Monthly Archives: திசெம்பர் 2003

அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சி

சார்பில் நிற்பதற்கு போட்டா போட்டி. ஒரு ராஜீவ்

காந்தியோ, அத்வானியோ இறந்தால் மட்டுமே இந்தியாவில்

நிகழக் கூடிய அடிதடிகள் இங்கு நடக்கின்றன. முண்ணனியில்

உள்ள ஹோவார்ட் டீன் எல்லா அரசியல்வாதிகள்

போலவே, அமெரிக்காவில் தோன்றும் சகல பிரசினைகளுக்கும்,

வியாதிகளுக்கும், தலைவலிகளுக்கும், கணினி

சண்டித்தனங்களுக்கும் புஷ்ஷின் அரசாங்கமே காரணம்

என்று அறிக்கைப் போர் நடத்துகிறார்.


அது ஒரு நாலெழுத்து கெட்ட வார்த்தை. #%@ என்று எழுதலாம்

·..க் என்று எழுதலாம். வாயில் பெயர்ச்சொல்லாக, வினைச்

சொல்லாக, ஆச்சரியக்குறியாக, கோபக்கணையாக,

நகைச்சுவைக்காக எதுக்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், அச்சில் ஏனோ கோலோச்ச வில்லை. ‘வின்னர்’

ஆக ப்ரசாந்த் முயற்சிப்பது போல் சிரம் தசை நடக்கும் ஜான் கெரி இளவட்டப் பத்திரிகையில் நான் ஒண்ணும் கட்டுப்

பெட்டி இல்லையாக்கும் என்று திருவாய் மலர்ந்தருளுகிறார்.


காசு பணம் வாங்காமல் தீக்குளிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய கோவிலில் இரக்க குணத்திற்காக கும்பிடும் அவலோகித்தா போதிசத்வா முன் வேண்டிக் கொண்டு, இறக்கமற்ற நாடான அமெரிக்காவிடம் மூன்று கோரிக்கைகள் வைக்கிறார். வியட்நாமியர் விடுதலையும், மனித உரிமையும், மத சுதந்திரமும் பெறவேண்டும்.


நம்ம காஷ்மீர் மாதிரிதான் இஸ்ரேலும். ஆனால், முப்து முகமத் சயித் குடும்பத்தார் கடத்தப் பட்டால், உயிருன் முக்கியத்துவம் உணரப்படும். இஸ்ரேலிய படை வீரருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீனுக்கு அநீதி இழைக்கிறோம் என்று மனது குத்த, போர் படையில் இருந்து ஒழுங்காக விலகி, அஹிம்சை முறையில் எதிர்க்கிறார். வழக்கம் போல் சந்தில் யாராவது மனித குண்டு வீசி நூறு பேரைக் கொன்று விடுவார்களோ என்றெண்ணி, எதிர்ப்பவர்களைக் காலில் சுட ஆணையிட்டிருக்கிறார் இஸ்ரேலின் மேஜர். அதுவும் சிவப்புக் கோட்டைத் தாண்டாமல் இருக்க அடி மட்டுமே படுமாறு சுட்டவைதான்.

இஸ்ரேலின் ஊடகங்களும், மனித நல கழகங்களும், மனித உரிமை மன்றங்களும், வெகுண்டெழுந்து விட்டார்கள். எப்படி நம்மில் ஒருவனை சாய்க்கலாம். உயிர் போகா விட்டாலும், துவண்டது இஸ்ரேலியன் அல்லவா?

முதற் பிரசுரம் – ஆர். பொன்னம்மாள் (3)

அம்மாவின் தோழிகளை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தால் ஒரு கை அதிகம். முக்கியமானவள் ருக்மிணி. பதினாறு வயது; ‘எழுது’ என்று (நம் மரத்தடி தோழர்களைப் போல்) தூண்டினாள். ‘நானா? முடியுமா? அச்சில் வருமா?’ என்ற சந்தேகங்களைத் துடைத்தவள் தோழி. எழுதினாள். தோழி சொல்படி ஸ்டாம்பு வைத்து! முக்கால்வாசி திரும்பிக் கூட வரவில்லை.

கன்னடியன் வாய்க்காலில் குளிக்கப் பிடிக்காமல் ஒரு மைல் தூரமிருக்கும் தாமிர பரணிக்கு நீராடச் செல்வார்கள். அதுவும் எப்படி? படித்துறையில் அல்ல! தாண்டித் தாண்டி நடுப் பாறைக்கு. அவள் விரும்பிய தனிமை அங்குதான் கிடைத்தது. தேகம் சிலிர்க்கும் மட்டும் நீரிலேயே அமிழ்ந்து கிடப்பாள். மணிமுத்தாறு நதியிலும் அப்படித்தான். நீச்சலடித்தால் கூட தண்ணீரின் அலப்பல் தன் கற்பனையை பாதிக்கும் என்று தோழியிடம் நீச்சலைக் கற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

கரையிலிருந்த செம்பருத்தி, தங்க அரளி, கொன்றை, நந்தியா வட்டை போன்ற மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி ‘லஷ்மீபதி’க்குச் சாற்றுவதே அவளின் இறைத் தொண்டு.

இரண்டரை ஆண்டுகளோடு கிராம வாழ்க்கை முடிந்து மதுரை அருகில் நத்தம் என்கிற ஊருக்குக் குடித்தனம் பெயர்ந்தது.

அங்கேயும் அவளுடைய இலக்கியப் பசிக்கு உணவு கிடைத்தது. ‘அருணாசலக் கவிராயரின்’ ராம நாடகக் கீர்த்தனைகளை இரண்டே நாட்களில் பாடித் தொண்டை கட்டிக் கொண்டது. அங்கே, ஜகதலப் பிரதாபன், மதன காம ராஜனெல்லாம் கிடைக்கப் பெற்றாள்.

கரு.முத்து. தியாகராஜன் செட்டியார் நடித்தி வந்த ‘தமிழ்நாடு’ ஞாயிறு மலரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தது. ‘இரட்டைப் பரிசு’ என்று ஒரு கதை எழுதி அனுப்பினாள். திடீரென்று ஒரு மாலை… ‘போஸ்ட்’ என்று அவள் மடியில் விழுந்தது ‘தமிழ்நாடி’ன் ஞாயிறு மலர். அதில் ‘இரட்டைப் பரிசு’ பிரசுத்துக்க்குரிய கதையாக வெளிவந்திருந்தது. அவளுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று தெரியவில்லை. பறந்தாள். அதன்பின், மாதமிருமுறை அவளது கதைகள் பிரசுரமாயின. ‘அன்பு மனம்’, வழிகாட்டி, இன்ப ரகசியம், விதி சிரித்தது, கண் திறந்தது, சந்தேகப் பேய் இவைகள் குறிப்பிடத் தக்கவை. வாசகர்களின் கடிதங்களையும் பெற்றவை.

முதல் கதைக்குக் கிடைத்த சன்மானம் ஐந்து ரூபாய். அப்புறம் ஒவ்வொரு கதைக்கும் பத்து ரூபாய். ‘தமிழ்நாடு’ நாளிதழின் ஆசிரியரான திரு. எம். எஸ். பி. சண்முகம் பாராட்டி எழுதிய கடிதங்கள் குடும்பத்தில் புயலை எழுப்பியது.

(சிறு குறிப்பு வளரும்)

மின் அரட்டைகளும் மின்னல் வேக கணிப்புகளும்

காசி குறிப்பிடும் ந(ண்)பர் யாராக இருக்குமோ என்று மண்டை குடைய வேண்டாம். நான்தேன்! வக்கணையாக பதில் சொல்ல ஆசைதான். அவரவர் perception-படி விஷயங்கள் அனுமாணிக்கப் படுகிறது.

பாராவின் ‘மெல்லினம்’ அசை போட கொடுக்கும் சில வரிகள்:

நிர்மலாவுக்குக் குழப்பமாக இருந்தது. ரொம்ப சாமர்த்தியமாக ஒரு புகாரை, புகார் தொனியில் அல்லாமல் நட்புணர்வுடன் செய்தி அறிக்கை போல் வாசித்து விட்டுப் போயிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், புகார் புகார் தான். எந்தத் தொனியில் சொல்லப்பட்டால் என்ன?

பாராவின் அலகில்லா விளையாட்டு’ உபயம்:

* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.

* உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.

* கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.

* ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?

இறந்தவர் திரும்பி வந்தால்?

Navans weblog :: இறந்தவர் சங்கம்: லால் பிஹாரி இறந்திருந்த போது உயிர் பிழைக்க பல வித்தியாசமான போராட்டங்களைச் செய்திருக்கிறார். கைதாகி விட்டு நீதிபதி முன்னால் நான் உயிருடன் இல்லை என்று சொல்லியிருக்கிறார். தன் மனைவிக்கு தன்னுடைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். இறுதியில் தன்னுடைய நிலம் திரும்பக் கிடைத்த பொழுது அதைத் திருடிய தன்னுடைய உறவினரே வெட்கும் படியாக அவருக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். ” – நவன்

‘டபுள் ஜெபர்டி’ என்னும் படத்தை நினைவு படுத்தும் செய்தி. டெலிகிராப், டைம் ஆசியா, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்று சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்.

Oh… My Lord! Please Forgive Me…

பாராவின் பத்து வரங்கள் கிண்டலுக்காகவே எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தக் காலத்தில் அசுரர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, நிவர்த்தி செய்வதற்கு ஏதாவது மாற்று கண்டுபிடிப்பார்கள். ஹிரண்ய கசிபுக்கு நரசிம்மர், இந்திரஜித்துக்கு இலக்குவன் என்று. இதோ என்னுடைய பிராயசித்த பிரார்த்தனைகள்.

1. அம்மா, அன்னை, புனிதத் தாய், ஜெ.ஜெ., அவர்கள் தமிழ்நாட்டின் நாற்பது இடங்களிலும், கேரளா, கர்நாடகா, மிசோராம் என்று நான்கு இடங்களிலும் லோக் சபா தேர்தலில் வெற்றியடையட்டும்.

2. மருத்துவ சீட்டுகள் மூலம் மாரிவானா, கஞ்சா, இன்ன்பிற லாகிரி வஸ்துக்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். (பின்னர், முறைகேடு, சீர்கேடு என்று காரணம் சொல்லி (பின்வரும்) திமுக அரசு மருந்துக் கடைகளை சுவிகரித்துக் கொள்ளும்).

3. அப்துல் கலாம் வெண்பாக்களிலும், சோனியா இத்தாலிய ஹைக்கூக்களிலும் வாழ்த்திக் கொள்ள ஆரம்பிக்கட்டும்.

4. வெகுஜன பிரசுரங்களை சிறு பத்திரிகையாளர்கள் எடுத்து நடத்தட்டும். (தமிழ் படிக்கும் ஓரிரு ஜீவன்களும் விட்டு விட்டு, இணையத்துக்கும், இன்னாததற்கும் பறந்து விடுவர்).

5. கட்சித் தலைவர்களை, உட்கட்சி பினாமிகளே காலை வாராதிருக்க வேண்டும்.

6. (பார்க்க 2-ஆம் கோரிக்கை). நூறு மில்லிகிராம் மேல் கஞ்சா அடிக்காமல் கூட்டங்கள் தொடங்கட்டும்.

7. ரஜினி, கமல், விஜயகாந்த், தனுஷ், நந்தா, கரண் எல்லோரும் காவிரி வருவதற்காகவும், சரத் விளையாடுவதற்காகவும் போராடட்டும்.

8. கனிமொழியை தமிழக முதல்வராக்க முயற்சிக்க வேண்டும்.

9. சங்கராச்சாரியார் சொல்லும் வேட்பாளர்களுக்கு ‘சாப்பா’ குத்தாதிருக்க புத்தி வரட்டும்.

10. சிம்ரன் ‘ஸ்டாண்டப் காமெடி’யாக புதிய படங்களையும், புத்தகங்களையும் அறிமுகம் கொடுத்து பொது மக்களுக்கு எடுத்து செல்லட்டும்.

துள்ளித் திரிந்த காலம்

என் அம்மாவின் பிறந்த நாள் மே 21, 1937. அவரின் பெற்றோர்களான லக்ஷ்மி, இராமசுப்பிரமணியம் பெயரிலும் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். 1944 ஜனவரியில் அம்மாவுக்குத் தங்கை பிறந்தாள். அதே ஆண்டு கந்த சஷ்டியன்று தந்தையை இழந்தார்.

1951-இல் சென்னையை விட்டு கல்லிடைகுறிச்சிக்கு அருகில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு குடி பெயர்ந்தனர். தாத்தாவின் பிரிவை மறக்க தாய் துணையாகத் தேடிக் கொண்டது படிக்கும் பழக்கத்தை. ஆனந்த விகடன் துணுக்குகளைப் படித்த சிறுமி மெதுவாக சிறுகதைகளைப் படித்தாள். தொடர்ந்து ‘லஷ்மி’யின் நாவல்களான பெண்மனம், காஞ்சனையின் கனவு, லட்சியவாதி, ‘தேவனின்’ துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ‘எஸ்.ஏ.பி’யின் காதலெனும் தீவினிலே, இன்றே,இங்கே,இப்பொழுதே, நீ, சூறாவளி போன்ற கதைகளில் லயித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களோடு வாழ்ந்ததாகவே சொல்லி யிருக்கிறார்கள்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வனே’ சரித்திரமும் ருசியாயிருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தது. பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி, எல்லார்வி கதைகள் அம்மாவின் உணர்வுகளை அலைக்கழித்தவை. இன்னார் கதைகள் என்று பொறுக்காமல், போரடிக்கும் (நான் எழுதுவது போன்ற 🙂 கதைகளிலும் என்ன இருக்கிறதென்று பார்க்க பொறுமையுடன் படித்தாள்.

பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தோடு சென்னை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சிங்கம்பட்டியில் ஒரு ஓவர்ஸியர் குடும்பத்தில் கல்கி இருப்பதை அறிந்து மீண்டும் வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழி வர்மனும் அவளோடு உறவாடினர். மீண்டும் ஆனந்த விகடன் அவர்களின் நண்பனானான்.

ஒரு சிவராத்திரி இரவில் பெரிய எழுத்து விக்ரமாதித்தனை முடித்தாள். அவர்கள் பெரியப்பா வீட்டிலிருந்த கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் அவளை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவளைச் சுற்றி எப்போதும் சிறுவர், சிறுமியர் அவளது கற்பனைக் கதைகளைக் கேட்க; பிள்ளைகலைச் சாக்கிட்டு பெற்றோரும் கூடினர்.

அவளுக்கு மிகவும் பிடித்த பத்திரிகை குமுதம். போரடித்த போது படிக்க ஆரம்பித்த சாண்டில்யனின் சரித்திரக் கதைகளால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள். குறிப்பாக சீனாவின் அங்குபங்சர் சிகிச்சையில் காதலே பிறந்தது.

(சிறு குறிப்பு வளரும்)

போன வருடத்தில் கலக்கியவர்களும், கவுந்தவர்களும்

The New York Times: Arts: கலையுலகில் கலங்கடித்தவர்களை நியு யார்க் டைம்ஸ் பட்டியலிடுகிறது. ஓவிய கண்காட்சிகள், நடனம், தியேட்டர் என்று நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாப் இசை என்று அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த பத்தை பொறுக்கிக் கொடுக்கிறார்கள். நேரம் கிடைத்தால் செவிக்கு உணவு கொடுக்கும் தொகுப்புகளையும் கேட்டு மகிழலாம்.

நான் செத்துப் பிழைச்சவண்டா

siliconindia: பிதாமகனுக்கு டிமிக்கி: நான் அடித்துப் போட்டது போல் தூங்கும் ஜாதி. ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது, ‘கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூங்கு’ என்று சொல்லி சென்றார்கள். வீட்டுக்குள் மீண்டும் நுழைய கொல்லைப் புறம் வழியாக, சொந்த வீட்டிலேயே ஏறி குதித்து, உள் நுழைய வேண்டியிருந்தது. அவர்கள் வந்து ரொம்ப நேரம் கழித்து எழுந்த எனக்கு, ‘திருடன் வந்தது கூடத் தெரியாம தூங்குகிறாயே’ என்று திட்டு வாங்கினது வேறு விஷயம்.

இந்த ஹிமாசல பிரதேச ஆளும் நம்ம கதை மாதிரிதான். எழுபத்தொரு வயசு. இறந்து விட்டார் என்று ஊர்ஜிதப் படுத்தி, பாடையிலும் ஏற்றியாகி விட்டது. மயானத்துகு செல்வதற்கு முன் எகிறி குதிக்கிறார். நம்ம ஊரு கார்த்திக் போல் சித்ரகுப்தனை பார்த்தேன், சொர்க்கத்தின் வாயிலில் நின்றேன் என்று எல்லாம் பூச்சுற்றாமல், ‘க்யோன் இத்னி லோஃக்?’ என்று பொக்கை வாயில் ஆச்சரியப் படுகிறார்.

கட்டையில் வைத்து கட்டும்போது கூட எப்படி எழுந்திருக்க வில்லை என்பதும், ‘மென் இன் ப்ளாக்’கில் வரும் அதிசய உபகரணத்தாலோ, எமதர்மராஜனின் மந்திரத்தாலோ, எப்படி ஒன்றுமே நினைவில் இல்லை என்பது நம்முடைய ஆச்சரியங்கள்.

ரொம்பக் குழம்பாமல் பாராவின் அலகில்லா விளையாட்டு படித்தாலும் இந்த இறப்பிற்கு பின் தத்துவங்களை விளக்கிக் கொள்ளலாம்.

இலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள

TAMIL ILAKKANAM – DMK “ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். “

இந்தியாவின் வால் பையன்கள்

குறைந்த பந்துகளில் நிறைய ஓட்டங்கள் எடுப்பதில் வல்லவர்

என்றார்கள்; ஆமாம்… ஒரு பந்திலேயே வீழ்ந்து விட்டால்,

கணக்கெடுப்பின் போது சௌகரியமாகத்தான் இருக்கும்.

மீண்டும் ஒரு முதல்பந்து முட்டை.

இன்னொரு முட்டை… சாரி, மட்டை வீரர் படேல் வகுத்த

வழியை பின்பற்றியுள்ளார். பார்த்திவ் குறித்து கூட யாரோ

அடுத்த வால் (சுவர்), வளரும் ட்ராவிட் என அடைமொழிகள்

கொடுத்து அறிமுகபடுத்தினார்கள்.

தான் ஒரு சிறந்த ஓட்டக்காரர் என்று பெயரெடுக்க அகர்கர்

விரும்புகிறார். ஓட்டம் எடுக்கும் வீரர் என்னும் பெயர்

நிலைபெறாமலிருக்க, நாளை ஆடும் அடுத்த இன்னிங்சில்

பிராயசித்தம் செய்ய வேண்டும்.

(ரீடி·பின் படி படேல் ஒரு நல்ல பந்துக்கும்; பிபி-பாலாஜியின் படி, தடவி மட்டுமே தாக்குப் பிடிக்கலாமா என்று எண்ணுவதற்குள்

வீழ்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்).