Monthly Archives: ஜூன் 2014

Rape and Sexual Assault on Women: Actions and Questions

1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?

2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?

3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?

4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?

5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?

6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?

7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?

8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?

9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?