
அக்டோபர் மாதம். முதல் தேதி. 2009ஆம் வருடம். சீனாவின் தலைநகரில் தேசிய தினம் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கல்லூரித் தோழன் பீஜிங் நகரத்து அடுக்கு மாடி விடுதியில் செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்தான். அப்பொழுதே ஒத்திகைகளை ஆரம்பித்து விட்டார்கள். விடுதியின் உப்பரிகையில் இருந்து ’வீடியோ அரட்டை செய்யலாமா’ எனக் கேட்டேன். அவன் பதிலோ, அதிர்ச்சி கலந்த பயத்துடன் ‘வேண்டாம்டா… சுட்டாலும் சுட்டுடுவாங்க!’ என்பதாக இருந்தது.
பீஜிங் நகரத்தில் இருந்த புறாக்கள் எல்லாவற்றையும், ஒன்று கூட விடாமல் கூண்டில் அடைத்து வைத்து இருந்தார்கள். பட்டம் பறப்பதற்கு அதிகாரபூர்வமாகத் தடை விதித்து இருந்தார்கள். தேசிய தினத்தன்று இந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்; அந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்கும் மூடி இருந்தது.
இந்த விழாவும் பவனியும் இன்றோ நேற்றோ உண்டானதல்ல. சிங் (Qing) வம்சாவழியினர் ஆண்ட 1644 முதல் 1912 வரை போர்களில் பெற்ற வெற்றி விழா ஊர்வலமாக இருந்தது. அதன் பிறகு கம்யூனிஸப் புரட்சியின் புண்ணியத்தில் தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு உலா நடத்துகிறார்கள்.
விழாவிற்கென்றே பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த, விவிஐபிக்களும், நிருபர்களும் மட்டுமே அணிவகுப்பை நேரடியாகப் பார்க்க முடியும். உள்ளுர்வாசிகள் எவரும் திருவிழா தேரோட்டத்தைப் பார்க்க இயலாது. தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். சீன டிவி என்ன காட்ட விரும்புகிறதோ, அதை மட்டுமே பார்க்க இயலும். 1984ல் நடந்த விழாவில் ‘ஹலோ டங் ஷாவ்பிங் (Deng Xiaoping)’ என்னும் பதாகையை படம் பிடிக்குமாறு அறிவுறுத்தப் படாததால், தொலைக்காட்சிக் குழுவினர் தவிர்த்துவிட்டனர். கட்சித்தலைமை, அந்தப் பதாகையை வைத்திருந்தவர்களை வெட்டி ஒட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் என்றவுடன், தனியாக படம் பிடித்து, நடுவே கோர்த்து ஒளிபரப்பிவிட்டார்கள்.
2009ல் நடந்த தேசிய விழாவின் சிறப்பசம் என்னவென்றால் ’பீஜிங் பெண்கள் படை’ நடத்திய நேர்த்தியான அணிவகுப்பு ஆகும். முட்டியைத் தொடாத சிக்கென்ற சிவப்பு குட்டிப் பாவாடைகள்; முட்டி வரை நீளும் வெள்ளை சப்பாத்துகள். ”இராணுவத்தில் இத்தனை பதின்ம வயது பதுமைகளா!” என சீனாவிற்கு குடிபெயர நினைக்க வைக்கும் வார்ப்புருத் தோற்றம் கொண்டவர்கள். கொஞ்சம் நாள் தீவிரமாக ஆராய்ந்ததில் அத்தனை பேரும் மாடல் நடிகர்கள் எனத் தெரிய வந்தது.
இவ்வளவு கோலாகலத்திற்கும் நடுவே கோட்டு சூட்டு போட்ட ஜூ ஜின்டாவ் (Hu Jintao) பந்தாவான படகுக் காரில் வந்தார்.
ஆஸ்காரும் இதே போல்தான். கோட்டு சூட்டு போட்டு நீல் பாட்ரிக் ஹாரிஸ் வந்தார். நிறைய பேர் நடனம் ஆடினார்கள். பாடினார்கள். கௌரவிக்கப்பட்டார்கள். நான் டால்பி தியேட்டருக்கு செல்லவில்லை. லாஸ் ஏஞ்சலீஸ் பக்கத்தில் கூட வசிக்கவில்லை. தொலைக்காட்சியில் என்ன காண்பிக்கப்பட்டதோ அதைப் பார்த்தேன். அந்த ஆஸ்கார் நிகழ்வுகள் எல்லாமே கடும் ஒத்திகைக்கு உட்பட்டது. சொதப்பல்கள் கூட நேர்த்தியான நடிப்புகளோ என எண்ணவைக்குமளவு இயல்பாக அரங்கேறும் நிகழ்வைப் பற்றிய குறிப்புகள்:
”எப்பொருள் யார் யார் வாய் எங்கெங்குக் கேட்பினும் அப்பொருளை தரவாக்கி ஆராய்வது அறிவு” என்னும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப, ஹார்வார்டு மாணவன் பென் (@BensOscarMath) யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆருடம் சொல்லியிருந்தார். அவர் சொன்னதற்கேற்பவே அனைத்து விருதுகளும் (ஓரிரண்டைத் தவிர) அமைந்தும் இருந்தன.
எனவே, ஆஸ்கார் பரிசை வென்றவர்களில் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கவில்லை.
ஆஸ்கார் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவதெற்கென்று சில சாமுத்ரிகா இலட்சணங்கள் இருக்கின்றன. முதலாவது அமெரிக்க பாசம். நீங்கள் எடுக்கும் படம் அமெரிக்கரின் நேர்மையையும் தேசத்தையும் அறத்தையும் பாட வேண்டும். இரண்டாவது நகைச்சுவை கேளிக்கைப் படமாக இருக்கக் கூடாது. சொல்லும் விஷயத்தை உருக்கமாக, சோகமாக, கோபமாக சொல்ல வேண்டும். கடைசியாக நிஜத்தில் நடந்ததைத் தழுவி, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் இன்னும் அதிக வாய்ப்பு.
இது பரிந்துரைப் பட்டியலில் வருவதற்கான முஸ்தீபுகள். பரிந்துரையில் ஐந்து அல்லது ஆறு பேர் இடம்பிடிக்கிறார்கள். அவர்களில் இருந்து விருது பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் வாக்களிக்கும் அகாடெமி உறுப்பினர்களை நன்கு கவனிக்க வேண்டும். அவர்களுக்கு, உங்கள் படத்தின் அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டது என்பதை விலாவாரியாக ஊடகங்களில் பேட்டியாகத் தர வேண்டும். எல்லா பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அலசல்களும், ஆராய்ச்சிகளும் இடம்பெற வைக்க வேண்டும். பிரச்சாரமும் அன்பளிப்பும் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, எத்தனைக்கு எத்தனை பரவலாக கொடுக்கப்படுகிறதோ, அத்தனைக்கு அத்தனை வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க: The Average Oscar Campaign Costs $10 Million, And Other Oscar Facts)
இரண்டாவதாக உங்களின் வயது. சாகப்போகிற வயதில் உங்களுக்கு பரிந்துரை கிடைத்தால், ஆஸ்கார் விருது நிச்சயமாகக் கிடைத்துவிடும். இனிமேல், உங்களுக்கு இன்னொரு நல்ல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னும் பயம் ஒரு பக்கம் இருக்கும்; இன்னொரு பக்கம், இத்தனை ஆண்டுகளாக நடித்தும் ஆஸ்கார் வாங்காமல் இறந்துபோனாரே என்னும் பழி வரும் என்னும் நாணமும் அகாதெமி வாக்காளருக்குத் தோன்றும். எனவே, உங்களுக்கு அறுபதைத் தாண்டிவிட்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.
கடைசியாக உங்களுக்கு ஏற்கனவே விருது தராமல் தவறவிட்டதற்கான பிராயசித்தம். ’மூன்றாம் பிறை’ எடுத்தபொழுது ”சிறந்த இயக்குந”ராக பாலு மஹேந்திராவைச் சொல்ல முடியவில்லையா? அதனால் என்ன… ”நீங்கள் கேட்டவை” எடுக்கும்போது கொடுத்துவிடுவோம் என்று முன்பு செய்த பிழைகளை நீக்கிக் கொள்வதற்கான பரிசாக சில சமயம் அமையும்.

Hero’s journey chart from Wikipedia
பார்த்தவுடன் அனுபவித்து ரசித்த பாய்ஹுட் திரைப்படத்திற்கு ஒரேயொரு விருது மட்டுமே கிடைத்தது. நமக்குத் தெரிந்த தூரத்து மாமா பையனுக்கு ஐஐடியில் இடம் கிடைக்காதது போல் லேசாக வருத்தமாக இருந்தது.
இந்த மாதிரி விருதுகளைத் தவறவிட்டவர்களுக்கு சிறந்த இயக்குநருக்காக ஆஸ்காரை வென்ற அலெக்ஸாண்ட்ரோ (Alejandro González Iñárritu) பேச்சு மருந்தாக அமைந்திருக்கும். “இன்று நீங்கள் விருதுகளாகக் கொடுத்து என்னையும் என் படத்தையும் கௌரவித்தீர்கள். நன்றி. உங்கள் அன்பிற்கு தலைவணங்குகிறேன். இன்று நிறைய விருதுகளைப் பெறும் படம் புகழ்பெறலாம்… பெறாமலும் போகலாம். காலம் மட்டுமே ஒரு படைப்பின் நீதிபதி. எந்தப் படம் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை இருபதாண்டுகள் கழித்து, கொஞ்சம் நாள் கழித்துப் பார்த்தால் மட்டுமே தெரிகிறது.”
இண்டெர்ஸ்டெல்லார் திரைப்படத்திற்கு ஆஸ்காரில் இடம் கிடைக்காத வருத்தத்தை, ‘பர்ட் மேன்’ (Bird Man) படப் பேச்சு நிவர்த்தி செய்தது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என எந்த முக்கிய விருதுக்கான ஓட்டத்திலும் இன்டெர்ஸ்டெல்லர் இடம்பெறவில்லை. தந்திரக் காட்சிகள், அரங்க அமைப்பு, இசை, இசைக்கலவை என ஆறுதல் பரிசு போல் சிலவற்றில் தூவி இருந்தார்கள். (சொல்வனம் இதழில் ஜாவா குமார் இந்தப் படத்தைக் குறித்து எழுதிய கட்டுரை)
ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாவிட்டால் என்ன… டிசம்பர் மாதத்திற்கான ’வயர்ட்’ (Wired) இதழ் இன்டெர்ஸ்டெல்லர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை வைத்து தங்கள் இதழைத் தயாரித்து இருந்தார்கள். நோலன் இடது கைக்காரர். எல்லாப் பத்திரிகையையும் கடைசியில் இருந்துதான் படிக்க ஆரம்பிப்பார். அப்பொழுதுதான் சடசடெவென்று பக்கங்களை இடது கை கொண்டு புரட்ட முடியும். அந்த எண்ணத்தின் நீட்சியாகத்தான் ‘மெமண்டோ’ திரைப்படத்தை இறுதியில் இருந்து துவக்கினேன் என்பதில் பத்திரிகையைத் துவங்கி இருந்தார்.
இண்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தை எடுக்க எட்வின் ஏ ஆபட் (Edwin A Abbott) எழுதிய தட்டையுலகம் (Flatland) நாவல் உந்துதலாக அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் முப்பரிமாணத்தில் இயங்கும் விலங்கு ஒன்று இரட்டைப் பரிமாண உலகிற்குள் நுழைகிறது. டிவியில் பார்ப்பது இரட்டைப் பரிமாணம். முக்கோணம், வட்டம், சதுரம், மனித உடல் போன்ற அமைப்பு என்னும் வடிவங்கள் உண்டு. ஆனால், அந்த உலகில் இருப்பவருக்கு எப்படி முப்பரிமாணத்தை, கனசதுரத்தையும் உருளை உலகையும் விளக்குவீர்கள்? இதே போன்ற சிக்கலை நான்கு/ஐந்து பரிமாணமாக யோசிக்க வைப்பதே இண்டெர்ஸ்டெல்லர் கரு.
திரைப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த புத்தக அலமாரியில் ஒவ்வொரு புத்தகமும் கவனமாக பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விரும்பிய நூல்கள்:
1. The Wasp Factory – Iain Banks
2. Selected Poems – TS Eliot
3. The Stand – Stephen King
4. Gravity’s Rainbow – Thomas Pynchon
5. Emma – Jane Austen
6. A Wrinkle in Time – Madeleine L’Engle
7. Labyrinths – Jorge Luis Borges
நிஜ மனிதர்களைக் கூட கணினி மூலமாக வரைபடமாக அசைவூட்டம் கொடுத்து கோச்சடையான் ஆக்கி விடும் தொழில்நுட்ப பிரும்மாண்டத்தின் நடுவில் இண்டெர்ஸ்டெல்லர் வந்து இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் ரோபாட்டுகள், விண்கலன்கள், ஆராய்ச்சி மையங்களின் ராட்சஸ எந்திரங்கள் போன்றவற்றை கணினி கொண்டு வரையாமல், மெய்யாக உருவாக்கி இருக்கிறார்கள். ரோபாட் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசுவதை விட, இயந்திர மனிதன் உள்ள அறையில் அதனுடன் உரையாடுவது மேலும் நடிகரை மெருகேற்றும் என்கிறார் நோலன். திரைப்படத்தில் பிரளயம் வரும். கடுமையான பனிப் பிரதேசம் வரும். செங்குத்தான அதல பாதாளம் கூட தெரியாத வேற்றுகிரகங்கள் தோன்றும். அவை எல்லாம் கண்டுபிடிக்க எரிமலை வெடிக்கும் இடங்களையும் கண்டு அஞ்சாமல் பயணித்த கதையும் சுவாரசியமானது. ஆய்லரின் தேற்றம் என்று தீவிரமான அறிவியலும் உண்டு; இறந்தவர்களுடன் உரையாடல் என்று அமானுஷ்யங்களும் உண்டு.
அதெல்லாம் இருக்கட்டும். ஆஸ்கார் விருதுகள் குறித்து பேச வந்துவிட்டு இண்டெர்ஸ்டெல்லர் குறித்து ஏன் கதை அளக்க வேண்டும்? சிறந்த படத்திற்கான பட்டியலில் இண்டெர்ஸ்டெல்லர் இல்லை. இங்காவது கவனிப்போமே என்னும் நல்லெண்ணம் மட்டுமே காரணம் ஆகும்.
இண்டெர்ஸ்டெல்லர் படத்தைக் குறித்து கருந்தேள் ராஜேஷ் சிறப்பான கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
அப்படியானால் யார் எல்லாம் சிறந்த ஹாலிவுட் படத்திற்கான போட்டியில் இருந்தார்கள்?
அ) அமெரிக்கன் ஸ்னைப்பர் – இது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் எடுத்த படம். தியேட்டர்களில் சக்கை போடு போட்டு மிகப் பெரிய வெற்றியும், மற்ற எல்லா ஆஸ்கார் படங்களும் சேர்த்தால் கிடைத்த லாபத்தை விட இரு மடங்கு பண வரவுக் கொழிப்பும், அவை எல்லாவற்றையும் விட சர்ச்சைகளையும் பெற்று இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை? தொலைதூரத்தில் இருந்து, நூற்றி அறுபது இராக்கியர்களை, புறமுதுகில் சுட்டுக் கொன்றவரின் நிஜக்கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது.
ஆ) பர்ட்மேன் – பல ஆஸ்கார்களை வென்று குவித்த படம். சூப்பர் ஸ்டாராக உலா வந்த ஒரு புகழ்பெற்ற நடிகன், தன்னுடைய மதிப்பு வீழ்ந்த பிறகு எப்படி நடக்கிறான் என்பதை உளவியல் ரீதியாக ஆராய்கிறது.
இ) பாய்ஹுட் – இந்தப் படம் குறித்து நான் எழுதிய விமர்சனம்.
ஈ) தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் – வித்தியாசமான படம். இரண்டாம் உலகப் போர் காலத்து விநோத பழக்கவழக்கங்களும், விடுதி சிப்பந்திகளின் குணாதிசயங்களும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களின் நேர்மையும் – துப்பறியும் த்ரில்லராக வந்திருக்கிறது.
உ) தி இமிடேஷன் கேம் – இரண்டாம் உலகப் போரில் ஆலன் டூரிங் ஆற்றிய பங்கை இந்தப் படம் சொல்கிறது. கூடவே, அவருக்கு இருந்த தற்பால் விழைவை முன்னிலையாக்கி, அதனால் அவர் சந்தித்த இடர்களைப் பேசுகிறது. ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படங்கள், அந்த நபரின் சம்பவங்களை நேர்மையாகச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தப் படம் கற்பனையாக ஜோடிக்கிறது என்று கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. (மேலும் வாசிக்க: Saving Alan Turing from His Friends by Christian Caryl | The New York Review of Books)
ஊ) செல்மா – கொஞ்சமே கொஞ்சம் லிண்டன் ஜான்ஸனை மனிதத்தன்மையுள்ள சாதாரணராகக் காட்டிவிட்டார்கள் என்பதற்காக மற்ற எல்லா விருதுகளிலும் இருந்து ஓரங்கட்டப் பட்ட படம். வெள்ளையர் வழிநடத்தல் இல்லாமல், மார்டின் லூதர் கிங் மட்டுமே முன்னிறுத்தப்படுவதால் சிறந்த இயக்குனர்/நடிகர் என எதிலுமே இடம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இரத்தம் வழிய அடித்ததை எல்லாம் அப்படியே காட்டுவதால் அசூயை வேறு எழுகிறது என விமர்சனத்திற்குள்ளானது.
எ) தி தியரி ஆஃப் எவரிதிங் – அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாகிங் குறித்த படம். அமெரிக்கர்களுக்கு இது போன்ற எழுச்சிப் படங்கள் எப்பொழுதுமே பிடிக்கும். ஒரு மாமாங்கம் முன்பு நாஷ் என்னும் பொருளாதார மேதையையும் அவரின் உடலியல் சிக்கல்களையும் மீறி நோபல் பரிசு வென்றதையும் படமாக்கிய ‘A Beautiful Mind’ நிறைய பரிசுகளை வென்றது. அதே போல் இரண்டு வருடமே வாழ முடியும் என சொல்லப்பட்ட பின் ஐம்பதாண்டுகளாக ஆராய்ச்சியில் திளைக்கும் ஹாக்கிங் குறித்த திரைப்படம். அறிவியல் விஷயங்களைப் பற்றி இரண்டே இரண்டு காட்சிகளில் பேசிவிட்டு, அவரின் குடும்ப வாழ்க்கையை நிறையப் பேசி இருந்தார்கள். அவருக்கு எத்தனை குழந்தை பிறந்தது, உடல் ஊனமான பிறகும் எவ்வாறு குழந்தை பிறந்தது, அவரின் மனைவி இப்பொழுது எவருடன் வாழ்கிறார் என்பதை விலாவாரியாக காண்பித்து இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை வென்றது.
ஏ) விப்லாஷ் – குறும்படத்தில் இருந்து உருவான படம். மூன்று பரிசுகளை தட்டிச் சென்றது.
சாதாரணமாக இத்தனை பேரின் சரித்திரங்கள் திரைப்படமாக வெளியானால், அந்த ஆஸ்கார் விழாவின் துவக்கம் சிறப்பாக இருக்கும். அத்தனை படங்களையும் ஒருங்கிணைத்து ஆடலும் பாடலுமாகத் துவங்கும். விழாவைத் தொகுப்பவரே ஆலன் ட்யூரிங் ஆக வருவார்; அடுத்த நிமிடம் ஸ்டீஃபன் ஹாக்கிங் போல் சக்கரவண்டியில் தோன்றுவார்; துள்ளி எழுந்து மார்ட்டின் லூதர் கிங் போல் சொற்பொழிவாற்றுவார். இந்த தடவை விழாவை ஒருங்கிணைத்த நீல் பாட்ரிக் ஹாரிஸ் அவ்வாறெல்லாம் வித்தியாசப்படுத்தவில்லை. தனக்கு இடப்பட்ட காரியத்தை செவ்வனே நிறைவேற்றினார். மொத்தமாக சொன்ன நாற்பத்தியெட்டு ஜோக்குகளில் ஓரிரண்டுக்கு சிரிப்பு கூட எட்டிப் பார்த்தது.
சிரிப்பை விட கண்ணீர் அதிகம் தென்பட்ட ஆஸ்கார் ஆக 2015 விழா அமைந்து இருந்தது. ‘செல்மா’ படத்தின் பாடலை ஜான் லெஜண்ட் (John Legend) என்பாரும் காமன் (Common) என்பவரும் பாடியது உருக்கமாக இருந்தது. தற்கால நிகழ்வுகளான ஃபெர்கூஸன் போன்ற செய்திகளையும் ஒருங்கிணைத்து பாடினார்கள். (மேலும் வாசிக்க: தொடரும் பன்னிரண்டாண்டுகள் – 12 Years a Slave, திரைக்கு அப்பால்)
இந்தப் பாடலின் போது க்ரிஸ் பைன் (Chris Pine) அழுததை வைத்துக் கொண்டு வெள்ளையினத்தவரின் இரக்கத்தையும் நல்லுள்ளத்தையும் ஊடகங்கள் பெரிதுபடுத்தியதா அல்லது செல்மாவில் மார்டின் லூதர் கிங் ஆக நடித்த டேவிட் (David Oyelowo) கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை தொலைக்காட்சி அதிக நேரம் காட்டியதா என்பதை ஸ்டார் விஜய் டிவியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அசைவூட்ட புகைப்படங்களுக்கு – The 27 Most Important Moments From The Oscars
மேற்பட்ட வருணணைகளுக்கு – Oscars 2015: All the winners, speeches, and best moments – Vox