காற்றும் கழுகும் பறந்த சேப்பாக்கம்


சேப்பாக்கத்தை சி.எஸ்.கே ஆடும் போது பார்க்க வேண்டும் என்பது வாழ்க்கையில் பாக்கி இருக்கும் 47 இலட்சியங்களுள் ஒன்று. அது இல்லாத பட்சத்தில், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதிய ஒரு நாள் ஆட்டம் காணக் கிடைத்தது.

நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டுத்த என் அண்ணாவிற்கு எம்.ஏ. சிதம்பரமே தெரியும் போல… அவர் விருந்தோம்பல் வழியாக அழைத்துச் சென்றார்.

பூரி, பிரியாணி, பிஸிபேளே பாத், பப்படாம், பாயாசம், பொறித்த கோழி, பரோட்டா என ஒரு மணி நேரத்திற்கு மெனுவை மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தனர். கே. பாலச்சந்தருக்குப் பிடித்த கோத்தாஸ் காபியும் வணிகச்சின்னம் போடாத தேநீரும் திரிவேணி சங்கமாக ஓடிக் கொண்டிருந்தன. கொஞ்சம் பியரும் கூடக் கிடைத்தால் எப்படியிருந்திருக்கும் என அந்த மரத்தின் கீழ் படுத்து பேயை ஆட்கொள்ளவைத்தவன் கதையாக கற்பனையில் திளைத்தேன்.

ஆட்டம் என்னவோ இரண்டு மணிக்குத்தான் துவக்கம். ஆனால், அமர்க்களம் எல்லாம் மதியம் பன்னிரெண்டு மணிக்கேத் துவங்கி விட்டது. வாசலில் பாரம்பரிய ஆஃப்கன் ஆடையில் மிளிர்ந்தார்கள். முகத்தில் பாகிஸ்தான் கொடியை பச்சைக் குத்திக் கொள்ள வைக்கப்பட்டார்கள் சிறுவர்கள். பாபர் ஆசாம் பெயர் தாங்கிய தெற்காப்பிரிக்க சொக்காய் கூட விற்றுக் கொண்டிருந்தார்கள்.

தி ஹிந்து நாளிதழின் அந்நாள் ஆசிரியர் என். ராம் காணக் கிடைத்தார். தற்படம் எடுத்துக் கொள்ள சபலப்பட்டேன். அவர் ஆட்டத்தைப் பார்க்காமல், செல்பேசியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். பாதி பாகிஸ்தான் ஆட்டத்தில் கிளம்பிப் போய்விட்டார்.

பாடகர் உன்னி கிருஷ்ணன் எல்லோருடனும் தற்படம் எடுத்துக் கொள்ள இன்முகத்துடன் ஒத்துழைத்தார். பிரபலங்களை நினைத்தால் சற்றே பாவமாக இருந்தது. பொது இடத்தில் வந்தாலும் நிம்மதியாக நாலு தயிர் வடை சாப்பிட்டோமா, நான்குகள் விளாசுவதைப் பார்த்தோமா என சும்மா விடாமல், துரத்தித் துரத்தி காதலிக்கிறார்கள்.

அவர்களை விட எல்லைக்கோட்டில் நின்றவர்கள் இன்னும் பாவம் செய்தவர்கள். நவீன் என்று பக்கத்து வீட்டுப் பொடிசை அழைப்பது போல் திசை திருப்பினார்கள். அவர்களும் பந்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டுகொள்ளவில்லை.

அதைவிட முக்கிய சந்தேகம்… ஏன், எல்லா வீரர்களும் முட்டி போட்டு தங்கள் பானங்களை அருந்துகிறார்கள்? சாட்ஜிபிடி-யிடம் கேட்க வேண்டும். அல்லது நான் பார்த்த ஆட்டம் அந்த மாதிரி இருக்க வேண்டும். ஓரிருவர் அவசரமில்லாவிட்டால் கூட ஹாராமாக நின்றே குடித்தார்கள்.

அப்புறம், புகைப்படத்தில் இருக்கும் இந்த ஸ்தூபி, நினைவுச் சின்னம் என்னது? அதையும் கூகுள் லென்ஸிடம் தேட வேண்டும்.

கடைசியாக பாகிஸ்தான் கிஷான் (கிசான்?) என்னும் கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தார்கள். அதனாலோ என்னவோ தரையில் உருண்டு புரண்டு உழுதார்களேத் தவிர பந்துகளையும் பந்தயத்தையும் பாக். கோட்டைவிட்டது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.