Tag Archives: Classics

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

ஓவியங்களை எவ்வாறு ரசிப்பது?

இந்த மாதிரி நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது. எனினும், ஏதேனும் ஒரு நூலையாவது முழுவதுமாக வாசிக்க வேண்டும். எனவே:

Look Again: How to Experience the Old Masters
by Ossian Ward
Flexibound: 176 pages
Publisher: Thames & Hudson; 1 edition (May 21, 2019)
Language: English

முன்னொரு காலத்தில் ஜான் பெர்கர் (John Berger’s Ways of Seeing – 1972) இந்த நல்ல காரியத்தை செய்தார். இப்பொழுது வார்ட் அதே போன்ற வேலையை செய்திருக்கிறார்.

இன்றைய காலம் தொலைக்காட்சியின் கடந்தகாலம். செல்பேசியில் மூழ்கும் காலம். அந்தச் சின்னத் திரையில் விளையாட்டுக்களோ, சினிமாவோ, குறுந்தொடர்களோ – பார்த்து களிப்பில் மூழுகும் காலம். கணினியிலே சதா சர்வ காலமும் காலந்தள்ளும் காலம். அவர்களைப் போய் பத்து நிமிடம் ஒரேயொரு ஓவியத்தைப் பார்த்து ஆராயுங்கள் என்கிறார் வார்ட்.

அந்தக் கால ஐரோப்பிய ஓவியங்களைப் பார்த்தால் ‘காதலா… காதலா’ கமல்+பிரபு தேவா போல் கிரேசி மோகனுடன் கிண்டல் அடிக்கத் தோன்றலாம். அவற்றை நெருங்குவதற்கு அஞ்சலாம். அது ரொம்பவே பழைய காலம். இப்போது கணினியே ஓவியம் வரையும் காலம். புகைப்படம், ஒளிப்படம், ஃபோட்டோஷாப் என்றெல்லாம் நிஜத்தை உருவாக்கும் பொய்க்காலம்.

வார்டின் வார்த்தைகளில் சொல்வதானால்: “இந்த ஓவியங்களோடு சற்றே சண்டை போட வேண்டும்; அவற்றோடு வாக்குவாதத்தில் ஈடுபடவும். கேள்வி கேட்டு துளைக்கவும். ஒவ்வொரு சித்திரத்தையும் உள்ளுணர்வில் புரிந்துணர்ந்து மதிப்பிட்டு தராசில் நிறுக்கவும். பெரும்வாணரால் உண்டான சித்திரமாக இருந்தாலும், அதை உங்கள் அளவுகோலால் அணுகவேண்டும். அணுகுவதால் உணர்வீர்கள்; உணர்வதால் நெருங்குவீர்கள்; நெருங்குவதால் புரிந்து கொள்வீர்கள்! ”

தபுலா ரஸா

அதற்கு ஆங்கிலத்தின் முதலெழுத்துக்களைக் கொண்டு TABULA RASA உதவியை நாடுகிறார்

  1. time – எந்த காலகட்டம்?
    • just hold on, don’t turn your back yet. Stay there for a few minutes before deciding the work is not for you (that’s one rule i should follow more often.)
  2. association – இந்த ஓவியத்தை உங்கள் வாழ்வில் எப்படி பொருத்துவீர்கள்?
    • find an entry point, look for the tone, story, theme or image that strikes a chord with you.
  3. background – இந்தச் சித்திரத்தின் பின்னணி என்ன?
    • the title, personal history of the artist or short description of a piece should enable you to understand and appreciate it better.
  4. understand – ஓவியம் புரிகிறதா?
    • by this stage you might have a better understanding of the work and if not…
  5. look again – முதலில் இருந்து மீண்டும் புதிய பார்வை பார்க்கவும்
    • everyone deserves a second chance.
  6. assess – கணிப்பு
    • this is where you’re allowed to be subjective and form your own opinion about a work.
  7. rhythm – ஓவியத்தின் ஆதார தாளம், சுருதி
  8. allegory – ஓவியம் எதைக் குறிப்பால் உணர்த்துகிறது?
  9. structure – உள்ளடக்கமும் வடிவ நேர்த்தியும் ஒழுங்கும் கட்டமைப்பும்
  10. atmosphere – சூழல்

அது தவிர…

  1. art as philosophy – கலையை தத்துவ வடிவில் நோக்குதல்
  2. art as honesty – கலையை நேர்மையின் வடிவமாக நோக்குதல்
  3. art as drama – கலையை உணர்ச்சிவயமாக நோக்குதல்
  4. art as beauty – கலையை அழகுணர்ச்சியாக நோக்குதல்
  5. art as horror – கலையை திகில் உணர்வுடன் நோக்குதல்
  6. art as paradox – கலையில் முரண்களை கவனித்து நோக்குதல்
  7. art as folly – கலையை விளையாட்டாக கேளிக்கை உணர்வுடன் நோக்குதல்
  8. art as vision – கலையை தொலைநோக்குப் பார்வை கொண்டு நோக்குதல்

வார்டின் மற்றொரு புத்தகம்: Ways Of Looking (How to Experience Contemporary Art). அதில் தற்கால சிற்பங்களையும் அருங்காட்சியக அமைப்புகளையும் ஆராய அழைக்கிறார். இவ்வாறாக பிரித்து அனுபவித்து ரசிக்கக் கோருகிறார்:

  1. Art as Entertainment – கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு
  2. Art as Confrontation – நம்முள்ளே புதைந்து இருக்கும் நம்பிக்கைகளையும் மனச்சாய்வுகளையும் நோக்கி கேள்வி எழுப்புதல்
  3. Art as Event (Performance Art) – நிகழ்த்து கலை
  4. Art as Message – செய்தி
  5. Art as Joke – விளையாட்டு
  6. Art as Spectacle – காட்சிப்பொருள் + விந்தை = கருவி
  7. Art as Meditation – தியானம் + சிந்தனை = புலப்படுதல்

தமிழில் பி ஏ கிருஷ்ணன் இரு நூல்களை இது போன்று காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக எழுதியிருக்கிறார். ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார். :

  1. மேற்கத்திய ஓவியங்கள் / 288 பக்கங்கள் / முதல் பதிப்பு: ஏப்ரல் 2014
  2. மேற்கத்திய ஓவியங்கள் II / 336 பக்கங்கள் / முதல் பதிப்பு: 2018

“தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து நாளிதழில்’ ‘மேற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு, ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி என்பவை பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”

– பி.ஏ. கிருஷ்ணன்

பதிப்பாளர் குறிப்பு: இந்நூலில் நமக்கு மிகவும் பரிச்சயமான பல ஓவியங்கள் பேசப்படுகின்றன. இருநூற்று நாற்பதிற்கு மேற்பட்ட வண்ண ஓவியங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பதிப்பு வரலாற்றில் இவ்விரு நூல்களும் மைல்கற்களாக அமையும் என்பது உறுதி.

உங்களுக்கான வீட்டுப்பாடம்: மூன்று நூலில் ஏதாவது ஒன்றை வாசிக்கவும்.

Vice interviewed the author about Ways of Looking.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

வில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்? அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா? செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்?

செபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:

எவ்வளவு சிரமமாக இருக்கிறது
நிலப்பரப்பை புரிந்து கொள்ள
ரயிலில் அதை கடக்கும்போது
இங்கிருந்து அங்கிருந்து
பேசா மடந்தையாக அது
நீங்கள் மறைவதை பார்க்கும்

(1964)

நிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே? வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?

2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.

அவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.

கதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.

வாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.

1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.

எச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.

“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட
நேரத்தைத் திருடுகின்றன
களவாண்டு போய்விட்டன
ஒன்றும் திரும்ப வரப்போவதில்லை”
ஹொரேஸ் சிறுபாட்டுகள்

நான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:

“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)

“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
திருமூலர்

எல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.

நேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. செபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.

அவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா? நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா? காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம்? நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது?

காலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.

ஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.

பாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.

நாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.

பணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது? எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது? அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது? ஆஸ்டர்லிட்ஸ் நாவல் தேடுகிறது.

மயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.

எல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.

உதவிய நூல்கள்:
1. Austerlitz by W.G. Sebald and James Wood
2. Across the Land and the Water: Selected Poems, 1964-2001 by W.G. Sebald and Iain Galbraith
3. Understanding W.G. Sebald by Mark Richard McCulloh
4. W.G. Sebald – Image, Archive, Modernity by JJ Long
5. The Emergence of Memory: Conversations with W.G. Sebald: Lynne Sharon Schwartz (Editor)
6. W.G. Sebald: Expatriate Writing by Gerhard Fischer
7. W.G. Sebalds Hybrid Poetics by Lynn L. Wolff

அ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்

விடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.

1. http://www.newyorker.com/fiction/features/2013/10/21/131021fi_fiction_munro
முதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.

2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.

தமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:
http://amuttu.net/viewArticle/getArticle/334

சிறுகதை: பாவண்ணன் – பாதை

முதியோரை நாம் எப்படி நடத்துகிறோம்? வயதான பிறகு தோன்றும் கனவுகளுக்கு என்ன அர்த்தம்? மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது?

பாவண்ணனின் “பாதை” கதை இவற்றை பேசுபொருள்களாகக் கொண்டிருக்கின்றன.

தமிழில் முக்கியமான சிறுகதை எழுதும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஒரு நடையில் தேர்ந்த பிறகு இன்னொரு நடைக்குத் தாவிடுகிறார்கள். அதாவது, எனக்கு சி/சி++/சி# நன்றாக நிரலி எழுத வரும். அவற்றில் திறமைசாலி ஆனவுடன், சீக்வல், எஃப்# என்று வேறு நுட்பத்திற்கு சென்று பயில்வேன். அந்த மாதிரி எதார்த்தம் முடிந்த பிறகு மாயாஜாலம்; அதன் கூடவே அதிபுனை, அறிபுனை என்று கூடு விட்டு கூடு பாய முயல்கிறார்கள்.

சில சமயம் அவர்கள் அந்த புதுப் பகுதியிலும் வெற்றி காண்கிறார்கள். புதிய வாசக்ர்களை ஈர்க்கிறார்கள். தங்களைப் படிக்கும் நுகர்வோர் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது சாதகமான விஷயம்.

ஆனால், பாவண்னன் இப்படி எல்லாம் குரங்கு போல் கிளை பாய்வதில்லை. இது எனக்குப் பிடித்த விஷயம். எடுத்துக் கொண்டதில் முழுமையாக பரிமளிப்பது மகிழ்ச்சி தருகிறது.

இன்னும் சிலர் ஜே.பி.சாணக்யா, பெருமாள் முருகன் போன்றோர் அலைபாயாமல் ஒரு அலைவரிசையிலேயே இயங்கினாலும், அவரவர்களின் முதல் பருவத்தின் சிறுகதைகள் போல் தற்கால புனைவுகள் கவரவில்லை. இவர்களுக்கு கதை எழுதும் வித்தை கைவசப்பட்டிருப்பதால் கதை நன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கதை வாசித்து முடித்த பிறகு ஏதோ தவறவிட்டது போல் இருக்கும். பாவண்ணன் இந்த வகைக்குள்ளும் இன்றளவும் சிக்காமல் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.

நீங்களும் கதையைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்களேன்…
http://puthu.thinnai.com/?p=23838

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

Steven Spielberg’s Lincoln Movie: Amendments, Wars and Elections

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.

போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.

வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

பாதிரியாரும் ஆயரும்

கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு வேலைக்காரியின் மீதும் பாதிரியாருக்கு கண் அலை பாய்கிறது. இவ்வளவு லட்சணமான பெண்ணை சும்மாவா பிஷப் வைத்திருப்பார் என்று சிந்திக்க வைக்கிறது.

பிஷப் நாடி பிடித்து விடுகிறார். “நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்ல… அவ எனக்கு சமைச்சுப் போடறதுக்கும் துணி தோய்க்கிறதுக்கும் மட்டுமே துணையா இருக்கா!”

ஒரு வாரம் போன பின் வேலைக்காரி பிஷப்பிடம் சொல்கிறாள். “யாராவது ஸ்பெஷலா வந்தால் மட்டுமே அந்த வெள்ளிக் கரண்டி பயன்படுத்துவேன். அருட் தந்தை வந்துட்டுப் போனப்புறமா அதைக் காணவில்லை. அவர் எடுத்திருக்க மாட்டார்… இல்லியா?”

“ஆவர் எடுத்திருப்பார்னு தோணல. இருந்தாலும் கடுதாசு போடறேன்”னு சொன்ன ஆயர் எழுதினார்: “நீங்கள் வெள்ளிப் பாத்திரங்களை எனது இல்லத்தில் இருந்து எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தாங்கள் இரவு உணவிற்கு வந்த நாளில் இருந்து அந்த சாமானைக் காணவில்லை!”

கொஞ்ச நாள் கழித்து பாதிரியிடம் இருந்து பதில் வந்திருந்தது: “மேன்மை பொருந்திய ஆயர் அவர்களுக்கு, நீங்கள் பணிப்பெண்ணுடன் படுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், நிஜத்தை சொல்லவேண்டுமென்றால், உங்கள் படுக்கையில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், அங்கே உள்ள அந்த வெள்ளிக் முட்கரண்டி உங்களை உறுத்தியிருக்கும்.”

ஆஃபீஸ்ஸ்பேஸ்

அலுவல் மீட்டிங்குகளும் இப்படித்தான்… எதையோ நினைப்போம். சொல்ல மாட்டோம். அவர்களாகவே ஏதோ புரிந்து கொள்வார்கள். பின்னணியில் அரசியல் சூழ்ச்சி திட்டம் நடக்கும். உள்ளடி வேலை இருக்கும். சின்னச் சின்ன குழுவாக சந்திப்புகள் அரங்கேறும். மின் மடலில் காய் நகர்த்தப்படும்.

அதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது:

The Quiet Plotter

Deadly Meetings in the Workplace – WSJ.com:
CRIME: Practices passive-aggressive insubordination.
MODUS OPERANDI: Remains quiet at meetings; later undermines bosses and decisions.
LEVEL: First degree nuisance

இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது? எப்படி முத்திரை குத்துகிறார்கள்?

  • The Multitasker?
  • The Jokester?
  • The Dominator
  • The Rambler?
  • Placater
  • Decimator
  • Detonator
  • Naysayer


விவாத விளையாட்டு

எல்லாமே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் புழக்கத்தில் இருப்பவை. சொல்லப் போனால், ரோல் ப்ளே எனப்படும் இன்னின்னார் இப்படி இப்படி செய்வதில் வல்லவர் என உருமாறும் ஆட்டங்கள்.

சிலர் இதில் உருப்படியானவர்கள். காரியத்தை முடிக்க உதவுபவர்கள். முன்னேற்றத்திற்கு வழிகோல்பவர்கள். ப்ராஜெக்ட்டையும் கம்பெனியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவர்கள். செயல்வீர்ர்கள். அப்படிப்பட்டவர்களின் பங்குகளை இப்படி பிரிக்கலாம்:

  • கல்வியாளர் (பயிற்றுனர்)
  • சமரச மார்க்கவியலாளர் (Compromiser)
  • க்ரியா ஊக்கி (Encourager)
  • தகவல் தேடி (Seeker of Information)
  • சந்தேகாஸ்தபமானதை கேள்விக்குள்ளாக்குபவர் (Questioner of dubious Assertions)
  • சரிபார்ப்பவர் (Validator)
  • பொறுமையாக காது கொடுப்பவர் (Attentive Listener)
  • பிணக்குகளை ஊடல்களாக்கி கொசுவாக்குபவர் (Diffuser of Tension)

மேலும் விரிவாக மேற்கண்ட ரோல் மாடல்களைப் படிக்க: Social Work Practice: A Critical Thinker’s Guide By Eileen D. Gambrill


The life of man upon earth is a warfare
– Job 7:1

முதலாம் வாசக முன்னுரை: வாசகம் ஜாப் 7:1-4,6-7
மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது.

முதல் வாசகம்

ஜோப் நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.


Abraham Lincoln

First Inaugural Address: Monday, March 4, 1861

This country, with its institutions, belongs to the people who inhabit it. Whenever they shall grow weary of the existing Government, they can exercise their constitutional right of amending it or their revolutionary right to dismember or overthrow it.


ஏர் உழுவைத் திருப்பிப் போட்டது போல் கேள்விக்குறி இருப்பது தற்செயல் அல்ல! பழைய மண்ணாக இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைக்கவும் அடுத்து விதைகள் வளர்ந்து பூத்துக் குலுங்க புத்துணர்வாக்கவும் வினாக்குறி ஏர்.

Saul Alinsky

மதன் ஜோக்ஸ் – ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு

எண்பதுகளில் செல்லுபடியானது அரசியல் அளவில் இன்றும் ஏகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

எல்லாமே எப்பொழுது வேண்டுமானாலும் சிரிக்க, சிந்திக்க வைப்பவை.

Chitrahar: Hindi Songs

தமிழில் ஒலியும் ஒளியும் மாதிரி ஹிந்தியில் சித்ரஹார். தொண்ணூறுகளில் மனதைக் கவர்ந்து தொடர்ந்து நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் பட்டியல்.

1. I Love My IndiaPardes

சிஸ்டத்திற்குள் இருந்தே சிஸ்டத்தை முறியடிப்பது போல், இந்தியா பிடிக்கும் என்று சொல்லி அமெரிக்க தேசி மாமனாரை வீழ்த்தும் மஹிமாவா… குடியரசு தின ஸ்பெஷலா…

2. Man MohiniHum Dil De Chuke Sanam

ஹீரோயினுக்கு மழைப்பாடல் கொடுப்பார்கள்; சின்னச் சின்ன ஆசை கேட்பார்கள். ஆனால், துள்ளல் எண்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ராய்.

3. Mehndi Lagake RakhnaDilwale Dulhania Le Jayenge

விடிஞ்சா கல்யாணம்; மாப்பிள்ளையின் முன்னிலையில் காதலியுடன் கொஞ்சம் டூயட்; துளி பயம்; நிறைய ஆட்டம். நடிப்புக்கு கஜோல்.

4. Rangeela ReRangeela

ராம் கோபால் வர்மாவின் முதல் இந்தி படிக்கட்டு; ஏ ஆர் ரெஹ்மானின் ஆஸ்கார் பாய்ச்சல்; ஊர்மிளாவின் அலட்டலில்லாத பாங்கு; எல்லாவற்றையும் மிஞ்சும் கனவும் நம்பிக்கையும் கொப்பளிக்கும் அர்த்தமுள்ள வரிகள்.

5. Ek Ladki Ko Dekha To1942 A Love Story

இரண்டு நிமிடம் முன்னால் விழுந்த பனி போல் மெத்து மெத்தான ஒளித்தொகுப்பு.

6. Aati Kya KhandalaGhulam

இறுக்கமான நேரத்தில் இயல்பாக்கி, விவகாரமான கேள்வியை விளையாட்டாக கொக்கி போடும் லாவகம்.

7. Jadoo teri nazar: Dar

தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்து, துணை நடிகராக உயர்ந்து, வில்லனாகக் கலக்கி இன்று ரா #1, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

8. Phir Bhi Dil Hai Hindustani – Title Song

விளம்பரம் எடுப்பவர், திரைப்பாடலுக்கு காட்சியமைப்பு கொடுத்தால், இப்படித்தான் சௌக்கியமாக அமையும்.

9. Ramta jogiTaal

ஐஷ்வர்யா ராய்க்கு நடிப்பு வராவிட்டாலும், ஆட்டம் அமர்க்களம்.

10. Pehla NashaJo Jeeta Wohi Sikander

பக்கத்து வீடு; சின்ன வயது துவங்கி தோழி; முதல் காதல்; பதின்ம வயதில் கல்லூரியில் சகாக்களுடன் பார்த்த காட்சியின் நினைவு மீட்டல்.