குத்திக்கல் தெரு – 1

திருநெல்வேலிச் சீமையிலே தாழையூற்று கிராமம். தாமிரபரணிக் கரையிலே சின்ன அக்ரஹாரம்.

“தைலா… தைலா…” அம்மாவின் சத்தம். தைலா லஷ்மியுடன் ஏழாங்கல் விளையாட்டிருந்தாள். அந்த சுவாரசியத்தில் அவளுக்கு எழுந்துபோக மனதே வரவில்லை. மூக்கு ஒரு பக்கம் ஒழுகிட்டிருந்தது. அதைப் புறங்கையால் பாவாடையில் தேய்த்துவிட்டு, கல் மேலே போடுவதையும் புறங்கையில் விழுவதிலேயும்தான் அவள் குறியாக இருந்தாள்.

“ஏ மூதி! புருசன் வீட்டில போயி குப்ப கொட்ற வயசாச்சு! கூப்பிடா செவிடாயிடுவியோ? இங்கிட்டு வாடி”. அம்மா மறுபடியும் சத்தம் போட்டாள்.

தைலா தலை தெறிக்க உள்ளே வந்தாள். “என்னம்மா?”

“இந்தச் சாமானயெல்லாம் ஓடுகால்ல போயி கழுவிட்டு வா”. அம்மா சமையல் பாத்திரமெல்லாம் கொடுத்தாள்.

சாமானை கையிலே எடுத்துகிட்டே வந்த தைலா, “இருடீ லெச்சுமி! போயிடாதே” என்று இடதுபக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்.

“நானும் வரேண்டீ! ஆளுக்கொண்ணாத் தேச்சா சீக்கிரமா வேல முடிஞ்சுரும்”. லஷ்மி கல்லைக் கீழ போட்டு விட்டு வந்தாள்.

“தைலா! அப்பா வந்துட்டாஹ பாரு! இந்த மோரக் கொண்டு போயி கொடு”. தைலா மறுபடியும் உள்ள வந்து அம்மாவிடமிருந்து மோரை வாங்கி அப்பாவிடம் கொடுத்தாள்.

தைலாவின் தந்தை வழுக்கைத்தலையிலிருந்து வழியும் நீரை மேல்துண்டால் துடைத்துக் கொண்டார்.

“போன காரியம் காயா? பழமா?” கூடத்தில் இருந்த தூணில் சாய்ந்துகொண்டே கேட்டாள் தைலாவின் தாய்.

“பழந்தான்! ஆனா, செக்குக்கு பொன்னு கொடுத்தாலும் சீவலப்பேரிக்கு பொண்ணு கொடுக்காதேம்பாங்க! நீ என்னடான்ன ‘போ… போ’ன்னு என் பிராணன வாங்கினே. பெரிய குடும்பம். ஏழெட்டு பேர் கூடப் பொறந்தவங்க. எல்லாருக்கும் விவசாயந்தான். ஒருத்தனு கூடப் படிக்கல. மாப்பிள கொஞ்சம் ஓவாய். அவங்களுக்கும் ஜாதகம் பொருத்தமா இருக்காம். நாளைக்கு பையனோட அப்பாவும் மாமாவும் வரேன்னிருக்காங்க. பார்ப்பம்… ஸ்… அப்பாடா”. சொல்லிக்கொண்டே பெஞ்சியில் படுத்து விட்டார்.

“அதெல்லாம் பார்த்தா முடியுமா? தைலா கருப்பு. குள்ளம். நாமப் படிக்கப் போடலே. பெருசா நக நட்டு போடற அளவு வசதியில்ல. ஏதாவது ஒரு ‘இக்கு’ இருக்கத்தான் செய்யும்”. சொல்லிக் கொண்டே உள்ளே போனாள் தைலாவின் தாய்.

தைலா காலி மோர் டம்ளரை எடுத்துக் கொண்டு வாய்க்காலுக்கு வந்தாள்.

“ஏண்டீ! உங்கப்பா என்ன சொன்னாஹ?” என்றாள் லெச்சுமீ.

“நாளக்கி என்ன பொண்ணு பாக்க வராங்களாம். ஓவாய்னா என்ன?”

“ஓ… ‘ஓ’ங்கிற எழுத்து எப்படி இருக்கும். உள்ளுக்குள்ள மூளியா இருக்கும். அது மாதிரி மேலண்ணத்தில ஒரு இடம் காலியா இருக்கும். உதடு நம்மள மாதிரி இருக்காது. இதே பார் இப்படி” என்று அஷ்டமி சந்திரன் மாதிரி மேலுதட்டை வளைத்துக் காண்பித்தாள். ஏன்னா லெச்சுமி மூன்றாம் வகுப்பு வரை படித்து இருக்கிறாள். தைலா இரண்டாம் வகுப்புதான்.

“ஏன் அப்படி பொறக்கிறாங்க?” தைலாவிற்கு சந்தேகம்.

“கிரகண நேரத்தில உண்டாயிருக்கிறவங்க வெளிய வரக் கூடாதாம். அப்படி வந்தா இப்படிக் கொற வந்துடும்னு பாட்டி சொல்லி கேட்டிருக்கேன்.” பெரிய மனுஷி போல் சொன்னாள் லஷ்மி.

“நாளக்கி அவங்க வரும்போது நானும் இருக்கட்டுமா?” லஷ்மி கேட்டாள்.

“எனக்குத்தான் கல்யாணம் ஆயிருச்சே. என்ன அவங்க கேப்பாங்களோங்கிற பயமும் இல்ல.”

“எனக்கு நீயும் வந்தா தகிரியமாத்தான் இருக்கும். ஆனா அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியலியே. உங்கம்மாவ விட்டு எங்கம்மாகிட்ட கேட்க சொல்லேன்.”

தைலாவிற்கு மறுபடி விளையாட்டில் சுவாரசியமில்லை. “இன்னிக்கு போதும்டீ”

“அப்ப கொடுக்காபுளி பறிப்பமா?”

அரைமனதுடன் பாத்திரத்தை எல்லாம் உள்ளே வைத்துவிட்டு புறப்பட்டாள் தைலா.

“பட்டப்படைக்கிற வெயில்ல எங்கடீ போற? வெயில்ல திரிஞ்சா காஞ்ச நாகப்பழம் மாதிரி ஆயிடுவே. உள்ளுக்குள்ள பல்லாங்குழி வெளயாடுங்கடீ” கூச்சல் போட்டாள் அம்மா.

பல்லாங்குழியை நிமிர்த்தி புளியங்கொட்டையை லஷ்மியும் தைலாவும் போட ஆரம்பித்தார்கள்.

oOo

மறுநாள் பகல் பதினொன்று மணி. சல் சல் என்று மாடு நிற்கும் சத்தம் கேட்டது.

“சீவலப்பேரிலிருந்து தைலாவ பொண்ணு பார்க்க வரா”. பக்கத்து வீட்டு அத்தை கொஞ்சம் சத்தமாக அறிவித்தாள். அவரவர் வீட்டுத் திண்ணையில் இருந்து பெண்களின் தலைகள் மட்டும் தெரிந்தன.

“வாங்கோ… வாங்கோ” கூடத்தில் பாய் போட்டிருந்தது.

“உட்காரணும்”. மூவரும் பாயில் உட்கார்ந்தனர். தைலாவின் மாமா, சித்தப்பா மரியாதை நிமித்தமாக சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தனர்.

“பொம்மணாட்டிங்கள அழச்சுண்டு வந்திருக்கலாமே? அவாளுக்கும் தைலாவ பார்த்தால்தானே திருப்தியா இருக்கும்” என்று ஒருக்களித்த கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு தைலாவின் மாமி பேசினாள்.

“அவாளெல்லாம் பையனோட வருவா. வராம இருப்பாளா?” இது பையனுடைய தந்தை.

சுடச்சுட பஜ்ஜியும் கேசரியும் கொண்டுவந்து அவர்களுக்குப் பரிமாறினாள் தைலாவின் சித்தி. வெள்ளிச்சொம்பில் ஜலம் கொண்டுவந்து வைத்தார், தைலாவின் சித்தப்பா.

“கொழந்தைய வர சொல்லுங்கோ” என்றார் மாப்பிள்ளையின் மாமன்.

தைலா பட்டுப் பாவாடை மொட மொடக்க வந்துநின்றாள். எண்ணெய் தடவி முன்னுச்சியை வழித்து வாரிய கூந்தல். நுனியிலே ரிப்பன். பெரிய சாந்துப்பொட்டு. காதிலே ஜிமிக்கி. கழுத்திலே விபூதிப்பட்டை சங்கிலி. மருதாணிக் காலிலே கொலுசு. கைகளை என்ன செய்வதென்று தெரியாமல் பிசைந்து கொண்டிருந்தாள் தைலா.

“பொண்ணு யானை நிறம். மாநிறம்னேளே? இப்படித்தான் இருக்குமா மத்த விசயங்களும்? பத்து பவுனு போடறேன்னு சொன்னீங்களே… அது அஞ்சு பவுனாகுமா? இல்ல கில்ட்டு நகையா இருக்குமா? எங்காத்து மாமீ ரொம்ப கறார் பேர்வழி. ஏதாச்சும் கோல்மால் நடந்தது பொண்ண ஆத்தில வச்சுண்டு ஜால்ரா அடிக்க வேண்டியதுதான்” என்று விறைப்பாக பேசினார் பையனின் தந்தை.

“பத்து பவுன வேணும்னா இப்பவே காண்பிச்சுடறோம். தட்டான் கிட்ட வேணாம்னாலும் சரி பார்த்துக்கலாம்”. குரல் தழுதழுத்தது தைலாவின் தந்தைக்கு.

“சரீ! எங்க ஊரில தண்ணி கஷ்டம்னு உங்களுக்கேத் தெரியும். குடிக்க சமைக்க ரெண்டு மைல் தள்ளிப் போய்த்தான் தண்ணி கொண்டு வரணும். அப்புறம் மாப்பிளைய வீட்டோட கூட்டிட்டு வந்துடணும்… தனி ஜாகை வக்கணும்னு கோட்டை கட்டிக்கப்படாது. மாப்பிள குளிக்கறதுக்கு பொண்ணு உசரத்துக்கு ஜோடு தவல கொடுக்கணும். அது செம்பா இருந்தா சிரேஷ்டம். மத்த விசயங்கள் பொம்மனாடிங்க வந்து பேசுவா. எங்களுக்கு மனுசா கூட்டம் ஜாஸ்தி. எட்டு வண்டி கட்டிண்டு வருவோம். எட்டு ஜோடி காளைக்கும் வைக்கல் தீர்ந்து போச்சேன்னு முனகப்படாதுய்யா… எல்லாத்தையும் யோசிச்சுண்டு சொல்லி வுடும். அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கறம்” எழுந்தார்கள் சீவலப்பேரி ஆள்கள்.

“வெயில் தாழப் போலாமே! மத்தியானம் அவியலும் பொரிச்ச கொழம்பும் வச்சிருக்கோம். கை நனச்சுட்டுப் போலாமே.” மெதுவாக குரல் கொடுத்தாள் தைலாவின் தாய்.

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். நம்மள்துல்ல இதெல்லாம் பழக்கமே இல்லியே. வரோம்” வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள்.

ஊர் எல்லை வரை மெதுவாகச் செல்லும் வண்டியின் பின்னால் தைலாவின் தந்தையும் மாமாவும் சித்தப்பாவும் சென்று வழியனுப்பினர்.

அவர்கள் திரும்பி வந்ததும் வீட்டினுள்ளே பக்கத்துவீட்டு அத்தை, அத்திம்பேர், சத்திரத்துப் பாட்டி, கோவில் குருக்கள் தம்பதியினர் எல்லோரும் கூடியிருந்தனர்.

“பஞ்சாட்சரம்… இந்த இடம் வேண்டாம்டா” என்றார் அத்தை.

“பொண்ணு ஒசரத்துக்குன்னா ஜோடித் தவல கேட்கிறா?’ அங்கலாய்த்தாள் மாமி.

“அக்கா… தண்ணியெடுத்தே கொழந்தே துரும்பாயிடுவா! ஏற்கனவே அவ நோஞ்சான்” என்றாள் சித்தி.

“ஓவாய்ப் பையனுக்கு நம்ம தைலா போறாதாமா?” நொடித்தாள் சத்திரத்துப் பாட்டி.

“இது வேண்டான்டா! வீரவநல்லூரில ஒரு பையன் இருக்கான். ரொம்ப ஐவேஜி கிடையாது. ஆனா நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ஒரே புள்ள. அஞ்சு பொண்ணுகள். மூணூ பேர கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. தகப்பனார் இல்ல. இன்னிக்கே நல்ல நாளா இருக்கு. பொறப்படு. ஓர் எட்டு பாத்துட்டு வந்துருவம்” என்றார் சித்தப்பா.

“ஒரு வாய் சாப்பிட்டுப் போங்கோ” மைத்துனரிடம் மெதுவாகக் கூறினாள் தைலாவின் தந்தை.

நெற்றியை சுருக்கியபடியே சாப்பிட அமர்ந்தார் பஞ்சாட்சரம்.

குருக்கள் வண்டியை கட்ட, வண்டி வீரவநல்லூர் சென்றது.

“பையனுக்கு முப்பது வயசாச்சே! பரவாயில்லியோ” பையனின் தாய்.

“மாப்பிள்ளை எங்கே?” என்றார் தைலாவின் சித்தப்பா.

“அவனோட பெரியப்பா பாளையங்கோட்டையில் கமிஷனரா இருக்கார். அங்க போயிருக்கா. அவனுக்கு அவாகிட்ட ரொம்ப ஒட்டுதல். நீங்க முந்தியே தகவல் சொல்லியிருந்தா அவன இருக்க வச்சிருப்பேன். அவன் நல்ல சேப்பு. ஆஜானுபாகுவா இருப்பான். ஒன்பது வயசுங்கிறதுதான் யோசனையா இருக்கு. உங்களுக்கு சரீன்னா எங்களுக்கும் சரி. என்ன… கலியாணம் பண்ணியும் பிரும்மச்சாரின்னு அஞ்சாறு வருசம் காத்திண்டிருக்கணும்… பெரியவளார வரை. வர புதன் கிழம ரெண்டு அக்காவும் அத்திம்பேர்களும் அஞ்சு பேரா பொண்ணு பார்க்க வருவா”.

ஒரு உயரமான பெண் வலித்துக் கொண்டு போனதை பஞ்சாட்சரம் பார்த்தார்.

oOo

“அண்ணா… உன்னப் பார்க்கிறதுக்கு தாழையூத்திலிருந்து ஒரு செட் வந்திருந்தா. நீதான் பாளையங்கோட்டைக்குப் போயிட்டியே!” முதலில் ஒலிபரப்பினாள் இளைய தங்கை.

“உள்ள வந்து கையக் கால அலம்பறத்துக்குள்ள என்னடீ அவசரம்” தாயார் கண்டித்தாள்.

“பாளையங்கோட்டையில எல்லாரும் சவுக்கியமாடா?” என்று விசாரித்தாள் சொம்பு ஜலத்தோடு வந்த தமக்கை தங்கம்.

“எல்லாரும் சவுக்கியந்தான். என்ன திடீர் வரவு?”

“ஏன் வரப்படாதா? சொல்லிண்டுதான் வரணுமா? புடிக்கலேன்னா சொல்லு… இப்பவே பொறப்புட்டுடறேன்”.

“அவ எப்பவுமே இப்படித்தான். நீ உள்ள வாடா!” என்றார் அத்திம்பேர்.

“நம்ம கும்பலப் பார்த்ததுமே பொண்ணுவீட்டுக்காரா பிச்சுக்கறா. அதனால அம்மா அஞ்சு பேருதான் கணக்கு சொல்லியிருக்கா!” என்றாள் மூத்த தங்கை.

“எனக்கு இந்த பொண்ணு பார்க்கிற விசயமே பிடிக்கலே. இத விட்டுடு.” என்றான் கோதண்டம்.

“குடும்பத்துக்கு நீ ஒரே புள்ள. இப்படி சொன்ன எப்டீ? பித்ருக்கள் சாபமிடுவா. எள்ளும் தண்ணியும் இறைக்கிறதுக்கு ஒரு வாரிசு வேணாம்?” இதற்கு மேல் மறுத்தால் அம்மா அடுத்து அம்மா அழ ஆரம்பித்து விடுவாள் என்று மௌனம் காத்தான் கோதண்டம்.

oOo

புதன்கிழமை. காலையில் எழுந்தவுடனேயே தங்கத்திற்கு காய்ச்சல். அவள் கணவர் தான் மட்டும் வருவதற்க்கில்லை என்று ஊருக்குப் போய்விட்டார். பெரியக்கா குளியலறையில் வழுக்கி விழுந்து பாதம் வீங்கிக் கொண்டிருந்தது.

“ஏம்மா? இந்தப் பொண்ண பாக்கத்தான் வேணுமா? நாம பொறப்பறதுக்கு முன்னாலயே இத்தன அபசகுனமா?” என்றாள் மூத்த தங்கை.

“சும்மா இருடீ… இப்பவே அவனுக்கு முப்பது முடிஞ்சாச்சு. எந்தப் பொண்ண பெத்தவன் வந்து வாசல்ல காத்துண்டிருக்கான். இவன் வயசுக்காரால்லாம் ரெண்டு குழந்தைக்குத் தகப்பானாயிடுச்சு. ஊரெல்லாம் நம்மளத்தான் கரிச்சுக் கொட்றா. நாமதான் இவன் கலியாணத்துக்கு தடையா இருக்கோம்னு. பெரிய அத்திம்பேரும் அவனும் போகட்டும். அப்புறம் சாவகாசமா நாம போகலாம்.”

“நேர அவா ஆத்துக்குப் போயிடலாமா கோண்டு?” இது பெரிய அத்திம்பேர்.

“வண்டி கட்டிண்டு போங்கோ. போய் சேரும்போது மூணு மணியாகும். காருக்குறிச்சில அத்தான் ஆத்தில் தங்கிண்டு அத்தா மன்னியையும் அழச்சிண்டு போங்கோ. ஒரு பொம்மனாட்டி வந்த மாதிரியும் இருக்கும்.”

oOo

“அம்பீ. இந்தக் காபியக் குடிச்சுப் பாருடா. அப்பவாது தலவலி வுடுதான்னு பார்ப்பம். மணி மூணாயிடுத்து. நம்ப எப்பக் கெளம்பறது?” என்றாள் அத்தா மன்னி.

காபியை வாங்கிக் குடித்தான் கோதண்டம்.

“இதோ பாரு… அவா காத்துண்டிருப்பா. நீயும் ஆத்துல இல்லாமப் போயிட்டே. மூணு புருஷாளாப் போனா நல்லாருக்காது. கோண்டுவோ எழுந்திருக்காம கெடக்கான். கோண்டு… என்னடா சொல்றே?”

“அத்தான்… என்னால பேசக் கூட முடியல. மண்ட விண்ணு விண்ணுன்னு தெரிக்கறது. பொண்ணாத்துக்காராள வீணா காக்க வைக்க வேணாம். பொண்ணு வந்து சாந்தக் குழைச்சு பொட்டு வச்சுண்டா பளிச்சுன்னு தெரியணும். வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியணும். குடும்பத்துக்கு அடக்கமா இருக்கணும். அவ்வளவுதான். நான் பாக்கணுங்கிற அவசியமே இல்ல. பிடிச்சிருந்தா பாக்கு வெத்தல மாத்திண்டு வந்துருங்கோ. என் கூடப் பொறந்தவா எத்தனயோ பொண்ணுங்களப் பார்த்து லொட்டு லொசுக்குன்னு குத்தம் சொன்ன பாவம்தான் இன்னிக்கு என்ன பொண்ணு பாக்கவே விடல. பொறப்படுங்கோ” என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான் கோதண்டம்.

oOo

கோதண்டத்தின் அத்திம்பேர் நடராஜன் சாதுவான பசுவை விட சாது. வெள்ளை உள்ளம். பிறர் மனம் நோகுமோவென்று யோசித்துப் பேசுபவர். அத்தான் பஞ்சாபகேசனோ அவருக்கும் மேலே. கோதண்டத்திற்கு திருமணம் தட்டிக் கொண்டேப் போவதைப் பற்றி இருவரும் சஞ்சலம் கொண்டிருந்தனர். தைலாவிடம் அவர்கள் மூன்று கேள்விகள்தான் கேட்டனர்.

‘குழந்தே… உன் பேரென்ன?’ இது ஊமையா என்று தெரிந்து கொள்ள.

‘குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டு வா.’ எப்படி நடக்கிறாள் என்று பார்க்க.

‘நீங்க என்ன சீர் செய்யப்போறேள்.’ இது தைலாவின் தந்தையைப் பார்த்து கேட்ட கேள்வி.

“அஞ்சு பவுன் போட்டு நிரக்க கல்யாணம் பண்ணித் தருவோம்” என்றார் தைலாவின் சித்தப்பா.

பஞ்சாபகேசனிடம் நடராசன் கிசுகிசுத்த குரலில் கேட்டார். “ஒத்துண்டுடலாம்தானே?” மெலிதாகத் தலையாட்டினார் பஞ்சாபகேசன்.

“பையனுக்கு கடும் மண்டையிடி. ஒங்களுக்குப் பயனப் பார்த்துட்டுத்தான் தாம்பூலம் மாத்திக்கணும்னா காருக்குறிச்சிக்கு வாங்கோ. இல்ல எங்க வார்த்தயில நம்பிக்கை வச்சேள்னா இப்பவே மாத்திண்டுடலாம்.” என்றார் நடராஜன்.

தைலாவின் வீட்டாருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சிவப்பான ஆறாவது படித்த பிள்ளை கிடைத்ததில் ஆனந்தம். தாழையூற்றில் உறவினர்கள் முன்னால் ஒப்புத்தாம்பூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது.

காருக்குறிச்சியில் வண்டி நின்றபோது இரவு எட்டு மணி. கோதண்டம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

oOo

“என்னடீ இந்த மனுசர்! திடீர்னு நிச்சயித்தப் பண்ணிண்டு வந்து நிக்கறார்? கோதண்டமானா பொண்ணையேப் பாக்கலேங்கிறான்.”

“அம்மா… இத எத்தனையாவது தடவையா சொல்றே? எனக்கு ஏன் காய்ச்சல் வருவானேன்? கோதண்டத்துக்கு ஏன் மண்டையிடி வருவானேன்! தலயில என்ன எழுதியிருக்கோ அதான் நடக்கும்.”

“ஒரு நடை போயி பொண்ணப் பாத்துட்டு வந்துருவோமா?” பெரிய தமக்கை.

“பத்திரிகை எழுதிண்டு வந்ததுக்கப்புறம் என்ன பொண்ண பாக்கறது? எல்லாம் மாப்பிளை அழப்பு அன்னிக்கு பார்த்துக்கலாம்.”

“இந்த மனுசனுக்கு சமர்த்தேப் போறாதும்மா. ஏழு பவுனு கேக்கத்தெரியாதா ஒரு மனுசருக்கு!” என்று அலுத்துக் கொண்டாள் நடராசனின் மனைவி.

oOo

“பஞ்சாட்சரம்… உனக்கு அதிர்ஷ்டம்டா! தைலா கல்யாணத்துக்கு பெருசா ஒண்ணும் நீ செலவழிக்க வேணாம். சட்டநாதனுக்கு ஒரு வரன் தெகைஞ்சிருக்கு! ரெண்டு முகூர்த்தத்தையும் ஒண்ணா வச்சிண்டா சாப்பாடு செலவு ஒண்ணாப் போயிரும். அவாளாண்ட நான் திருநெல்வேலில கல்யாணாம் செஞ்சு கொடுக்கணும்னு கண்டிஷன் போட்டிருக்கேன். அவாளும் ஒத்துண்டுட்டா. ஆத்தில கேட்டு சொல்லு.” பஞ்சாட்சரத்தின் தமையனார் பிரணதார்த்திஹரன்.

“நன்னாருக்கு… கரும்பு தின்னக் கூலியா! தைலா பொறந்தபோதே அதிர்ஷடம்னு ஜோசியர் சொல்லியிருக்காரே… ஒவ்வொண்ணா நடக்குது. சரீன்னு சொல்லூங்கோன்னா” கதவிடுக்கில் இருந்து பதில் வந்தது.

அப்புறம் என்ன. மளமளவென்று வேலைகள் நடந்தன. திருநெல்வேலியில் இரண்டு வீடு பிடித்து தைலாவின் புக இருந்த அகத்தினர் தங்கவைக்கப் பட்டிருந்தனர். கோதண்டத்தின் கடைசி தங்கை அவசரமாக பெண்வீட்டினர் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

“தைலா மன்னி எங்கே?”

“அடீயே… உன் குட்டி நாத்தனார் வந்திருக்கா. இங்க வா.” என்று நெற்றிச்சுட்டி, இடுப்பில் ஒட்டியாணத்தோடு அலங்கரிக்கப்பட்ட தைலாவை அழைத்து வந்தாள் லட்சுமி.

குட்டி நாத்தனார் தைலாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு குதிகால் பிடறியில் பட ஓடினாள்.

“அக்கா… அம்மா… மன்னிய நான் பாத்துட்டேன்மா! நம்ம விசாலத்த விடக் கறுப்பு.”

அத்தை பெண் விசாலம் முகம் கடுகடுத்தது. “என்ன வம்புக்கு இழுக்காட்டா இவளுக்குப் பொழுதே போகாது.”

“இரு… சொல்ல வந்த விஷயமே அது இல்ல. பொண்ணு மரப்பாச்சி மாதிரி இருக்கா! எல்லாரும் நம்மள நாப்பு காட்டப் போறா!”

எல்லோர் முகமும் இருண்டது.

“இதென்னடீ கூத்து? இங்க வாங்கோ… நீங்களும்தானே கூடப் போனேள். உங்களுக்கு கண் என்ன புடலியிலா இருக்கு? இவ என்னடான்ன குண்டத் தூக்கிப் போடறா.” என்றாள் அத்தான் மன்னி. பஞ்சாபகேசன் பரிதாபமாக விழித்தார்.

“எனக்கு அப்பவே தெரரியும்மா. இவர் ஒரு காரியத்தையும் உருப்படியா செய்யமாட்டார்னு. உன் மாப்பிள்ளைய நீதான் மெச்சிக்கணும்.” என்று பெருமூச்சு விட்டாள் தங்கம்.

“ஏன் வளவளன்னு பேசிண்டு! கோகிலா… நீ போயி பொண்ண அழச்சிண்டு வரச் சொல்லு… கூட இருந்து கூட்டிண்டு வா. ஒருத்தரொத்தரா போய் பார்த்து விமர்சனம் பண்ண வேண்டாம்.” பெரிய அக்கா.

“கோண்டு சீட்டாண்டிருக்கான். அவனையும் கூப்பிடு”. இது அம்மா.

சித்தி, உறவினர் சகிதம் தைலா வந்து சேர்ந்தாள்.

“பார்த்தாச்சு… அழைச்சுண்டு போம்மா!” என்றாள் பெரிய அக்கா.

“என்னடா சொல்றே? பொண்ண நன்னா பார்த்தியா? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலே. நீ சரின்னு சொல்லு. இப்பவே கல்யாணத்தை நிறுத்திடுவோம்.” என்றாள் அம்மா.

“அத்திம்பேர்… நான் என்ன சொன்னேன்? சாந்துப் பொட்டு போட்டாத் தெரியற மாதிரி பொண்ணு வேணுமின்னு சொன்னேன். சாந்துப் பொட்டையே பொண்ணாக் கொண்டுவந்துட்டீரே!”

அத்திம்பேர் குரலில் பயத்துடன், “ஏண்டா கோண்டு! கலியாணத்த நிறுத்திறப் போறியா? பாவம்டா அந்தப் பொண்ணு.”

“இல்ல… என் தலவிதி மண்டையிடியா வந்துடுத்து. இதுதான் என் லிபிதம்.” விரக்தியாய் சொன்னான் கோதண்டம்.

அவனோடு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள், “ஏண்டா கோதண்டம்… எள்ளும் அரிசியும் கலந்தாப்பல இப்படி ஜோடி அமைஞ்சுடுத்து!”

“வெறும் அரிசிய வச்சு தர்ப்பணம் பண்ண முடியாதுல்லியா! அதான் எள்ளை சேர்த்துண்டிருக்கேன்.”

திருமணம் நடந்து முடிந்தது.

oOo

“அவாத்தில குலதெய்வத்துக்கு செய்யப் போறாளாம். தைலாவ கொண்டு விடச் சொல்லி கடுதாசிப் போட்டிருக்கா. அதோட ஆறாம் மாசத்துக்கான சீரையும் எடுத்துண்டு போயிடுங்கோ”.

வியர்க்க விறுவிறுக்க சீர் பாத்திரங்களை எடுத்துவைத்தார் பஞ்சாட்சரம்.

oOo

அப்பாவிற்கு ஒரு காபி கொடுக்க மாட்டாளா என்று தைலாவின் மனம் ஏங்கியது.

“அப்ப நான் வரேன். தைலாவை என்னிக்கு அழைச்சுண்டு போகணும்னு சொன்னேள்னா வந்து கூட்டிண்டு போறேன்.” எழுந்த பஞ்சாட்சரத்தின் எதிரே கோதண்டம் வாசற்படியேறி வருவது தெரிந்தது.

“இப்பத்தான் வந்தேளா?”

“ஆமாம். சௌகரியமா இருக்கேளா?”

“ஏதாவது சாப்பிட்டேளா?”

“நம்பாத்தில சாப்பிடறதுக்கு என்ன! வண்டியில வந்தது வயிறு கடமுடாங்கிறது. லங்கணம்தான் பரவாயில்ல. தப்பா நெனச்சுக்காதீங்கோ.” தயங்கியபடி கீழிறங்கினார் பஞ்சாட்சரம்.

“மாமனாரை ரொம்பத்தான் உபசாரம் பண்ணியாறது…” உள்ளே வந்த கோதண்டத்தை தமக்கை விசாரித்தாள்.

தங்கத்தை மேலும் கீழும் பார்த்துவிட்டு மௌனமாக நகர்ந்தான் கோதண்டராமன்.

oOo

கல்லிடைக்குறிச்சியில் புட்டபர்த்தியம்மனுக்கு படையலும் மாவிளக்கும் போட்டுவிட்டு வீரவநல்லூர் திரும்பினார்கள்.

“பஞ்சாட்சரம் புத்திரிக்கு கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி. பொம்மனாட்டிக்கு அப்படி ஒரு தூக்கமா! தன்னக் கட்டுப்படுத்திக்க வேணாம்? சாஞ்சு சாஞ்சு சரிஞ்சு விழறா… தோள்பட்டையெல்லாம் வலி. கோதண்டத்து மேல சாஞ்சிருந்தா சொகமா இருந்திருக்கும்.” படபடத்தாள் தங்கம்.

‘பளார்…’

கோதண்டம் மொத்த கோபத்தையும் தைலாவின் கன்னத்தில் இறங்கினான்.

“என்ன அடிக்க முடியல… அவள அடிக்கிறயாக்கும்! இருட்டுக்கு பெயிண்ட்டடிச்சாப்ல இவளக் கூட்டிட்டு எங்கயாவது போக முடியறதா? விசாலத்த வேணாம்னு கழிச்சேளே… சாலாவ வேண்டாம்னு கழிச்சேளே… இது பரவாயில்லியாக்கும்னு ஊர்க்காரா நொக்கணிக்கிறா. எங்கியும் போக முடியல. கட்டுசாதக்கூடயன்னிக்கு புளியோதர சாயந்தரத்துக்குள்ள ஊசிப் போயிடுத்து. வடாம் எல்லாம் நமுத்த வடாம வச்சிருக்கா. ஒண்ணயும் நீ கேக்க மாட்டேங்கிற. மாமனாரப் பாத்துட்டா மேல வுழுந்து உபசாரம் பண்றே. கல்யாணத்தையே அந்த மனுசன் ஓசியில் நடத்தினார். இந்த அழகில மறுவீடு கூப்டேளாங்கிறா அவாளோட சித்தி. ஓட்டப் பானையா இருந்தாலும் சோறு வேகறதிலே குறைச்சலில்லே… ஏ… அம்மா! உன் அரும மாட்டுப்பொண் பசியோட இருப்பா… சமச்சுப் போடு. பழயத நான் திங்கறேன்.” விருட்டென்று எழுந்துபோனாள் தங்கம்.

அடிபட்ட கன்னத்தை தடவினால் கூட தப்பாகிவிடுமோ என்று எலிக்குஞ்சாய் நின்றிருந்தாள் தைலா.

“அரசாணியம்மா… ஒக்காந்துக்கோ! அப்புறம் கால் வலிக்கப் போறது.” என்றாள் பெரியக்கா.

‘பொங்கலுக்கு வந்தபோது ஒரு வாரம் இப்படித்தான். இவர்கள் கடிதம் போட்டு உடனே அனுப்பவும் மாட்டார்கள். ஜாடைப் பேச்சுகளை காது கொண்டு கேட்கவும் முடியாது.பொங்கலுக்கான் அரிசி, பருப்பு, வெல்லம், கரும்பு, புடைவை, வேஷ்டி அத்தனையும் தூக்கி வீதியில் எறிந்தவர்கள்தானே! பக்கத்து வீட்டுப் பாட்டி “அய்யோ பாவம்! அப்பாவி பொண்ணு… இங்க வந்து மாட்டிண்டுடுத்து. சரக்கு ஒசந்ததுன்னா உள்ளுரிலயே விலை போயிருக்குமே!” என்று முணுமுணுத்ததும் காதிலே விழுந்தது. லட்சுமி சொன்னாளே… இனிமே உன் வாழ்க்கை ஒசத்தியா இருக்கும்னு. மலை மாதிரி இல்லாட்டாலும் இப்படி படுகுழியா ஆகியிருக்க வேணாம். இவர்கள் வேலை சொன்னாள்தான் சாப்பிட முடியும். “என்ன திண்ணக்கமிருந்தா சாப்பிட உக்காருவே” என்று கூச்சல் போடுவார்கள்.’

“இராணியம்மாவ எத்தன தரம் அழைச்சா வருவீங்க? வந்து கொட்டிக்கோ…” மௌனமாய் தட்டின் முன் அமர்ந்தாள் தைலா.

கண்ணீரை கட்டிவைக்க இப்பொழுது அவள் கண்கள் பழகியிருந்தன.

oOo

“பெரியப்பாவுக்கு மெட்ராசுக்கு மாத்தலாயிடுத்தாம். அவா உத்யோக நிமித்தமா போறா… இவன் ஏன் குதிக்கிறான் போகனம்ணு?”

“அங்கே இவனுக்கு ஏதாவது கலெக்டர் உத்தியோகம் பாத்து வச்சிருப்பா…”

தங்கமும் மாமியாரும் இப்படிப் பேசிக் கொண்டிருக்க தைலா முன்னிரவு கோதண்டம் தன்னிடம் கிசுகிசுத்ததை நினைத்துப் பார்த்தாள்.

“என்னை ஊருக்கு அனுப்பச் சொல்லிட்டுப் போங்கோ… நான் இங்கேயிருந்து என்ன பண்ணப் போறேன்?”

“அசடு… தள்ளிப் போனியான்னா கோபம் ஜாஸ்தியாகும். பேசாம இரு. சீக்கிரமே ஒரு வேலயத் தேடிண்டு உன்னக் கூட்டிண்டு போயிடுவேன். அதுவரை கணேச மாமாகிட்ட சொல்லியிருக்கேன். தமிழ் நன்னாப் படிச்சுக்கோ. நான் கடுதாசி எழுதினேன்னா அதில இருக்கிற சமாச்சாரத்த புரிஞ்சுக்கவாவது படிப்பு வேண்டாமா? அடுத்தவா கிட்டயா காட்டித் தெரிஞ்சுப்பே! இது 1927. பெரியப்பா ஆத்தில எல்லாரும் படிச்சிருக்கா. பெரியண்ணா எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலானதுக்கே பெரியப்பா வேதனப் படுறா. எனக்கு வீட்டுச் சூழ்நில. படிப்பு நின்னு போச்சு. இவா இப்படி பேசிப் பேசியே என்னை முரடனாக்கிட்டா. ஒப்பாயம், பாப்பாசு எல்லாம் போட்டுண்டு வாத்திச்சி வேலைக்குப் போகச் சொல்லலை. அப்புறம் உன் இஷ்டம்.” அடித்த கன்னத்தை தன் இதழ்களால் ஈரமாக்கினான் கோதண்டம்.

oOo

“நாட்டுப்பொண்ணு படிக்கப் போறாடீ. வந்தப்புறம்தான் அப்பளாம் இடுவா.” என்றாள் தங்கம்.

“கணேச மாமா தெரியலேன்னா தொடையில கிள்ளுவாரா… இல்ல தட்டிச் சொல்லிக் கொடுப்பாரா…”

“ஏய்… கணேச மாமாவுக்கு நாப்பத்தஞ்சு வயசாச்சு.”

“ஆம்பளைக்கு அதெல்லாம் ஒரு வயசா?”

oOo

“ஏ… நாராயணன் வரான். வாடா… அப்பாகிட்டருந்து கடுதாசி வரறதா? பாளையங்கோட்டையிலேருந்து நீங்களெல்லாம் எப்ப போகப் போறேள்? கவர்ன்மென்ட்டுல எப்ப ஜாகை கொடுப்பாளாம்?”

“நம்ஸ்காரம் சித்தி. அடுத்த மாசம் கொடுத்துருவான்னு அப்பா சொல்றா. அப்பா சோத்துக்குத் திண்டாட வேணாம்னுதான் அம்மா போயிருக்கா. பாதி வாடகை சர்க்காரிலிருந்து வரும். எனக்கும் சீமாச்சுக்கும் பரீட்சை முடியணுமோல்லியோ! அண்ணா லெட்டர் போட்டிருக்கான். அங்க ஒரு ஹோட்டல் லீசுக்கு எடுத்திருக்கானாம். மன்னிக்குக் கொடுத்த பாத்திரத்த எடுத்துண்டு மன்னிய ரயிலேத்தி விட சொல்லி எழுதிருக்கான். பாத்திரத்தை எல்லாம் எடுத்து வச்சேள்னா நான் கோணியில் போட்டு கட்டிருவேன்”

“பவிஷுடா… பவுஷு… பஞ்சாட்சரம் பொண்ணுக்கு பவுஷு வந்திருக்கு. பட்டணத்தில போயி குப்பக் கொட்டப் போறாளாக்கும். தாயாரையும் கூடப் பொறந்தவாளையும் கூப்டுக்கணும்னு தோணலியே. உருப்படுவானா அவன்? ஒரு பாத்திரம் தர முடியாது… எங்கள வெளில தள்ளிட்டு நீ வேணா எடுத்துண்டு போ!” கத்தினாள் கோதண்டத்தின் தாய்.

“மன்னி… சித்தியும் அக்காவும் எப்பவும் இப்படித்தான். பாத்திரமெல்லாம் வேண்டாம். உங்க துணிமணி மட்டும் எடுக்க முடிஞ்சத எடுத்துக்குங்கோ. நான் கூட வரப்போறேன். சாயங்காலம் ஆறு மணிக்கு வண்டி. கெளம்புங்கோ… சித்தீ… அக்கா… போயிட்டு வரேன்.”

oOo

தைலாவின் வாழ்க்கையில் அது வசந்த காலம். கோதண்டத்தின் மனதில் இவ்வளவு பிரியமா! அன்றைக்கு அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. தைலாவுக்குத்தான் நன்றாகப் படிக்கத் தெரியுமே.

‘என்ன இருந்தாலும் நீ வீரவநல்லூர் போய் வயித்தைக் காட்டிட்டுத்தான் தாழையுத்து வரணும். இல்லேன்னா சாபமிடுவா. நமக்கு ஏன் பொல்லாப்பு! அவா அம்மா புள்ள இன்னிக்கு அடிச்சுப்பா… நாளைக்கு சேர்ந்துப்பா… மாப்பிள்ளை சொல்றாருன்னு நீ நேர இங்க வரக்க் கூடாது.’ வரிகளை கோதண்டமும் படித்தான்.

“வேலியில போறத காதில எடுத்து வுட்டுண்டு, குத்துதே குடையுதேன்னாக்க என்ன செய்ய முடியும். சரீ… உங்க இஷ்டம். நாராயணன் கூட வரான். நாளைக்கு டிக்கெட்டு வாங்கிண்டு வந்துடறேன். ரெடியா இரு.”

oOo

“பெரியப்பா வீட்டில் வச்சு சீமந்தத்த நடத்திக்கத் தெரிஞ்சவனுக்கு இங்கப் போகப்படாதுன்னு சொல்றதுக்கு தைரியம் வரலியாக்கும்!? பார்க்கலாம்… எத்தன் நாள் இந்த வாழ்வுனு. நல்லபடியா புள்ள பொறக்கணும். அவனும் வளர்ந்து இதே மாதிரி நடந்துக்கணும். அப்பத்தான் என் வலி தெரியும்” என்றாள் கோதண்டத்தின் தாயார்.

“நீ ஏம்மா சும்மா வாய விடற… எல்லாம் இவகிட்ட சொல்லித்தான் அனுப்பிச்சுருப்பான். மாசாமாசம் அனுப்பற பணம் மட்டும் பரவாயில்லியான்னு கேட்டுடப் போறா. பஞ்சாட்சர அய்யர் எங்கே? பஸ் ஸ்டாண்டில நிக்கிறாரா?” என்றாள் தங்கம்.

நாராயணன் கண்ஜாடை காட்ட “போயிட்டு வரேம்மா… போயிட்டு வரேங்க்கா…” சொல்லிக்கொண்டு மஞ்சள் பையுடன் நடந்தாள் தைலா.

oOo

“அம்மா வலிக்கிறதும்மா…”

“பொய் வலியா இருக்கும்டீ! இப்பத்தானே ஒம்பதாம் மாசம் பொறந்திருக்கு. நான் சோம்புக் கசாயம் வச்சுத் தரேன். சூட்டு வலியா இருந்தா தணிஞ்சுரும். நாளக்கி தெவசம் கழியணுமே! பெருமாளே…” கஷாயம் வைக்கப் போனால் தைலாவின் தாய்.

கஷாயம் குடித்ததும் வலி அதிகமாகியது. சத்திரத்துப் பாட்டிக்கு அழைப்புப் போனது. இரண்டு மணி நேரத்தில் மாமியார் வாழ்த்துப்படி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இறந்தே பிறந்தது.

“மழை விட்டும் தூவானம் விடல…” சின்னு சித்தி புலம்பினாள்.”மணியா குழந்தை பிறந்தும் வச்சிக்கக் கொடுத்து வக்கலியே. வெறுங்கையா போய் நிக்கப் போறே.”

சென்னைக்கும் வீரவநல்லூருக்கும் செய்தி போயும் எவரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை. பத்து நாள் கழித்து கோதண்டம் எழுதிய கடிதம் வந்தது. ‘முப்பது நாள் ஆனதும் புறப்பட்டு வா. வரும் தேதியைத் தெரியப்படுத்து. ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போகிறேன்.’ இவ்வளவுதான். ஒரு ஆறுதல் வார்த்தை கூட இல்லை.

“புள்ளப் பெத்த பச்ச உடம்பு அம்பது நாளாவது ஆகவேணாம்? இப்படி எழுதியிருக்காரே! மனசாட்சியே இல்லாதவா… குழந்த செத்துப் போனா பிரசவிச்ச வலி கூடவா போயிடும்?” என்றாள் சித்தி.

oOo

“பெத்தவ வயித்தெரிச்சல் சும்மா போகுமா? வருஷா வருஷம் ஒண்ணப் பெத்து மண்ணுக்குக் கொடுங்கோ… மகராஜியா இருடீயம்மா. பொறப்படு.” தைலாவின் கண்ணீர் தொண்டைக்குள் இறங்கியது.

oOo

“ஒனக்குள்ள துக்கம் எனக்குமிருக்கு. இதுல யாருக்கு யார் ஆறுதல் சொல்றது? உகப்பா எழுத எனக்குத் தெரியாது. நமக்குக் கொடுத்து வச்சது அவ்வளவுதான். குழந்தை இல்லேன்னா நாம கடன் வாங்கலேன்னு அர்த்தம். சுமகூலி உனக்கு மட்டுந்தான். நீ உடம்பில சுமந்தே. நான் மனசில சுமந்தேன். இனிமே பிரசவம்னா உங்க ஊருக்குப் போக வேணாம். இது டவுன். இங்க நேர்த்தியான் டாக்டர்ஸ் எல்லாம் இருக்கா. அழுதுண்டே இருந்தா மனசும் உடம்பும் கெட்டுப் போகும்.”

அடுத்த தடவை மாமியார் சாபம் பலிக்கவில்லை. ஐந்தாண்டுகள் அம்மா சொன்னதற்காக பெருமாள் கோவில் படியை நெய்யால் மொழுகிக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் தைலா.

“குழிப்புள்ள மடியில வரும்பா… இவ என்னடீ! இப்படி உட்காரறா?” என்றாள் சின்னு சித்தி.

1942ல் ஒரு சுபயோக சுபதினத்தில் திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரியில் தைலா ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

‘அன்புள்ள தைலாவிற்கு,

பிரசவத்துக்குத்தான் உங்காத்துக்காரர் போப்படாதுன்னுட்டார். குழந்த பொறந்த நாளைக்காவது வரலாமில்லையா! பெரியப்பாவுக்கு சஷ்டியப்த பூர்த்தி வருது. நீ ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆறது. ஒரு எட்டு வந்து முகத்தக் காட்டிட்டுப் போ. மாப்பிள்ளைக்கு அப்பா தனியா கடுதாசி எழுதுவார். உன் குழந்தையப் பார்க்க எல்லாரும் ஆசையா இருக்கா.

இப்படிக்கு,

அம்மா’.

oOo

“குழந்தை பத்திரம். குழந்தை ஜாக்கிரதை. உன் பொறந்தாத்து மனுசாளைப் பார்த்த சந்தோஷத்துல குழந்தைகிட்ட அலட்சியமா இருந்துறாதே. சாக்கு சொல்றத நான் எப்பவுமே ஒத்துக்க மாட்டேங்கேறது உனக்குத் தெரியும். கொழந்தையில்லாம வந்தா திரும்பித் தாழையூத்துக்குத்தான் போகணும்.” கண்டிப்பாக சொன்னான் கோதண்டம்.

oOo

சஷ்டியப்த பூர்த்தி கோலாகலமாக நடந்தது. தைலாவின் பெண் பாகீரதியை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை.

“தைலா… ஊஞ்சல் பாட்டு பாடேன். உன் பெண்ணை காக்கா கொத்திண்டு போயிடாது. மத்த குழந்தைகளோடு விளையாட விட்டுட்டு வா.” கூப்பிட்டாள் அத்தான் மன்னி.

‘கொஞ்சிக் குலாவும் கிளியே

கண்ணூஞ்சல் அடியே

கொஞ்சிக் குலாவும் கிளியே

உத்தமி பெற்ற குமாரி

நித்தியம் சர்வாலங்காரி’

“தைலாக்கா… இங்க வாயேன்…” சித்தப்பாவின் கடைசிப் பெண் கத்தினாள்.

தைலா மட்டுமல்ல. ஊஞ்சலை சுற்றியிருந்த கூட்டமே ஓடி வந்தது.

தைலாவின் பெண் மட்ட மல்லாக்க மூச்சுத் திணறிக் கொண்டிருந்தாள்.

“என்னடீயாச்சு!?”

சஷ்டியப்த பூர்த்திக்க வந்திருந்த ஒரு டாக்டர் நாடி பிடித்து பார்த்தார். என்ன நடந்தது என்று சுழ்ந்திருந்த குழந்தைகளை விசாரித்தார். ஒரு ஏழு வயதுப் பையன் திக்கித் திணறிச் சொன்னான். “நாங்கெல்லாரும் மூக்கில் புளியங்கொட்டையப் போட்டு எடுக்க முடியுமான்னு போட்டி போட்டுண்டு இருந்தோம். எல்லாரும் போட்டு எடுத்துட்டோம். சோமுதான் இவ மூக்கில போட்டு எடுக்க முடியுமா… சின்ன மூக்குனு சொன்னான். நான் முன்னடியில போட்டு எடுத்துட்டேன். சோமு ரொம்ப ஆழமாப் போட்டுட்டான். எடுக்க முடியல… விரல விட்டு விட்டுப் பார்த்தான். அதுக்குள்ள இவ மயங்கிப் போய் கீழே விழுந்துட்டா.”

சோமுவின் தாயார் பிள்ளையை அழைத்துக் கொண்டுபோய் பொத் பொத்தென்று முதுகில் போட்டாள். “கடங்காரா… ஒரு நாழி சும்மா இருக்க மாட்டியே! சரியான திரிசமன்.”

‘யாரை அடிச்சு என்ன பண்ணறது! குழந்தையின் மூக்கு குடமிளகாய் போல வீங்கியிருந்தது.’

அதற்குள் டாக்ட கிட்டை எடுத்துக் கொண்டுவந்து ஊசி போட்டார். “இதோ பாருங்கோ… இது மூக்குக்குள்ள தும்மல வரவழைக்கிற ஊசி. குழந்த தும்மினா உயிர் பிழைக்கும். இல்லேன்னா உங்க பாக்கியம் அவ்வளவுதான்.”

“பாவீ… ஏந்தான் உன்ன வரவழைச்சேனோ! ஏழுமலையானே… சடவுடையாரே… கொழந்தையப் பொழைப்பிச்சுக் கொடு. தோ பாருங்கோன்னா… இன்னிக்கு ராத்திரியே இவள ரயிலேத்தி வுட்டுடுங்கோ. மாப்பிள்ளைக்கு வர தகவல தந்தி அடிச்சு சொல்லிடலாம்.”

அரை மணி நேரம் ஊர்ந்தது.

ஹஆஆஆஅச்சு….

குழந்தையின் தும்மல் தைலாவை உயிர்ப்பித்தது.

“அப்பாடா… என்ன ஒண்ணு… குழந்தையின் மூக்கு நன்றாக விரிந்தே கிடந்ததனால் மூக்கின் நுகரும் நரம்புகள் செயலிழந்துவிட்டன. இந்தக் குழந்தைக்கு கடைசி வரையில் வாசனையோ நாத்தமோ தெரியாது. வீக்கம் குறையறதுக்கு ஒரு வாரம் ஆகும். இந்த மாத்திரையப் பொடிச்சுக் கொடுங்கோ.” சொல்லிவிட்டுப் போனார் டாக்டர்.

“அப்பா… நான் இன்னிக்குப் போகலே! இந்த மூக்கோடு போனா என்ன கொன்னுடுவார். வீக்கம் குறைஞ்சதும் போறேன்.” தீர்மானமாக சொன்னாள் தைலா.

oOo

2 responses to “குத்திக்கல் தெரு – 1

  1. பிங்குபாக்: குத்திக்கல் தெரு – அறிமுகம் « Snap Judgment

  2. romba nalla ezhuthi irukeenga….
    nalla tirunelveli ayyar pechu vazhakku(anganga neraya verupadu irunthalum…)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.