தடுப்பும் தண்டவாளப் பயணமும்


ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
அ) இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பு கிடையாது.
ஆ) பதவியோ, பணமோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் மதிப்பு.
இ) நூற்றைம்பது கோடி பேரில் 15,000 பேர் இறப்பதெல்லாம் ஒரு சங்கதியே கிடையாது.
ஈ) மறுபிறவி, ஜனனமும் மரணமும் சுழற்சி என்றிருப்பதை இந்தியர்கள் அறிவதால் பிற உயிர்கள் இறப்பதை அலட்சியம் செய்கிறார்கள்.

1984-இல் ‘தி ஹிந்து’ நாளிதழின் கடைசி பக்கங்களைத் தவிர முகப்புப் பக்கத்தையும் படிக்கத் துவங்கிய காலம். நவம்பர் 84 முழுக்க இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்து வாரிசு ராஜீவ் அரசராக ஆன கதையும் அலங்கரித்தது. டிசம்பரில் போபால் விபத்து குறித்து அந்தத் தலைப்புச் செய்தியை பார்த்தபோது, கையாலாகாத்தனமும் கோபமும் ஆத்திரமும் அழுகையும் எல்லாமுமாக குழப்பமாக, இந்த அரசு மீதும், அதன் அதிகாரிகள் மீதும், நாடு மீதும், நாட்டின் விதிகள் மீதும், அசூயை கலந்த வெறுப்பு எழுந்தது.

எனக்குத் தெரிந்த யூனியன் கார்பைட் நிறுவனம் ‘எவரெடி’ (Eveready) பாட்டரி தயாரித்தது. என்னவர்களின் கண்களையும் எண்ணற்றவர்களின் உயிர்களையும் பறிக்கக் காரணமுமாய் இருந்தது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று படங்கள் வந்த காலம். வெள்ளித்திரையில் கண்கவர் நாயகிகள் எளிதில் காதலில் விழுவது போல், திரைப்படங்களில் மட்டுமே புரட்சி வெடிக்கும் என விளங்கத் துவங்கியது. நிஜத்தில் வில்லன்கள் சௌகரியமாக படகுக் கார்களில் பவனி செல்வார்கள். ஐந்தரை இலட்சம் பேரை முடமாக்கினாலும் எந்தவித பின் விளைவுகளும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சொகுசாக அடுத்த கைங்கர்யத்தில் இறங்கி விடுவார்கள்.

எத்தனை சாலை விபத்துகள்?
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இரயில் தடம்புரண்டு, எதிருக்கெதிர் ட்ரெயின் மோதிக் கொண்ட இறப்புகள்?
சூரத்தில் கொடுந்தொற்று, சென்னையில் புயல், கடலில் சூறாவளியில் மீனவர்கள், நிலநடுக்கம், பூகம்பம், மழை வெள்ளம்…
அதெல்லாவற்றையும் விட திறமைக்கு வேலைகொடுக்காத சூழல். கொடும் பசி நிலவிய சமூகம்.

இந்திய தினசரிகளுக்கு எதிர்மறையாய் செய்திகளைத் தருவதில் இருந்த அசுரத்தனமா?
அல்லது நம் நாட்டில் நிஜமாகவே அலட்சியமும் அசட்டைத்தனமும் அசமஞ்சமும் சேர்ந்த நிர்வாகத் திறமையின்மையா?
ஒவ்வொரு அதிகாரியும் லஞ்சம் வாங்கக் கூசாதவர்களாக, அராஜகம் செய்தால் எந்தவித எதிர்விளைவும் கிடைக்காத சாக்கடைத்தனமா?

நெட்ஃப்ளிக்ஸில் ’ரெயில்வே மென்’ (The Railway Men) பார்த்தவுடன் தோன்றியது —> இன்று இதெல்லாம் மாறியிருக்கிறதா?
அல்லது செயல்துடிப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்கள், ‘கடமையைச் செய! பலனை எதிர்பாராதே!!’ ரகமா?

குறைந்த பட்சம் நல்லவர்களும் நேர்மையாக இயங்கியவர்களும் தன்னலம் பாராது இயங்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். என் ‘துரியோதனப்’ பார்வைக்கு அவர்கள் தென்படவில்லை.
பாலும் தேனும் இன்னும் இந்தியாவில் ஓடவில்லை. அவற்றை ஒடவைப்பதற்காக உண்மையாக உழைப்பவர்களை நாமும் கண்டுகொள்ளவில்லை.

நன்றி: https://aqli.epic.uchicago.edu/country-spotlight/india/

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.