ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.
குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.
ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.
போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.
வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.