Monthly Archives: ஒக்ரோபர் 2019

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

வில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்? அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா? செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்?

செபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:

எவ்வளவு சிரமமாக இருக்கிறது
நிலப்பரப்பை புரிந்து கொள்ள
ரயிலில் அதை கடக்கும்போது
இங்கிருந்து அங்கிருந்து
பேசா மடந்தையாக அது
நீங்கள் மறைவதை பார்க்கும்

(1964)

நிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே? வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?

2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.

அவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.

கதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.

வாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.

1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.

எச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.

“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட
நேரத்தைத் திருடுகின்றன
களவாண்டு போய்விட்டன
ஒன்றும் திரும்ப வரப்போவதில்லை”
ஹொரேஸ் சிறுபாட்டுகள்

நான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:

“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)

“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
திருமூலர்

எல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.

நேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. செபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.

அவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா? நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா? காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம்? நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது?

காலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.

ஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.

பாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.

நாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.

பணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது? எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது? அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது? ஆஸ்டர்லிட்ஸ் நாவல் தேடுகிறது.

மயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.

எல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.

உதவிய நூல்கள்:
1. Austerlitz by W.G. Sebald and James Wood
2. Across the Land and the Water: Selected Poems, 1964-2001 by W.G. Sebald and Iain Galbraith
3. Understanding W.G. Sebald by Mark Richard McCulloh
4. W.G. Sebald – Image, Archive, Modernity by JJ Long
5. The Emergence of Memory: Conversations with W.G. Sebald: Lynne Sharon Schwartz (Editor)
6. W.G. Sebald: Expatriate Writing by Gerhard Fischer
7. W.G. Sebalds Hybrid Poetics by Lynn L. Wolff

அடிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம்

இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.

அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:

திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நனவூஞ்சல்

கல்லூரியை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வைபவம் நடக்கிறது. ஏற்கனவே 96 பார்த்து, அந்தக் கடுப்பில் இருந்தவனை இந்த விழா சுணங்க வைத்தது. 96 மாதிரி, கபீர் சிங் (நீங்கள் தெலுங்கர் என்றால் அர்ஜுன் ரெட்டி) மாதிரி எல்லாம் இனக் கவர்ச்சி என்றவன், இன்றும் பாலுணர்வு என்பவன் நான். நாளைக்கு என்ன நடக்கும் என்பது ரஜினிக்கேத் தெரியாது… எனக்கு என்ன நினைப்பு இருக்கும் என்பதை குணாவே உணர்வார்.

ரீயுனியன் சபலம் இருந்தாலும் விடவில்லை. இணைய எழுத்தாளன்; கௌரவமான உத்தியோகம்; யாருக்குத் தெரியும் சொல்வனம்.காம் பத்திரிகைக்கு எழுதுவதற்குக் கூட பிலானியில் ஆள் கிடைக்கலாம்! போக வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.

அப்பொழுது வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். அந்தக் கால புகைப்படங்களைப் போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது; கொண்டாட்டங்களில் திளைத்த தருணங்களில் க்ளிக்கியது… அதையெல்லாம் பார்த்தால் அப்படியே நினைவோடையும் நனவூஞ்சலும் கொஞ்ச வேண்டுமே!?

இல்லை.

சற்றே வயிற்றைப் பிசைந்தது. எதை மதித்திருக்கிறோம்?

பணம்… செல்வாக்கு… ஸ்டைல்… பெண்களை அலட்சியப்படுத்தி மயக்கும் வித்தை… தற்பாலுணர்வு போன்ற சிறுபான்மையை கூனிக் குறுக வைக்கும் நடத்தை. தலித்தை பார்ப்பானும் பார்ப்பனனை மற்ற சாதியினரும் சாதிக் கண்ணோட்டம் மட்டுமே கொண்டு கணிக்கும் குறுகிய பார்வை.

எதைக் குறித்து பேசிக் கொண்டோம்? எப்படி மற்றவர்களை மதிப்பிட்டோம்? #மீடு இயக்கமோ, அறச்சீற்றமோ — எவ்வளவு அக்கறையையும் புரிதலையும் விவாதிக்கும் தன்மையும் இன்றாவது கொண்டிருக்கிறோம்?

பசுமையான நினைவுகள் என்று மனதில் ஏதோ மூளையின் மூலையில் எங்கோ தங்கி இருக்கிறது. அது அப்படியே பாசி பிடித்து இருக்கட்டும். இன்று போய் கருத்து சொன்னால், “உன் டெசிக்னெஷன் என்ன? என் பெஸ்ட் செல்லர் என்ன? உன் வால்யூவேஷன் என்ன?” என்று மட்டுமே சீர் தூக்கும் சமூகம் போதனையை விரும்பாது. உன்னால் என்ன காரியம் ஆகும், என்ன ஆதாயம் கிடைக்கும், எவ்வாறு வருமானம் பெருகும், எங்ஙனம் நெட்வொர்க் விரிவடையும் என்றே உன்னை கணிப்பிடும்.

உனக்கு அன்று அது முக்கியமானது என்பதை உணர்த்தினார்கள். இன்று எது உனக்கு முக்கியம் என்பதைப் புரிந்த பிறகும் நண்பர்களின் அருகாமைக்கும் தோழிகளின் தோற்றக் கவர்ச்சி எட்டிப் போன செல்ஃபீக்கும் என்ன வாத பரிபாலனம் கிட்டப்போகிறது?

போகாமல் இருப்பது – விட்டுப் போனதை எண்ணி நெஞ்சம் நிறைந்தது.