Tag Archives: Websites

கனலி – சில எண்ணங்கள்

சுனீல் கிருஷ்ணன் பதிவில் (சொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து | ஒரு துளி பிரபஞ்சம் …) இந்தப் பட்டியல் கண்ணைக் கவர்ந்தது:

 தமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை,  வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது.

இந்த இதழ்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என் எண்ணங்களைப் பகிர உத்தேசம். முதலில் கலை இலக்கிய இணையதளம் | கனலி

உரிமைத்துறப்பு

இந்தப் பதிவின் நோக்கங்கள்:

  1. என்னை எரிச்சலூட்டும் விஷயங்களைப் பகிர்வது
  2. வசதிக்குறைவான விஷயங்களை சுட்டுவது
  3. பிற தளங்களில் இருக்கும் நடைமுறையை அனுசரிக்க வேண்டுவது
  4. இந்தப் பதிவு கனலி வலைத்தளத்திற்கான பரிந்துரைகள் மட்டுமே என்றாலும் சொல்வனம் உட்பட அனைத்து வலைத்தளங்களுக்கும் சுட்டுவது

பொறுப்புத் துறப்பு

  • சொல்வனம் போன்ற தளங்களிலும் இதே போல் பல குறைகள் இருக்கின்றன. அவற்றில் சில்வற்றையாவது பொதுவெளியில் உரையாடலுக்கு நேரம் கிடைக்கும்போது முன்வைக்கிறேன்.
  • சொல்வனம் போன்ற தளங்களில் இருக்கும் குறைகளையும், அந்தத் தளங்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வெப் அட்மின் ஆக இருப்பதால், நம் குறைகள், நமக்கேத் தெரியாமல் போகின்றன.
  • இந்தப் பதிவில், கனலி தளைத்தில் வெளியான மொழியாக்கத்தின் தரம், புனைவுகளின் முக்கியத்துவம், கட்டுரைகளின் செறிவு போன்றவற்றை கவனிக்கவில்லை. அதற்கு இன்னொரு தடவை அனைத்து விஷயங்களையும் மீண்டும் கனலியில் வாசித்து விட்டு வருகிறேன்.

மேம்படுத்த வேண்டியவை

1. வலது பக்க மவுஸ் பொத்தான் இயங்கவில்லை

ரைட் க்ளிக்கை கனலி அனுமதிப்பதில்லை. நான் ஒரே சமயத்தில் நாலைந்து டாப்-களைத் திறந்து படிப்பவன். வலது பக்க சொடுக்கை நீக்குவதால் எந்த வித லாபமும் கிடையாது. இதனால் காப்புரிமையை பாதுகாக்க முடியாது. திருட நினைப்பவர்கள் எப்படி இருந்தாலும் மேட்டரை உருவி விடுவார்கள்.

இது ஒரு மோசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

தேடுவதில் கூட பிறிதொரு இடத்தில் எழுதியதை, வெட்டி எடுத்து, ரைட் பொத்தானை சொடுக்கி ஒட்டுவது பலரின் வழக்கம். இன்றைக்கு கணினியில் இப்படியெல்லாம் எழுத்தைப் பாதுகாக்க முடியாது. உங்களின் எழுத்து அதிகம் வாசிக்கப் பட வேண்டும்; அதன் மூலம் வருவாய் வர வேண்டும் என எண்ணுவது நியாயமே. அதற்கான வழிகள் பல உள்ளன. அதையெல்லாம் நாடாமல், ரைட் க்ளிக்கை நீக்குவது முடக்கும் செயல்பாடு.

நமக்குப் பிடித்த விஷயங்களை மேற்கோள் காட்ட இந்த காபி + பேஸ்ட் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். நறுக்குகளை சேமிப்பது என்பது காலந்தோறும் நாம் படிக்கும் வழக்கம். புத்தகத்தின் வெள்ளையோரங்களில் குறிப்பு எழுதி வைப்போம். அவ்வாறு ரசித்த சொற்றொடர்களை பிரதியெடுக்கும் வசதி கொடுக்காமல் இருப்பது அக்கிரமம்.

இவ்வளவு சொல்லிவிட்டு எப்படி சரக்கை சுடுவது என்று சொல்லாமல் இருப்பது உகந்ததல்ல. கனலியில் இருந்து கோப்பை எடுப்பது மிக எளிது:

  1. கண்ட்ரோல் + எஸ் பொத்தானை அமுக்குங்கள். அதன் மூலம் உங்கள் கணினியில் மேட்டர் இறங்கும்.
  2. அதை உங்களின் நோட்பேட் போன்ற எடிட்டரில் திறக்கவும்
  3. இப்பொழுது வேண்டிய விஷயங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
  4. இதற்கென்றே பிரத்தியேகமான நிரலிகள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன – அவற்றையும் பயன்படுத்தி, மொத்த தளத்தையும் கூகிள்/யாஹூ/மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற தேடுபொறிகள் உருவுகின்றன
  5. கனலியில் இந்த மாதிரி சுடுவது எளிது. பிரதிலிபி போன்ற தளங்கள் இந்த மாதிரி மோசமான கெடுபிடிகளின் அடுத்த கட்டம். அவர்களிடமிருந்தும் ஸ்க்ரீன் ஸ்க்ரேப் செய்யும் வித்தைகள் எளிதே.
  6. கள்ளன் எப்பவுமே பெருசு; காப்பான் எப்பவுமே சிறுசு.

2. பார்த்தவர்களின் எண்ணிக்கை – Post Views

பார்வையாளர் வருகை என்பது இலக்கிய இதழ்களில் அப்பட்டமான பொய். இது மாயத் தோற்றத்தை உருவாக்கும். இணைய இதழுக்கு வருபவர்களில் தேடுபொறி யார், உண்மையான மனிதர் யார் என்று பிரித்தறிவது இயலவே இயலாத காரியம். முகமூடி போட்டுக் கொண்டு வருபவர்கள், ப்ராக்ஸி மூலம் வருபவர்கள், தங்களில் தளம் இயங்குகிறதா என பரிசோதிக்க வருபவர்கள், வலையகத்தை சீக்கிரமாகத் தருவதற்காக உள்ளூர் சி.டி.என். மூலமாக இறக்கிக் கொள்பவர்கள், அது தவிர சமூக மிடையங்கள் (ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை), சுட்டிகளை சோதிக்க வரும் பாட்-கள் என எல்லோரும் இந்தக் கணக்கில் சேர்வார்கள்.

இது தவிர பேஜ் ஹிட்ஸ் என்னும் மாயமானைத் துரத்துவதற்கென்றே நிரலிகள் கூட எழுதலாம். (எ.கா.: Explained: How auto-refresh on your website affects your audience data).

இந்த வருகையாளர் எண்ணிக்கையை பகிரங்கமாகச் சொல்வதால் எந்த இலாபமும் கிடையாது. நான் நூற்றுக்கு 82 மதிப்பெண்… நீ எவ்வளவு என்று கேட்பது போல் சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள் என்று கணக்கிடுவது அரதப் பழசு. எத்தனை பேர் எங்கே கண்ணை செலுத்தினார்கள்; எவ்வளவு நேரம் வாசித்தார்கள்; எப்படி எந்தப் பத்திகளில் ஆழ்ந்து ஊன்றி கவனித்தார்கள்; எப்படி ஸ்க்ரால் செய்தார்கள்; எங்கே கவனம் தப்பியது என்றெல்லாம் கூட கணக்கிட கூகிள் அனலிடிக்ஸ் போன்ற பல தளங்கள் இருக்கின்றன.

எத்தனை பேர் க்ளிக்கினார்கள் என்பதை விட எவர் படிக்கிறார்கள் என்பதும் எப்படி உள்வாங்கினார்கள் என்பதுமே முக்கியம் என்பதை இலக்கிய இதழ்களாவது வலியுறுத்த வேண்டும். ஃபேஸ்புக் மூலமாக ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இந்த எண்கள் முக்கியமாகத் தெரியலாம். ஆனால், கனலி போன்ற தீவிர இதழ்கள் இந்த எண்ணை நிராகரிக்க வேண்டும்.

வெறும் வாசகர் எண்ணிக்கை முக்கியமென்றால், பத்திரிகை.காம் வைக்கும் தலைப்புகள் போல் சுண்டியிழுத்து விடலாம்; ஒன் இந்தியா போடும் கவர்ச்சிகரமான துணுக்குகள் மூலம் க்ளிக்க வைக்கலாம். வாசகர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவது வியாபாரிகளின் நோக்கம். பரபரப்பு என்பது விளம்பரதாரர்களுக்குத் தேவை. வாசகர் எண்ணிக்கை என்பது விளம்பரத்தை நாடுவோருக்கான தேவை.

3. எழுத்தாளர் பெயர்

எழுதியவர் பெயர் எப்பொழுதுமே கனலி என்றே இருக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் “சித்துராஜ் பொன்ராஜ்” என வைத்துக் கொள்வோம். அவர் எழுதிய எல்லாம் மட்டும் வாசிக்க விழைகிறேன். இப்பொழுது அப்படி என்னால் பருந்துப் பார்வை பார்க்க முடிவதில்லை. தேடினாலும் கிடைப்பதில்லை.

4. நிலை நிற்றல் – இயைபு

ஆசிரியரின் பெயரை தலைப்பின் அடியில் போடுவது மரபு. ஆசிரியரின் புகைப்படத்தைப் போடுவது சற்றே முகத்திலடித்தது போல் இருக்கிறது. சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம் போடுவதும் சிலருக்கும் போடாமல் இருப்பதும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

ஒரே மாதிரி வடிவமைப்பை எல்லாருக்கும் பின்பற்ற வேண்டும். நர்மி எழுதும் தொடர் ஒவ்வொன்றுக்கும் அவரின் ஒவ்வொரு புகைப்படங்கள் போடுவது; பாலா கருப்பசாமிக்கும் கமலக்கண்ணனுக்கும் அவ்வப்போது அவர்களின் படங்கள்; அவ்வப்போது வேறு பொருத்தமான படங்கள் என்று முரன்பாடாக இருக்கக் கூடாது.

  • ஒவ்வொரு பதிவுக்கும் எழுத்தாளரின் பெயர்
  • ஒவ்வொரு பதிவின் முடிவில் (கட்டாங்கடைசியாக) அந்த எழுத்தாளரைக் குறிக்கும் ஒளிப்படம் அல்லது அவதாரப் படம் (சிறிய ஸ்டாம்ப் அளவில்)
  • ஒவ்வொரு பதிவின் துவக்கத்தில் – அந்தப் பதிவை, எழுத்தை, கதையை ஒட்டிய பெரிய ஓவியம் அல்லது ஒளிப்படம் (எடுத்தவர் (அ) வரைந்தவர் யார், காப்புரிமை எவருக்கு போன்ற விவரங்களை படத்தின் அடியில் சொல்ல வேண்டும்)

5. தொடர்கள்

தொடர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு சுட்டி கொடுத்தால் போதுமானது. ஒரு தொடருக்கு ஒரு உரல். அந்த உரலுக்குள் சென்றால், அந்தத் தொடரின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் செல்லும் வசதி என அமைக்கலாம்.

இப்போதைய நிலையில் தொடர் என்று பட்டியலிடப்பட்ட அனைத்தும் கூட்டமாக ஒரே இடத்தில் கொத்தாக தேதி வாரியாக இருக்கின்றன. ஒரு தொடரின் முந்தைய பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நடுவே முன்பின்னாக எளிமையாக சென்று வர முடிவதில்லை.

கீழே பாருங்கள். இது தொடரின் ஆறாம் பகுதி. நான் ஐந்தாம் பகுதிக்கு செல்ல விரும்புகிறேன். இது எளிதாக வேண்டும். மூன்றாம் பகுதியில் இருந்து அடுத்த பகுதியான நான்காம் பகுதிக்குச் செல்ல “ஏழு கடல், ஆறு மலை” தாண்டக் கூடாது.

6. ஆங்கிலம்

எங்கேயும் தமிழிலேயே தளம் அமைய வேண்டும். மறுமொழி சொல்வதற்கான பெட்டிகள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ”Home” போன்ற சொற்றொடர்களை தமிழில் “முகப்பு” என்றோ “இல்லம்” என்றோ “வாயில்” என்றோ அழைக்குமாறு மாற்றலாம்.

7. தொடர்புடைய பதிவுகள்

கவிதைகளுக்கான பதிவில் (சார்லஸ் சிமிக் கவிதைகள் | கனலி) கீழே காணும் தொடர்பான பதிவுகள் காணக் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு கவிதையை வாசிப்பவர், அப்படியே சிறுகதைக்குச் செல்லலாம் என்பது உண்மையே. இருந்தாலும் கவிதைகளையோ மொழியாக்கங்களையோக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

இதை வகைப்படுத்தல் மூலமாகவோ, குறிச்சொற்கள் கொடுப்பது மூலமாகவோ செய்யலாம். கணினி நிரலியே தானியங்கியாக இதைத் தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது. நாமே இங்கேத் தொடுப்பு கொடுப்பது எப்போதும் ஒரே விஷயத்தையே முன்னிறுத்தும். புதிய + பழைய + வித்தியாசமான என்று சரக்கை மாற்றி மாற்றிக் கலந்து கொடுக்கும் வித்தை நிரலிக்கு எளிது. மனித மூளைக்கு அப்படிக் கலைத்துப் போட்டு தேர்ந்தெடுப்பது முடியாத விஷயம்.

8. குவிமையம் & சித்தாந்தம்

வலையகம் என்பது ஒரு விஷயத்தை முக்கியமெனக் கருத வேண்டும். கனலி அவ்வாறு எதை – தன்னுடைய கவனத்தைக் கோரும் ஏக சிந்தையாய்க் கொண்டுள்ளது என்பது இப்பொழுது தெளிவாகவில்லை. இது காலப்போக்கில் தெளிவாகாலம்.

உதாரணத்திற்கு சமீபத்திய வரவான The Juggernaut பாருங்கள்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும்.

  • நகரத்திற்கு புலம்பெயர்ந்த மாந்தர்களின் அனுபவங்களைப் பகிருதல்
  • இளைய படைப்பாளிகளின் புனைவுகளை சீர் செய்து ஒழுங்குபடுத்தி தர மேம்படுத்தல்
  • கவனம் கிடைக்காத அரிய கலைகளை அறிமுகம் செய்தல்
  • குழந்தைகளுக்கான இலக்கியம்

இப்பொழுது அகல உழல்கிறார்கள். ஆழ உழல்வது அவசியம்.

9. புகழ் பெற்ற ஆக்கங்கள்

நியு யார்க்கருக்கும் அறிமுகம் தேவையில்லை. ஹருகி முரகாமிக்கும் அறிமுகம் தேவையில்லை. ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம் | கனலி போன்ற படைப்புகளை விட அதிகம் அறிமுகமாகாத உலக எழுத்தாளர்களை முன்வைக்கலாம்.

அதே நியு யார்க்கரில் முதன்முறையாக வெளியாகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் சிறுபத்திரிகைகள் எக்கச்சக்கம். அவற்றில் எழுதுபவர்களில் இருந்து அதிகம் புழங்காத பெயர்களை மொழிபெயர்க்கலாம். அல்லது பெரிய பத்திரிகைகளே சிறந்தது என்றால் கிரந்தா, அக்னி, ஹார்ப்பர்ஸ் என்று சிறகை விரிக்கலாம்.

இடைவேளை

“நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு, அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்”

சுந்தர ராமசாமி

பாராட்டுகள்

இவ்வளவு ஆலோசனைகள் சொல்லியாகி விட்டது. இப்பொழுது சௌகரியமான விஷயங்களைப் பார்ப்போம்

  1. நான்கு சமூக மிடையங்களில் இயங்குவது வெகு வெகு ஆரோக்கியமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் – இரண்டுமே மாறுபட்ட தளம். ஃபேஸ்புக், டிவிட்டர் போல் இல்லாமல் வேறு விதமான பயனர்களைப் பெற்றுத்தரும். நான்கிலும் தொடர்ந்து செயலூக்கத்துடன், தொலைநோக்குத் திட்டத்துடன் அந்த ஊடகங்களின் அனைத்து பயன்களையும் முழுமையாக உபயோகித்து செயல்பட்டால், கனலி தவிர்க்க முடியாத சக்தியாக ஆகும்.
  2. கனலி இலக்கிய நேரம் – இது போன்ற சந்திப்புகளும் சொற்பொழிவுகளும்தான் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்துவதன் மூலமும் அந்த நிகழ்வுகளில் பரந்துபட்ட தலைப்புகளில் நன்றாகப் பேசுவோரை உரையாட அழைப்பதும் புதிய வாசகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
  3. Content is King – எவ்வளவு நேர்காணல்கள்! எத்தனையெத்தனை தமிழாக்கங்கள்!! எம்புட்டு சிறுகதைகள்!!! சரக்கு அதிகமாக இருப்பதினாலேயே தளம் மேம்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புபவன். சரக்கு உயர்தரமாக இருப்பது இரண்டாம் பட்சம். சரக்கு வடிவுற அமைப்பது மூன்றாம் பட்சம்.
  4. போட்டிகள் – தமிழில் இதற்கு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. குறுங்கதை ஆட்டம் மாதிரி, இன்னும் நிறைய பந்தயங்களை நடத்த வேண்டும். பயணக் கட்டுரை, அறிவியல் அறிமுகம், அனுபவப் பதிவு, என்று பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.
  5. ஆசிரியரின் உரிய அனுமதி – அழியாச்சுடர்கள் தளம் என்றும் பிடித்தமானது. பெட்டகம் பகுதி அது போல் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. அதுவும், பிறிதொரு இடத்தில் வெளியானதாக இல்லாமல், புதிய விஷயங்களாகப் பழைய ஆக்கங்களை இணையத்தில் ஏற்றுவது போற்றுதலுக்குரியது.
  6. ஃபேஸ்புக்கில் தட்டி வைப்பது – இதை க. விக்னேஷ்வரன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதுவும் ஒரே வார்ப்புருவில் போடாமல் அலுப்பு தட்டாத வகையில் விதவிதமாகப் பரிமாறுகிறார். ஒரு நாள் பார்த்தால் உலக இலக்கியகர்த்தா; மற்றொரு நாள் புத்தம் புதிய படைப்பாளியின் ஆக்கம்; இன்னொரு நாள் வேறொரு சுவாரசியமான போஸ்டர். இதை இவர்கள் ஃபேஸ்புக் விளம்பரமாகவும் செய்யத் துவங்கலாம். இன்னும் பலரைச் சென்றடையலாம்.

ஆலோசனைகள்

  1. பாட்காஸ்ட் – ஒலிப்பதிவை துவக்குவது. அன்றாடம் கிடைக்கும் இலக்கியப் பதிவுகள், படித்தவை, கிடைத்தவை என எல்லாவற்றையும் பேச்சில், ஒலிவடிவில் அறிமுகம் செய்யவேண்டும். இந்தக் காலத்தில் சவுண்ட்கிளவுட் இருந்தால்தான் எவரும் மதிக்கிறார்கள்.
  2. குவிமையம் / சிறப்பிதழ் – ஆங்கில இதழ்கள் இதை மாதா மாதம், இதழ்தோறும் செய்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பு, விவாதப் பொருள், மூலக் கரு – எடுத்துக் கொள்கிறார்கள். பணிவு, தந்தை, அரங்கு என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சுற்றி பல பேர் எழுதுகிறார்கள். வலையகத்துக்கென்று பிரத்தியேகமாக தொலைநோக்கு பார்வை இருப்பது நெடுநாளைக்கான வேண்டுகோள் (மிஷன் / விஷன்). ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஒருமிப்பு (ஃபோகஸ்) இருப்பது உடனடி வேண்டுகோள். உதாரணத்திற்கு லஃபாம்ஸ் இதழின் மையங்கள்:
    • பழிப்பு
    • நினைவு
    • காலநிலை
    • மகிழ்ச்சி
    • வர்த்தகம்
    • இரவு
    • போட்டி
    • நீர்
    • சட்டம்
    • இசை
    • பயம்
    • மனநிலை
    • வீடு
    • அதிர்ஷ்டம்
    • சதை
  3. இ-புக் – கிண்டில் புத்தகங்களும் கூகுள் ப்ளே நூலகத்தில் தொகுப்புகளும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இணைய அங்காடிகளில் ஈபுக் விற்க வேண்டும்.
  4. ஆடியோ புக் – எக்கச்சக்கமான விஷயங்கள் கனலி தளத்தில் இருக்கிறது. அதையெல்லாம் ஒலிபுத்தகங்களாக மாற்ற வேண்டும். ஒரு பதிவை ஒருவர் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஒருவரே ஏற்ற இறக்கங்களோடு ஒலிநூலாக்கலாம்.

முந்தைய மின்னிதழ் பார்வைகள் / விமர்சனங்கள் / அறிமுகங்கள்

  1. தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை | Snap Judgment
  2. நூலகம் – 2015 புத்தகங்கள் | Snap Judgment
  3. Tamil Literary Magazines: Internet Publications | Snap Judgment
  4. தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment
  5. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment
  6. சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம் | Snap Judgment

தொழில்நுட்பத்தை விற்கும் நுட்பம்

வேலை குறைவாகவும் வலை நிறைவாகவும் இருந்த காலம். அன்று மட்டும் காலையிலேயே ஏதோ தலை போகிற பிரச்சினை. நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய மேலாளர் வாயிலிலேயே தடுத்தாட்கொண்டு, “உன்னுடைய அரைகுறை ஆடைகள் தாங்கிய கன்னியர் புகைப்படங்களைப் பார்த்து விட்டு, செட்டில் ஆனபிறகு என்னுடைய அறைக்கு வந்து சேர்… முக்கிய வேலை காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் சென்று விட்டார்.

தட்ஸ்தமிழோ, தமிழ் சிஃபியோ, யாஹூ செய்திகளோ, ரீடிஃப் தகவல் மையமோ… எந்த வலையகத்தைத் திறந்தாலும் இடப்பக்கத்தில் கவர்ச்சிப் படமும் வலப்பக்கத்தில் கிளுகிளுப்பும் ஈசானிய மூலையில் கிசுகிசுவும் மட்டுமே நிறைந்த வலைக்காலம் அது. அப்படி தமிழக நிகழ்வுகளை அறியும் தாகத்தில் இருப்பவனை, காலையில் வந்தவுடன் ஜெயமாலினி படத்தில் கண் விழிப்பவன் என்று சொல்லிவிட்டாரே என்னும் தர்மசங்கடம் கலந்த குற்றவுணர்வுடன் கணினியைத் திறந்தேன்.

குறைவாக வேலை இருந்தாலும் பக்கத்து இருக்கை ஜான் கணினியில் இருந்து ’க்ளிக்…க்ளிக்’ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அப்படி என்னதான் எலியை வைத்துக் கொண்டு விளையாடுகிறான் என எட்டிப் பார்த்தேன். பெண்களின் புகைப்படங்களாக இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒவ்வொன்றிற்கும் ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பெண் போட்டுக் கொண்டிருந்தான்.

மணப்பெண் பார்ப்பதற்கு கல்யாணத் தரகர் வைத்திருக்கும் ஆல்பம் போல் அடுக்கு அடுக்காக புகைப்படங்கள் வந்து கொண்டே இருந்தது. ஒருவருக்கு தரவரிசையில் ஐந்தோ, ஆறோ, ஏழோ க்ளிக்கினால், தானியங்கியாக அடுத்த புகைப்படம் தோன்றியது. ஒருவருக்கு ஒரு எண் கொடுத்துவிட்டால், அடுத்த ஆளின் படம் வரும். அடுத்தடுத்து தொடர் சங்கிலியாக ரகவாரியாக நிழற்படங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தத் தளத்தின் பெயர் ’நான் அம்சமாக இருக்கிறேனா?’ (“Am I Hot or Not?”) இது 2000ம் ஆண்டிற்கு முந்தைய பொற்காலம். வைய விரிவு வலையின் துவக்க காலம். “பையனுக்கு தொந்தி” என்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லி பத்துக்கு ஒரு மார்க் போடலாம். பொண்ணு பிடிக்கல” என்று போய்க்கொண்டே இருக்கலாம். ’ஏன் பிடிக்கவில்லை… அவளுக்கு ஒரு மனம் இருக்காதா! அது நோகாதா?’ என்றேல்லாம் சஞ்சலமடைய வேண்டாம்.

இதன் பின்தோன்றலாக இன்றைய யூ டியூப்.காம் தொடங்கியது. ’ஹாட் ஆர் நாட்’ பார்த்தபிறகு யூடியூப் துவங்கியதாக ஜாவேத் கரீம் சொல்கிறார். யார் வேண்டுமானாலும், எவரின் புகைப்படத்தை வேண்டுமானாலும் வலையில் ஏற்றி, பலருக்கும் காட்சிப்படுத்தலாம் என்பதை ஹாட் ஆர் நாட் முன்னிறுத்தியது. அதுவரை, காப்புரிமையைக் கண்டு பயந்த வலையகங்கள், ஒவ்வொருவரும் சொந்தமாக எடுத்த படங்களை மட்டுமே தளத்தில் ஏற்றலாம் என்ற விதிமுறையை வைத்திருந்தது. ஹாட் ஆர் நாட் இந்த விதியைத் தளர்த்தி, ‘உங்களின் முன்னால் காதலி படத்தை இங்கே கொடுத்து பழி தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று அழைத்தது. அதைப் பார்த்த ஜாவேத், ‘அசையாத படங்களுக்கு பதில் அசையும் படங்களைக் கொடுத்தால்!’ என்று யோசித்ததில் யூ ட்யூப் பிறந்தது.

ஹாட் ஆர் நாட்.காம் மூலம் ஊக்கம் பெற்று உருவான இன்னொரு கோடீஸ்வரர் ஃபேஸ்புக் கொடுத்த மார்க் சக்கர்பர்க். ஹார்வார்டு பல்கலையில் படித்த பொழுது சக மாணவர்களை ஒப்பிட ஃபேஸ்மாஷ் நிரலியை உருவாக்கினார் மார்க் சக்கர்பர்க். ”ஆஷா அழகா? ஆயிஷா அதிக அழகா?” என்று இருவரை பக்கத்தில் வைத்து ஒப்பிட்டு வரும் கேள்விக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களின் புகைப்படங்களையும் திருடியோ, திருடவைத்தோ பெற்றுவிட்டார். அதே நபர்களுக்கு, உங்களின் நண்பர் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தார் என்பதை அறியும் வசதியெல்லாம் பின்னர் வந்தது. புகைப்படங்களுக்குக் கீழே பின்னூட்டங்களும் சூடாக இட முடியும். அவற்றையெல்லாம் படிக்கவோ, அலசவோ நேரம் இல்லாவிட்டால், பிடிச்சிருக்கு/பிடிக்கலை என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ’தி ஃபேஸ்புக்’ துவங்கியபோது, ‘பிடிக்கவில்லை’ நீக்கப்பட்டு, ‘லைக்’ மட்டும் நிலைத்திருக்கிறது.

பெண்களை முகப்பில் போட்டு வியாபாரம் செய்வது இணையம் வந்த பிறகு வந்தப் பழக்கமல்ல. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அரைகுறை ஆடைப் பெண்களை அட்டையில் போட்டு புகையிலையை விற்பது புகழ் பெற்றிருந்தது. ஆனால், வலைத்தளங்களின் புகழைப் பரப்ப வியாபாரத்திற்கு வருகையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சூட்சுமத்தை அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.

இணையத்திற்கு மட்டுமல்ல. ‘பூத் பேப்’ (Booth Babes) என்பது கலாச்சாரத்தில் ஊன்றி நிற்கும் தொன்மம். விளையாட்டுக்களை விற்கும் இடமாக இருக்கட்டும். புது கார்களை அறிமுகம் செய்வதில் ஆகட்டும். அல்லது மைக்ரோசாஃப்டின் நவீன விண்டோஸ் எட்டு.ஒன்று துவக்கம் ஆகட்டும். மந்திரா பேடி போல் வர்ணணையாளரை நாம் நிச்சயம் பார்க்கலாம். புன்சிரிப்புடன் ஆண்களை நேசமாக அழைத்து, அவர்களின் ஜாதக விவரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் துணை நிச்சயம் தேவைப்படுகிறது. பெரும்பாலான மாநாடுகளுக்கு ஆண்களே அனுப்பப்படுவதும், மேற்கத்திய உலகில் நிரலி எழுதுவதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு நீடித்து இருப்பதாலும் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

எங்கெல்லாம் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஏமாறவும் பெரும் வாய்ப்பு இருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் பொய் முகத்தைக் காட்ட நிறைய வாய்ப்பு அமைந்திருக்கிறது. தன்னை இளம்பெண்ணாகவும், தனது இக்கட்டில் இருந்து மீள பணம் தேவை என்றும் கட்டமைத்து பணம் பறித்தவர்களின் செய்திகளை மாதத்திற்கு ஒரு முறையாவது தினசரிகள் வெளியிடுகிறது. இவர்கள் எல்லோரும் அதிகாரபூர்வமாக ஏமாந்தவர்கள். குட்டு வெளிப்பட வேண்டாம் என்று கம்மென்று இருப்பவர்கள் ஏராளம். தவணை அட்டையை தந்துவிட்டு காசை இழப்பது, கல்யாணம் செய்து கொள்வார் என நம்பி வங்கிக்கணக்கில் இருந்து பட்டுவாடா செய்வது என்று எப்படி எல்லாம் கறக்க முடியுமோ அப்படி எல்லாம் திருட இணையமும் பாலியல் இச்சையும் வழிசெய்து தந்திருக்கிறது.

கிரெக்ஸ் லிஸ்ட் (Craigslist) மூலமாக ஏய்த்தவர்களுக்கென்றே முன்னூறு பக்க புத்தகம் எழுதலாம். மேலும் பாலியல் பரீட்சார்த்தங்களை சுலபமாக செய்து பார்க்க கிரெக்ஸ் லிஸ்ட் சிறந்த சோதனைச்சாவடியாக இருக்கிறது. மாட்ச்.காம் (Match.com) போன்ற வலைப்பக்கங்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால்தான் உள்ளே வரலாம் என பணம் பிடுங்கிகளாக வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நயா பைசா இல்லாமல் நுழைய கிரெக்ஸ்லிஸ்ட் அனுமதிக்கிறது. இது கள்வர்களுக்கும் கொண்டாட்டாம். கணினியையேக் கட்டிக்கொண்டு அழுபவர்களுக்கும் கொண்டாட்டம்.

இந்தியாவில் ஈ-பே (e-bay)யை விட பாஸி.காம் (Baazee.com) புகழ்பெற்றிருந்தது. ‘பாஸி’ தளத்தில் பள்ளி மாணவியின் செக்ஸ் வீடியோவை விற்றதற்காக பாஸி.காம் நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்களை கொஞ்சமாவது யோசிக்க வைத்திருக்கும்.

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டாலும், திருடரை ஒழிக்க ஆப்பிள் முடிவு கட்டியது. ஐ-போனில் பலான விஷயம் செய்ய முடியாது என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. எந்தவித செக்ஸ் சமாச்சாரமும் ஆப்பிள் கடை (apps) மூலமாக விற்கவோ வாங்கவோ முடியாது. அந்த மாதிரி பலான தளங்களுக்கும் செல்வதற்கான தடையை நிரலியிலேயே வைத்துக் கொண்டிருந்தது. பச்சிளம் பாலகரிடம் கூட நம்பிக்கையாக ஆப்பிள் ஐபோனைத் தரலாம். அவரால் லட்சுமணன் ரேகாவை மீறி பெரும்பாலும் தப்புதண்டா செய்ய முடியாது. அப்படித்தான் இரும்புக்கோட்டையாக ஆப்பிள் ஐஓஎஸ் இருந்தது. ஆனால், சில காலம் முன்பு துவங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி இப்பொழுது கிட்டத்தட்ட முழுவதுமாக திறந்த வழியாக்கி விட்டிருக்கிறது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் வலையகங்களைத் திறந்தால் வஞ்சியரின் வண்ணப்படங்கள். இன்றோ, செல்பேசியின் அப்ளிகேஷன்களை தரவிறக்க சென்றால் விதவிதமாக 17+ தரச் சான்றிதழுடன் அழைப்புகள். கணினித்திரை மாறியிருக்கிறது. நுட்பம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் கூட முப்பரிமாணத்தில் தத்ரூபமாக உயிர் பெற்றிருக்கிறது. ஆனால், விற்கும் வழியிலோ சந்தையாக்கத்திலோ முகப்பில் தோன்றும் பெண்களின் ஆடைகளிலோ மாற்றம் நிகழவில்லை.

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Top Tamil Bloggers in 2008

சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?

கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)

குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.

கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!

இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?

புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.

முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு

(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)

  1. கவிதை & பேட்டி
  2. தமிழச்சி தங்கபாண்டியன்

  3. creations
  4. நீல பத்மநாபன்

  5. Revathy | PassionForCinema
  6. ரேவதி

  7. பேசுகிறார்
  8. பாலகுமாரன்

  9. துணிவே துணை :: கல்கண்டு
  10. லேனா தமிழ்வாணன்

  11. வாழ்க தமிழுடன் !
  12. நெல்லை கண்ணன்

  13. எழுத்துகள்
  14. அ.ராமசாமி

  15. Pamaran
  16. பாமரன்

  17. சாரு ஆன்லைன்
  18. சாருநிவேதிதா

  19. Era murugan
  20. இரா முருகன்

உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.

தலை பத்து(+1) 2008

  1. யாழிசை ஓர் இலக்கிய பயணம்
  2. லேகா

  3. பயணங்கள்
  4. மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

  5. வினவு, வினை செய்!
  6. மக்கள் கலை இலக்கியக் கழகம்

  7. மனம் போன போக்கில்
  8. என். சொக்கன்

  9. ச்சின்னப் பையன் பார்வையில்
  10. பூச்சாண்டி

  11. ஏ ஃபார் Athisha
  12. அதிஷா

  13. பரிசல்காரன்
  14. கிருஷ்ணகுமார்

  15. இந்திய மக்களாகிய நாம்….
  16. சுந்தரராஜன்

  17. Pennin(g) Thoughts
  18. ரம்யா ரமணி

  19. மணியின் பக்கம்
  20. பழமைபேசி

  21. தமிழில்
  22. டாக்டர் ஷாலினி

விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:

  1. R P Rajanayahem
  2. ஆர் பி ராஜநாயஹம்

  3. தங்கள் அன்புள்ள
  4. முரளிகண்ணன்

  5. சிதைவுகள்…
  6. பைத்தியக்காரன்

  7. சூர்யா – மும்பை
  8. சுரேஷ்குமார்

  9. mathimaran
  10. வே. மதிமாறன்

  11. வெட்டிவம்பு
  12. விஜய் குமார்

  13. ஓவியக்கூடம்
  14. ஜீவா

  15. முத்துச்சரம்
  16. ராமலக்ஷ்மி

  17. மொழி விளையாட்டு
  18. ஜ்யோவ்ராம் சுந்தர்

  19. US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
  20. குழுப்பதிவு

  21. writerpara.net | பேப்பர்
  22. பா ராகவன்

நிறைய அடிபடுகிறார்

(அ)

இவர்களும் இருக்கிறார் 13

தொடர்புள்ள சில:

1. Happening Tamil Blogs – Must Read 30: Index

2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம

பதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது

பெரும்பாலான அமெரிக்க அரசியல் பதிவுகள் பராக் ஒபாமாவிற்கு சார்பாக இயங்குகிறதா?

எத்தகைய விஷயங்கள் வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன?

எவர் அதிகம் கவனிக்கப்படுகிறார்?

அயலுறவுக் கொள்கையில் எந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது?

முழுமையான அலசல்களுக்கு: PoliticalTrends.info – Political Bias

Tamil Websites in Unicode – A List

அவ்வப்போது புதிய விஷயங்கள், கட்டுரைகள், ஆக்கங்களுடன் ஒருங்குறியில் வெளியாகும் வலையகங்களின் தொகுப்பு:

இணைய இதழ்:
வ.ந.கிரிதரன் – பதிவுகள்
வார்த்தை, எனி இந்தியன் – Thinnai
Tamiloviam / தமிழோவியம்
யாஹு குழுமம் – மரத்தடி.காம் (maraththadi.com)
நிலாச்சாரல்
முத்துக்கமலம்
மகளிர் பக்கம் – ஊடறு : பெண்குரல்
எழில்நிலா

இலக்கியம்:
அப்பால் தமிழ்
வார்ப்பு : கவிதை வாராந்தரி – Tamil Poetry Weekly

செய்தி:
சிஃபி – தமிழ்
யாஹு – Welcome to Yahoo! Tamil
தமிழ் – MSN India – Tamil Latest Tamil News, Business, Movies, Music, Cricket and more..
Thatstamil.com – தட்ஸ்தமிழ்.காம்
For the latest on Tamil cinema, general news, views and in-depth analysis in Tamil.- AOL Tamil
வெப் உலகம்.காம் :: வெப்துனியா
சென்னை ஆன்லைன் :: ஆறாம்திணை
adhikaalai.com

அச்சு இதழ்
கீற்று
தமிழக வாராந்தரி: விகடன்
இஸ்லாம், முஸ்லீம்: Welcome to Samarasam.com – Your Fortnightly Tamil Islamic Magazine from IFTchennai.org
தமிழக மாதாந்தரி: காலச்சுவடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – Tamil Nadu Thawheedh Jamaath
அமெரிக்க மாதாந்தரி: தென்றல்
வல்லினம் – காலாண்டிதழ்
மாதமிருமுறை: தென் செய்தி :: பழ நெடுமாறன்
உண்மை – கி வீரமணி
கனடா, ஈழம், இலங்கை: வைகறை

வரலாறு, ஆன்மிகம்:
DREAM LAND – You Have Reached The Right Place To Know About Islam & Tamil Muslims
Welcome to South Indian Social History Research Institute
Varalaaru – Monthly Magazine for Tamil History
Tamil Bible (Holy Bible in Tamil & English) – பரிசுத்த வேதாகமம்
இஸ்லாமிய இணையத்தளம்

வணிகம்:
சென்னை நூலகம்
கணியத்தமிழ்

ஆளுமை:
சுந்தர ராமசாமி
Pa. Raghavan : Home Page : பாரா-பேப்பர்
எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சாரு நிவேதிதா
லேனா தமிழ்வாணன் :: மணிமேகலை பிரசுரம்

நாடு
அமீரகம்: செந்தமிழ் – தமிழ் அறிவியல் இதழ்
மலேசியா இன்று

அரசியல்:
வைகோ :: மதிமுக

நாளிதழ்:
தினமலர்
விடுதலை

இலங்கை, ஈழம்:
வீரகேசரி
தினக்குரல்
ஒரு பேப்பர்
சங்கதி
http://www.pathivu.com/
புதினம்
http://www.tamilwin.com/
http://www.sooriyan.com/
http://www.alaikal.com/news/
நெருடல்
முழக்கம்
தமிழீழம்

தகவல்:
Kalanjiam – Tamil Encylopedia

தொண்டு:
உதவி – உங்கள் உதவியுடன்….

சினிமா, திரைப்படம்:
Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film
விடுப்பு

கணினி:
w3 Tamil
தமிழ்99: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்

புத்தகம்:
காந்தளகம்: தமிழ்நூல்.காம்
எனி இந்தியன்: AnyIndian – An Internet Book Shop for Indian Books
வித்லோகா, நியு ஹொரைசான் மீடியா, கிழக்கு பதிப்பகம், காமதேனு: Kamadenu.com
நியூ புக்லான்டஸ், சென்னை: ::New Book Lands:: (சோதனை ஓட்டத்தில்)

இன்ன பிற:
இணையத்தில் தேனீ :: லியோமோகன்
தமிழ் அமுதம்

கடைசியாக் டிஸ்கியில் ஒன்று:
பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை: தமிழம்.நெட்