Monthly Archives: நவம்பர் 2011

அப்பாடக்கர்: Tamil Short Film by Ila

குறும்படம்:

நடிப்பு:

  • பாஸ்டன் ஸ்ரீராம்
  • ஜெயவேலன்
  • மாஸ்டர் சூர்யா

வசனம்: தேவ்

உணர்வும் ஆக்கமும்: இளா

Statutory Warning: இதற்கு மேல் ஸ்பாயிலர்கள் நிறைய இருக்கின்றன.

பின்னணி

1. ஃபேக் போடுவது

நகைச்சுவையான குறும்படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தின் கருப்பொருள் விவகாரமான விஷயம். சொவ்வறைக்காரர்கள் பொய் சொல்வது சகஜம். வானிலை படித்தவர்கள் தவறாக கணித்தால் தப்பில்லை. ஆனால், சாஃப்ட்வேரில் தெரியாததை தெரிந்ததாக சொன்னால் மாட்டிக் கொள்வேன்.

ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் முதல் உள்ளூர் கூடுவாஞ்சேரி கன்சல்ட்டிங் வரை இல்லாததையும் செய்யாததையும் இட்டு நிரப்பி காரியத்தை சாதித்துக் கொள்வதை பாடுபொருளாக ஆக்கியதற்கு பாராட்டுகள்.

2. பாஸ்டனில் கொழிஞ்சிக்காட்டூர்

பிரும்மச்சாரி ரூம் எப்படி இருக்கும்? தமிழக கிராம செட்டிங் மலை, குளம் எல்லாம் அமெரிக்காவில் எங்கே இருக்கும்? அவுட் டோர் சென்றாலும் முண்டா பனியன், கைலி சகிதமாக செல்வது சரிப்படுமா?

இது போன்ற நிதர்சன பிரச்சினைகளை லாவகமாக, பார்வையாளருக்கு துளிக்கூட சந்தேகம் வராத காட்சியமைப்பு. சிணுங்கும் தொலைபேசி முதல் நாயருக்கு டீ சொல்லும் பாங்கு வரை சிரத்தையான நுணுக்கங்கள். ’கலைஞர் டிவி’யின் நாளைய இயக்குநரின் சென்னைக்கார குருப்கள் கூட இப்படி பார்த்து பார்த்து செதுக்குவதில்லை.

3. இளா

இரண்டே நடிகர்கள். அவர்களை சட்டென்று இரண்டே நிமிடத்திற்குள் பதிய வைக்கும் குணச்சித்திரமாக்கம்.

எவ்வாறு என்பதை சுமாரான திரைக்கதை சொல்லிச் செல்லும். ஏன் என்பதை சுவாரசியமான கதைகள் சொல்லும். எப்படி என்பதை நகர்படங்களாக குறிப்பிடத்தகுந்த படங்கள் சொல்லிச் செல்லும். எதற்கு என்பதையும் முடிச்சுக்களோடு குறும்படத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இளா.

நாடகத்தன்மை எட்டிப் பார்க்காதது; பந்தா செட் போடாதது; பாடல் போட்டு நேரத்தை ரொப்பாதது; கால் மணி நேர குறும்படத்தின் கேரக்டர்களையும் ஆழப் பதிய வைப்பது. பலே… இளா!

ஷொட்டு

  • வசனம்: சில்லற இல்லாதவன் தாண்டா சிட்டிக்கெல்லாம் வருவான்!
  • ‘திங்க் பிக்’ என்னும் போஸ்டர் ரூம் நெடுக, கதாபாத்திரங்களின் லட்சியங்களை பிரதிபலிக்கிறது.
  • கணினிக்காரர்கள் புத்தகம் புத்தகமாக அடுக்கி வைத்து அழகு பார்ப்பதையும்; தலை மேல் துண்டு போல் மேலோட்டமாக வாசிப்பதையும் சொல்வது அழகு.
  • இது போல் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. சாம்பிளுக்கு, ‘நோ ஆட்டோ ஃபார் ஃப்ரெஷர்ஸ்’ சொல்லலாம்.

சந்தேகங்கள்

  • யோசிப்பதற்காக மோவாய்க்கட்டை தேய்க்கும் தேய்வழக்காக நடிக்கும் ‘சாம்’ – தமிழ்ப்படங்களை நக்கல் விடுவதற்கா?
  • கம்ப்யூட்டரை விட ஜோதிகா பிரதானமாகத் தெரிவது, மங்களகரத்தின் சிம்பாலிக் ஷாட்டா?
  • ஜோக் தெரிய வேண்டும் என்னும் இடத்திற்காக ‘டெய்ங்’ என்று சத்தமாக வந்து விழும் இசைத் துணுக்கு, வெண்ணிறாடை மூர்த்தி சீரியல்களை கிண்டலடிக்கிறதா?
  • கோலிவுட்டை நினைவூட்டும் விதமான ‘சம்போ… சிவ சம்போ’ போன்ற பிட்டுகளின் உள்ளீடு என்ன?
  • நடுநடுவே கடிகாரத்தின் டிக் டாக் பின்னணியில் வருவது நேரம் உருண்டோடுவதன் குறியீடா?
  • பெங்களூரு, டே-1 எல்லாம் ஆங்கிலம்; சேலம் மாவட்டம் மட்டும் தமிழ் துணையெழுத்தில் வருவதன் ஊடுபிரதி மொழிச்சிக்கல்களைக் கையாள்கிறதா?

தொடர்புள்ள பதிவுகள்:

1. Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்

2. நிமித்தகாரன்: குறும்படம்

3. நாளைய இயக்குநர்: கலைஞர் டிவி

ஆடிஸி: Odyssey: ஓர் அறிமுகம்

ஆடிசியை ஏன் கிளாசிக் என்கிறோம்? சிறிய அறிமுகம் + பார்வை + விமர்சனம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற மாதிரி ஆடிசி அமைந்திருக்கிறது. ’சிவாஜி’யில் ரோபோ ரஜினி செய்கிற சாகசம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஓடிசி பிடிக்கும்.

இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. சொந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவனை, விநோதமான மிருகங்களும் வித்தியாசமான (மாற்றுத் திறனாளி?) மனிதர்களும் தடுத்து, படுத்துகிறார்கள்.

புருஷனாக சண்டைக்குப் போயாகி விட்டது. கணவனாகத் திரும்ப விரும்புகிறான். மகனுக்கு தந்தையாக வாழ, இல்லம் சேரப் போகிறான்.

வலைப்பதிவில் கூட நினைவலைகள் புகழ் பெற்றது. ஆட்டோகிராப் படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் போல் பழையதை அசை போடுவதன் சுகத்தை ஆடிசி சொல்கிறது.

மகாபாரதம் போல் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். தூக்கம் வராத இரவுகளில் குழந்தைகளுக்கு வாசிக்கலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல் நடுநடுவில் இருந்து வாசிக்கலாம்.

’ஆடிசி’ சொல் ஆங்கிலத்தில் அன்றாட வாழ்வில் பயன்படும் வார்த்தை.

“ஆமெரிக்காவிற்கு எப்படி வந்தீங்க?”

“அது ஒரு ஆடிஸி!”

“வலைப்பதிவில் தமிழ் உண்டா?”

“இப்படிக் கேட்டுட்டீங்களே… தமிழ்ப்பதிவுகள் மிகப் பெரிய ஆடிசி மேற்கொண்டுள்ளது.”

இங்கே இராமாயணமு மகாபாரதமும். கிரேக்கத்தில் ஹோமருக்கு இலியாட் & ஆடிஸி. இரு கதைகளும் பின்னிப் பிணைந்தவை. டுரோஜன் போரை இலியாட் சொல்கிறது. சண்டை முடிந்தவுடன் ஓடிஸி தொடங்குகிறது.

இலங்கைக்கு செல்லும் அனுமான் போல் வழியெங்கும் பிரச்சினைகள்:

  • கடுமையான புயல் காற்று
  • சிதறிக் கிடக்கும் பாறைகள் கை கோர்த்து படகை அழிக்க நினைப்பது
  • சுழிப் போட்டு பாதையை சுழல வைக்கும் கடல்
  • மனிதர்களைப் பன்றியாக மாற்றும் அழகி
  • பாடலில் மயங்க வைக்கும் பாடகி
  • தாமரையை உண்ணும் (பாரதீய ஜனதா?) போதைப் பிரியர்கள்

ஹீரோ இப்படி இடாகா (சொந்த) ஊர் வர கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, இடாகா-வில் மனைவியையும் அவனுடைய நிலத்தையும் அபகரிக்க அண்டை வீட்டார் விழைகிறார்கள். “உன் கணவன் செத்துப் போய்ட்டான். என்னக் கட்டிக்க” என்னும் மிராசுதாரர்களிடமிருந்து, தன் அம்மாவை, மகன் காப்பாற்றி வருவது இன்னொரு இழை.

மனைவி பெனலொப்பி இருபதாண்டுகளாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கிறாள். போருக்கு பத்தாண்டுகள். ஊர் திரும்ப இன்னொரு பத்தாண்டுகள். ஓடீஸஸ் உயிரோடு இருக்கின்றானா என்பது கூட அறியாத பயம் கலந்த சோகம் கொண்டவள் பெனொலப்பீ.

இருபதாண்டுகள் கழித்து வரும் ஆடவனை, எப்படி தன்னுடைய கணவன் என்று பெனலொப்பி கண்டுபிடிக்கிறாள்? குடும்பப் பாடல் கிடையாது. மரபணு சோதனை இல்லை. ‘தாலி கட்டியவனைத் தெரியாதா?’ என்னும் லாஜிக் சறுக்கல் லேது. எப்படி? நீங்களேப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.

ஓடீசஸ்

ஒடீஸசிடம் எந்த அற்புத சக்தியும் கிடையாது. பத்து பேர குத்த மாட்டான். ஒரே சமயத்தில் இருபது பேரோடு சிலம்பம் ஆட மாட்டான். பறக்க மாட்டான். குண்டுகளைக் கையால் தடுக்க மாட்டான். ஆனால், புத்திசாலி. மகா புத்திசாலி. சூட்சும புத்தி கொண்டவன். தன் அறிவைக் குறித்து பெருமிதம் கொண்டவன். கடுமையான விசுவாசம் கொண்டவன். நாட்டிற்கும் வீட்டிற்கும் நாய் போன்ற நன்றி உடையவன். இவன் என் ஹீரோ.

டேவிடும் கொலியாத்தும் கதைக்கு முன்னோடியாக சைக்ளோப்ஸ். கொஞ்சம் ராமனின் வாலி. நிறைய கும்பகர்ணன். அப்படியே துணைக்கு சிந்துபாத்தின் பூத பிசாசுகளையும் சேர்த்தால், நமக்கு பாலிஃபீமஸ் கிடைக்கிறார். இன்றைய பிரகாஷ்ராஜ் வில்லன்களின் கொள்ளுத் தாத்தா.

சைக்ளாப்சுக்கு நாகரிகம் தெரியவில்லை. பழங்குடி எனலாம். இவனின் தந்தை பாஸீடான். பாஸிடானுக்கு கோபம் வருகிறது. தன் மகனை, சைக்ளாப்சைக் கொலை செய்த ஓடீசஸ் மேல் கோபம் வருகிறது. பாஸீடான் கடல்களின் அரசன். வாயு பகவான். வருண தெய்வம். புயல் சின்னம் ஏற்றுகிறான்.

அம்மா செண்டிமெண்ட்டும் ஓடிசியில் உண்டு. “உன் விதியை அறியும் ஆசை, என் அன்பின் உத்வேகம் – இவைதான் இறந்திருக்கின்றன்” என்கிறாள். பாதாள லோகம், கனவு உலகம் எல்லாம் வருகிறது.

ஹோமர்

இவ்வளவு கிளைக் கதைகள், இத்தனை கதாபாத்திரங்கள் – அத்தனையும் ஒருவரா எழுதியிருக்கிறார்? வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது போல், கம்பரின், வால்மீகியின், துளசிதாசரின் இராமாயணம் போல் ஹோமரின் இலியாடும் ஒடிசியும் ஒற்றை ஆள் எழுதியது அல்ல. காலங்காலமாக வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுப்பு. நாட்டிற்கேற்ப, பாஷைக்கேற்ப, பண்பாட்டிற்கேற்ப மாற்றங்கண்ட தொகுப்பு.

ராப்சோட்ஸ் எனப்படும் (ராப்சடி.காம் இங்கிருந்துதான் வந்தது 🙂 ஏதன்ஸ் நாடகக் கலைஞர்களால் கூத்தாக்கம் செய்யப்பட்ட கதை. போருக்குச் சென்ற அலெக்சாந்தர் கையோடு எடுத்து வந்திருக்கிறார். பைபிளுக்கு அடுத்தபடியாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒடிசியை நாடி இருக்கிறார். லாரென்ஸ் ஆஃப் அரேபியா மேற்கோள் காட்டுகிறார்.

இலக்கியம்

ஒடிசியின் காட்சிகள் ஓவியத்தில் இடம்பிடித்திருக்கிறது. டாண்டே போன்றவர்களிடம் கதாபாத்திரமாக உலா வருகிறது. டென்னிசனின் கவிதையில் தோன்றுகிறது. ஜாகுலின் கென்னடி ஒனாசிஸ் தகனத்தில் அஞ்சலிப் பாடலாக ஒலிக்கிறது. பெனலப்பியை மையமாக வைத்து மார்கரெட் ஆட்வுட் நாவல் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்சும் ‘யூலிசிஸ்’ (ஓடீசஸுக்கு இத்தாலியப் பேர்) கொடுக்கிறார். டெரக் வால்காட்டின் ஓமராஸ் கவிதை; ஃபிரான்ஸ் காஃப்கா… ஸ்டீவன் ஸ்பீல்பெகின் ஈ.டி… பட்டியல் நீளம்.

போரில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மனித மாண்புகள் இருக்குமா? உயிரைக் கொன்று குவித்த இராணுவ வீரர், சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பில் இயங்க இயலுமா? எதிரி எங்கே இருப்பார் என்றறியாத வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் யுத்தகளத்தில் பணியாற்றியவரால், சகஜநிலைக்கு மீள முடியுமா? யாரை நம்புவது? இயல்பாக உறக்கம் கூட வராத கொலைக்களம் போல் இல்லமும் ஆகிப் போவதை ஓடிஸஸ் மூலமாக உணரலாம்.

‘யார் இவர்’ என்று அறிந்து கொள்வதன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புத்தகத்தை காவியம் என்று அழைக்கும் தகுதியும் அதிகரிக்கிறது. ஆடிசி மனிதத்தை சொல்கிறது. ஆடிசி யார் என்று இன்னும் இன்றும் தேடுகிறோம்.