சொல்வனம் #312


புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.