Monthly Archives: மே 2014

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

ஸ்பானிஷ் மொழி கற்கலாம் வாங்க

’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் படிக்காத பையனைக் குறித்த வசனம் இப்படி வரும்:

“பாரதி +2 எழுதினான். பாரதி +2 எழுதுறான். பாரதி +2 எழுதுவான்.”

ஆங்கிலத்தில் ”He wrote +2; He is writing it; He will write it.” ”அவனுக்குப் படிப்பு வராது” என்பதை ஆங்கிலத்தில் “He doesn’t study well” என்னும் போது குழப்பம் வருகிறது. நேற்றுதான் படிப்பு வராமல் போயிற்றா அல்லது ஆதி காலத்தில் இருந்தே மண்டையில் ஏறாதா?

சோனியா காந்தி ஓய்வெடுக்கிறார். நரேந்திர மோடி நல்ல நிர்வாகி. இந்த இரண்டையும் ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம்?
“Sonia Gandhi is resting. Narendra Modi is a good administrator”

ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் ”is”தான். எப்பொழுதோ செய்த சிறு சறுக்கலாக இருந்தாலும் அதை நிகழ்காலத்தில் விளித்தால் ”is” போடுகிறார்கள்.
மனுஷ்யபுத்திரன் காசுக்காரர். –> Manushyaputhiran is money minded.
அர்விந்த் கெஜ்ரிவால் பயந்தாங்கொள்ளி. –> Arvind Kejriwal is afraid.
பிரியங்கா காந்தி ஊழல்வாதி –> Priyanka Vadra is corrupt.

ஸ்பானிஷ் மொழியில் Ser and Estar என இரண்டு வினைச்சொற்கள். உள்ளார்ந்து இருப்பதற்கு Serம், தற்போதைக்கு இருப்பதற்கு Estarம் பயன்படுத்துகிறார்கள். ”கருணாநிதி காரியமாக இருக்கிறார்” என்றால் இன்று, இப்போதைக்கு கருணாநிதி காரியத்தில் இருக்கிறார் என பொருள்படும். “கருணாநிதி காரியவாதி” என்றால், தன் குடும்ப நலனுக்காக செயல்படுகிறார் என அர்த்தமாகிறது.

பிறவிக் குணமாக இருந்தால் “மன்மோகன் மௌன குரு” எனலாம் – இது ஸ்பானிஷ் Ser.
தற்காலிக லட்சணமாக இருந்தால் “மன்மோகன் மௌனம் சாதிக்கிறார்”. – இது ஸ்பானிஷ் Estar.

உங்களுக்குப் பிடித்த Ser அல்லது Estar பயன்பாடு என்ன?

லண்டன் விக்டோரியா நிலையம்

கடல் மீன் எப்படி எங்கெங்கோ சென்று அலைந்து விட்டு தன் பவளப்பாறைக்குத் திரும்புகிறதோ… குளிர்காலத்திற்காக பறவை எப்படி பலகாத தூரம் பறந்து வேடந்தாங்கலுக்குச் வந்துவிட்டு, தாய் ஏரிக்குத் திரும்ப குடிபெயர்கிறதோ… தெரியாது. எனக்கு கூகுள் வழிகாட்டியும் வேஸ் (waze) கைகாட்டியும் இயக்காவிட்டால், அடுத்த தெருவில் இருந்து கூட சொந்த வீட்டிற்கு வந்து சேரும் திசை தெரியாது.

இப்படிப்பட்டவனுக்கு மொழிப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டால்?

எல்லாக் காக்கைகளும் கா…கா… என்றுதான் கூவினாலும், அண்டங்காக்கையும் ஆனைச்சாத்தனும் கரையும் வித்தியாத்தை பறவையியல் வல்லுநர் சொல்லுவார். அதே போல் லண்டன்காரர்கள் ஆங்கிலத்திற்கும் என்னுடைய ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வல்லுனர் வேண்டாமென்றாலும், “கா…கா…” என்று இரைந்தால், காக்கா வந்து சாதத்தைக் கொத்தித் தின்பது போல், நம் ஆங்கிலமும் எல்லாக் காக்கைகளுக்கும் புரியும் என்னும் மதர்ப்போடு இங்கிலாந்தில் இறங்கினேன்.

நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் “விக்டோரியா கோச் ஸ்டேஷன்”. ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன் அகப்பட்ட முதலாமவரிடம் “விக்டோரியா ஸ்டேஷன் எப்படிங்க போகணும்?” என்றேன்.

அவரோ “அங்கேதான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே போகணும்? முகவரி என்ன?” என ஆதுரமாக விசாரித்தார். இந்த மாதிரி மொழிப் பிரச்சினை வருமென்றுதான், பேப்பரும் கையுமாக அச்செடுத்து வந்திருந்தேன். அதைக் காண்பித்தேன். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம், அண்ணா தெரு, அண்ணா நகர், அண்ணா பஸ் ஸ்டாண்டு, அண்ணா விமான நிலையம் இருப்பது போல், இங்கிலாந்திலும் பெயர் பிரச்சினை. ஒரே ஒருவர்தான். அறிஞர் அண்ணா கட்சிக் கொடிகளில் கை காண்பித்திருக்கிறார். இங்கே அன்னை விக்டோரியா அந்த மாதிரி வழி காண்பிப்பதற்கு பதில், நாஞ்சில் மனோகரன் மாதிரி கையில் மந்திரக்கோலோடு காட்சியளித்தார்.

டெல்லியில் ”பஸ்ஸடா” என்று செல்லமாக அழைப்பது போல், மரூஊ இருந்திருக்கலாம். அல்லது எலிசபெத்தாவது தனி வழி சென்றிருக்கலாம். ஒரு வழியாக அந்தக் கால குதிரை வண்டி நிலையமான இந்தக் கால பேருந்து நிலையத்தை வருவதற்குள் ஆங்கிலத்தை விட ஹிந்தி மட்டும் பேசினால் மகாராணியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என அறிந்தேன்.

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

பாஸ்டன்: பெயர்க் காரணம்

நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.

அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?

செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.

“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

புனித பிம்பங்களை புனைவாக்குவது எப்படி?

Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offence.
Something there is that doesn’t love a wall,
That wants it down.
– “Mending Wall” – Robert Frost

பக்கத்துவீட்டுக்காரரையும் பாசமுடன் பார்க்க அழைக்கும் கவிதைகளை எழுதியவரின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? “ஹார்ப்பர்” பத்திரிகையில் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் கதை எழுதியிருக்கிறார். கொஞ்சம் காட்டமாக; நிறைய உள்மாந்திரமாக; ஆங்காங்கே வம்பு தூவி.

முழுக்க முழுக்க புனைவு என்றால் விட்டுவிடலாம். புகழ்பெற்ற எழுத்தாளனைப் பற்றிய கற்பனை என்று சொல்லிவிடலாம். கற்பனை என்பதால் நிஜ சமாச்சாரங்கள் ஒன்றும் உள்ளே கிடையாது என்றும் விட்டுவிடலாம். ஆனால், ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் எழுதிய சிறுகதைக்கு Fall of Frost (by) Brian Hall புத்தகம் அடிப்படையாக இருந்தது என அடிக்குறிப்பிடிருக்கிறார். அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டார் ராபர்ட் ஃப்ராஸ்ட்?

1. சக எழுத்தாளர்களை மரியாதைக் குறைவாக விமர்சிப்பது: மற்ற கவிஞர்களை எல்லாம் மட்டம்தட்டி தன் புகழைப் பரப்பி இருக்கிறார். தன்னை ஆராதிக்காத எவராக இருந்தாலும், அவர்களுடைய முக்கியமான ஆக்கங்களை தன்னுடைய இலக்கிய தாதாயிஸம் மூலமாக அமுக்கி இருக்கிறார்.

2. குடும்பத்தை சிதைத்தது; ஆறு வயது மகளை துப்பாக்கி முனையில், “அப்பாவா? அம்மாவா? இப்பவே ஒண்ணு தேர்ந்தெடு!” என்று நள்ளிரவு எழுப்பி மிரட்டுகிறார். ‘மானே…தேனே’ என்று கவிதைப் பழகத் துவங்கிய மகனை முளையிலேயே அறுக்கிறார். பதினாறு வயது சிறுமி எவரை பார்த்தாலும், அவர்கள் பின்னே தன் கவிதையைப் பாடி துரத்தியிருக்கிறார்.

3. ஓரிரு படைப்புகளை முன்னிறுத்துயே காலந்தள்ளியது: ரஜினியின் எல்லாப் படத்திலும் பன்ச் வசனம் வருவது போல், தன்னுடைய சிறந்த கவிதையை மட்டும் எல்லா சபைகளிலும் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட தன்னுடைய ஆதர்சம், தன்னுடைய கண் முன்னே சரிவதை இந்தக் கதை புனைவாக்குகிறது. இலக்கியவாதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யலாமா என்னும் கேள்வியை வீசுகிறது. சரித்திரக்கதையை எப்படி புனைகதை ஆக்குவது என காட்டுகிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி போன்ற புனித போப் பிம்பங்களின் ஒன் ஹிட் வொண்டர் ஆக்கங்களை எப்படி கலைப்பது என காட்டுகிறது.

இங்கே இணையத்தில் முழுக்கதையும் கிடைக்கிறது