Monthly Archives: ஏப்ரல் 2023

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?