அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ!?’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.
நேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.
தற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.
ஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.
வலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே! படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.
சுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு?
சுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.

நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.
சொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்
Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே
தோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.
ஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.
உங்களின் பக்க மதிப்பை அறிய இங்கு செல்லவும்: Google Page Rank Checker – FREE PageRank Calculator
கூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia
உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:
1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.
2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.
3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.
கடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:
இதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064
ஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810
நகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750
அவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233
இடுகுறிச் சொற்கள் (Tags): 5,316
Tamil Blogs | Tamil News | Page rank