Tag Archives: Votes

அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்

எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.

சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

–  சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்

–  அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்

–  தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்

அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.

அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.

அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!

அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.

காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.

போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,

பாபா

Massachusetts 2016 elections – Ballot Questions: Yes or No?

நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.

சூதாட்டத்தை இன்னும் அதிகரிக்கலாமா?

Question 1 would allow the Gaming Commission to issue an additional slots license.

இன்னும் துவக்க வேண்டிய சூதாட்ட கேளிக்கை மையங்களையே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மேலும் ஒன்றா?

முதலில் துவக்க வேண்டியதை துவக்கி நடத்த ஆரம்பிக்கட்டும். அவற்றில் எவ்வளவு காலப்போக்கில் பிழைத்து, பிழைப்பை நடத்துகின்றன எனப் பார்ப்போம். அவற்றினால் எந்த மாதிரி பின் விளைவுகள் வருகிறது என ஆராய்வோம். அதன் பின் அடுத்ததைத் துவக்குவோம்

penn-national-gamings-plainridge-park-casino-slots-parlor-mass

அரசாங்க செலவில் நடக்கும் தனியார் கல்விக்கூடங்களை அதிகரிக்கலாமா?

Question 2 would authorize the approval of up to 12 new charter schools or enrollment expansions in existing charter schools by the state Board of Elementary and Secondary Education per year.

ஒவ்வொரு வருடமும் பன்னிரெண்டு புது பள்ளிக்கூடங்கள் தனியார் கையில் தரப்படும். நாளடைவில் மொத்த மாஸசூஸட்ஸ் மாநிலப் பள்ளிகளுமே தனியாரிடம் கொடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து, எந்த மாதிரி பரீட்சைகளை வைத்தால் மாணவர்கள் தேர்வு பெறுவார்கள் என்பதைப் பொருத்து கேள்விகளை எளிமையாக்குவது வரை எல்லாமே மாறும்.

charterschoolsalicensetosteal

சோற்றுக்கு வளர்க்கப்படும் மாமிச உணவாகும் மிருகங்களைக் கூண்டில் வைக்காமல் திறந்தவெளியில் வளர்க்க வேண்டுமா?

Question 3 would prohibit certain methods of farm animal containment.

நமது தட்டிற்கு வரப்போகும் இறைச்சிகளை எப்படி வளர்க்க வேண்டும்? அவை கால் நீட்டிப் படுத்துக் கொள்ள இடம் தர வேண்டுமா? அல்லது இரண்டே இரண்டு டாலருக்கு சுவைமிக்க மாமிசம் கிடைக்க வேண்டுமா? நிமிர்ந்த நடையும், திரும்பித் திரும்பி உலகத்தைச் சுற்றும் தனிமனித உரிமைகளை பன்றிக்கும் கன்றுக்குட்டிக்கும் தர வேண்டுமா? அவை அவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தால்தான் செத்த பிறகு சுவைக்குமா?

இந்த கருத்துக் கணிப்பை ரோட்டில் சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களையும் பூனைகளையும் பொறி வைத்து, தேடிப் பிடித்து கருணைக் கொலை செய்து தீர்த்து கட்டும் ஜீவகாருண்ய சங்கம் ஆதரிக்கிறது.

truth-about-factory-farms

சிறிய அளவில் போதைப் பொருளை உட்கொள்ள வயதுவந்தோரை அனுமதிக்கலாமா?

Question 4 would legalize recreational marijuana for individuals at least 21 years old.

எங்கே பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. வீட்டிற்கே வந்து மாரிவானா (marijuana – மரிஹுவானா என்ற போதைப்பொருள்) கொடுக்கும் அமைப்புகளை நீங்கள் லியனார்டோ நடித்த ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ போன்ற படங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இது குற்றம் என்பதால் காவல்துறைக்குத்தான் ரோதனை. இதைவிட மோசமான போதையான சாராயம், தண்ணீர் ஆறாக ஓடி அமெரிக்காவிலும் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. பியர் வாங்கினால், மது உட்கொண்டால் –  அரசாங்கத்திற்கு வரி மூலம் வருமானம் கிடைக்கிறது. அதே போல் கஞ்சா வாங்கினாலும் விற்பனை வரி மூலம் பள்ளிக்கூடங்களைப் பெருக்கலாம்; காவல்துறையை மக்களை பாதுகாக்க அதிகரிக்கலாம்.

10_reasons_kanja_marijuana_regulation_legalization

யாருக்கு வாக்களிப்பது? பத்திரிகைகளின் பரிந்துரை

இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.

இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.

பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.

இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.

நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

பராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்?

நான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.

சின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.

பாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.

இரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.

குழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.

கீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்?

முதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.

’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.

கல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.

இளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.

சுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.

அராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

எகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.

அமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்!

இதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.

ஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.

முக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.

சரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.

வேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.

வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.

குறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.

எதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.

இதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.

இவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.

இதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.

’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு? மிட் ராம்னி வந்தால் என்ன குறை?’

ராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.

ஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.

வந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.

ஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.

கூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.

What I fear is genuinely worthy falling into the abyss; What I hate is ignorantly hopeful pushing them!

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru

கள்ளவோட்டுதான் ஜனநாயகமா?

அசல் இடுகை: ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?

Madurai-Monkey-Tamil-Nadu-Drink-Water-Flickr-Redbull-Chimpவாக்காளர் நலம் சார்ந்து பேசினால், “தேர்தல் சமயத்தில் ஆரத்தியெடுத்து, தேர்தலை வைத்து சோறு தின்பவர்களுக்கு ஏன் ஊழல் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்கிறார்கள்.

ஓட்டுதான் சோறு போடுகிறது என்றால், வாக்கு அளித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஜனநாயகம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் வோட்டளித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் வாக்காளர்களுக்கு ஓட்டு சோறு போடுகிறது?

அரசியலை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஓட்டை வைத்துக் கொண்டு **** முடியாது.

cats-read-books-language-books-images-photos-flickr-paul-nganஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் வெற்றிக்கான கள்ள வாக்கு. அதற்கு மேல் booth capturingஐ உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.

ஓட்டு மக்களாட்சி முறைகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் பிரதிநித்துவங்களில் வாக்குரிமையைக் கலப்பதில்லை. ஓட்டளிக்க விரும்பாததும் முயலாததும் சமூகப் போக்காகவும் தனியாள் உரிமையாகவும் இருக்கலாம்.

ஆனால், “சோறு போடும் நன்றிக்காக கள்ள வாக்கை கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த சுதந்திர நாடும் ஏற்றுக் கொள்ளாது.

தொடர்புடைய இடுகை: சுருக் + சறுக் + நறுக் பகீர்

பணம் பூத்தும் செய்யும்

Adade-Mathy-Dinamani-Money-Politics-Poll-Percentages-Voters-Cash

Dinamani Cartoons: DMK JK Ritheesh Special