புகழ் பெற்ற நாவல்களின் கடைசி பத்திகள். (ஒரு மாறுதலுக்காகத்தான் 🙂 இந்த ஐந்துடன் இந்தப் பதிவுத்தொடர் நிறைவுறுகிறது. மறுமொழிந்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.
என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?
#1. ஜானின் கடுகடுப்பான பார்வை இன்னும் அதிக கடுகடுப்பாக மாறியது. ஒரு செத்த முகத்தின் தோலின் தடிப்பு அவன் முகத்தில் ஏறியது. பல சிலந்திகள் அதில் கூடு கட்டி ஊர்ந்தபடி இருந்தன உடைந்த கதவுகளுக்கிடையில் பலரின் பழமைப் பற்று எலியாய் ஊர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தப்பி ஓடும் மனிதர்களின் அவசரங்கள் கூட அவர்களின் மனதிலிருந்து வெளியில் தப்பி வந்து அடிபட்ட தவளைகள் போல் பின்னங்கால்கள் இழுபட நகர்ந்து நிழலுக்குள் பாதுகாப்பாய்ப் போனதைக் காணப் பரிதாபமாக இருந்தது.
பலரது கடைசி அபயக்குரல் இன்னும் சுவர்களில் ஒட்டியபடி சப்தமெழுப்பிக் கொண்டிருக்கையில், மனிதர்களின் முகங்களிலிருந்து வழியும் அவர்களின் புராதனக் கனவுகளை மிகக் கவனமாக உற்றுப் பார்த்தபடி பால், நடுங்கும் தம் கரங்களில் ஒரு புத்தகத்தைப் பிடித்தபடி நடந்தான். நிமிர்ந்து நின்ற போது, அவனுடைய கண்கள், உடைந்த தொடைகளையும், தரைப் புழுதியில் குப்புறக் கிடந்த மனித மனங்களின் ஆசைகள் என்ற குப்பைக் கூளங்களையும் பார்த்தன. இதழ்களில் லேசாக நகை தோன்றி மறைந்தது.
மீண்டும் இரவு வந்த மறுநாளில் புராதனக் குடிப் பெருமை காயங்களுடன் மறுபடி மறுபடி த்ரையில் விழுந்தது. அப்போது பாலின் முகத்தில் வேதனையுணர்வுகளின் வேர் ஓட, அவன் மனக் குகைக்குள் மறதியும், வௌவால்களும், துப்பாக்கிகளின் மருந்து நெடியும் எழுந்து சஞ்சாரமிட்டன. சிநேகபுரத்தின் புராதனக்குடியினர் கூடும் ஊர் சத்திரத்தின் இடிந்த மணிக் கூண்டில் ஏறி நின்று ஊரைப் பார்த்தான் பால்.
புராதன வார்த்தைகளையும் கதைகளையும் நேசித்த மனிதர்களும் அவர்களுடன் கடந்த காலங்களும் தூரத்தில் செத்துப் போய்க் கிடந்தன. அக்காட்சி, பாலின் மனதில் கொடூர நினைவுகளை எழுப்பின. ஆனாலும் எதிர்காலத்தின் குமாரனான பால் அதற்காய் பச்சாதாபப்படவில்லை.
அப்போது அவ்வூரை விட்டு அதன் எல்லையை நோக்கிச் சிலுவையுடன் புறப்பட்ட வெள்ளைக் கொடி மனிதர்கள் ஊர்வலமாக செல்கையில் அவனைக் கவனித்தனர். அவர்கள் ஏனோ அவனைத் திரும்பிப் பார்த்ததை அவன் தூரத்தில் மணிக்கூண்டில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.
நேயர்களே, இக்கதையை ஒருவர் படித்தாலும், படித்ததைக் கேட்டாலும், ஒருவர் படிக்க இன்னொருவர் கேட்டாலும், நவக்கிரகங்களின் கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள். அந்த அளவு பழமை கொண்டிருக்கிறது இக்கதை. இத்தகைய பழமை ஞாபகங்களில் சிக்கிய * * * கதை, இங்ஙனம் முற்றும்.
#2. அருகே கோவில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு ‘இங்கே வா’ என்று குறிஞ்சி ஆண்ட்வனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறித் தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்குமுன் போய் நின்றாள் அவள்.
அர்ச்சகர் கற்பூர சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய்சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச்சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. ‘துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா’ என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? “அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது” என்று பித்துப் பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.
“பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!”
….
வழியின் இருபுறமும் வெள்ளம் போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறுகொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.
#3. 2. எனது பாத்திரங்களிலேயே மிக அதிகமாக எனது சாயலைக் கொண்டு உருவானவன் செல்லப்பா. எனக்கும் பிரியமானவன்.
1. விசுவம்?
2. செல்லப்பாவைப் போலவே விசுவமும் எனது சில அம்சங்களைக் கொண்டு படைக்கப்பட்டவன் தான். நான் ஒரு ‘இரண்டு கட்சி’ ஆசாமி. எனக்கு உணர்ச்சிகளின் நுட்பமான, எளிதில் பிடிபடாத, நெளிவு சுளிவுகள் எப்படி இஷ்டமோ அப்படியே அறிவுபூர்வமான சர்ச்சையும் ஆய்வும் இஷ்டம். இது ஒரு முரண்பாடு என்றால் இதன் இரு எல்லைகளின் பிரதிபலிப்புகளே செல்லப்பாவும் விசுவமும். செல்லப்பா உணர்ச்சியே வடிவானவன். விசுவம் அறிவே வடிவானவன். இது ஒரு தோராயமான விளக்கம்தான், யாரும் முழுதும் உணர்ச்சிப் பிண்டமும் இல்லை, முழுதும் அறிவுச்சுடருமில்லை.
1. அப்படியானால் பத்ரி man of action?
2. ஆமாம், செயல் வீரன். அறிவும் உணர்ச்சியும், (உடனடி பாதிப்புகளை ஏற்படுத்துகிற) செயலும் ஓரிடத்தில் இணைந்திருப்பதில்லையென்பதே வாழ்க்கையின் irony?
1. ஸோ, இந்த irony ‘* *’ ஆதாரச் சரடா?
2. இல்லை, முழுதும் அப்படியில்லை. நாவலில் ஒரு நம்பிக்கைச் சரடு இழையோடுகிறது. அதே சமயத்தில் அது எளிமைப்படுத்தப்பட்ட வகையினதாக இல்லாமல் இன்றைய தலைமுறையினர் அரவணைத்துக் கொள்ளும் விதமாக அமைக்க முயன்றிருக்கிறேன்… இந்தத் தன்மை – credibility – ரொம்ப முக்கியம். இன்றைய சூழ்நிலையில் தர்மம் அதர்மத்தை வென்று விடுவதாக நாவலில் எழுதுதல் ஒரு வெகுளித்தனம், அல்லது போலித்தனம்; சிலர் அந்தரங்க ஈடுபாடின்றி சிரார்த்தமும் சந்தியாவந்தனமும் செய்வது போல (இத்தகையவர்களை இந்நாவல் மெல்லிய புன்னகையுடன் சீண்டுகிறது) வாழ்க்கையின் தர்மத்தையும் நாவலின் தர்மத்தையும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள். நாவலின் தர்மம் கலையுடன் இலக்கிய நேர்மையுடன், தொடர்புடையது. இந்நாவலின் moral centre எனப்படுகிற தார்மீக மையம் பாஸிடிவ்வாகவே இருப்பதை நுட்பமான வாசகன் புரிந்துகொள்வான்; ஆக்க பூர்வமான கவலையையும் (சமூக) சிரத்தையும் பொறுப்புகளையும் கிளர்ந்தெழச் செய்யும் வண்ணம் அதன் ஒட்டு மொத்தமான கட்டமைப்பு அமைந்துள்ளதை உணர்வான்.
…..
இயற்கை என்பதே சாந்தத்தின், ஸத்வ குணங்களின் குறியீடாக…
1. ஆமாம். செல்லப்பா இவ்விதத்தில் ஒரு நவீன போதிஸத்துவன். தத்தம் ‘தனித்துவங்களை’ முடமாக்கிக் கொண்டு ஒரே திசையில் தத்தித் தத்திச் செல்லும் மனிதர்களிடையே…
2. (தொண்டையைக் கனைத்துக் கொண்டு) கடைசியாக, எனக்கு அதிருப்தியளித்த ஒரு விஷயம் பற்றி. செல்லப்பாவின் அம்மாவின் மரணம்… அது அவசியந்தானா?
1. அவள் தன் மருமகளை புதிய தலைமுறைப் பெண்மை பற்றிய ஒரு கொச்சையான ‘பூர்ண விடுதலை’ பிம்பத்தில் பொருத்தி, அந்த பிம்பத்துடன் ஓட்டி போட முயலுகிறாள். ஆனால், ஒரு முக்கிய கட்டத்தில் தான் கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்பதை உணருகிறாள். இது அவளைச் சிதற அடித்து விடுகிறது… moment of truth.
2. நாமெல்லாருமே, ஒரு விதத்தில், சரியோ தவறோ, வெவ்வேறு உருவகங்களின் கைதிகள்தான்; இல்லையா?
1. வெவ்வேறு ‘வேடங்களின்’ கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரிகளை’ உச்சாடனம் செய்து கொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள், ஆண்ன் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ – அல்லது இந்தப் பிம்பளுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் – என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயின், ஒரு alienationனின், கைதிகள். இத்தகைய பல கைதிகளையே ‘* *’ அறிமுகம் செய்கிறது.
#4. அன்று சாவடிக்குப்பம் ஒரே குதூகலமாயிருந்தது. “சாஸ்திரி ஐயாவும் சாருவும் திரும்பி வந்துட்டாங்க” என்னும் செய்தி சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய தினமே பஜனை ஆரம்பித்துவிட வேண்டுமென்று நல்லான் வற்புறுத்தினான். சாயங்காலம் பஜனை ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் ஜனங்கள் ஏராளமாக வந்து கூடி விட்டார்கள். குப்பத்து ஜனங்கள் மாத்திரம்ன்றி, வ்க்கீல் ஆபத்சகாயமய்யர், சாருவின் பழைய வாத்தியாரம்மா முதலியோரும் வந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாயிருந்தபடியால், குப்பத்துத் தெருவில் திறந்த வெளியிலேயே பஜனை நடத்த வேண்டியதாயிற்று.
ஆனால், அன்று பஜனையில் சம்பு சாஸ்திரியினால் பாடவே முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவருக்குத் தொண்டையை அடிக்கடி அடைத்துக் கொண்டது. மற்றவர்கள்தான் பாடினார்கள். காந்தி மகானுக்குப் பிரியமான கீதம் என்று பிரசித்தமான “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டைச் சம்பு சாஸ்திரி பஜனையில் அடிக்கடி பாடுவதுண்டு. அதை மற்றவர்களுக்கும் கற்பித்திருந்தார். அந்தக் கீதம் இன்று பஜனையில் பாடப்பட்டபோது, சாஸ்திரி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.
“எவன் பிறருடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்துவிட்டு அதைப்பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.
“எவன் உலகில் பிறந்தோர் அனைவரையும் வணங்குவானோ, யாரையும் நிந்தனை செய்யமாட்டானோ, மனோவாக்குக் காயங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பானோ, அப்படிப்பட்டவனுடைய தாயே தன்யையாவாள்.
“எவன் (விரோதியையும் நண்பனும்) சமதிருஷ்டியுடன் நோக்குவானோ, எவன் பரஸ்திரீயைத் தன் தாயாகக் கருதுவானோ, எவன் தன் நாவால் ஒரு போதும் பொய் பேச மாட்டானோ, எவன் பிறருடைய பொருளைக் கையால் தொடவும் மாட்டானோ, அவனே வைஷ்ணவன்.
“எவனை மோகமோ மாயையோ அண்டாதோ, எவனுடைய மனத்தில் திடவைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தைக் கேட்டதுமே அதில் ஆழ்ந்து மெய்மறந்து விடுவானோ, அவனுடைய சரீரம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமாகும்.
“எவன் லோபமும் கபடமும் இல்லாதானோ, எவன் காமத்தையும் குரோதத்தையும் விட்டொழித்தவனோ, அப்படிப்பட்ட உத்தமனைத் தரிசிப்பவனது எழுபத்தொரு தலைமுறையும் கரையேறிவிடும்”
இந்தக் கீதத்தைக் கேட்டு வருகையில் சம்பு சாஸ்திரிக்கு இன்றுதான் அதனுடைய உண்மையான பொருளைத் தாம் உணர்வதாகத் தோன்றியது. ‘ஆகா! இந்தப் பாட்டில் சொல்லியபடி உண்மை வைஷ்ணவனாக நாம் என்று ஆகப் போகிறோம்? இந்த ஜன்மத்தில் அத்தகைய பேற்றை நாம் அடைவோமா! அம்பிகே! தாயே! இந்தக் கீதத்தில் வர்ணித்திருக்கும் குணங்களில் நூறில் ஒரு பங்காவது எனக்கு அருளமாட்டாயா?’ என்று தமது இருதய அந்தரங்கத்தில் பிரார்த்தனை செய்தார்.
#5. கடலைத் தாத்தா தேர்தலில் அமோக வெற்றிய்டைந்தார்.
முதல் நாள் அவர் நகரசபைக் கூட்டத்திற்குச் சென்ற காட்சியைப் பெண்கள் எல்லோரும் வாசல் திண்ணையில் நின்றபடி பார்த்து ரசித்தனர். குழந்தைகள் சிமிண்ட் ரோடு வரையிலும் சென்று வழியனுப்பித்துவிட்டு வந்தன.
அன்று கிழவர் போட்டுக் கொண்டு சென்ற புதுச்சொக்காயும் புதுவேட்டியும் ஒரு வார காலத்தில் அழுக்காகிவிட்டன. அவற்றை இரவோடு இரவாகத் தோய்த்துப் போட்டு மறுநாள் காலையில் அவற்றையே மீண்டும் அணிந்துகொண்டு நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார்.
தேர்தல் மூலம் அவர் கையில் மிஞ்சிய காசு ஒன்றிரண்டு மாதங்களிலேயே கரைந்துபோய் விட்டது. ஆனால் அந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவரும் சரி, அவருடைய குடும்பத்தினரும் சரி, வாழ்க்கையை செம்மையாக அனுபவித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்நாட்களில் அவருடைய பேரக் குழந்தைகள் நல்ல நேர்த்தியான உடை அணிந்திருந்தனர். பையன் அன்றாடம் மீன் சந்தைக்குப் போய்வந்தான். கைக்குழந்தைகளை உத்தேசித்து இரண்டு ஆடுகள் வாங்கப்பட்டன. வீட்டிற்கு அவசியமான பாத்திரங்களும் வாங்கப்பட்டன. கிழவர் பீடியை மறந்து சுருட்டுக் குடித்தார்.
வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!
அவருடைய புதுச் சொக்காய் அன்றாடம் துவைத்துக் துவைத்துப் போட்டுக் கொண்டதாலோ என்னமோ வெகுவிரைவில் நைந்து விட்டது. இரட்டை வேஷ்டியிலும் பொட்டுப்பொட்டாகத் துவாரங்கள். வீட்டுச் செலவுக்காகச் சில பாத்திரங்கள் அடகு வைக்கப்பட்டன. நகரசபைக் கூட்டம் முடிந்து கிழவர் வீட்டுக்கு வருகிறபோது குழந்தைகளின் பசி அழுகை அவர் காதை அடைத்தது.
ஒருநாள் காலை கிழவர் தன்னுடைய பழைய மிட்டாய்ப் பெட்டியைக் கண்டெடுத்து அதைத் தூசி போக நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்தார்.
மறுநாள் காலை சட்டை அணியாத வெற்றுடம்புடனும், இடது கையில் மணியுடனும், முண்டாசு சுற்றிய தலைமீது மிட்டாய்ப் பெட்டியுடனும் அவர் குர்ரான் பள்ளிக்கூட வாசலை அடைந்த போது, ‘கடலைத் தாத்தா வந்துட்டாரு டோய்!’ என்று கத்திக் கொண்டே குழந்தைகள் அவரை வட்டமாக சூழந்து கொண்டன.
கடலைத் தாத்தா குழந்தைகள் முகத்தையெல்லாம் பார்த்து வெறித்தார். அவர் முகம் மலர்ந்தது. அவர் கண்கள் கலங்கின.
கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.
Tamil Novel | Ilakkiyam | Thamizh Literature