Monthly Archives: மார்ச் 2013

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Changing the World: One Picture at a Time

பிரபாகரன் பையன் படம் வெளியான பிறகுதான் தமிழ் போராட்டங்களுக்கு எழுச்சி கிடைத்தது என்கிறார்கள். அந்த மாதிரி அந்தக் காலத்தில் எந்த நிழற்படம் அறியாமை நிறைந்தவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது என்று யோசித்தவுடன் இந்தப் புகைப்படம் நினைவிற்கு வந்தது

அறுவடை பொய்த்துவிட்டது. விவசாயத்தை நம்புவது ஆபத்தானது. தொழில் நுட்பமும் போர்களும் மட்டுமே நிலைத்து நீடிக்கக் கூடிய சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த இரண்டையும் இரு கண்களாக அமெரிக்கா வைத்துக்கொள்ள தொடக்கப்புள்ளி எப்பொழுதோ ஆரம்பித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் இணைந்து கொள்ள பல காரணங்கள். இந்தப் படத்தை காட்டியும் உள்ளூரில் அனுதாபம் சேர்க்கலாம். பிரபாகரன் பையன் படத்தைக் காட்டி அனுதாப அலை அடிப்பது போல்…

ஒரு புகைப்படம் சரித்திரத்தின் பாதையை மாற்றியமைக்குமா?

டொரொதியா லாஞ்ச் அப்படித்தான் நினைத்திருக்கிறார். அமெரிக்காவில் வறுமையும் பசியும் பஞ்சமும் தாண்டவமாடிய 1930களின் முகங்களை படம் பிடித்தவர். தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு எதிரே இருந்த தான சத்திரத்தின் முன் நின்ற யாசக வரிசையை படம் பிடிக்க ஆரம்பித்தார்.

migrant_motherபிச்சை எடுப்பதற்கு கூட்டமாக நிற்பவர்களைப் பார்த்தால், ‘இத்தனை பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே!’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்!’ என்னும் அலட்சியப் போக்குதான் தலைதூக்குகிறது. இதைப் புரிந்து கொண்ட லாஞ்சே ஒவ்வொருவரின் முகத்தையும் அவர்களின் சுருக்கம் நிறைந்த கவலை பாவத்தையும் வெளிக்கொணர்ந்தார்.

உலகின் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி விளங்கிய காலம். மும்மாரி மழை பொய்த்த அமெரிக்காவிலோ ’Dust Bowl’ என்றழைக்கப்பட்ட வறட்சி காலம். ஹிட்லருக்கோ ஏற்றுமதியும் தொழில் நுட்பமும் பொங்குகிறது. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கோ கருகிப் போன கதிர்களும் வீழ்ச்சியும் மட்டுமே காணக்கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் சேர்கிறார். குண்டு போடுகிறார். வீழ்ந்த தேசத்தின் புகைப்படம் கொண்டு அமெரிக்கா வீறு கொண்டு எழுகிறது.

வரலாற்றை மட்டும் புகைப்படம் மாற்றுவதில்லை. போர்களையும் மூட்டுகிறது.

Dorothea Lange – “The camera is an instrument that teaches people how to see without a camera.”

Appraising Destination Imagination: Project Outreach: Real to Reel

பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டியில் நடுவர் வேலை கிடைத்த்திருந்தது. முடி நரைப்பதில் இப்படியும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு, மூன்று குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் ஆறேழு மாணவர்கள். அனைத்துக் குழுவும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதியோ பொருளோ சேகரிக்க வேண்டும்; அல்லது தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி பணி புரிந்திருக்க வேண்டும்; அல்லது தங்கள் நோக்கங்களை பரவலாக சென்றடையுமாறு பிரச்சாரம் செய்து சமூகத்தில் மாற்றம் கொணர்ந்திருக்க வேண்டும்.

இப்பொழுது என்னை செய்யச் சொன்னால் கூட தயங்குகிறேன். இந்த வயதில் இத்துணை நண்பர்களையும் தொடர்புகளையும் வைத்திருந்தாலும் அனைவரையும் திரட்டி ஒரு கொள்கைக்காக ஒருங்கிணைத்து களப்பணி செய்ய இயலுவதில்லை. ‘அவன் என்ன நினைப்பானோ’, ‘வாரயிறுதியில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தட்டிக் கழிக்கிறேன்.

நூற்றுக்கணக்கான பாடசாலையில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள்; பரப்புரைகள்; செயலாக்கம் செய்து முடித்தவர்களின் பெருமிதமான பங்களிப்புப் பட்டியல்கள். ரொம்ப நிறைவாக இருந்தது.

யார் வென்றார் என்பதை எப்படி கணக்கிடச் சொன்னார்கள்?

நிறைய காசு திரட்டுவதால் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடாது. அதிக பேரை மனம் மாற்றியதாலோ, மிகப் பெரிய அளவில் கொண்டு சென்றதாலோ வாகை காணமுடியாது. ஃபேஸ்புக்கில் பெரும்பாலான லைக்குகள் கிடைப்பதாலோ, ட்விட்டரில் அதிக நபர்கள் பின் தொடர்வதாலோ முதல் பரிசு கொடுக்கக் கூடாது.

செய்த காரியத்தை எப்படி படிப்படியாக நகர்த்தினார்கள் என்று விளக்குவதிலும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும், அவற்றை எதிர்கொண்ட விதத்தை முன்வைப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்மானித்தோம்.

களப்பணியாளர்களும் பெட்டிசன் கைங்கர்யவாதிகளும்

இணையத்திற்கு வந்த புதிதில் குறிஞ்சி மலர் பூத்தது போல் இல்லாவிட்டாலும், அத்தி பூத்தது போலத்தான் மின்னஞ்சல் வரும். அந்த மாதிரி வரும் மடல்களில் அளவுக்கதிகமாகவே பெட்டிஷன் இருக்கும்.

‘காஷ்மீருக்கு விடுதலை கொடு’
‘சோனியா காந்தியை வெளியேற்று’
‘எலிக்கும் ஆலமரத்திற்கும் திருமண சட்டதிருத்தம் நிறைவேற்று’
‘பொதுவில் கொட்டாவி விட ஒப்புதல் வழங்கு’

இப்படி கலந்துகட்டி இருக்கும். தட்டச்சத் தெரிந்த ஒரே காரணம் மட்டுமல்ல. இருபத்து நான்கு மணி நேர இண்டெர்நெட்டும் இருப்பதால் மட்டுமே தினசரி நாலைந்து பெட்டிசன் விண்ணப்பங்களில் பெயர் போட்டு, முகவரி இட்டு, தொலைபேசி கொடுத்து நிரப்பி இருக்கிறேன்.

வைய விரிவு வலை வயசுக்கு வந்ததும், இந்த முகவரிகளுக்கு கடிதம் போடத் துவங்கினார்கள்….
’பனிக்கரடியைக் காப்பாற்ற பத்து பைசா கொடுத்தால் போதும்!’
‘துப்பாக்கிகளை ஒழிக்க நன்கொடை தாரீர்!’
‘இரத்த தானம் தரமுடியவில்லையா… பணமாக அள்ளித் தரலாமே!’

கொடுக்காதவுடன், செல்பேசியிலும் வீட்டு போனிலும் அழைத்துக் கேட்டார்கள். கூடவே, பெட்டிசனிலும் கையொப்பம் கேட்டார்கள்.

இந்தியா போல் அமெரிக்காவில் தெரு முக்குகளிலோ காபி கடை வாயிலிலோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் சட்டென்று கூடி கதைக்க முடியாது. இந்த மாதிரி impromptu free speech கூட்டங்களுக்கு 144 தடா.

அதனால், பெட்டிசன் நியாயமான உணர்வுபூர்வமான அணுகுமுறை. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று சேர்க்கவும், குட்டி குட்டி ஊர் அன்னியர்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைக்கவும் சாலச் சிறந்த வழி.

அசோக ராஜா காலத்து வழக்கமான இந்தியாவில் எதற்கு இன்னும் பெட்டிசனில் மட்டும் விண்ணப்பத்தைப் போடுகிறார்கள்?

சமீபத்திய புது பத்திரிகைகள்: காத்திருக்கும் நேரம்

விமான நிலையத்தில் காத்திருப்பது வேலையத்த வேலை. ஆனால், காத்திருக்காமல் இருக்க முடிவதில்லை.

பிரியமானவர் வருகைக்காக சில சமயம். நாம் விரைவாக சென்றுவிட்டால், மனதுக்கு இனியவரின் விமானமும் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையில் சென்று பார்க்கிறேன்.

வீட்டில் இருப்பவர்களை துரத்துவதற்காக சில சமயம், சீக்கிரமே கிளம்பி விமான நிலையம் சென்று விடுகிறோம். இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்துக் கொள் என்று மனதை சமானப்படுத்தி, சண்டை சச்சரவு தவிர்க்க இந்த அவசரம் பயன்படுகிறது.

நடுத்தர வர்க்கம் எப்பொழுதுமே பேருந்து நிலையத்திற்கோ இரயில் பயணங்களுக்கோ முந்தின நாளே போய் காத்திருக்கும் வழக்கம் உடையது. அதன் எச்சங்களும், விமான நிலைய வருகைக்கு கால்கோள் இட்டு, வேரூன்றி நிற்கிறது. கொஞ்சம் முன்னாடி போனால், முந்தின ஃப்ளைட்டிலேயே இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஒரு மாமாங்கம் முன்பு ஜார்ஜ் புஷ்ஷும் ஒசாமா பின் லாடனும் செய்த கைங்கர்யத்தால் பதினைந்து நிமிடம் முன்னாடி போய் வானூர்தியில் உட்கார்வது எல்லாம் மலையேறிப் போயாச்சு.

இந்த மாதிரி ஊருக்கு முன்னாடியே கிளம்பி காத்திருக்கும் நேரத்தில் புத்தகக் கடையை மேய்வது ரொம்பவே பிடித்த விஷயம். மேக்சிம், எஃப்,எச்.எம், ஸ்டஃப் எல்லாம் வா…வா… என்று கிளுகிளுப்பூட்டினாலும், புதிதாக என்ன பிடித்திருக்கிறது என்று மேய்ந்ததில் http://www.complex.com/ & http://www.wallpaper.com/ ஈர்த்தது.

வடிவமைப்பு, செய்நேர்த்தி, உள்ளடக்கம், சொந்த சரக்கு, வித்தியாசம் காட்டி அடையாளப்படுத்துதல் என்று பல விதங்களில் கவர்ந்தது.

புத்தகத்திற்கு நன்றி நவிலலா? நன்றியுரைப்பதற்காக புத்தகம் எழுதலா?

ஃபேஸ்புக் தலைவி ஷெரில் சாண்ட்பெர்கு (Sheryl Sandberg) புத்தகம் எழுதியிருக்கிறார். அடுத்த மாதம் நான்காம் தேதி ப்ரூக்ளின் புக்ஸ்மித்தில் வாசகர்களை சந்திக்கிறார். புத்தகத்தின் பெயர் சாய்ந்து கொள் – (‘Lean In: Women, Work, and the Will to Lead’)

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் எழுதுகிறார்கள். நிறுவனத்தின் தலைவர், வக்கீலாக இருந்து நீதிபதியாக விரும்புபவர், நீதிபதியாக இருந்து அரசியல்வாதியாகப் போகிறவர், வழிப்போக்கர், ஆசிரியர், கணினி நிரலி எழுதுபவர், நிரலி எழுதத் தெரியாதவர்… சொந்த வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையாக எழுதத் தெரிந்தால் போதுமானது.

அதைப் புத்தகமாக எடிட் செய்து, கோர்வையாகத் தொகுத்து, உன்னத கோட்பாடுகளை வெளிக் கொணர்ந்து, வாசிப்பவருக்கு சுவாரசியமும் லட்சியப் பாதை வகுப்பதில் புத்துணர்ச்சியும் சாதனைகளுக்கான வழியும் கிடைக்குமாறு அமைத்து நியு யார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர் ஆக்கிவிடுகின்றனர்.

பேஸ்புக் அம்மணி எழுதியது அந்த வகை புத்தகம்.

‘பெண்களே… வீறு கொண்டு எழுக!’
‘நிற்காதே… ஓடிக் கொண்டே இரு’
‘தேங்கி விடாதே… தளும்பினாலும் கொட்டினாலும் பொங்குவது முக்கியம்!’
’சிறப்பாக செய்வதை விட, செய்து முடிப்பதே வீரருக்கு அழகு!’
’நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் இருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?’

இந்த மாதிரி ஆலோசனை + ஊக்க பூஸ்ட் எல்லாம் பில்லியன் டாலர் ஐ.பி.ஓ. கண்டு செட்டில் ஆனவர்கள் சௌகரியமாக சொல்லலாம்.

காந்திஜி சேஃப்டி பின் எடுத்து வைத்துக் கொண்ட நிகழ்வு போல் இந்தப் புத்தகத்திலும் எனக்கு ஒரு மேட்டர் கிடைத்தது. ஒன்பது பக்கத்திற்கு நன்றிகள் போட்டு இருக்கிறார். அது தவிர முன்னுரை, முகவுரை, பின்னுரை என்று தமிழ்ப் புத்தகங்களை மிஞ்சும் அளவு தெரிந்தவர்களையும் விமர்சகர்களையும் நெஞ்சு நக்கியிருக்கிறார்.

என்னுடைய நூலில் நிச்சயம் பத்து பக்கத்திற்காவது வந்தனம், வணக்கம், தோத்திரம், துதி பாடல் இருக்கும்.

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

Designer Fashion houses: Indian Art vs US Capital Business

முதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.

மேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான்? பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது?

மஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.

ஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.

டிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன? அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்? கொஞ்சம் உள்மாந்தரம் கிடைக்கிறது.

H&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.

ராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.

STEM: Ratio of female workers in Software: India vs US

உடன் பணியாற்றுபவர்களில் ஒன்றிரண்டு மகளிர் மட்டுமே இருப்பது, மேற்கத்திய உலகின் கணினியில் குப்பை கொட்டுபவர்களின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று.

சென்னை சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஐம்பது சதவிகிதமாவது பெண் பொறியாளர்கள் இருப்பார்கள். இந்திய கல்லூரிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறது. அந்த சமன்பாடு அலுவல் வேலைகளிலும் வெளிப்படுகிறது.

அமெரிக்க கல்லூரிகளிலும் சம விகிதங்களில் இரு பாலினரும் படிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் கணிதம் / கம்ப்யூட்டர் / தொழில் நுட்பம் போன்ற அறிவியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதற்கு பள்ளிப் பருவத்தில் படிப்பை விட அழகில் கவனம் செலுத்துவதற்கான நிர்ப்பந்த சூழலை குற்றஞ்சாட்டலாம்.

அலுவலில் வெரைட்டியான மனிதர்கள் இருப்பது நிறுவனத்திற்கு முக்கியம். வெள்ளை, கறுப்பு, தாத்தா, இளநரை, கல்லூரி மணம் மாறாத பாலகன், ரூபவதி எல்லோரும் இருந்தால் குழுவில் கலந்து கட்டி வேலை நடக்கும். ஆனால், சௌந்தரிகளுக்கு மனிதவளமும் மார்க்கெடிங்கும் சிறந்த தொழிற்துறையாக அடையாளப்படுத்தி இருக்கும் அமெரிக்காவில் மெலிஸா மேயர்கள் சீ.ஈ.ஓ.க்களாகி விடுகிறார்கள்.

நண்பர்களும் தொடர்புகளும்: அந்தக் கால அந்தரங்கம்

தெருவில் நடக்கிறப்ப, சோபி காலே-க்கு யாரோ தவறவிட்ட டயரி கிடைக்கிறது. தெரிந்தவர் டயரியை புரட்டக் கூடாது என்றுதான் எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதவரின் டயரியை படிக்கலாம். தெரியாதவரின் பெயர் பியர் டி.

டயரியைப் புரட்டிப் பார்க்கிறார். நிறைய முகவரி இருக்கிறது. கூடவே முகவரியில் வசிப்பவர்களின் தொலைபேசிகளும். இதெல்லாம் நடந்த காலம் ஜூன் 1983. எனவே, செல்பேசியில் முகப்புத்தகம் பார்க்காத காலம். கையில் குறிப்பேடு வைத்து எழுதி சேமித்த காலம்.

கிடைத்த டயரியை தொலைத்தவரிடம் சேர்க்கிறார். சேர்ப்பதற்கு முன்பாக, தனக்கும் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொள்கிறார்.

பியர் டி பார்த்து பார்த்து சேகரித்த முகவரிகளின் உரிமையாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சோபி-க்கு ஆர்வம். பியர் டி-யின் தொடர்புகளை தொலைபேசியில் அழைக்கிறார். அவர்களிடம் சென்று டயரிக்கான சொந்தக்காரரைப் பற்றி பேசுகிறார். அதை பத்திரிகையில் வெளியிடுகிறார்.

சோபி காலே சேர்கரித்த வம்புகள் இப்பொழுது பிரென்சு வழியாக ஆங்கிலத்திற்கு வந்தடைந்திருக்கிறது.

The Address Book | Harper’s Magazine

என் ஃபேஸ்புக் பக்கத்து தோழரையோ, டிவிட்டர் பின்பற்றியையோ சோபி காலே தொடர்பு கொண்டால் புத்தகம் எழுதும் அளவு சங்கதி கிடைத்திருக்காது. ஆனால், சமூக வலைப்பின்னல் 2.0ன் தாத்பரியம் புரிந்திருக்கும்.

அ) குடும்ப விவரங்கள், தேடல் விருப்பங்கள், சிந்தனை ஓட்டம் எல்லாம் மின்மடலை குடைந்தால்தான் கிடைக்கும்.

ஆ) நாலாயிரம் நண்பர்களில் நாலு பேரை நேரில் சந்தித்திருக்கிறேன்.

இ) தொழில்நுட்பத்தில் அர்ச்சுனர்; வாசிப்பில் பெஞ்சமின் பிராங்கிளின்; தலைமைப் பண்பில் ஜார்ஜ் வாஷிங்டன். மொத்தத்தில் காந்தியும் ஹிட்லரும் கலந்த மாண்புடன் பழகுபவர் என்று அறியலாம்.