய நவம்பர் காலகட்டத்தில் எல்லா இலைகளையும் மரங்கள் இழக்கும். பாக்யராஜின் சுந்தரகாண்டத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறது:

பட்டு பூச்சி வாழ்க்கையது
எட்டு நாள் தானே
பறந்து வரும் ஈசலுக்கு
ஒருநாள் தானே
அவை பறக்கலையா
சிறகு விரிக்கலையா
வாழ்வை ரசிக்கலையா

வாழ்க்கையே ஒரு வரவு செலவு
வந்ததே ஒரு வரவு தான்
பூமியில் வந்த கணக்கு முடிஞ்சு
போகிறோம் அது செலவு தான்

கண்ணிமைக்கும் வேளை
வானவில்லின் வாழ்க்கை
அதையெண்ணி வானவில் அழலாமா
அழகியகோலம் கெடலாமா

பூப்பதொரு காலம்
காய்ப்பதொரு காலம்
இலையுதிர்காலமும் ஓர் காலம்
என்றும் இல்லையே கார்காலம்

நடப்பது காலத்தின் ராஜாங்கம்
மீறிட யாருக்கு அதிகாரம்
மெய்யிலா உடல் ஒன்றையே
இங்கு மெய்யென்கிறோம்
கானலை ஒரு கங்கையாய்
தினம் நாம் காண்கிறோம்

குட்டி குட்டியாக எண்பது அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முக்கிய கொள்கையை தெளிதாகக் காட்சிப்படுத்தி ஓவியமாக மனதில் பதிக்கிறார். ஓரிரு பக்கங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கொடுத்து ஒரு தத்துவப் பின்னணியில் அறிவியல் கோட்பாட்டை திறன் பட விளக்குகிறார். குழந்தைகளுக்கும் என்னைப் போன்ற பெரியவர்களுக்கும் உகந்த நூல்.

“[A] lyrical and luminous celebration of science…” — Brainpickings

“Feeds the curiosity of anyone interested in exploring the universe that we exist in.” — Scientific American

“With this pairing of witty illustrations and an open-weave narrative—strong on science but just this side of poetry—Ella Frances Sanders has penned a pocket-sized book vast in ambition.” — Nature

“[Eating the Sun] blends grand scientific principles with an everyday perspective, juxtaposing the cosmic with the quotidian.” — Read it Forward

ஓவியங்களை எவ்வாறு ரசிப்பது?

இந்த மாதிரி நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது. எனினும், ஏதேனும் ஒரு நூலையாவது முழுவதுமாக வாசிக்க வேண்டும். எனவே:

Look Again: How to Experience the Old Masters
by Ossian Ward
Flexibound: 176 pages
Publisher: Thames & Hudson; 1 edition (May 21, 2019)
Language: English

முன்னொரு காலத்தில் ஜான் பெர்கர் (John Berger’s Ways of Seeing – 1972) இந்த நல்ல காரியத்தை செய்தார். இப்பொழுது வார்ட் அதே போன்ற வேலையை செய்திருக்கிறார்.

இன்றைய காலம் தொலைக்காட்சியின் கடந்தகாலம். செல்பேசியில் மூழ்கும் காலம். அந்தச் சின்னத் திரையில் விளையாட்டுக்களோ, சினிமாவோ, குறுந்தொடர்களோ – பார்த்து களிப்பில் மூழுகும் காலம். கணினியிலே சதா சர்வ காலமும் காலந்தள்ளும் காலம். அவர்களைப் போய் பத்து நிமிடம் ஒரேயொரு ஓவியத்தைப் பார்த்து ஆராயுங்கள் என்கிறார் வார்ட்.

அந்தக் கால ஐரோப்பிய ஓவியங்களைப் பார்த்தால் ‘காதலா… காதலா’ கமல்+பிரபு தேவா போல் கிரேசி மோகனுடன் கிண்டல் அடிக்கத் தோன்றலாம். அவற்றை நெருங்குவதற்கு அஞ்சலாம். அது ரொம்பவே பழைய காலம். இப்போது கணினியே ஓவியம் வரையும் காலம். புகைப்படம், ஒளிப்படம், ஃபோட்டோஷாப் என்றெல்லாம் நிஜத்தை உருவாக்கும் பொய்க்காலம்.

வார்டின் வார்த்தைகளில் சொல்வதானால்: “இந்த ஓவியங்களோடு சற்றே சண்டை போட வேண்டும்; அவற்றோடு வாக்குவாதத்தில் ஈடுபடவும். கேள்வி கேட்டு துளைக்கவும். ஒவ்வொரு சித்திரத்தையும் உள்ளுணர்வில் புரிந்துணர்ந்து மதிப்பிட்டு தராசில் நிறுக்கவும். பெரும்வாணரால் உண்டான சித்திரமாக இருந்தாலும், அதை உங்கள் அளவுகோலால் அணுகவேண்டும். அணுகுவதால் உணர்வீர்கள்; உணர்வதால் நெருங்குவீர்கள்; நெருங்குவதால் புரிந்து கொள்வீர்கள்! ”

தபுலா ரஸா

அதற்கு ஆங்கிலத்தின் முதலெழுத்துக்களைக் கொண்டு TABULA RASA உதவியை நாடுகிறார்

  1. time – எந்த காலகட்டம்?
    • just hold on, don’t turn your back yet. Stay there for a few minutes before deciding the work is not for you (that’s one rule i should follow more often.)
  2. association – இந்த ஓவியத்தை உங்கள் வாழ்வில் எப்படி பொருத்துவீர்கள்?
    • find an entry point, look for the tone, story, theme or image that strikes a chord with you.
  3. background – இந்தச் சித்திரத்தின் பின்னணி என்ன?
    • the title, personal history of the artist or short description of a piece should enable you to understand and appreciate it better.
  4. understand – ஓவியம் புரிகிறதா?
    • by this stage you might have a better understanding of the work and if not…
  5. look again – முதலில் இருந்து மீண்டும் புதிய பார்வை பார்க்கவும்
    • everyone deserves a second chance.
  6. assess – கணிப்பு
    • this is where you’re allowed to be subjective and form your own opinion about a work.
  7. rhythm – ஓவியத்தின் ஆதார தாளம், சுருதி
  8. allegory – ஓவியம் எதைக் குறிப்பால் உணர்த்துகிறது?
  9. structure – உள்ளடக்கமும் வடிவ நேர்த்தியும் ஒழுங்கும் கட்டமைப்பும்
  10. atmosphere – சூழல்

அது தவிர…

  1. art as philosophy – கலையை தத்துவ வடிவில் நோக்குதல்
  2. art as honesty – கலையை நேர்மையின் வடிவமாக நோக்குதல்
  3. art as drama – கலையை உணர்ச்சிவயமாக நோக்குதல்
  4. art as beauty – கலையை அழகுணர்ச்சியாக நோக்குதல்
  5. art as horror – கலையை திகில் உணர்வுடன் நோக்குதல்
  6. art as paradox – கலையில் முரண்களை கவனித்து நோக்குதல்
  7. art as folly – கலையை விளையாட்டாக கேளிக்கை உணர்வுடன் நோக்குதல்
  8. art as vision – கலையை தொலைநோக்குப் பார்வை கொண்டு நோக்குதல்

வார்டின் மற்றொரு புத்தகம்: Ways Of Looking (How to Experience Contemporary Art). அதில் தற்கால சிற்பங்களையும் அருங்காட்சியக அமைப்புகளையும் ஆராய அழைக்கிறார். இவ்வாறாக பிரித்து அனுபவித்து ரசிக்கக் கோருகிறார்:

  1. Art as Entertainment – கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு
  2. Art as Confrontation – நம்முள்ளே புதைந்து இருக்கும் நம்பிக்கைகளையும் மனச்சாய்வுகளையும் நோக்கி கேள்வி எழுப்புதல்
  3. Art as Event (Performance Art) – நிகழ்த்து கலை
  4. Art as Message – செய்தி
  5. Art as Joke – விளையாட்டு
  6. Art as Spectacle – காட்சிப்பொருள் + விந்தை = கருவி
  7. Art as Meditation – தியானம் + சிந்தனை = புலப்படுதல்

தமிழில் பி ஏ கிருஷ்ணன் இரு நூல்களை இது போன்று காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக எழுதியிருக்கிறார். ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார். :

  1. மேற்கத்திய ஓவியங்கள் / 288 பக்கங்கள் / முதல் பதிப்பு: ஏப்ரல் 2014
  2. மேற்கத்திய ஓவியங்கள் II / 336 பக்கங்கள் / முதல் பதிப்பு: 2018

“தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து நாளிதழில்’ ‘மேற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு, ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி என்பவை பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”

– பி.ஏ. கிருஷ்ணன்

பதிப்பாளர் குறிப்பு: இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன. இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைல்கற்களாக அமையும் என்பது உறுதி.

உங்களுக்கான வீட்டுப்பாடம்: மூன்று நூலில் ஏதாவது ஒன்றை வாசிக்கவும்.

Vice interviewed the author about Ways of Looking.