Monthly Archives: திசெம்பர் 2013

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

வேலை குறைவாகவும் வலை நிறைவாகவும் இருந்த காலம். அன்று மட்டும் காலையிலேயே ஏதோ தலை போகிற பிரச்சினை. நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய மேலாளர் வாயிலிலேயே தடுத்தாட்கொண்டு, “உன்னுடைய அரைகுறை ஆடைகள் தாங்கிய கன்னியர் புகைப்படங்களைப் பார்த்து விட்டு, செட்டில் ஆனபிறகு என்னுடைய அறைக்கு வந்து சேர்… முக்கிய வேலை காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் சென்று விட்டார்.

தட்ஸ்தமிழோ, தமிழ் சிஃபியோ, யாஹூ செய்திகளோ, ரீடிஃப் தகவல் மையமோ… எந்த வலையகத்தைத் திறந்தாலும் இடப்பக்கத்தில் கவர்ச்சிப் படமும் வலப்பக்கத்தில் கிளுகிளுப்பும் ஈசானிய மூலையில் கிசுகிசுவும் மட்டுமே நிறைந்த வலைக்காலம் அது. அப்படி தமிழக நிகழ்வுகளை அறியும் தாகத்தில் இருப்பவனை, காலையில் வந்தவுடன் ஜெயமாலினி படத்தில் கண் விழிப்பவன் என்று சொல்லிவிட்டாரே என்னும் தர்மசங்கடம் கலந்த குற்றவுணர்வுடன் கணினியைத் திறந்தேன்.

குறைவாக வேலை இருந்தாலும் பக்கத்து இருக்கை ஜான் கணினியில் இருந்து ’க்ளிக்…க்ளிக்’ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அப்படி என்னதான் எலியை வைத்துக் கொண்டு விளையாடுகிறான் என எட்டிப் பார்த்தேன். பெண்களின் புகைப்படங்களாக இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒவ்வொன்றிற்கும் ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பெண் போட்டுக் கொண்டிருந்தான்.

மணப்பெண் பார்ப்பதற்கு கல்யாணத் தரகர் வைத்திருக்கும் ஆல்பம் போல் அடுக்கு அடுக்காக புகைப்படங்கள் வந்து கொண்டே இருந்தது. ஒருவருக்கு தரவரிசையில் ஐந்தோ, ஆறோ, ஏழோ க்ளிக்கினால், தானியங்கியாக அடுத்த புகைப்படம் தோன்றியது. ஒருவருக்கு ஒரு எண் கொடுத்துவிட்டால், அடுத்த ஆளின் படம் வரும். அடுத்தடுத்து தொடர் சங்கிலியாக ரகவாரியாக நிழற்படங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தத் தளத்தின் பெயர் ’நான் அம்சமாக இருக்கிறேனா?’ (“Am I Hot or Not?”) இது 2000ம் ஆண்டிற்கு முந்தைய பொற்காலம். வைய விரிவு வலையின் துவக்க காலம். “பையனுக்கு தொந்தி” என்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லி பத்துக்கு ஒரு மார்க் போடலாம். பொண்ணு பிடிக்கல” என்று போய்க்கொண்டே இருக்கலாம். ’ஏன் பிடிக்கவில்லை… அவளுக்கு ஒரு மனம் இருக்காதா! அது நோகாதா?’ என்றேல்லாம் சஞ்சலமடைய வேண்டாம்.

இதன் பின்தோன்றலாக இன்றைய யூ டியூப்.காம் தொடங்கியது. ’ஹாட் ஆர் நாட்’ பார்த்தபிறகு யூடியூப் துவங்கியதாக ஜாவேத் கரீம் சொல்கிறார். யார் வேண்டுமானாலும், எவரின் புகைப்படத்தை வேண்டுமானாலும் வலையில் ஏற்றி, பலருக்கும் காட்சிப்படுத்தலாம் என்பதை ஹாட் ஆர் நாட் முன்னிறுத்தியது. அதுவரை, காப்புரிமையைக் கண்டு பயந்த வலையகங்கள், ஒவ்வொருவரும் சொந்தமாக எடுத்த படங்களை மட்டுமே தளத்தில் ஏற்றலாம் என்ற விதிமுறையை வைத்திருந்தது. ஹாட் ஆர் நாட் இந்த விதியைத் தளர்த்தி, ‘உங்களின் முன்னால் காதலி படத்தை இங்கே கொடுத்து பழி தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று அழைத்தது. அதைப் பார்த்த ஜாவேத், ‘அசையாத படங்களுக்கு பதில் அசையும் படங்களைக் கொடுத்தால்!’ என்று யோசித்ததில் யூ ட்யூப் பிறந்தது.

ஹாட் ஆர் நாட்.காம் மூலம் ஊக்கம் பெற்று உருவான இன்னொரு கோடீஸ்வரர் ஃபேஸ்புக் கொடுத்த மார்க் சக்கர்பர்க். ஹார்வார்டு பல்கலையில் படித்த பொழுது சக மாணவர்களை ஒப்பிட ஃபேஸ்மாஷ் நிரலியை உருவாக்கினார் மார்க் சக்கர்பர்க். ”ஆஷா அழகா? ஆயிஷா அதிக அழகா?” என்று இருவரை பக்கத்தில் வைத்து ஒப்பிட்டு வரும் கேள்விக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களின் புகைப்படங்களையும் திருடியோ, திருடவைத்தோ பெற்றுவிட்டார். அதே நபர்களுக்கு, உங்களின் நண்பர் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தார் என்பதை அறியும் வசதியெல்லாம் பின்னர் வந்தது. புகைப்படங்களுக்குக் கீழே பின்னூட்டங்களும் சூடாக இட முடியும். அவற்றையெல்லாம் படிக்கவோ, அலசவோ நேரம் இல்லாவிட்டால், பிடிச்சிருக்கு/பிடிக்கலை என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ’தி ஃபேஸ்புக்’ துவங்கியபோது, ‘பிடிக்கவில்லை’ நீக்கப்பட்டு, ‘லைக்’ மட்டும் நிலைத்திருக்கிறது.

பெண்களை முகப்பில் போட்டு வியாபாரம் செய்வது இணையம் வந்த பிறகு வந்தப் பழக்கமல்ல. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அரைகுறை ஆடைப் பெண்களை அட்டையில் போட்டு புகையிலையை விற்பது புகழ் பெற்றிருந்தது. ஆனால், வலைத்தளங்களின் புகழைப் பரப்ப வியாபாரத்திற்கு வருகையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சூட்சுமத்தை அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.

இணையத்திற்கு மட்டுமல்ல. ‘பூத் பேப்’ (Booth Babes) என்பது கலாச்சாரத்தில் ஊன்றி நிற்கும் தொன்மம். விளையாட்டுக்களை விற்கும் இடமாக இருக்கட்டும். புது கார்களை அறிமுகம் செய்வதில் ஆகட்டும். அல்லது மைக்ரோசாஃப்டின் நவீன விண்டோஸ் எட்டு.ஒன்று துவக்கம் ஆகட்டும். மந்திரா பேடி போல் வர்ணணையாளரை நாம் நிச்சயம் பார்க்கலாம். புன்சிரிப்புடன் ஆண்களை நேசமாக அழைத்து, அவர்களின் ஜாதக விவரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் துணை நிச்சயம் தேவைப்படுகிறது. பெரும்பாலான மாநாடுகளுக்கு ஆண்களே அனுப்பப்படுவதும், மேற்கத்திய உலகில் நிரலி எழுதுவதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு நீடித்து இருப்பதாலும் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

எங்கெல்லாம் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஏமாறவும் பெரும் வாய்ப்பு இருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் பொய் முகத்தைக் காட்ட நிறைய வாய்ப்பு அமைந்திருக்கிறது. தன்னை இளம்பெண்ணாகவும், தனது இக்கட்டில் இருந்து மீள பணம் தேவை என்றும் கட்டமைத்து பணம் பறித்தவர்களின் செய்திகளை மாதத்திற்கு ஒரு முறையாவது தினசரிகள் வெளியிடுகிறது. இவர்கள் எல்லோரும் அதிகாரபூர்வமாக ஏமாந்தவர்கள். குட்டு வெளிப்பட வேண்டாம் என்று கம்மென்று இருப்பவர்கள் ஏராளம். தவணை அட்டையை தந்துவிட்டு காசை இழப்பது, கல்யாணம் செய்து கொள்வார் என நம்பி வங்கிக்கணக்கில் இருந்து பட்டுவாடா செய்வது என்று எப்படி எல்லாம் கறக்க முடியுமோ அப்படி எல்லாம் திருட இணையமும் பாலியல் இச்சையும் வழிசெய்து தந்திருக்கிறது.

கிரெக்ஸ் லிஸ்ட் (Craigslist) மூலமாக ஏய்த்தவர்களுக்கென்றே முன்னூறு பக்க புத்தகம் எழுதலாம். மேலும் பாலியல் பரீட்சார்த்தங்களை சுலபமாக செய்து பார்க்க கிரெக்ஸ் லிஸ்ட் சிறந்த சோதனைச்சாவடியாக இருக்கிறது. மாட்ச்.காம் (Match.com) போன்ற வலைப்பக்கங்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால்தான் உள்ளே வரலாம் என பணம் பிடுங்கிகளாக வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நயா பைசா இல்லாமல் நுழைய கிரெக்ஸ்லிஸ்ட் அனுமதிக்கிறது. இது கள்வர்களுக்கும் கொண்டாட்டாம். கணினியையேக் கட்டிக்கொண்டு அழுபவர்களுக்கும் கொண்டாட்டம்.

இந்தியாவில் ஈ-பே (e-bay)யை விட பாஸி.காம் (Baazee.com) புகழ்பெற்றிருந்தது. ‘பாஸி’ தளத்தில் பள்ளி மாணவியின் செக்ஸ் வீடியோவை விற்றதற்காக பாஸி.காம் நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்களை கொஞ்சமாவது யோசிக்க வைத்திருக்கும்.

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டாலும், திருடரை ஒழிக்க ஆப்பிள் முடிவு கட்டியது. ஐ-போனில் பலான விஷயம் செய்ய முடியாது என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. எந்தவித செக்ஸ் சமாச்சாரமும் ஆப்பிள் கடை (apps) மூலமாக விற்கவோ வாங்கவோ முடியாது. அந்த மாதிரி பலான தளங்களுக்கும் செல்வதற்கான தடையை நிரலியிலேயே வைத்துக் கொண்டிருந்தது. பச்சிளம் பாலகரிடம் கூட நம்பிக்கையாக ஆப்பிள் ஐபோனைத் தரலாம். அவரால் லட்சுமணன் ரேகாவை மீறி பெரும்பாலும் தப்புதண்டா செய்ய முடியாது. அப்படித்தான் இரும்புக்கோட்டையாக ஆப்பிள் ஐஓஎஸ் இருந்தது. ஆனால், சில காலம் முன்பு துவங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி இப்பொழுது கிட்டத்தட்ட முழுவதுமாக திறந்த வழியாக்கி விட்டிருக்கிறது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் வலையகங்களைத் திறந்தால் வஞ்சியரின் வண்ணப்படங்கள். இன்றோ, செல்பேசியின் அப்ளிகேஷன்களை தரவிறக்க சென்றால் விதவிதமாக 17+ தரச் சான்றிதழுடன் அழைப்புகள். கணினித்திரை மாறியிருக்கிறது. நுட்பம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் கூட முப்பரிமாணத்தில் தத்ரூபமாக உயிர் பெற்றிருக்கிறது. ஆனால், விற்கும் வழியிலோ சந்தையாக்கத்திலோ முகப்பில் தோன்றும் பெண்களின் ஆடைகளிலோ மாற்றம் நிகழவில்லை.