Monthly Archives: ஏப்ரல் 2014

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?