Monthly Archives: ஜனவரி 2010

மார்தா கோக்லி x ஸ்காட் ப்ரௌன் – மாஸசூஸெட்ஸ் செனேட் தேர்தல்

சென்னையை திமுக-வின் கோட்டை எனலாம். பாஸ்டனை தலைநகரமாகக் கொண்ட மாஸசூஸட்ஸ் டெமோக்ரட்ஸின் கோட்டை.

ஒரேயொரு விதிவிலக்கு உண்டு.

பெண் வேட்பாளர் நிற்கும்போது கட்சி மாறும்.

சுதந்திரம் வாங்கி 222 ஆண்டு கழித்து முதன்முதலாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். அதுவும் மாநிலத்தின் முக்கிய பதவிக்கு அல்ல. பொருளாளர்.

அதன் பிறகு முன்னேறியவர் மார்த்தா கோக்லி. அட்டர்னி ஜெனரலுக்கு போட்டியிட்டு வென்றார்.

இவர் தவிர துணை கவர்னராக இரண்டு பேர் தொற்றிக் கொண்டு வென்றுள்ளனர். அவர்கள், அடுத்த கட்டமாக கவர்னருக்கு நின்றபோது மண்ணைக் கவ்வினர்.

கட்சி பாகுபாடின்றி பெண்களை நிராகரிக்கின்றனர். ரிபப்ளிகன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி ஆகட்டும். பெண் வேட்பாளரா? தோற்கடித்து விடு!

‘கோக்லியை கற்பழி!’

‘கோக்லியின் சூத்தில் ஏத்து!’ (“shove a curling iron up her butt”)

இதெல்லாம் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அரங்குகளின் வெளியான கோபம்.

உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு அலை இருந்ததாக யூனியன் தலைவர் சொல்கிறார்: “I’m not voting for the broad” – Teamster leader Robert Cullinane

சரி… மார்த்தா தோற்றதற்கு பெண்ணாகப் பிறந்தது மட்டுமா காரணம்?

1. வாக்காளர்களுக்கு இரத்தமும் சதையுமான தலைவர் வேண்டும். பற்றற்ற, விஷயம் மட்டும் பேசுகிற வழக்கறிஞர் தேவையில்லை. கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கோஷம், குடும்பஸ்தர் தோற்றம்: எல்லாம் ப்ரவுனிடம் இருந்தது.

2. தீவிர வலதுசாரி முழக்கங்களை பிரவுன் தவிர்த்தார். ரஷ் லிம்பா, சாரா பேலின் போன்ற துருவங்களை விட்டுவிட்டு, முன்னாள் நியு யார்க் மேயர் ரூடி ஜியூலியானி போன்ற அனைவருக்கும் கவர்ச்சியான ஆதர்சங்களை அழைத்தார்.

3. ஒபாமாவின் மோகம் முப்பது நாள் முடிந்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் ஜனாதிபதிக்கு மண்டகப்படி துவங்கும். அது இப்போது ஸ்டார்டிங்.

4. பொருளாதாரம்: முதலீட்டாளர்களுக்கு செம வருவாய். வங்கி முதலைகளுக்கு இரட்டிப்பு போனஸ். பங்குச்சந்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம். அன்றாடங்காய்ச்சிக்கு பஞ்சப்படி கூட கொடுப்பது நிறுத்தம். இப்படிப்பட்ட வேலையே இல்லாத சூழலில், வேலை தேடி சலித்தவர்களை வோட்டு போட சொன்னால்…

5. பணங்காய்ச்சி மரம்: மிட் ராம்னி கொணர்ந்தார். தலைநகரத்தில் லீபர்மனின் அழிச்சாட்டியத்தை விரும்பாதவர்கள் தந்தனர். குடியரசுக் கட்சி கொட்டியது. கையில காசு… பெட்டியில வாக்கு.

6. படுத்துக் கொண்டே ஜெயிப்போம்: ஆண்டிப்பட்டிக்கு வேட்பாளர் வராமலே ஜெயிக்கக் கூடிய கட்சி அ.இ.அதிமுக. அது மாதிரி கால் நகம் தேயாமல் வெல்லக்கூடிய இடம். இருந்தாலும், சுகவனங்கள் தோன்றிக் கொண்டேதானே இருக்கின்றனர்?

7. மாயை: ‘அவர்கள்தான் எல்லாம் செய்கிறார்கள். அறுபது போக்கிரிகளின் அழிச்சாட்டியம்! தங்களுக்கு என்ன வேண்டுமோ நிறைவேற்றிக் கொள்கிறார்கள்’ – இது குடியரசு கட்சியின் பிரச்சாரம். நாற்பது பேரை வைத்துக் கொண்டு எந்தவித மசோதாவையும் இம்மியளவு கூட நகரவிடாத கட்சியின் கூக்குரல்.

‘ஜட்ஜை நியமிக்க வேண்டுமா?’

‘முடியாது! போடுவோம் ஃபிலிபஸ்டர்.’

‘எங்க தல ஒபாமா நியமிப்பவர் என்றாலும்… ஜட்ஜ் உங்களுடைய குடியரசுக் கட்சிய சேர்ந்தவரப்பா… உங்காளுதான் என்பது தெரியுமில்லையா?’

‘இருந்தாலும் தர்ணா செய்வோம்! சட்டசபையை நடக்க விடமாட்டோம்! எங்க கட்சித் தல மெகயின் தோத்துட்டார்…’

இப்படியாக அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டையிட்டு, அந்தப் பழியை ஒபாமா தலையிலும், டெமோக்ரட்ஸ் மெஜாரிட்டி என்றும் தள்ளிவிடும் தந்திரம். (GOP Opposition Slows Obama’s Judicial Nominees : NPR)

8. விட்டுக்கொடுக்கும் மந்திரம்: சென்றதுடன் தொடர்புடையது. என் வீட்டில் ‘மதுரை’ ஆட்சிதான். இருந்தாலும், மீனாட்சி என்னவோ, ‘சிதம்பரம்’ என்று நடராஜனையே சொல்லவைக்கும் மேனேஜரின் சூட்சுமத்துடன் செயல்படுவார். ஒபாமாவிற்கு இந்த மாதிரி ராஜதந்திரம் போதவில்லை. போதிய பெரும்பான்மை இல்லாமலேயே காரியத்தை சாதித்துக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷின் சாமர்த்தியத்தைப் பார்த்தால் கடுப்பு கலந்த ஆச்சரியம் வரவே செய்கிறது.

9. கோஷ உச்சாடனம்: ஆள்குறைப்பை முடித்தவுடன், ‘இதுதான் கடைசி வேலைநீக்கம். இனிமேல் சென்மாந்திரத்திற்கும் எவரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்!’ என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் மேலாளரின் திறமைக்கொப்ப, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசாமல், வாக்காளரின் கவலையை பேசுவது நல்ல வேட்பாளரின் லட்சணம். குழந்தைகளுக்கும் ஏகே 47; அதே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குழந்தை பெறும் திட்டம் என்பதெல்லாம் மனதோடு வைத்துக் கொண்டு, புறத்தே பிறிதொன்று பகர்வது வெற்றிக்கனியை சித்திக்கும்.

10. அதுதான் இந்தப் பதிவில் துவக்கத்தில் சொல்லியாகி விட்டதே. ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்?’


அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை: 307,006,550

மிகக் குறைந்த வாக்காளர் கொண்ட 20 மாகாணங்களின் மக்கள் தொகை: 31,434,822

அதாவது 10%

ஓரு மாகாணத்திற்கு இரு செனேட்டர்கள்.

20 * 2 = 40 செனேட்டர்.

அமெரிக்காவில் மொத்த மாநிலங்கள்: 50; எனவே, மொத்த செனேட்டர்கள் எண்ணிக்கை: 50 * 2 = 100

அதாவது, வெறும் 10 சதவிகிதம், 40 சதவீதத்திற்கு வழிவகுத்தது.

இப்பொழுது நடுநிலையான தேர்தலில் அமெரிக்காவின் குறுக்குவெட்டு சித்திரமான மாநிலத்தில் இருந்து உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டர் – ஸ்காட் ப்ரௌன்.

வாழ்த்துகள்.

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

10 American Comedy Serials

வேலை அதிகமானால், நகைச்சுவை நாடகங்களை மனம் நாடும். உழைக்கும் வாழ்க்கை நசையானால், சுஜாதாதான் எடுக்கத் தோன்றும். ஜெயமோகனைத் தவிர்க்கும். அடுத்தவரின் துன்பியல் நிகழ்வான செய்திகளை சாய்ஸில் விடும்.

இவ்வாறாக ப்ரைவேட் ப்ராக்டிஸ், சி.எஸ்.ஐ., லா அன்ட் ஆர்டர் அடிதடியை கடந்த வருடம் தவிர்த்துவிட்டேன். வாரந்தோறும் விரும்பிய ‘பாஸ்டன் லீகல்’ முடிந்து போனது. அதற்கு பதிலாக பார்க்கத் துவங்கிய சீரியல்களுக்கு சிறுகுறிப்பு.

எனக்குப் பிடித்த தர வரிசைப்படி உள்ளன.

1. The Big Bang Theory

இத்தனை நாள் எப்படி தவறவிட்டேன்? நாலு அறிவாளிகளும் ஒரு அழகியும். a) அறிவியல்காரர்களுக்கு குட்டி பிடிக்கத் தெரியவில்லை. b) அதில் ஒருவன் தேசி என்.ஆர்.ஐ. c) இன்னொருவன் யூதன். d) எதற்கும் ஆராய்ச்சிபூர்வமாக கர்மசிரத்தையாக பதிலளிக்கும் ஹீரோ. எதிர்த்தவீட்டு பருவப்பெண்.

கனஜோர்.

நிகழ்ச்சியின் முடிவில் தயாரிப்பாளர் கம் இயக்குநர் சக் லோர் போடும் ஸ்லைடு மகா அற்புதம். இங்கே கிடைக்கும்.

2. Modern Family

மூன்று குடும்பங்களின் கதை.

பதின்ம வயதில் மகள்; அக்காவின் அழகை வெறுத்து படிப்பில் புலியாக நினைக்கும் தங்கை; இருவருக்கும் பிறகு வந்த குட்டிப் பையன். பக்கத்து வீட்டு ஆன்ட்டியை ஜொள்ளிடும் அப்பா. கணவனின் பிறந்தநாளை கண்டுகொள்ளாத அம்மா.

அந்த அம்மாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள். அப்பா பெருந்தனக்காரர். சிறுசு + இளசு இலத்தீன குட்டியை இரண்டாந்தாரமாக, இலவச இணைப்பான டீனேஜ் மகனோடு கொண்டவர்.

அவருடைய இன்னொரு மகன் மூன்றாவது குடும்பம். தற்பால் திருமணம் புரிந்தவர். வியட்நாமில் இருந்து கைக்குழந்தையை தத்தெடுத்தவர்கள்.

மாமனார் x மாப்பிள்ளை; ஓரினச்சேர்க்கையில் நெளியும் தாத்தா; டேட்டிங் போகும் மகளின் ஊரடங்கு; சம்பவங்களுக்கா பஞ்சம்?

எல்லாவற்றிலும் டாப்: யார் பாட்டி? எவர் அக்கா? என்று விநோதமாக அழைக்கும் நேரம்.

3. The Middle

நான் பார்ப்பது மனைவிக்கு பிடிக்காது. மகளிரின் லைஃப்டைம் திரைப்படம் பார்ப்பதற்கு ‘அத்திப்பூக்கள்’ சகித்துவிடலாம்.

இரண்டுக்கும் நடுவாந்தரமாக ஒத்துவருகிறது ‘மிடில்’.

அமெரிக்காவின் நட்டநடுவாந்தர நகரம். இன்டியானா மாகாணம். கார் விற்றால் கமிஷன் பெறும் இல்லத்தரசி. தொழிற்சாலையில் உழலும் குடும்பத் தலைவன். வயசுக்கு வந்த கோளாறு கொண்ட மூத்த மகன். புத்தகப் புழுவாக சகாக்களை ஒதுக்கும் குட்டிப் பயல். இருவருக்கும் இடையே ஆயிரம் கலைகளில் தேர்ச்சி பெற முயலும் மகள்.

அக்கம்பக்கத்தில் தெரிந்த, சொந்த வாழ்வில் சந்தித்த நிஜக் குடும்பங்கள் நினைவுக்கு வருகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று ரிசஷனுக்கு ஏற்ற காவியம்.

4. The League

இதுவரை சொன்னது எல்லாமே வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது என்றாலும், லீக் கொஞ்சம் அதிகப்படி அசைவம்.

கூடைப்பந்து சீஸன் ஆகட்டும்; அமெரிக்க கால்பந்து உற்சவம் ஆகட்டும். அலுவலிலோ அடுக்ககத்திலோ ஆள் சேர்த்து கூட்டணி அமையும். இருக்கும் அணிகளில் இருந்து ஆட்டக்காரர்களை விர்ச்சுவல் ஏலம் எடுத்து ஷாரூக்கான் போல், சொந்தமாக்கிக் கொள்ளலாம். நிஜ ஆட்டங்களில் ஆடுவதைப் பொறுத்து, வெற்றி தோல்வி கணிக்கப்படும்.

இதைப் பின்னணியாகக் கொண்ட களம்.

கணவனைக் கட்டியாளும் மனைவி. தோட்டத்தில் இருந்து பச் பச்சென்று பறித்தது போல் வெட்டிவேரு பிடுங்கிய வாசத்துடன் பிரிந்த தம்பதியர். பால்குடி குழந்தை கொண்டதால் பாலுறவு மறந்த தம்பதியர். தேசிப் பெண்ணை டாவடிக்கும் வழுக்கையன். அக்மார்க் பேச்சிலர். ஆடம்பர பிரம்மச்சாரி.

பரவாயில்லை.

வெகு முக்கியமாக கிடுக்கிப்பிடி செக்ஸ், கொங்கையின் கனம், சவாலில் தோற்றதால் நிர்வாணம் என்று பேசாப்பொருளை பாடுபொருளாக்கியதால் ருசிக்கிறது.

5. 30 Rock

ரொம்ப காலமாகப் பார்த்து வருவதால் போரடித்துவிட்டது. ‘சாடர்டே நைட் லைவ்’ டீமின் சாகசங்கள்.

உங்களுடைய சி.ஈ.ஓ.வை அலெக் பால்ட்வின் நினைவுறுத்தலாம். நியுயார்க் மாந்தருக்கு டினா. ஒவ்வொரு வாரமும் பெருந்தலை எவராவது எட்டிப்பார்ப்பதாலேயே இன்னும் ஈர்க்கிறது.

6. Gary Unmarried

மணவிலக்கு ஆகியபிறகும் ஆதுரத்தோடு காதல் பாராட்டும் முன்னாள் கணவன் – மனைவி. கணவன் பிற பெண்களுக்குத் தூண்டில் போடுவதும், அதன் பின் விவாகரத்தான முந்தையவளுக்காக, இன்றையவளை த்ராட்டில் விடுவதும் வாராந்தர வழக்கம்.

ஒரே மாதிரி அமையும் நிகழ்ச்சியாகி விட்டது தற்போதைய குறை.

என்னவாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் சிலப்பதிகார பண்பாட்டை மீட்டுருவாக்குவதால் மகத்துவம் அடைகிரது.

7. Better off Ted

இதுவும் மொக்கை டைப்.

அலுவலில் இடைநிலை அதிகாரி டெட். இவனுக்கு மேலதிகாரி ஸ்கர்ட் பொம்மை. செக்ரடரியுடன் கொஞ்சம் கிஸ் உண்டு. கீழே இரு டாம் அன்ட் ஜெர்ரி ஆராய்ச்சிக்காரர்கள்.

பணியிடத்தில் போடப்படும் அடாவடி தீர்மானங்கள், பாலியல் அத்துமீறல்கள், ஆகியவற்றுடன் அகமும் புறமுமாகிய குடும்ப – குழும குழப்பங்களும் போதிய அளவில் கலக்கப்பட்டு தரப்படும்.

8. It’s Always Sunny in Philadelphia

இப்பொழுதுதான் முழு சீஸனும், சென்ற வருடத்திய எபிசோடுகளுமாக முழு வீச்சில் இறங்கி இருக்கிறேன். கொஞ்சம் கருப்பு… அதாங்க டார்க் வகையறா. அதற்காக ப்ரூனோ அளவு விகாரமல்ல.

களுக் சிருப்பு வராது. ரத்தக்கண்ணீர் ப்ளேடு நிச்சயம் கிடையாது. ஜோக் புரியாமல் தூக்கத்தில் புரிந்துவிடும் அபாயம் உண்டு.

9.Two and a Half Men

சென்ற ஆண்டுகளில் பார்த்தது. பத்தில் ஒரு ஒடம் தரலாம். இப்பொழுது நிறுத்தியாகி விட்டது.

அண்ணன் – தம்பி. அண்ணன் பணக்காரன். தம்பி ஜீவனாம்சத்தில் வாழ்க்கையைத் தொலைத்து, அண்ணனிடம் அண்டியிருக்கிறான். அண்ணாவுக்கு ‘ஆசை நூறு வகை; வாழ்வில் ஆயிரம் சுவை’. தம்பிக்கு மகன் மட்டுமே.

இதில் வரும் பெண்கள் லட்சணமாயிருந்தது, பார்க்கத் தூண்டியது.

10. Cougar Town

இதெல்லாம் நான் பார்ப்பதாக சொன்னால் இமேஜ் போயிடுங்க.

10.  Community

தினந்தோறும் ஜே லீனோ வந்து கழுத்தறுத்ததால் இந்த மாதிரி மொக்கை பார்க்க வேண்டி வரும்.

ஐயா! ஜாலி… ஜே லேனோ நிறுத்தப் போறாங்களாம்… இனிமே, கத்தியின்றி துப்பாக்கியோடு என்.சி.ஐ.எஸ். கொண்டாடலாம்.

கட்டாங்கடைசியாக ஓர் எச்சரிக்கை: Accidentally on Purpose பார்த்து விடாதீர்கள். டீலா/நோ டீலா கூட தாங்கி விடலாம். ஆனால், Knocked Upனினும் அடைந்த வேதனையை நீவிர் தவிர்ப்பீர்.

Avatar: அவதார்

1. அமெரிக்கா வந்த புதுசு. ஜேம்ஸ் கேமரான் குறித்து தெரியாத வயசு. கூடவே நாலஞ்சு பொண்ணுங்க வேற கூப்பிடறாங்க. டிக்கெட் எளிதாக கிடைத்துவிடுகிறது. ‘டைடானிக்’ மட்டும் மூழ்கவில்லை. வலைப்பதியாத அந்தக் காலத்திலேயே படம்  பார்த்தபிறகு எழும் இயலாமை ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ பார்த்த எஃபக்ட் கொடுத்தது.

அந்தப் படத்திலாவது பிறந்த மேனி கேட் வின்ஸ்லட் ஆறுதல். அதுவும் இங்கே லேது. மிஷேல் ரோட்ரிக்ஸ் இருந்தும் அவதாரில் ஏமாற்றம்.

2. தமிழருக்கு லாஜிக் ஓட்டை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், சிம்பு படமாக இருக்க வேண்டும் அல்லது ‘சிவாஜி’யாக இருக்க வேண்டும்.

3. கடவுள் என்றாலே லேட்டாகத்தான் வருவார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன் அனைத்தையும் இழந்தாலும் ஹீரோ என்றறியப்படுவது போல்  ஈவா தெய்வமும் வெகு தாமதமாக, தன்னை வணங்கும் கூட்டம் பஸ்மமான பிறகே தலை நீட்டுகிறது.

4. ஜூராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார். ஜுமாஞ்சியில் பார்த்த இரணகளம். ஆவியோடு பேசும் Defending Your Life. அவியல் பிடிக்கும்தான். அவதார் அவியல் அல்ல; ஆட்டோவில் கொட்டிப்போன கேரியர் சாப்பாடு.

5. அமரும் இடத்தில் கூட அதிர்வு கொடுக்கும் 3டி நுட்பம் வெகு அபாரம். தூக்கம் எட்டிப்பார்த்தால், எழுப்பிவிடுகிறது.

6. நாவிக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? அஜீரணம் உண்டாகுமா? ரத்தம் ஒரே நிறமா? அபான வாயு காமெடி எல்லாம் கிடைக்குமா?

7. ஜேம்சுக்கு படம் எடுக்கத் தெரியாவிட்டாலும் சந்தையாக்கத்தில் கெட்டி. இவருடன் எந்தப் படமும் போட்டி போடாமல் இருப்பது உபரி. உலகவெம்மை ஆதரவாளர்களும், இராக் ஆக்கிரமிப்பு அசூயைக்காரர்களும், அமெரிக்கன் காப்பாற்றுவான் வலதுசாரிகளும் தங்கள் கொள்கை, இலட்சியங்களுடன் பிணைத்துப் பார்க்க வைக்கும் மார்க்கெடிங் மாயாஜாலத்துக்கு ஜெய் ஹோ!

8. புத்தம்புது பூமி வேண்டும்! நானும் நாவியாக மாறி இளவரசியுடன் ஜொள்ளு விட்டு, பொருளாதார வீக்கம் கவலை மறந்து, நாளொரு சி#ம், பொழுதொரு Perlம் கற்காமல், குதிரையில் பறந்து… பறந்து…

9. வாடகை வீட்டை காலி பண்ண சொன்னால், ஜாகையை மாற்றுவீர்களா? இல்லையா? நாவிக்கள் கூட வேற மரம் பார்த்து குடிபோயிருக்கலாம் என்று இயக்குநர் எண்ண வைக்கிறார்.

10. வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ பார்க்குமளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்று தோணவைத்தது எது? நமீதாவா? அய்யனாரின் இரானியப் பட விமர்சனங்களா? வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா? எது…

சில பார்வைகள்:

  1. தமிழ்ஹிந்து » திரைப்பார்வை: அவதார்
  2. jeyamohan.in » Blog Archive » அவதார் – ஒரு வாக்குமூலம்
  3. ஏன் இப்படி…!: அவதார் – இது சினிமா மட்டுமல்ல!
  4. Op-Ed Columnist – The Messiah Complex – NYTimes.com
  5. IdlyVadai – இட்லிவடை: அவதார் – விமர்சனம்
  6. அதிஷா: ஆ… அவதார்!
  7. Cameron’s Avatar: The emerging zeitgeist? :: Vijayvaani.com
  8. ‘Avatar’ team brought in UC Riverside professor to dig in the dirt of Pandora | Hero Complex | Los Angeles Times
  9. இளையதளபதியின் அவதார்…அவதார் படத்தில் விஜய் நடித்திருந்தால்….
  10. கணேஷின் பக்கங்கள்!: இவள மாதிரி பொண்ணு பாரும்மா?

தசாப்தம்

“Our incomes are like our shoes; if too small, they gall and pinch us; but if too large, they cause us to stumble and to trip.”
Philosopher John Locke

கடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது?

இன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now?’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.

சொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா?

சுயநலம்

எனக்காக யோசித்தேன்.

2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.

க்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை

இதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.

கல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.

எளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்?

நாற்பது வயதில் நாய்க்குணம்

Peer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.

கொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.

Contractors as Prostitutes vs Marriage as Full Time Employment

நிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.

மனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.

மத்தியமரில் இத்தனை வகையா?

தாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்?

1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.
2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்
3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்

அமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்?

வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.

பொறியிழந்த விழியினாய் போ போ போ

அமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.

இத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா? அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்?

சத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.

Call center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது?

லட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்?

நகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்?

அடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.