Monthly Archives: திசெம்பர் 2016

பாதை தெரியுது பார்?

ழான் பால் சார்த்தர் எழுதிய வெளியேறாதே (“No Exit”) படித்திருப்பீர்கள். அதில் மூன்று தொலைந்து போன ஆத்மாக்கள் ஒருவரையொருவர் காலாகாலத்திற்கும் படுத்திக் கொண்டேயிருக்கும். அந்த மூவரின் முந்தைய வாழ்க்கையின் நுண்ணிய மறந்துவிட வேண்டிய தகவல்களையும் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்து, சமயத்திற்கேற்ப நினைவு கூர்ந்து அசௌகரியமாக்கிக் கொள்ளும். மற்றவர்களை எவ்வாறு கோபத்தின் உச்சிக்குத் தள்ளுவது என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார்கள்.

அதில் இருக்கும் புகழ்பெற்ற வரி: “நரகம் என்பது பிற மாந்தர்கள்” (“Hell is other people.”)

இது குழம்பிக் கொள்ளக் கூடிய கவித்துவமான வரி. எல்லாவிதமான உறவுகளும் நட்புகளும் தவிர்க்கவியலாமல் கசப்பில் போய் முடியும் என்னும் அனர்த்தம் – நேரடி கற்பிதம். ஆனால், மற்றவர் எப்படி நம்மை அவதானிக்கிறார்களோ, அப்படிதான் நாமே நம்மை மதிப்பிடுகிறோம்.. பிறர் எவ்வாறு நினைப்பார்கள் என்பது பொதுபுத்தி ஆக நம் மனதில் தங்கியிருக்கிறது; அதற்கேற்ப நம்மை இலக்காக்கிக் கொள்கிறோம்.

சொல்வனத்தில் வெளியான ’பழனி’ கதை – மற்றவர்கள் எவ்வாறு தங்களின் தீர்ப்பை பழனியின் மீது எழுதுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. வழக்கமான பாணி; சாதாரணமான நடை. ஆனால், அந்தக் கதைக்கு இப்படியொரு பருந்துப் பார்வை பார்க்க முடியும் என்பது — கபாலி பாஷையில் *மகிழ்ச்சி*
mw-hell-is-other-people-natalie-dee-jean-paul-sartre-play_no-exit

பெருநகரங்களின் தனிமை

எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.

அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.

என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.

சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.

காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.

கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.

கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

clock_brain_human_rock_tree_oil_water_flow_house_home_think_alone_art_painting_imagine

அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்

ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல் கிடையாது. அவர்கள் மத்திய கிழக்கு சிக்கலுக்குள் தலையை நுழைப்பதில்லை.

isis_europe_campaign_west_terrorism_timeline_chronology_attacks_deaths_france_belgium_london

நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை.

ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவான ஷியா / ஸன்னி பிரிவினை கோபங்களும் உச்சகட்டத்தை நெருங்கி முழு மதப்போராக மாறிக் கொண்டிருக்கின்றன. பழங்கால எல்லைத் தகராறான பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்குமான போராட்டங்களும் மீண்டும் தலை தூக்கி வன்முறை வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

map_saudi_arabia_africa_gulf_middle_east_yemen

குவைத், மொராக்கோ, ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை இந்தப் பக்கத்து வீடு பிரச்சினைகளைத் தங்கள் நாட்டிற்குள் வராமல் இதுகாறும் பார்த்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால், சுற்றுப்பட்டு பதினெட்டு நாடுகளும் குண்டு போட்டு ஒருவரையொருவரோ, அல்லது ஒரு நாட்டிற்குள்ளேயோ அடித்துக் கொண்டு சாகும்போது, அந்த சிக்கல்களின் பிம்பம் அவர்களிடையேயும் வெளிக்காட்டும் என்னும் அச்சத்தில் பயந்து போயிருக்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் மொங்கோல் படையெடுப்பு தாக்குதலுக்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய அனர்த்தமான சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

காங்கோவில் நடக்கும் சிவில் சண்டைகள் தன்னுடைய 22ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. பெருவில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு 36 வயதாகிறது. ஆப்கானிஸ்தானில் 37 ஆண்டுகளாக உள்ளகப் போர்கள் தொடர்கின்றன.

லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் அரசு முழுமையாக செயலிழந்து உள்ளது. அதன் எச்சமாக பாதுகாப்பின்மையும் தடியெடுத்தவன் தண்டல்காரன் மனோப்பான்மையும் பெருகியிருக்கிறது. இங்கே சொல்லப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மன்னரோ, கொடுங்கோலரோ, தான் மட்டுமே நிற்குமாறு பார்த்துக் கொண்டு, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்த, அனைத்து மக்களையும் ஒன்றுகோர்க்கக் கூடிய குரல்களை அகற்றிவிட்டார்கள்.

சிரியாவில் தாக்குதலுக்குள்ளாகி அகப்பட்டவர்கள் ஈராக்கில் உள்ள உள்நாட்டு சிக்கல்களை பெரிய அளவில் வளர்த்தார்கள். இந்த இரு நாடுகளிலும் இருந்து வெளியேறியவர்கள் துருக்கியிலும் உள்நாட்டுப் போர் மூளும் சூழலை உருவாக்கினார்கள். அடுத்ததாக அவர்களின் குறி ஜோர்டான்; அதன் பிறகு லெபனான். லிபியாவில் இருந்து கிளம்பிய மிச்சம் மீதி புரட்சியாளர்கள் எகிப்தையும் மாலியையும் டூனிஸியாவையும் குறிவைக்கிறார்கள். இங்கே மூன்று போர்க்களங்கள் இப்போது ரத்தபூமியாக மாறிக் காட்சியளிக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் யேமனிலும் வளைகுடா நாடுகளும் ஈரானும் போர்க்கோலம் தரித்து ரஷியாவுடன் இணைந்து எதிரெதிர் அணியில் கொன்று குவிக்கிறார்கள்.

ஸ்விட்சர்லாந்தைப் போல் அமெரிக்காவும் இந்த இடியாப்பச் சிக்கலுக்குள் தலை நுழைக்காமல் ஒதுங்கியிருக்கலாம். அப்படி தள்ளியிருந்தாலும், ‘அமெரிக்கா மட்டும் தலையிட்டு இருந்தால் நம் பிரச்சினையெல்லாம் நொடிப் பொழுதில் தூசாகப் பறந்து போயிருக்கும்!’ என புதிய பரிணாமம் கற்பித்து, அனர்த்தமாக்கி, அமெரிக்காவின் தோழமை நாடுகளான ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் கூட குற்றஞ்சாட்டாமல் தவிர்க்க மாட்டார்கள்.

al_queda_isis_saudi_arabia_islamic_state_yemen

 

சில வருடங்களுக்கு முன்பு கூட யேமன் போன்ற வளைகுடா நாடுகள் சொர்க்கபுரியாக இருந்ததில்லை. உலகில் உள்ள 187 நாடுகளில், 154வது ஏழ்மையான நாடாக, வறுமையான இடமாக யேமன் விளங்கியது. ஐந்தில் ஒரு யேமனியர் பசியால் பட்டினியாகவே இருப்பதாக ஐ.நா. அறிக்கை விட்டது. நல்ல உழைக்கும் வயதில் உள்ள மூன்றில் ஒருவருக்கு வேலை கிடைக்காமல் திண்டாடினார்கள். ஒவ்வொரு வருடமும் நாற்பதினாயிரம் குழந்தைகள், தங்களின் ஐந்தாவது பிறந்த நாளைக் கூட பார்க்க முடியாமல் செத்துக் கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் கூடிய சீக்கிரமே — யேமனில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் என்று கண்டுபிடித்து அறிவித்தும் இருந்தார்கள்.

இந்த மாதிரி மோசமான நிலையில் இருக்கும் யேமன் நாட்டின் மீதுதான் இரானும் சவுதி அரேபியாவும் தாக்குதல் நடத்தி தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்.

யேமனில் இருக்கும் சொற்ப தொழிற்சாலைகளையும் தயாரிப்பு மையங்களையும் வைப்பு கிடங்குகளையும் மருத்துவமனைகளையும் எரிசக்தி ஸ்தாபனங்களையும் மின்சார உற்பத்தி இடங்களையும் பாலங்களையும் குண்டு போட்டு ஏன் தகர்க்க வேண்டும்? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யேமனியர்கள் இந்த சவுதி விமானத் தாக்குதல்களில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடிழந்து, ஊரை விட்டு நாடோடியாக எங்கெங்கோ சென்று ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.  மொத்த யேமனின் மக்கள்தொகை 28 மில்லியன்; அதில் பாதிக்கும் மேற்பட்டோர் — பதினான்கு மில்லியன் யேமனியர்கள் பசியால் வாடுகிறார்கள். அதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்கிறது அல் – ஜசீரா.

The northern side of a camp for displaced people in Amran. About 30 families are sharing a single water tank here.

அம்ரான் நகரத்தில் இருந்து அகற்றபட்டவர்களின் தாற்காலிக இருப்பிடம். இங்கே முப்பது குடும்பங்களுக்கு ஒரேயொரு தண்ணீர் தொட்டி உள்ளது புகைப்படம் – .ரவான் ஷெயிஃப் / குளோபல்போஸ்ட்

இந்த மாதிரி பஞ்சத்திலும் நீர்வளத்திலும் பரிதவிக்கும் நாட்டின் மீது சவுதி அரேபியா ஏன் தாக்குதல் நடத்துகிறது?

எல்லாம் அல் – குவெய்தாவை பலபடுத்தும் நோக்கிலேயே செயல்படுத்தப்படுகிறது. யேமனில் தங்களுக்கென்று தனி நாட்டை அல்க்வெய்தா அமைத்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருமான வரி முதல் இறக்குமதி தீர்வை வரை சகலமும் வசூலிக்கிறது அல்-க்வெய்தா.  இதெல்லாம் போதாதென்றால், வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெட்ரோல் ஏற்றுமதியில் ஈடுபடுவது போன்ற விஷயங்களிலும் முழுமூச்சுடன் அல் க்வெய்தா இயங்குகிறது. தங்களுடைய வைப்பு நிதியில் நூறு மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிப்பாக வைத்திருக்கிறது. அந்த 100 மில்லியன் கொள்ளை தவிர, கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஒரு நாளைக்கு மட்டும் ஒன்றரை மில்லியன் டாலர்கள் லாபம் ஈடுக்கிறது அல் – குவெய்தா. அதே போல் சரக்கு கப்பல் பொருள்களை நாட்டிற்குள் கொணர ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் சுங்கவரி விதிக்கிறார்கள்.

இதெல்லாம் எப்படி உள்ளுர்வாசிகள் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

இரண்டாண்டுகள் முன்பு வரை யேமன் அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தக் கோடிக்கணக்கான வருவாய் மூலம் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது அல் குவெய்தா வாழ்கிறது. ’அல் க்வெய்தா’வோ ராபின்ஹூட் போல் தங்களுக்குக் கிடைக்கும் கோடிகளில் இருந்து ஆயிரங்களை அள்ளி ஏழை யேமனியர்களை நோக்கி வீசுகிறார்கள். கனடாவின் நெக்ஸன் எனர்ஜி (Nexen Energy)யும் ஃபிரான்சின் டோடல் (Total) நிறுவனமும் சம்பாதித்ததை அல்குவெய்தா சம்பாதிக்கிறது. அல் க்வெய்தாவிற்கும் ஐஸிஸ் அமைப்பிற்கும் உலகளாவிய ஆக்கிரமிப்பு எண்ணத்தில் இருந்தாலும் உள்ளூரில் அந்தந்த இடங்களுக்கு நெருக்கமான பெயர்களையும் இஸ்லாமிய ஷரியா சட்டங்களையும் சொல்லி தங்களின் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

பழம்பெருமையை வரைபடத்தில் பார்ப்போம்:

safavid_ottoman_turkey_rulers_moguls_kings_british_before_wars_maps_geography

இந்த மாதிரி ஒரு பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டாமா?

1990 வரை யேமன் இரு நாடுகளாக பிரிந்து இருந்தது. வடக்கு யேமனை ஹௌத்திகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஷியா பிரிவு இஸ்லாம் கோலோச்சியது. இவர்கள் இரான் நாட்டின் நட்பாளர்கள். தெற்கே சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆண்டார்கள். தெற்கு சன்னி இஸ்லாமியர்களுக்கு சவூதி தோழமை நாடு.

ஜனவரி 2011 நடுவில் வந்தது. அரபு வசந்தம் உதித்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சலெ கவிழ்ந்தார். அவர் வீழ்ந்த சமயம் ஹௌத்திகளின் கை ஓங்கியது. அவருக்கு அடுத்தபடியாக வந்த அப்த் ரப்பு மன்சூர் ஹதி என்பவர் ‘நான் எல்லோரையும் அரவணைத்துச் செல்வேன்’ என வாக்குறுதி தந்தார்.

ஆனால், பதவிக்கு வந்தபின்பு இரானின் எதிரி சவுதி அரேபியாவிற்கு மட்டும் விசுவாசமாக நடந்துகொண்டார். ஆட்சியில் ஹௌத்திகளுக்கு எந்தவிதமான அதிகாரத்தையும் மன்னர் ஹதி (Abd Rabbu Mansour Hadi) நல்கவில்லை. செப் 2014ல் வடக்கு ஷியாவிற்கும் தெற்கு சன்னிக்கும் போர் மூண்டது.

சவுதி அரேபியாவிற்கு இது துளிக்கூட ரசிக்கவில்லை. ஏற்கனவே தங்கள் நாட்டிலும் இதே போன்ற உரிமைக்குரல்கள் ஒலிப்பதை சவுதி நசுக்கிக் கொண்டிருந்தது. இப்பொழுதோ அண்டை நாடான யேமனிலும் ஷியா தலைதூக்கிவிட்டால், அடுத்து சவுதியிலும் அடக்கியாளப்படும் ஷியா பிரிவினர் தங்களின் சுதந்திர வேட்கையைத் துவக்கி விடுவார்கள். விளையும் பயிரை யேமனிலேயே கிள்ளுவது சவுதிக்கு நல்லது.

யேமனை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் கேட்கத்தானே ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது! பான் கி மூன் என்ன செய்கிறார்? சவுதி அரேபியாவை கண்டித்து அறிக்கையாவது விடலாமே? அப்பாவி சிறுவர்களையும் ஆயிரக்கணக்கான யேமனியர்களையும் கொல்லும் அவர்களின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்தலாமே…

அப்படியெல்லாம் ஏதாவது வாய் திறந்தால் ஐ.நா. திட்டங்களுக்கு தாங்கள் தரும் நல்கை எல்லாம் ரத்தாகிவிடும் என மிரட்டி, உடனடியாக ஐநா-வின் வாயைக் கட்டிவிட்டார்கள். அந்த மாதிரி ஒரு அறிக்கையை தயார் செய்த 72 மணி நேரத்திற்குள், அந்த கண்டனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது ஐ.நா.

உலகில் உபயோகிக்கப்படும் மொத்த எண்ணெய் கொள்ளளவில் பத்து சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்து உற்பத்தியாகிறது. சவுதியில்தான் எக்கச்சக்க உபரி கையிருப்பும் இருக்கிறது. எனவே சவுதியில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதியின் மீது எப்போதுமே அமெரிக்காவிற்கு எப்போதுமே ஒரு கண் இருக்கும். ஒரு வேளை எதிரி ஈரான் சவூதி நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்த நினைத்தால் அந்த விமானங்களையும் போர்க்கப்பல்களையும் நொடிப்பொழுதில் வீழ்த்த அமெரிக்கா எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறது.

ஆனால், சவூதியின் பிரச்சினையெல்லாம் உள்நாட்டில் இருந்து வருபவை. ஷியா பிரிவினருக்கும் ஆளும் சன்னி இனத்திற்கும் அணையாப் பகை இருக்கிறது. அரபு வசந்தம் மலர்ந்தபோது எல்லோருக்கும் பணத்தை வாரியிறைத்து, அந்த எழுச்சியை தவிடு பொடியாக்கினார் முன்னாள் மன்னர் அப்துல்லா. இப்போதைய அரசர் சல்மானும் அவருக்கு சற்றும் குறையாமல் மாதந்தோறும் பதினான்கு பில்லியன் டாலர்களை செலவழித்து காசை எரிக்கிறார். இதே மாதிரி அள்ளிவிட்டாலும் இன்னும் நான்காண்டுகள் வரை எந்தவிதக் கவலையும் இல்லாமல் சுகபோகமாக வாழ வைப்பு நிதி இருக்கிறது.

அதன் பிறகு?

அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது சவுதி சித்தாந்தம். நான்காண்டுக்குள் சிரியாவைக் கைப்பற்றி விடலாம். இராக்கில் சகோதர ராஜ்ஜியத்தை அமைக்கலாம். யேமனில் இருந்து ஈரானை விரட்டி விடலாம். அல்லது அமெரிக்காவை முழுமையாக சவுதியில் உட்காரவைக்கும் திட்டமாகக் கூட இது இருக்கலாம். இல்லாவிட்டால் அல் குவெய்தா நடத்தும் அராஜக ஆட்சி வருமானங்களை வைத்து புது வியூகங்கள் வகுக்கலாம்.

அடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி முடுவெடுக்க வேண்டிய விஷயம் இது.

முன்னாள் அதிபர் ஒபாமா இரான் ஆதரவு நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சவுதி அரேபியாவை ஆதரித்தார். அப்படியானால், முழுமனதுடன் இரான் எதிர்ப்புக் கொள்கை மற்றும் சவூதி ஆதரவு நிலைப்பாட்டுடன் வரப்போகும் ஹிலாரி க்ளிண்டன் இன்னும் உறுதியாக சவுதியின் செயல்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்:

உசாத்துணை:

1. Yemen is now the world’s worst humanitarian crisis | Public Radio International

2. Contextualizing the ISIS Attacks in Europe | Across the Pond

3. Uncomfortable assumptions about security: the UK vote on support for Saudi Arabia | openDemocracy

 

முந்தைய பதிவு: சவுதி அரேபியாவின் ஏற்றுமதி

மத்திய தர வகுப்பினர்களின் அகமகிழ்வை கருத்துருவகம் ஆக்கும் புனைவு

க்யூபா குறித்தும் சே குவெராவின் எழுத்து குறித்தும் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் புரட்சிகள் குறித்தும் ஹுலியோ கோர்தஸார் என்ன நினைக்கிறார்? அதை எவ்வாறு தன் புனைவில் வெளிப்படுத்தியுள்ளார்? அதற்கு நீங்கள் அவருடைய ‘மறுசந்திப்பு’ கதையை வாசிக்க வேண்டும்.

இந்த சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது.

சேகுவேரா சொந்தமாக எழுதிய ”Reminiscences of the Cuban Revolutionary War” என்னும் அனுபவ நூலின் அடிப்படையில் இந்தக் கதை இயங்குகிறது. சே எழுதிய புத்தகத்தில் வரும் பத்திகளின் மறுபக்கத்தை, கோர்தஸார் நமக்கு இங்கே உணர்த்துகிறார். சந்திப்பில் லூயிஸ் என்பவரும் மருத்துவர் சே என்பவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். லூயிஸ் என்பது அவருடைய அசல் பெயர் அல்ல என்பது கதையின் துவக்கத்திலேயே சொல்லப்படுகிறது. லூயிஸ் என்பது பிடல் காஸ்ட்ரோ.

புரட்சி என்பதும் போராட்டம் என்பதும் காதலியுடன் ஆன முதல் உறவு போல் கனவுகளும் அபிலாஷைகளும் மிக்கவை. ஆனால், விஷயம் நடந்து முடிந்த பிறகு,,.?

தன்னுடைய முகத்தையே முகமூடியாக அனைவரும் அணியுமாறு ஃபிடல் காஸ்ட்ரோ சொல்வது, கதையின் மிக முக்கியமான தருணம். ஃபிடல் என்பருக்கு இருக்கும் சுய லாபம், மற்றவர்களுக்கும் எப்படி நலம் பயக்கும்?

இன்று கிறிஸ்துமஸ். மத்தேயு, மார்க், லூக்கா, ஜான் என்போர் யார்? ஒருவர் மருத்துவர் (சே குவேரா); ஒருவர் மீனவர்; ஒருவர் வரி வசூலிப்பவர்; மற்றொருவர் அறியா பதின்ம வயதுச் சிறுவர். அவர்கள்தான் வேதாகமங்களும் விவிலியமும் எழுதுகிறார்கள். யேசு கிறிஸ்துவை கண்மூடித்தனமாக வழிபட கைகோர்க்கிறார்கள். இந்தக் கதையிலும் பாப்லோ (பால்), லூகாஸ் (லூக்) வருகிறார்கள்.

கடைசியாக இசை. கொர்த்தஸார் எழுதும் கதைகள் எல்லாவற்றிலும் செவ்வியல் இசை முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கதைக்கு Alejo Carpentier -ன் எழுத்தாளுமையை பின்பற்றுகிறார் கொர்த்தசார். அவருடைய நடை என்னவென்றால், வரலாற்று முக்கியமான தருணங்களை இசையை அடிநாதமாகக் கொண்டு நடத்திச் செல்வது. சரித்திரத்தால் சரிபர்க்கக் கூடிய விஷயத்தை லயமும் ராகமும் கீதவொளியும் கலந்து பின்னிப் பிணைந்து தருவது. இந்தக் கதையில் கோர்த்தஸார், மொசார்ட் உருவாக்கிய ‘ஹண்ட்’ (Hunt) நாற்கூட்டு சங்கீதத்தைப் பின்னணியில் ஒலிக்க விடுகிறார்..இசையென்றால் மெதுவாய்ச் செல்லும்; சில இடங்களில் பறக்கும். வேட்டையாடும் போது விரைந்து போகும் கதை, பலியான பிறகு அடங்கி ஒலிக்கும்.

கதையின் இறுதியில் வானத்தைப் பார்க்கிறார் சே குவெரா. அங்கே தெரியும் நட்சத்திரம் செவ்வாயா அல்லது புதனா என்று தெரியவில்லை. செவ்வாய் என்றால் சண்டை. புதன் என்றால் வியாபாரம். வானில் தெரியும் நம்பிக்கை நட்சத்திரம் தோழமையான புதனா அல்லது சதா சர்வகாலமும் போரில் மூழ்கும் செவ்வாய் கிரகமா? இல்லை… வர்த்தகம் என்றாலே சச்சரவு நிரந்தரமா? தோளில் கைபோடும் நட்பான பன்னாட்டுப் பரிமாற்றங்கள் என்றாலும் முரண்பாடுகளிலேயே விடிவெள்ளி மூழ்கிவிடுமா என யோசிக்கிறார்.

கதையை வாசியுங்கள்: ஹுலியோ கோர்தஸார்- தமிழில் :நம்பி கிருஷ்ணன் : சந்திப்பு – சொல்வனம்

நன்றி: Understanding Julio Cortázar by Peter Standish

மெய் பொய்

அசோகமித்திரன்

asokamiththiran-young_solvanam_thanks

புகைப்படம்: சொல்வனம்

பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் எனக்கு நோய் பிடுங்கித் தின்கிறது. இதுவரை பத்துப் பன்னிரண்டு முறை ஆயிற்று. ஓர் ஆண்டு சுரத்துடன் காலும் நடக்க முடியாமற் போய் முடங்கிக் கிடந்தேன். ஒரு முறை மஞ்சள் காமாலை. எப்போதும் ஆஸ்துமா.

இப்படி நோய்கண்டு படுத்திருக்கும் நாட்களில் அதிகம் எழுத முடிவதில்லை. ஒரு முறை மட்டும் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அது 1962ஆம் ஆண்டில். டைபாயிடு சுரம். டைபாயிடு என்று கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால் இரு மாதங்கள் படுக்கையோடும் மருந்தோடும் கிடக்க நேர்ந்துவிட்டது.

1961-1962ஆம் ஆண்டுகள் எனக்கு ஒரு திருப்புமுனைக் காலம். உலகமே ஏதோ முடிவுக்கு வந்துவிடுவது போன்ற எண்ணம். இருமுறை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டேன். இலட்சக்கணக்கில் சில ஜபங்கள் செய்து முடித்திருந்தேன். ஏதோ நாளைக்கே யாரிடமோ கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்கிற பரபரப்பு. அப்போது சுரம் வந்தது. முதலில் நாள் கணக்கில் விடாத அசாத்தியமான தலைவலி. அப்புறம் இதர உபாதைகள். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்கிற நிலை. சுரம் இறங்கிய பிறகும் மூன்று வாரங்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்றார்கள். அப்போதுதான் அந்த மூன்று கதைகளை எழுதினேன். பரபரப்பு கணிசமாக அடங்கிப் போயிருந்தது. சுரம் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்திராவிட்டால் ஏதாவது ஏடாகுடமாக நடந்திருக்கக்கூடும்.

ஆனால் அந்த மூன்று கதைகளைச் சுரம் வந்துதான் எழுதியிருக்க வேண்டுமென்பதில்லை. நான் அவற்றைப் பற்றி முன்பே நிறைய யோசித்து வைத்திருந்தேன். ஆனால் கதைகளைப் பொறுத்த வரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனதில் ஓர் உருவம் பெறவேண்டும். உருவமும் ஓரளவுக்கு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாறவேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி. அதற்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

‘நம்பிக்கை’, ’தப்ப வேண்டியதில்லை’, ‘பிரயாணம்’ ஆகிய இந்த மூன்று கதைகளையும் நான் 1950ஆம் ஆண்டு அளவிலேயே எழுதத் தீர்மானித்து விட்டேன். ஆனால் 1962ல் தான் மூன்றையும் எழுத முடிந்தது. ‘பிரயாணம்’ கதையை முடிக்க இன்னும் கூடச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

இப்போது இம்மூன்று கதைகளைப் பரிசீலனை செய்து பார்க்கும்போது எனக்குச் சிலப் பொதுச் சரடுகள் தென்படுகின்றன. மூன்றிலும் ‘நான்’ வருகிறேன். முதலிரண்டில் பார்வையாளனாகவும் கதை சொல்பவனாகவும்; மூன்றாவதில் கதையிலேயே பங்கு பெறுபவனாக. மூன்றிலும் சாதாரண மானிட நிலைக்கு அப்பாற்பட்டதொன்றைத் தேடும் முயற்சி. ‘நம்பிக்கை’ சம்பிரதாயச் சாமியார் ஒருவரை முன் வைத்து எழுதியது. ‘தப்ப முடியாதது’ ஒருவன் தன் செயலாற்றாமையை ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் Choiceless awareness நிலை எனத் தனக்குத் தானே ஏமாற்றிக் கொள்வது பற்றியது. மூன்றாவது கதையாகிய ‘பிரயாணம்’ ஹட யோக அப்பியாசங்களினால் சமாதி நிலையை எட்டிய போதிலும் அது சாத்தியமாகாமல் போகுமோ என்ற ஐயத்தை உட்கொண்டது. மூன்றிலும் நோயும் சாவும் வருகின்றன. ஆனால் இவைதான் முக்கிய அம்சங்கள் என்றில்லை.

நோய் என்னும் எண்ணத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் கூட மனம் ஏற்றுக்கொள்ள எதிர்க்கிறது. ஆரோக்கியம் என்பதே நாம் ஆரோக்கியமற்றுப் போகும்போதுதான் உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஓர் அடிமன நிலையில் நாம் என்றும் ஆரோக்கியம் பற்றிய நினைப்பு உடையவர்களாக இருப்பதால் தான் நோயை ஏற்க நம்மையறியாமலேயே நம்முள் எதிர்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் விரைவிலேயே ஒரு சமரசமும் செய்துகொண்டு விடுகிறோம். நோய் பற்றி நாம் அளவு மீறி அலட்டிக் கொள்வதில்லை.

நோய் நிலையை ஏற்க மறுத்த ஒரு மேற்கத்தியர் நினைவு வருகிறது. எர்னஸ்ட் ஹெமிங்வே. 1940களின் இறுதியில் அவர் புகழேணியின் உச்சியில் இருந்தார் — பிரமுகராக, எழுத்தாளராக, போர் வீரராக. அப்போது பிலிப் யங் என்னும் ஓர் இளம் பட்டதாரி டாக்டர் பட்டத்துக்கென (Ernest Hemingway: A Reconsideration – Philip Young – Google Books) ஹெமிங்வே படைப்புகளை ஆராய்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஹெமிங்வேயின் ஆதரவு இருந்திருக்கிறது.

ஆனால் நிலைமை மாறத் தொடங்கியிருந்தது. சுமார் இருபது வருட காலம் அதிகம் பிரபலமடையாமல் ஒதுங்கியிருந்த வில்லியம் ஃபாக்னர் திடீரென்று ஓர் உலக எழுத்தாளராகக் கண்டெடுக்கப்பட்டார். காரணம் மால்கம் கவ்லி என்னும் விமர்சகர் ஃபாக்னரின் பல்வேறு நூல்களிலிருந்து சிறப்பானவற்றைத் தொகுத்து, தொகுப்புக்கு விமர்சன அணிந்துரையும் எழுதி வெளியிட வழி செய்தார். இப்போது ஃபாக்னருக்குக் கிடைத்த கவனம் மற்றெல்லா அமெரிக்க எழுத்தாளர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அது மட்டுமல்ல. 1949-ஆம் ஆண்டு நோபல் பரிசு ஃபாக்னருக்கு அளிக்கப்பட்டது.

ஹெமிங்வேயுக்கு இன்னொரு அடி. பத்தாண்டுக் காலம் காத்திருந்த அவருடைய வாசகர்களுக்கு அவர் அடுத்து வெளியிட்ட நாவலான ‘அக்ராஸ் தி ரிவர் அண்ட் இண்டு தி ட்ரீஸ்’ கொஞ்சமும் பிடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் அந்த நாவலை மட்டந்தட்டினார்கள். ‘நியூயார்க்கர்’ பத்திரிகை ஒரு கேலிக் கட்டுரை கூட (The Moods of Ernest Hemingway – The New Yorker) எழுதி வெளியிட்டது. நான் இந்த நாவலைப் படித்தேன். வழக்கமாகவே ஹெமிங்வேயின் கதாநாயகிகள் பலகீனமான வார்ப்புகள் — இதிலும் அப்படித்தான். ஆனால் நாவல் பல இடங்களில், கவிதை நயம் தொனிக்க இருந்தது. அது வரை அவர் அனுபவித்த முக்கியத்துவத்திற்காகவே ஹெமிங்வே பழி வாங்கப்படுவது போலத்தான் தோன்றியது. இந்த வேளையில் பிலிப் யங் ஆராய்ச்சி. பிலிப் யங் அநேகமாக ஹெமிங்வே படைப்புகளையே சார்ந்துதான் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருந்தார். அதன் முக்கிய சாராம்சம் ஹெமிங்வே 1918ல் பலமாகக் குண்டடிபட்டு படுத்த படுக்கையாகக் கிடந்ததன் அதிர்ச்சி, அவர் படைப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்று வாதிட்டிருந்தார். இதை Trauma theory என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நான் படித்தேன். மிகவும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தது. திடீரென்று தன் செல்வாக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இந்த Trauma theory மேலும் குழப்பம் விளைந்திருக்கும் என்று ஹெமிங்வேகருதியிருக்க வேண்டும். யங் ஆராய்ச்சிக்குத் தன் ஆதரவைத் தராததோடு யங் டாக்டர் பட்டம் பெறுவதையும் ஹெமிங்வே எதிர்த்தார் என்று யங் குறை கூறியிருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக ஹெமிங்வே உண்மையிலேயே அப்போது நோயுற ஆரம்பித்தார். முதலில் ஏதோ சரும எரிச்சல், அலர்ஜி என்றிருந்தது. இறுதியில் புத்தி தடுமாற்றம் வரை கொண்டு விட்டிருந்தது. எப்படியோ பெரும்பாடுபட்டு அடுத்த நாவலை எழுதி வெளியிட்டார். ‘தி ஓல்ட் மான் அண்ட் தி ஸீ’. ‘அக்ராஸ் தி ரிவர் …’ நாவல் பகிஷ்கரிப்புக்குப் பரிகாரம் செய்வது போல் இப்புது நாவலை எல்லாரும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். விமரிசகர்கள் பரிசு, புக் கிளப் தேர்வு, புலிட்ஸர் பரிசு, எல்லாவற்றிற்கும் மேலாக நோபல் பரிசு.

இதெல்லாம் ஏதோ தற்காலிகமாகத்தான் ஹெமிங்வேயுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். அவருடைய உடல், மனநிலை தொடர்ந்து பேதமுற்றது. மாதக் கணக்கில் வைத்திய விடுதியில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அவர் அந்த ஆண்டுகளில் அவ்வப்போது எழுதிய படைப்பிலக்கிய எழுத்தை அவர் பிரசுரிக்கவில்லை. நோபல் பரிசு பெற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டில் மனச்சோர்வையும் நம்பிக்கை வரட்சியையும் தாங்க மாட்டாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், அவருடைய வாழ்நாளெல்லாம் திடகாத்திரமும் தன்னம்பிக்கையும் சாகசமும் உற்சாகமும் ஒரு சேர இருப்பவர் என்ற தோற்றத்தை நேரடியாகத் தன் படைப்புகள் மூலமாகவும் மறைமுகமாக அவருடைய சாகசச் செயல்கள் பற்றிய செய்திகள் மூலமாகவும் உண்டு பண்ணியிருந்த ஹெமிங்வே இந்த முடிவு அடைந்தது உலகுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

உண்மையில் ஹெமிங்வே அவ்வளவு பீதியடைந்திருக்க வேண்டியதில்லை. அவருக்குப் படைப்பிலக்கியத்தில் ஒரு சாசுவதமான இடம் உண்டு. அவருடைய நாவல்கள் அநேகமாக நிராகரிக்கப்பட்டு விட்டாலும் அவருடைய சிறுகதைகள் இன்றும் சிறப்பான இலக்கியமாகவே கருதப்படுகின்றன, பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர் படைப்பு பற்றிய பல கண்ணோட்டங்களில் யங் தந்த trauma theoryயும் ஒன்று; இதற்கு அதற்கு மேல் முக்கியத்துவம் இல்லை.

ஆனால் நோய்வாய்ப்பட்டவர்களின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்று யாரால் நிச்சயமாகக் கூற முடிகிறது? இதில் கலாச்சாரப் பின்னணியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்திய எழுத்தாளர்கள் யாரும் நோயால் இப்படி நிலை தடுமாறிப் போய் விடவில்லை. நம் மொழியிலேயே கு.ப.ரா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி போன்றோர் நெடுங்காலம் நோயால் அவதியுற்றார்கள். சுந்தர ராமசாமியாவது ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார், தான் நோய்வாய்ப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு. ஆனால் இவர்களும் இன்னும் பல இந்திய எழுத்தாளர்களும் தாம் அனுபவிக்க நேர்ந்த நோயை விஸ்தரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம்கூட கொண்டிருக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவில்லை.

வெகு நுண்ணியமான வகையில் இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்பீடுகள், முக்கியமாக இந்த உடல், ஜன்மம் பற்றிய மதிப்பீடுதான், நம் இலக்கியத்தில், அதுவும் தற்கால எழுத்தில் கூடச் செயல்படுகிறது என்று கூறத் தோன்றுகிறது. காயமே இது பொய்யடா என்பது அவ்வளவு வேரூன்றியிருக்கிறது.

வெளியான விவரம்: தமிழில் சிறு பத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்

1973 ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய சுவடு-வின் ஐந்தாவது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது. படைப்பாளி லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள் என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அத்துடன் மூன்று பல்கேரியப் படங்கள் பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.

சுவடு அந்தக்கால ஆனந்தவிகடன் அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது. அதன் ஏழாவது இதழ் இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ் என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன. நா. விச்வநாதன் கவிதைகள் – நான்கு பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள். சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் வெளி வந்திருந்தது.

தொடர்புள்ள பதிவுகள்:

1. எழுத்தாளர் ஜெயமோகன்: அசோகமித்திரனின் ‘பிரயாணம்’

2. ஜெகதீஷ் குமார்: அசோகமித்திரனின் பிரயாணம்

3. Hemingway, Style, and the Art of Emotion – David Wyatt – Google Books

4. William Faulkner on Ernest Hemingway
“He has never been known to use a word that might send a reader to the dictionary.”

5. Ernest Hemingway on William Faulkner
– “Poor Faulkner. Does he really think big emotions come from big words?”
– ‘Have you ever heard of anyone who drank while he worked? You’re thinking of Faulkner. He does sometimes — and I can tell right in the middle of a page when he’s had his first one.’