2022- தமிழ் சினிமா தலை பத்து திரைப்படங்கள்


கோவிட் காலத்தில் இருந்து மீண்ட காலமாக சென்ற ஆண்டை பார்க்கலாம். தொலைக்காட்சிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், ஏனோ தானோவென்று வீட்டில் இருக்கும் ஓடிடி பார்வையாளருக்கான மேம்பட்ட சீரியல்கள், சரவணா ஸ்டோர்ஸும் திமுக பேரப் பிள்ளைகளும் கருப்பை வெளுப்பாக்கும் சினிமாக்கள் மட்டுமே காணக்கிடைத்த இரண்டாண்டுகளில் இருந்து சற்றே விடுதலை கிடைத்த ஆண்டு.

முதலில் புகழ் பெற்ற பத்தை பார்க்கலாம். இந்தப் படங்கள் வசூலைக் குவித்திருக்கலாம். பரவலான பாராட்டைப் பெற்றிருக்கலாம். விமர்சகளிடமிருந்து உங்களின் ஏகோபித்த கவனத்தைக் கோரியிருக்கலாம். வித்தியாசமான தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கலாம். இந்த மாதிரி ஜிகினாக்களும் முக்கிய நடிகர்களும் பெயர் பெற்ற இயக்குநர்களும் இருந்தாலும் இந்தப் படங்களில் நம்பகத் தன்மை இடிக்கிறது. கலையம்சம் என்பது வலிந்து திணிக்கப் பட்டிருக்கும். எல்லோரும் மெச்சுகிறார்கள் என்பதற்காக இந்தப் படங்களை கும்பலோடு கோவிந்தா ஆக நாமும் விதந்தோதக் கூடாது.

அந்த மாதிரி கொடுமையான படங்கள்: (எந்த வரிசையிலும் இல்லை)

  1. யுத்த காண்டம்: நேர்க்கோட்டில் செல்லாத ஒரேயொரு ஷாட்டில் தயாரான முதல் படம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற படம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
  2. இரவின் நிழல்: இரா பார்த்திபன் படம் என்றாலே சற்றே கண் கவசத்துடனும், மூளை கேடயத்துடனும் அணுக வேண்டும். உலகின்  முதல் நான் லீனியர்   சிங்கிள்  ஷாட்  ஃபிலிம் என்பதைத் தவிர முக்கியமானதாக எதுவுமில்லை.
  3. பொன்னியின் செல்வன் – 1பி.எஸ். முதல் பாகம் குறித்து வேண்டிய மட்டும் எழுதியாகி விட்டது. படம் என்றால் உச்சகட்டம் முக்கியம். கட்டுரை என்றால் இறுதி சொற்றொடர் முக்கியம். திரைமேதை என்றால் கடைசிப்படம் கொண்டே நினைவில் வைத்திருப்பார்கள். மணி ரத்தினத்திற்கு  பொ. செ.
  4. பீஸ்ட்: விஜய் படம்: பல கோடிகள் வசூல் செய்திருக்கிறது. ஆங்கிலத்தில் டாப் கன் போன்ற மசாலா படங்களில் இருக்கும் விவரண துல்லியமும் நறுக்கு தெறித்தது போன்ற வசனங்களும் தமிழின் வெகுஜனப் படங்களுக்கு இல்லாதிருப்பது பார்வையாளர்களின் ரசனைக்கான அவமரியாதை.
  5. வலிமை: அஜீத் படம். இன்னும் பார்ப்பதற்கு வலிமையோ துணிவோ இல்லை.
  6. எதற்கும் துணிந்தவன்: நடிகர் சூர்யாவை நம்பி படம் பார்க்க முடியாது என்பதற்கு முன்னுதாரணமாக வந்த படம். அவசர சமையல். இயக்குநர் பாண்டிராஜ் என்று கவனித்திருக்க வேண்டும். ஒரு பிரச்சாரப் படம், ஒரு அடியாள் படம், ஒரு காதல் படம் என்று சுழற்சி முறையில் கதாநாயகர்கள் தங்களின் படங்களை அமைத்துக் கொள்வதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
  7. மாறன்: பத்திரிகையாளர் ஓ பக்கங்கள் ஞாநியுடன் உரையாடும்போது இந்த மாதிரி அதீத கற்பனைகள் எல்லாம் எப்படி சாத்தியமேயில்லை என்று பகிர்ந்து கொண்டார். நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய மாதிரி சொல்லிச் செல்வது திரைப்படம். அது இங்கே புளுகாக அப்பட்டமாக தோன்றுவது போதாமை. நாயகி மாளவிகா மோகன் லட்சணமாக இருக்கிறார் என்பதைத் தவிர வேறெதுவும் மெச்சத்தக்கதாக இல்லை.
  8. காத்துவாக்கில ரெண்டு காதல்: நெட்ஃப்ளிக்ஸில் வரும் படங்கள் எல்லாம் ஒரு கையில் செல்பேசி; இன்னொரு கண்ணில் அலுவல் வேலை. ஒலிச்சித்திரமாக வெள்ளித்திரை டிவி. இப்படி பார்க்க வேண்டும். அப்படி கண்டும் காணாமல் ஓரக்கண்ணால் கூட பார்க்கத் தேவையில்லா படம்.
  9. விக்ரம்: ரஜினியின் படம் வரும்போது எப்படியாவது ஓட்டிவிட வேண்டும்; ஏதோவொன்று நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவரை வேண்டிக் கொள்வேன். கமல்ஹாசனின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் முதல் பாதி அவ்வாறு அமைந்திருந்தது. திரையில் கமல் தோன்றியபின் அவரின் ஆக்கிரமிப்பு இல்லாவிட்டாலும் நம்பமுடியா காட்சியமைப்புகள், நகைப்புக்குள்ளாக்கும் சம்பவங்கள், நெடுங் கொட்டாவியுடன் குட்டி உறக்கத்தையும் வரவைத்த மனோகரா காலத்து வசனங்கள் – எல்லாம் “எப்படா முடியும்” என எண்ணவைக்கின்றன.
  10. ராகெட்ரி – தி நம்பி எஃபெக்ட்: நம்பி நாராயணன் கதை என்று சொல்லிவிட்டு நம்பகத்தன்மைக்கு விக்ரம் சாராபாய், ஏபிஜே அப்துல் கலாம் என்று நிஜ நாயகர்களை உலாவ விடுகிறார்கள். ஒரு பொய்யில் முப்பது சதவிகிதம் மெய் கலந்திருந்தால் உண்மை என்று நம்பி விடுவோம். அவ்வாறு அசல் நாயகன், ஜேம்ஸ் பாண்ட் மதுரை வீரர் என்றெல்லாம் கட்டியம் கூறும் பிரச்சார விளம்பரம்.

சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 12 தமிழ் திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் படங்கள்:

  1. இரவின் நிழல்
  2. கார்கி
  3. ஓ2
  4. நட்சத்திரம் நகர்கிறது
  5. ஆதார்
  6. மாமனிதன்
  7. கசடதபற
  8. பஃபூன்
  9. இறுதிப்பக்கம்
  10. பிகினிங்
  11. யுத்த காண்டம்
  12. கோட்

ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன. இதுதவிர இந்தியன் பனோரமா பிரிவிலும் ஒவ்வொரு ஆண்டும் 15 இந்திய படங்கள் தேர்வு செய்யப்படும். அதில்,

  1. மாலை நேர மல்லிப்பூ
  2. கடைசி விவசாயி
  3. போத்தனூர் தபால் நிலையம்

ஆகிய 3 தமிழ் படங்கள் தேர்வாகி உள்ளன. இது போன்ற மாற்றுப்படங்களில் கீழ்க்கண்டவற்றில் பெரும்பாலான படங்களை இன்னும் பார்க்கவில்லை. இவை பரவலாகக் கொண்டாடப்பட்டவை. நிஜ மாந்தர்களை முன்னிறுத்துபவை. அதிகம் கவனம் பெறாத கதைக் களன்களைக் கொண்டவை:  (எந்த வரிசையிலும் இல்லை)

  1. சேத்துமான்: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையின் திரைப்பட வடிவம் : ‘சேத்துமான்’ திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’! | Seththumaan Movie Review | Puthiyathalaimurai
  2. கடைசி விவசாயி: காக்க முட்டை எடுத்த மணிகண்டனின் படம். கடைசி விவசாயி – விமர்சனம் – Kadaisi Vivasayi Cinema Review : மண்ணின் காவலன் | Tamil movies (dinamalar.com)
  3. சில நேரங்களில் சில மனிதர்கள்சின்னச் சின்ன மன்னிப்புக்கோரலால் விடுதலை பெறும் மனங்கள். – ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ | sila nerangalil sila manithargal 2022 – Movie Review | Puthiyathalaimurai
  4. முதல் நீ முடிவும் நீ: நியூயார்க் திரைப்பட விருதுகளில் “கௌரவப் பரிசு” பெற்றது. மாசிடோனியாவில் நடந்த கலை திரைப்பட விருதுகளில் “சிறந்த இயக்குனர்” பிரிவில் சிவா வென்றார். முதல் நீ முடிவும் நீ – விமர்சனம் – Mudhal Nee Mudivum Nee Cinema Review : முத்தான முயற்சி | Tamil movies (dinamalar.com)
  5. செம்பி : பிரபு சாலமன் படம். செம்பி விமர்சனம்: எடுத்துக்கொண்ட களமும் மெசேஜும் ஓகே; ஆனால் அதை அணுகிய விதத்தில் இத்தனை சிக்கல்களா? | Sembi Review: Kovai Sarala shines in this travel tale filled with logical issues (vikatan.com)
  6. உடன்பால் : பணம் பத்தும் செய்யும்: உடன்பால் திரைவிமர்சனம்- Dinamani
  7. குதிரைவால் : காஃப்காவின் தி மெட்டாமார்போசிஸ் புதினத்தில் இருந்து இந்த படம் தழுவலாக எடுக்கப்பட்டது. முதல் பார்வை | குதிரைவால் – சமகால தமிழ் சினிமாவின் அட்டகாச அட்டெம்ப்ட்… ஆனால்? | kuthiraivaal movie review – hindutamil.in
  8. சாணிக் காயிதம் : செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் என பெயர் பெற்றவர்கள் நடிக்கிறார்கள். சாணிக் காயிதம்: வன்முறைக்கு ஏது அழகு? | Saani Kaayidham – hindutamil.in
  9. பஃபூன் : பார்க்கத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் மலையாளப் படத்தில் ஃபாஹத் ஃபாசிலுக்காக எழுதப்பட்டதோ என்று தோன்ற வைக்கும் சம்பவங்கள். பச்சைத் தமிழரின் தெருக்கூத்து. கொஞ்சம் போல் சஸ்பென்ஸ் புதிர். அளவான நடிப்பு. கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பு. ஜோஜு ஜார்ஜ் நடித்த கேரக்டருக்கும், ஜகமே தந்திரம் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள். ஈழத் தமிழர் சிக்கல் என பலவற்றையும் நன்றாக கலந்திருக்கிறார்கள்.
  10. யஷோதா : நான்கைந்து வெவ்வேறு திரிகளை சாமர்த்தியமாக ஒன்று சேர்க்கிறார்கள். வாடகைத் தாய்; முகப்பூச்சு புற அழகு, போட்டாக்ஸ் சிகிச்சைகள்; ஷுகர் டேடி போஷகர்; போலீஸ் துப்பறியும் த்ரில்லர்; கொஞ்சம் பாலகோபாலன் கிருஷ்ணரின் யசோதா – எல்லாவற்றையும் சமந்தா முன்னின்று சாரதியாக செலுத்துகிறார்.

அடுத்ததாக டப்பிங் படங்கள். தெலுங்கு எப்பொழுதுமே பெரிய பட்ஜெட் படங்களை கையில் எடுக்கிறது. மலையாளப் படங்கள் வித்தியாசமான களத்தைக் கையில் எடுக்கின்றன. வரலாறு, அதி பிரும்மாண்டம் என்றால் ஆந்திரா. அண்டைத் தெருவில் நடந்திருக்கிற சிக்கல்கள், தெரிந்த மனிதர்களின் தெரியாத பக்கங்கள் என்றால் கேரளா. இவற்றை சம்பிஸ்தானு, அடி பொளி என்று மூல மொழியில் பார்ப்பதே உசிதம். உதாரணமாக அசல் “விக்ருதி”, தமிழில் மறுபதிப்பு கண்ட “பயணிகள் கவனிக்கவும்” படத்தை விடச் சாலச் சிறந்தது. எனினும்…

மொழிமாற்றப் பட்டியல் கீழே:

  1. புஷ்பா – துவக்கம்
  2. ஜன கன மன
  3. ஆர்.ஆர்.ஆர்.
  4. கணம் (ஒகே ஒக்க ஜீவிதம்)
  5. கே.ஜி.எஃப் – அத்தியாயம் இரண்டு
  6. அடடே சுந்தரா (அண்டே சுந்தரினிகி): Ante Sundaraniki: அன்டே சுந்தரினிகி (அடடே சுந்தரா) | Snap Judgment (snapjudge.blog)
  7. ஹிருதயம்
  8. காண்டாரா / காந்தாரா
  9. பத்தொன்பதாம் நூற்றாண்டு
  10. ராதே ஷியாம்

முக்கிய பட்டியலுக்கு போவதற்கு முன் நெடுந்தொடர்கள் அல்லது குறிப்பிடத்தக்க ஆக்கங்களைப் பார்த்து விடலாம்: (எந்த வரிசையிலும் இல்லை)

  1. புத்தம் புதுக்காலை விடியாதா: கொரோனா வீடடங்கு காலத்தை மையமாக்கிய படங்கள். தன்பால் ஈர்ப்பை பாவக்கதைகள் அந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் இன்னும் சிறப்பாக கொணர்ந்திருந்தார். இங்கே சூர்யா கிருஷ்ணன் இயக்கம் சறுக்குகிறது. மதுமிதா இயக்கத்தில் ‘மௌனமே பார்வையாய்’ நம் வீட்டுக் கதையை இதமாய்ச் சொல்கிறது.
  2. சுழல்: முடிவு சொதப்பலாய் உச்சகட்டத்தில் பல்லிளித்தாலும், ஒவ்வொரு அத்தியாயமும் எடுத்த விதத்தில் முக்கியமான தமிழ் படைப்பாக மிளிர்கிறது.
  3. வதந்தி: கன்னியாகுமரி நாஞ்சில் வட்டார மொழி. எஸ்.ஜே.சூர்யா ஒரே மாதிரி வில்லத்தனம் செய்பவர் என்பதை உடைக்குமாறு இதற்கு முன்பு நடித்த பாத்திரங்களின் சாயல் விழாமல் பார்த்துக் கொண்டது. சுழல் வெப் சீரிஸ் ஒருங்கிணைத்த அதே புஷ்கர்-காயத்ரி தயாரிப்பு.
  4. செல்ஃபீ: ஜிவி பிரகாஷ் எப்பொழுதும் ஒரே மாதிரி நடிப்பவர்; ஒரே விதமான கதையும் காதலும் கொண்டு பாடல்களை வைத்து படத்தை ஓட்டுபவர். அதில் இருந்து இந்தப் படம் மாறுபடுவதே நிம்மதி. இயக்குநர்கள் நன்றாக நடிக்கும் வரிசையில் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். எல்லோரும் ஒரு வகையில் இந்த கல்விச்சுரண்டலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உணர்வுபூர்வமாக கடத்தியதற்கு பாராட்டு.
  5. இடியட் : ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக எடுத்து விடும் காஞ்சனா, சுந்தர் சி சுட்டுத் தள்ளும் அரண்மனை போன்று இல்லாமல் கிண்டலும் தமிழ் பட சிவாவின் பிரத்தியேக கேலியும் விட்டலாச்சார்யாவும் இணைந்த ஊற்று.
  6. ஒற்று : திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்பட்ட படம். நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது. இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
  7. நித்தம் ஒரு வானம் : இமய மலைக்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா விளம்பரப் படம் போல் இருக்கிறது. படம் நெடுக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை நினைவூட்டும் காட்சிகள். கே பாலச்சந்தரின் வானமே எல்லை போன்ற முடிவு, புதுப்புது அர்த்தங்கள் போன்ற திரைக்கதை எல்லாம் பழைய வாசனை அடிக்க வைத்தாலும் நடிப்பும் துள்ளலும் மூன்று நான்கு கதைகளை கலந்த விதமும் புதுசு.
  8. கட்டா குஸ்தி : இந்த வருடம் ஐஸ்வர்யா லஷ்மியின் வருடம். இது அவருக்கான மகுடம்.
  9. குற்றம் குற்றமே: இயக்குநர் சுசீந்திரன் படம். துவக்க காலத்தில் “வெண்ணிலா கபடி குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர்சாமியின் குதிரை” வீரியம் குறைந்திருந்தாலும் இன்னும் சரியான நடிகர்களைத் தேர்வு செய்வதில் வெற்றியடைகிறார். இயக்குநர் பாரதிராஜாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இதில் இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
  10. அனல் மேலே பனித்துளி: ஆண்ட்ரியா அவர்களுக்கு பாராட்டுகள். இந்த மாதிரி படங்கள் பரவலாக கவனத்தை அடைய வேண்டும். சில வசனங்கள்:  ‘ஆண்கள் என்றாலே அதிகாரம்தான். அதுவும் அதிகாரத்துல இருந்தா?’, ‘நம்மூர் பொண்ணுங்க துப்பாக்கி காட்னா கூட நெஞ்ச நிமிர்த்தி நிப்பாங்க. துணிய அவுத்துட்டா ஒதுங்கி ஒடுங்கி போயிடுவாங்க’, ‘மானம்ங்குறது நம்ம வாழ்ற வாழ்க்கையில இருக்கு’.

அடுத்ததாக தலை பத்தே பத்து படங்கள்:

  1. விட்னெஸ்: “இதுவரை இந்த மாதிரி மலக்குழி மரணங்களுக்கு தண்டனை தரப்படவில்லை” என்ற வரியோடு இந்த படம் முடிகிறது. (கீற்று). எரிச்சலான ஹீரோயிசம், முகம் சுளிக்க வைக்கும் காமெடி, அரைகுறை ஆபாச நடனங்கள், புளித்துப் போன காதல்கள், கேமராவை நோக்கி வீசப்படும் ஹீரோக்களின் பஞ்ச் டயலாக்குகள் என்ற தமிழ் சினிமாக்களின் அலுப்பான கிளிஷேக்கள் எதுவும் இல்லாமல் எடுத்துக் கொண்ட கதை கருவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கும் படக் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (அறம்)
  2. டாணாக்காரன்: விக்ரம் பிரபு ஆகச் சிறந்த நடிகர். தாத்தா சிவாஜியின் இடத்தைத் தாண்டி அவர் போவார் என்பதற்கு இந்தப் படத்தேர்வு சிறந்த சான்றிதழ். காவல்துறையின் வன்முறையையும் தங்களின் காரியத்திற்காக அரங்கேற்றும் லாக்கப் கொடூரங்களையும் நிறைய பார்த்திருக்கிறோம். அதற்கான மூல வித்து எங்கே துவங்குகிறது? எவ்வாறு பயிற்சியிலேயே அந்த விதை வேரூன்றப் படுகிறது? படத்தின் இயக்குநர் முன்னாள் போலிஸ் என்பது நம்பகத் தன்மையை கொடுக்கிறது. தவறவிடக்கூடாத மனதில் வெகு நாட்களுக்கு தங்கி இடம்பிடிக்கும் படம்.
  3. நட்சத்திரம் நகர்கிறது : வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் உண்டு. என் உறவினர்களிலும் நண்பர் குழாத்திலும் இது போன்றவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உறவாடும் போது விலகலோடு, அசூயையோடு பத்து நிமிடம் பேசி விட்டு ஓடி விடுவேன். அந்த மாதிரி சிலரை படம் நெடுக வில்லன் போல் உலவ விடுவதால் ஒரே அமர்வாக பார்க்க வைக்காத படம். அதன் உரையாடல்களின் வீரியமும் வீச்சும் கூகுள் துணை கொண்டு அவ்வப்போது விஷயங்களையும் உதவிகளையும் தேட வைத்து பார்க்க வைப்பது அயர்வைத் தந்தாலும் முக்கியமான படம்.
  4. கர்கி: யார் அந்த குற்றவாளி என்று சஸ்பென்ஸ் ஆக வைப்பது ஒரு புறம். திறமையான நடிகையை முழுமையாக உபயோகித்தது இன்னொரு புறம். சாய் பல்லவி வெகு எளிதில் அதிகம் நடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து உங்களை அன்னியமாக்கக் கூடிய நடிகை. அவரைப் போன்றே காளி வெங்கட்டும் ரஜினி போல் தனித்துவம் கொண்ட ஓவர் நடிகர். அவர்களிடமிருந்து சரியான உணர்ச்சிகளை இம்மியளவும் மிகாமல் பெற்ற இயக்குநருக்கு முழுப் பெருமையும் சேரும்.
  5. திருச்சிற்றம்பலம்: இந்த மாதிரிப் படங்களில் நடிப்பதால் மட்டுமே தனுஷ் அவர்களுக்கு நம்பகத்தன்மை வருகிறது. இளையராஜா வெறியர், ஜொமாட்டோ போன்ற உணவு வழங்குநர்; அப்புறம் பிரகாஷ் ராஜை மீண்டும் புத்துயிர் கொடுத்து வேறு பரிமாணம் கொண்ட அப்பா ஆக உலாவ விடுவது. இயக்குநராக மிளிர்ந்த பாரதிராஜாவின் ஆகச்சிறந்த தாத்தா கதாபாத்திரம்; இந்தக் கால காதலை, கல்யாணத்தை சொல்வது கடினம். மித்ரன் ஜவஹர் ஜமாய்த்திருக்கிறார்.
  6. வெந்து தணிந்தது காடு : சிம்புவை எனக்கு அறவே பிடிக்காது. பக்கத்து வீட்டுப் பையனாக வரும் விண்ணைத் தாண்டி வருவாயா கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், “நாயகன்” மாஃபியாவாக? அடியாளாக? அந்த மாதிரி சிலம்பரசன் நடித்த எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. இது ஜெயமோகன் படம். அதற்கு கௌதம் வசுதேவ் மேனன் வருகிறார். புத்தம் புதிய முகங்கள். எனக்கு நீரஜ் மாதவ் புதியவர். அந்த பம்புளிமாஸ் சித்தி இத்னானி. நன்கு பழகி அறிமுகமான மலையாள சித்திக் கூட புதியதாகத் தெரிகிறார். இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என கவலை கொள்ளுமளவு இந்தப் பகுதியில் மொத்த கற்ற வித்தையையும் சரக்கையும் இறக்கியிருக்கிறார்கள்.
  7. லவ் டுடே : இந்தக் கால பதின் தலைமுறையை அறிந்து கொள்ள நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ஐயங்காராக வேஷம் வரித்தாலும் துவேஷம் கலக்காது திரையில் கொணர்வது எப்படி என்று சத்யராஜ கலக்குவதற்காக பார்க்க வேண்டும். விவாகரத்தும், மணமுறிவும் ஏன் நடக்கிறது என்று அறிய இதைப் போன்ற யதார்த்தங்கள் தொடர்ந்து வர வேண்டும்.
  8. நானே வருவேன் : வேறு வேறு மாதிரி நடிக்க வேண்டும் என்னும் வெறி நடிகருக்கு அவசியம். ஒரு குடும்பத்தின் வன்முறையை அப்பாவின் ஆதிக்கத்தை அம்மாவின் அன்பெனும் ஓரவஞ்சனையை இரத்தமும் சதையுமாக மனதில் பதியுமாறு கொணர்வது கதாசிரியரின் அவசியம். தனுஷ் என்னும் கலைஞனும் செல்வராகவன் என்னும் இயக்குநரும் கை கோர்த்தால்!?
  9. கலகத் தலைவன் : அடுத்த தமிழக முதல்வர் என்னும்போது அசுவாரசியம் கலந்த சோகம் எட்டிப் பார்க்கும். எனினும், நம் அண்டை வீடான கொந்தர் – ஹாக்கர் குணச்சித்திரம். கடைசியாக, சற்றேனும் உருப்படியாக சர்க்கார் செய்ததை இன்னும் பெரிதாக்கி, உலவ விட்டிருக்கிறார்கள். அசப்பில் ஜூலியன் அசாஞ்சே-வும், எட்வர்ட் ஸ்னோடென்-உம், செல்ஸீ மேனிங்க்-உம் கலந்த நாயகன். எனினும், தமிழுக்கு உரிய அஞ்சாநெஞ்சத்தனமும், அழிச்சாட்டியமும் படத்தை தரைக்குக் கொணர்கிறது. செம எண்டெர்டெயின்மெண்ட்.
  10. மஹான் : இந்தக் காலத்தின் உன்னதமான இயகுனராக கார்த்திக் சுப்பராஜைச் சொல்ல வேண்டும். அதுவும் அப்பாவும் பையனும் நடிக்கும் போது ‘மிருதங்க சக்கரவர்த்தி’ உருவாகாமல், பார்த்துக் கொள்வதில் உள்ள சிரமங்களை கவனிக்க வேண்டும். காந்தி போன்ற மகாத்மாவை தலைப்பில் வைக்க தைரியம் வேண்டும். சிம்ரன் போன்ற அம்மாவை உலாவ வைக்க சாமர்த்தியம் கலந்த பொறுப்பு வேண்டும். கார்த்துக் சுப்பாராஜோடு பார்த்துப் பார்த்து அலுத்துப் போன பாபி சிம்ஹாவை இன்னுமொரு படத்தில் வித்தியாசமாக காண்பிக்க தைரியமும் தலைமையும் வேண்டும். இது அது எல்லாம் வாய்த்த அனாயசம் விக்ரமின் “மகான்’!

கௌரவ வரவு: மன்மத லீலை: தமிழ் சினிமா என்பது சைவம். சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபச்சாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் அவர்களும் தீயவர்கள். அயோக்கியர்கள். கடைசியில் காவல் துறையினராலோ, சட்டத்தினாலோ, நாயகியினாலோ, நாயகர்களாலோ தீர்த்து முடிவுகட்டப் படுவார்கள். இதையெல்லாம் இந்தப் படம் உடைத்தெறிகிறது. “காக்க… காக்க” படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் சொல்லும்: “உன்னிடம் இருக்கும் வீட்டை இழந்துட்ட… உன் பெற்றோரை பறி கொடுத்திட்ட… உன் மனைவியையும் மக்களையும் சாகக் கொடுத்திட்ட… உன் பதவி கூட உன்கிட்ட இல்ல.. நீ சேர்த்த சொத்து சம்பாத்தியம் எல்லாம் போச்சு! இன்னும் என்னடா நீ ஹீரோ?” என்பது போல் செல்லும். அது மாதிரி நாயகர், நல்லவர், உத்தமர் ஜெயிப்பார் என்பது கிளைமாக்ஸ். அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் அமர்க்களமான நகைச்சுவையும் நிஜமும் அரங்கேறும் நாடகம்!

உங்களின் தலை பத்து தமிழ்ப்படங்கள் என்ன? இந்தப் பட்டியலில் எந்தப் படம் விடுபட்டிருக்கிறது?

2 responses to “2022- தமிழ் சினிமா தலை பத்து திரைப்படங்கள்

  1. பிங்குபாக்: Top 10 Tamil Films of 2022 – தலை பத்து தமிழ்ப்படங்கள் | 10 Hot

  2. பிங்குபாக்: மத்தகம் (ஜெயமோகனின் நாவல் அல்ல) – டிவி சீரிஸ் | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.