Monthly Archives: ஓகஸ்ட் 2014

அனுராகமாலை எடுத்தேற்றம்

மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.

“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”

“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”

”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”

காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.

பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.

செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.

“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.

“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.

”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.

“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”

இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?

நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.

சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.

“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”

நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”

“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”

இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”

“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”

தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”

ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”

சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”

நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”

யாருக்கு வாக்களிப்பது? பத்திரிகைகளின் பரிந்துரை

இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.

இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.

பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.

இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.

நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.

முகவிழி சபைகள்: சேட்படுத்துதல்

Meetup_Eventbrite_Mixer_Pizza_Beer_Software_Demo_Pitch_Forums_Events_Talks_Chat_Discussions
சாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.

என்ன இலவசம்? காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.

புற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.

செவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.

வாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.

ஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.

ஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும் ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.

A Novelist Who Made Crime an Art, and His Bad Guys ‘Fun’

புகழ்பெற்ற குற்றப்புனைவு எழுத்தாளரான எல்மோர் லெனார்ட் மறைந்தார். திரைப்படங்களான இவருடைய கதைகள் Get Shorty, Be Cool, Out of Sight, Jackie Brown போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.

எழுத்தாளர்களுக்கான அவரின் பத்து கட்டளைகள்:
1. தட்ப வெப்ப நிலையை எழுதி கதையைத் துவங்காதே
2. முன்னுரையைத் தவிர்
3. ’சொன்னார்’ என்பதைத் தவிர மற்ற வினைச்சொற்களை உபயோகிக்காதே

கதையில் யார் கையை வேண்டுமானாலும் பிடித்திழுக்கலாம்; புனைவில் எவரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்… ஆனால், கட்டுரையில் கவனமாக இருக்கவேண்டும் போன்ற உபதேசங்களை அவர் சொன்னாரா என்பதை அறிய பாக்கியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

Collectors – Daniel Alarcón – New Yorker

நியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.

தற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.

கொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.

ரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.

காவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.

சிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.

The Unlikely Pilgrimage of Harold Fry by Rachel Joyce

The Unlikely Pilgrimage of Harold Fry_harolds-walk

The Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.

ரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.

திடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.

ஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.

க்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.

கணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

That Girl In Yellow Boots: திரைப்பட விமர்சனம்

That Girl In Yellow Boots_Kalki_Anurag_Kashyap_Movies_Films_Cinema
’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.

ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.

இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.

முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?

மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.

நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.

இரு நாடுகள் – இரு தலைமுறைகள்

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சாலை விதிகளை மூன்று விதமாகப் பார்க்கிறேன்.

அமெரிக்காவிலும் aggressive driving போன்ற குணாதிசயத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால், காவல்துறை குறித்த பயம் அது பல்கிப் பெருகாமல் தடுத்திருக்கிறது. ஏதாவது தப்பு செய்தால் விழியத்தில் ஒளிப்பதிவாகி இருக்கும்; அதன் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடுமையான பண இழப்பும் நீங்கா காப்புறுதி களங்கமும் கிடைக்கும் என்னும் அனுபவ பாடத்தில் விளைந்த சட்டத்தை பின்பற்றல். போலீஸ் மட்டும் தூணிலும் இருப்பான்/துரும்பிலும் இருப்பான் நிலை இல்லாவிட்டால் இந்தியர் போன்ற சாலை ஒழுங்கு லண்டனிலும் வந்துவிடும்.

இன்னொரு விதமாகப் பார்த்தால் இந்தியர் ‘தன் கையே தனக்குதவி’ ரகத்தினர். பஞ்சாயத்து ராஜ் என்பார்கள்; ஆனால், காரியம் ஆக வேண்டுமானால் எம்.பி. சிபாரிசை நாடுவார்கள். ‘சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீயே இரு’ என்னும் காந்தியைப் போற்றுவார்கள்; அனால், அரசர் ஒரு கப் பால் கேட்டால், ‘நான் மட்டும் ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றினால் வித்தியாசம் தெரியாது’ என்னும் கதை கேட்டு வளர்ந்தவர்கள்.

சுதந்திரத்திற்குப் பின் உருவான தலைமுறையினரின் வளர்ப்புமுறை இன்னொரு முக்கிய காரணம். என்னுடைய சம வயதினரின் பெற்றோரைப் பார்க்கும்போது சிக்கனத்தையும் நேர்மையையும் குழப்பிக் கொண்ட சமூகத்தையே காண்கிறேன். இன்றைக்கு ஐம்பதைத் தாண்டிய வயதினர் தன்னிடம் பிறர் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படிதான் பிறர் பொறுமையாக சட்டத்தை பின்பற்று என வலியுறுத்துகிறார்கள். அதே தருணத்தில், தங்கள் மனசாட்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. இவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இன்றைய தலைமுறை தன் வரம்புக்கு மீறிய செயல்களை (சிக்கனமின்மை) செய்ய சகலமும் ஓகே என்கிறார்கள்.

நல்ல சுவாரசியமான அறிபுனை கதைக்கு ஒரு உதாரணம்

2013ல் புலிட்சர் பரிசு பெற்ற ஆடம் ஜான்சன் இந்த மாத Esquireல் கதை எழுதியிருக்கிறார். தற்கால காலச்சுவடு, சொல்வனம்.காம் போன்ற இதழ்களில் வரும் எந்தப் புனைவும் இதற்கு நிகரானவையே.

கதை ஏன் என்னை கவர்ந்திழுத்தது? சிறுகதையின் தலைப்பு ‘நிர்வானா’. அது எனக்கு ரொமபவேப் பிடித்த இசைக்குழு.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரக ஆரம்பம். திடீரென்று வாயில் நுழையாத வியாதி வந்த மனைவி. கை, கால் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அவளை மிகவும் அனுசரித்துப் பார்த்துக் கொள்ளும் கண்கண்ட கணவன் என்று பீம்சீங் காலத்து உருகல். ஆனால், அதை கவுதம் வாசுதேவ் மேனன் நடையில் சொல்லியிருக்கிறார். செயலிழந்த உறுப்பு கொண்ட அவர்களுக்கிடையேயான உடலுறவு சொல்லும்போது கூட நன்றாகவே உரு ஏற்றுகிறார்.

இலக்கியத்தில் அடிக்கடி கேட்கப்படும் வாசகம் ‘தட்டை’. இந்தக் கதையில் அதைக் காணோம். களன் சிலிக்கான் பள்ளத்தாக்கு. நாயகனும் கண்டுபிடிக்கிறான். அதுவும் எந்த சமயத்தில்? மனைவியை கண்ணும் கருத்துமாக விழித்திருந்து கவனித்துக் கொண்ட பதினைந்தே நாள்களில் ’ஹாலோகிராம்’ மனிதர்களை உருவாக்குகிறான். சாதாரண hologram அல்ல. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் உருவத்திற்கு உயிர் தருகிறான். இணையம் மூலமாக அவரின் விழியப்படங்களையும் ஒளிப்படங்களையும் நடை உடை பாவனைகளையும் இணைத்து உலவ விடுகிறான்.

இந்த மாதிரி ஹோலொகிராம் உருவாக்குவதால் என்ன பிரச்சினைகள் எப்படி எல்லாம் எழும் என்பதையும் அறிபுனைவாக அலசுகிறது சமூகப் புனைவு. எல்லோரும் பொய் உருவங்களைக் கோரி அவனிடம் வருகிறார்கள். அவனே அந்த மாதிரி ஒரு தோற்றத்தை சரி செய்யும் reputation management பணியாளன். இப்பொழுது இறந்து போன நிர்வாணா குழுவின் கர்ட் கோபேனுக்கு நிகர் உருவாக்குவது சரி… வாழ்ந்து கொண்டிருந்தாலும் அசைவற்ற மனைவிக்கு நிகர் உருவாக்குவது கூட சரி… ஆனால், ஃபேஸ்புக்கில் எக்குத்தப்பான படம் போட்டுவிட்டு அதை அகற்ற போலி நிகர் உருவாக்குவது எப்படி சரி?

இது எதிர்கால உருவகம். கூடவே, சமகால கூகிள் கண்ணாடியும் ஆளில்லாமல் பறக்கும் விமானங்களும் வருகிறது. அவனே இயந்திரகதியில் இயங்குவதை இந்த இரண்டு வன்பொறிகளும் உணர்த்துகின்றன. எவரோ இயக்க, எங்கோ பறந்து, எவற்றையோ பார்க்க வைக்கும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் drone, மனைவிக்கு புது உலகத்தைக் காட்டுகிறது. கட்டிலிலும் நரம்புகள் எங்கும் ஊசித் துளைப்பாக முடங்கியவரை, தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இருபது பக்க சிறுகதை எழுதுவது பெரிய விஷயமல்ல… நாலு அறிவியல் கண்டுபிடிப்புகளை புனைவில் தூவுவது பெரிய விஷயமேயல்ல… நேற்று தோன்றிய வியாதிகளை விவரிப்பது புதிய சரக்கேயல்ல… கவித்துவமாக உருவகங்களை உலவ விடுவது சங்கத்தமிழ் சங்கதி… ஆனால், எல்லாவற்றையும் சுவாரசியமாக, பக்கங்களை ஆர்வமுடன் புரட்டுமாறு ஒரே கதையில் புழங்க விடுவது மிகப் பெரிய விஷயம்.

தமிழில் நான் எழுதினால் மட்டுமே சாத்தியம்.

தேஸி என்பவர் யார்? அமெரிக்காவில் இந்தியரின் குறியீடுகள்

பொதுமையாக்கலுடன் நிறைய பிரச்சினை உண்டு. அதுவே ஒரு பொதுமைப்படுத்தல்தான் என்பதால், அமெரிக்க வாழ் சகாக்கள் குறித்த பொதுக்காரணியாக்கல்:

“It is lamentable, that to be a good patriot one must become the enemy of the rest of mankind” என்கிறார் வால்டேர். இதையே “தான் உண்டு… தன் வேலை உண்டு என்று இருந்தால் சக இந்தியத் தொழிலாளிகளின் எதிராளியாக மாற்றுவது தேஸி மனப்பான்மை” என்று மொழிபெயர்க்கிறேன்.

இருப்பு கொள்ளாமையில் தவிக்கிறார்கள். “அவள் என்ன செய்கிறாள்?” என்று அறிவதை இலட்சியமாக வைத்திருக்கிறார்கள். காசு செலவழிப்பதற்கு அஞ்சாதவர்கள், கஞ்சத்தனத்தைக் கைவிட மறுக்கிறார்கள். பதற்றமும் அச்சமும் நடுத்தர வர்க்கத்தின் குறியீடுகளா அல்லது நடுத்தர வயதின் குறியீடா என குழப்பவைக்கிறார்கள். நொடிக்கு நொடி மாறும் விளம்பரம் போல் குவிமையமின்றி அலைபாய்ந்து வேகமாக தாவிக் கொண்டே பறக்கிறார்கள்.

ஹோட்டலுக்கு சென்றால் tip வைக்காமல் வருவது; பாத்ரூமிற்கு சென்றால் சீப்பை எடுத்து இல்லாத சிகைக்கு அலங்காரம் செய்வது; காபி எடுக்க சென்றால் கூடவே ரத கஜ துரக பதாதிகளை அழைப்பது; உங்களோடு தெலுங்கானா குறித்து காரசாரமாகப் பேசிவிட்டு, நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்தால் ஃபேஸ்புக் பக்கம் சென்று விடுவது…

இதெல்லாம் இந்தியக் கலாச்சாரமா? தேசிக் கலாச்சாரமா? என்று சீமான் அமெரிக்கா வரும்போது “மக்கள் முன்னால்” விவாதிப்பார்.