Tag Archives: UK

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

The Unlikely Pilgrimage of Harold Fry by Rachel Joyce

The Unlikely Pilgrimage of Harold Fry_harolds-walk

The Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.

ரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.

திடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.

ஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.

க்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.

கணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

லண்டன் சுற்றுலா

victoria-railway-station-london-david-french
லண்டன் அசப்பில் பார்த்தால் தேர்ந்த அமெரிக்க நகரம் போல் இருக்கிறது. சொல்லப் போனால் நியு யார்க்கின் ஒன்று விட்ட தம்பி போல் தெரிந்தது. ஆங்காங்கே சூதாட்ட மையங்கள்; இரயில்வே ஸ்டேஷனிலேயே ’வை ராஜா வை’ விளையாடலாம் எல்லாம் பார்த்தால் கோட் சூட் போட்ட லாஸ் வேகாஸ் வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும்.

காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் கையில் பை இருக்கும். அது மாதிரி லண்டனில் வேலை முடிந்து வீடு திரும்புபவர் கையில் பியர் இருக்கும். பொதுவில் பியர்சாந்தி செய்வதை லாஸ் வேகாஸ் மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன். லண்டனில் குடி கொண்டாட்டமாக இல்லாமல் உதிரமாக இணைந்திருக்கிறது.

கண்காணிப்பு கேமிராக்களின் அணிவரிசை, நிஜமாகவே ’The Truman Show’ படப்பிடிப்பில் அங்கம் வகிக்கிறோமோ என சினிமாவை வாழ்க்கையோடு இணைத்தது. நட்ட நடு பாரிஸ் நாட்டர்டாம் தேவாலயத்தின் எதிரேயே ஒன்றுக்கிருப்பவர்கள் போல் எல்லாம் இல்லாமல் லண்டனில் சந்து பொந்துகளில் எங்காவது எச்சில் துப்பினால் கூட தபாலிலே சம்மன் அனுப்புவார்கள் என இங்கிலாந்துக்காரர்களை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள்.

மதிய உணவிற்கான இடைவேளையை கர்ம சிரத்தையாக பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நகரங்களின் அலுவல் வாழ்க்கையில் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டேதான் சாப்பிடுவார்கள். ஒரு கவளம் சாப்பாடு; நாலு வரி நிரலி. அல்லது ஒரு கடி சாண்ட்விச்; எட்டு வரி பதிவு… இப்படி வேலையும் கையுமாக உண்ணாமல் ஆற அமர புல்தரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து போஜனம் புசிப்பதையும் இங்கேக் கொட்டிக் கொள்வதையும் பார்த்தாலே டம்ஸ் கேட்டது என்னுடைய அமெரிக்க வயிறு.

குப்பை போல் ஒதுக்கித்தள்ளும் குடிசைவாசிகளின் ஒதுக்குப்புறங்களும், காடுகளுக்குள் வீடு அமைக்கும் புறநகர் கலாச்சாரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், அவற்றில் கோடானு கோடிகளை அள்ளும் வங்கிக்கூலிகளும், அறிமுகமில்லாதவர்களுக்கு உள்ளீடற்ற ஷோ கேஸ் சிரிப்பு முகமும், தவறுதலாக இடித்தால் கண்டிப்பு நிறைந்த போலி மன்னிப்புகளும், மேற்கத்திய நாகரிகமாகக் கருதும் புறப்பூச்சு நாசூக்குகளும், இன்னொரு அமெரிக்காவையே எனக்கு இங்கிலாந்தில் காட்டிக் கொண்டிருந்தது.
TrainView_Slums_Ghetto_London_England_UK_Victoria_Station-Railways_Poor

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.