டுநீசியாவில் தீக்குளிப்பதால் ட்விட்டர் கூட்டம் நிறைகிறது. பிரதிபலிப்பாக, எகிப்தில் புரட்சி வெடிக்கும் அபாயம் தெரிகிறது. தொடர்ச்சியாக, சூயஸ் கால்வாயில் எண்ணெய்ப் போக்குவரத்து சஞ்சலப்படுவதால், விலைவாசி எகிறுகிறது. அதனால், பெட்ரோல் விலையை விட ஜாஸ்தியான தக்காளி, ஏரோப்ளேனில் உட்காருகிறது. ட்விட்டர் புரட்சியில் சீமானும் தமிழக மீனவருக்காக குதிக்கிறார்.
இதற்கு பட்டாம்பூச்சி விளைவை சந்தேகம் கொள்ள வேண்டாம். கேள்வி இதுதான்:
உங்களுக்கு வாக்களித்து மாற்றம் விளைவதில் நம்பிக்கையா? தன்னார்வலராக தண்டல் எடுத்து கிரியா ஊக்கி செயல்பாட்டில் ஈடுபாடா?
டுனீசியாவில் எகிப்தில் நடப்பது இரண்டாம் வகை. தமிழக மீனவருக்கு நடக்கும் போராட்டம் முதல் வகை. வினவு பதிவு எழுதுவார்; பெயரிலி மறுமொழிக் குரல் எழுப்புவார்; எஸ்.எம்.எஸ் அஞ்சல் மறுஒலிபரப்பு தொடரும்; வைகோ கடிதம் எழுதுவார்; நிருபமா நாவ் சுற்றுலா செல்வார்; பா.ம.க. கூட்டணி வைப்பார் கலைஞர்.
இது நிச்சயமாக பட்டர்ஃப்ளை எஃபக்ட்.
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ -> எனவே 49 ஓ போடு என்னும் ஞாநியும்; ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மாற்று அதிமுக ஜெயலலிதா மட்டுமே என்னும் ‘துகளக்’ சோ இராமசாமியும்; அறம் என்பது கூட முதலாளித்துவத்துவத்தின் இசைக்குதான் என்னும் ஜெயமோகனும் சிறு துரும்பைப் போட்டு இருக்கிறார்கள்.
நான் மிகவும் மதிக்கும் அமெரிக்க விழுமியங்களாக
i) Volunteering
ii) Aspiration
iii) Transparency
சொல்வேன்.
ஒளிக்கற்றை பேரத்தில் எவரெல்லாம் ஈடுபட்டார்கள்? யாருக்கு, எப்பொழுது காசு கொடுத்தார்கள்? ஏன் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? சட்டத்தை எவ்வாறு மாற்றலாம்? மாறுவதை எப்படி தடுக்கலாம்? – இதெல்லாம் அறிய முடிவது வெளிப்படைத்தன்மை.
எம்.எல்.சி.ஆக, உள்ளூரில் வால் – மார்ட் வராமல் வழிசெய்வது தொடங்கி, அரசாங்க பொக்கீடு பற்றாக்குறை நிவர்த்தி செய்வது வழியாக அடுத்த குடியரசுத் தலைவராவது எங்ஙனம் வரை வளர, உயர ஆசைப்பட வைத்து பாதை காட்டுவது பதவியும் பொறுப்பும் கூடிய மேன்மைத்தன விழைதல்.
அரியணையில் அமர பயமா? பணம் செலவழிக்க இயலாமையா? தன்னார்வலராக, செயல் வீரராக பயணத்தைத் துவங்க வைப்பதோடு, நேர்மைத் திறமும், நெஞ்சில் உரமும் கொண்ட சுத்தமான பயணம் மேற்கொள்ளவைக்கும் தொணடர் வழியில் ஆட்டோவும் வராது; அவப்பெயரும் தராது.
தமிழகத்தில் இயங்கும் புகழ்பெற்ற, கவனிப்பும் பெருமளவில் கிடைக்கும் சிந்தனையாளர் எல்லோருமே நிந்தனையாளராகவோ மந்தையாளராகவோ விளங்குவது இருத்தலிய பிரச்சினை. அப்படி இயங்காத, மூன்று சிந்தனையாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஊன்றுகோல் ஞாநி
கைத்தடியை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. மேடையேற சிரமப்படும் எண்பது வயது பாலச்சந்தர், இன்னொருவரின் கையைத் துணைக்கழைக்கிறார். நேரடியாக தள்ளுவண்டிக்கு மாறிவிட்டார் கலைஞர். ஞாநியின் பேச்சுக்களை அதிமுகவும் ரசிக்காது; திமுகவும் விரும்பாது.
உடனடி அரசியல் மட்டுமே ஈடுபாடு என்பதால் செய்தித்தாள் விசிறிகளின் ஹீரோ; மேக்ரோ பார்வையில் அறச்சீற்றம் என்பதால் நடுத்தர வர்க்கத்தின் ஆதர்சம்.
வழிகாட்டி சோ
ரஜினி ரசிகர் முதல் அரசியல் தரகர் வரை அறிவுஜீவியாக தோற்றமளிக்கிறார் ‘துக்ளக்’ சோ. நோ சொல்ல வேண்டிய இடத்தில் so…so…வாக மழுப்பிவிடுவதால் சோ என்பது காரணப்பெயர். வேதம் குறித்துப் பேசுவதால் இவரின் எழுத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்வோர் பலர்.
கலங்கரை விளக்கம் ஜெயமோகன்
ஞாநியின் மதிப்பீடு சின்ன கோடு என்றால், ஜெமோ, பெரிய கோடாக மேக்ரோ பார்வை. சீனாவையும் தொலை நோக்கலாம். அயன் ராண்டையும் இழுக்கலாம்.
உதாரணத்திற்கு அறம் சிறுகதையில் கூட இரு சாராரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும்.
அ) எழுத்தாளரின் ஊதியமும் பதிப்பாளரின் பற்றாக்குறையும்
ஆ) ஊழியர் கை ஓங்குவதும் பதிலுக்கு நடுத்தெருவில் சத்தியாகிரகமும்
இ) விக்கிரமன் பட உச்சகட்ட காட்சி சுபமஸ்து முடிவு
ஆனால், இன்றும் ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வதும், எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வதும், எழுதிய பிரதி ‘பத்திரமாக இருக்கிறது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, கேட்கும்போது தொலைந்து போனதாக சொல்லி விடுவதையும் நேரடியாக எழுதினால், இன்னும் உக்கிரமாக, ஒருதலை பட்சமாகி விடும் என்பதால்… இரு தரப்பையும் நேர்மையாக அணுகும் தர்க்கமுறை தேவைப்படுவதால், ‘புனைவு’ என்னும் வட்டத்துக்குள் சுருண்டுவிடுகிறார்.
நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு போல் அமெரிக்காவில் கருத்தாளர்களை ஓய்வாக சந்திக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள பல்லாயிரம் டாலர் செல்வாகும். அவ்வாறு பணம் கறக்காமல், வெகு சல்லிசாக அணுகக் கூடியவராக இருப்பவர். அப்புறம் ஏன் இதை சக்தியாக (power), கொடையாக (wealth), அறிவியக்கமாக (intellectual) மாற்றவில்லை?
ஒரு காலத்தில் காந்தி வழிகாட்டினார். அப்புறம் உதயமூர்த்தி, டாடா, டெண்டுல்கர், அம்பானி, ராகுல் என்று நெடிய பாரம்பரியம் வந்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் இலட்சிய புருஷர்கள் எவ்விதம்? நிம்மதியை நாடி எங்கே செல்கிறார்? 9 டு 5 ஜோலிகாரர், தன் சிதறுண்ட கவனத்தையும் தவிக்கும் சிந்தையையும் எவ்வாறு நெறியாள்கிறார்?
1. கார்பரேட்/கமண்டல சாமியார் (நித்தியானந்தா, ஜக்கி, சங்கர மடம்)
2. படைப்புலக கர்த்தா (ஜெய மோகன், சாரு, ‘எந்திரன்’ ஷங்கர், பட்டிமன்ற லியோனி)
3. கேளிக்கை (ஃபேஸ்புக், விளையாட்டு, குடி)
இப்பொழுது தமிழ்நாடு மீனவர் கேப்பிடலிசத்தின் செல்லப்பிள்ளை. வெப்சைட் துவங்கலாம். தமிழக மீனவர் ஃபேஸ்புக் சுயவிரும்பிகளின் இலட்சிய வார்த்தை. கவனிப்பு கோரும் விளையாட்டு. குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின் அளவுகோல்.
தொடர்புள்ள பதிவுகள்:
1. Ethics – India Calling: An Intimate Portrait of a Nation’s Remaking By Anand Giridharadas
2. தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்