A glance leaves an imprint on anything it’s dwelt on.
–
Joseph Brodsky
[Russian poet(1940-1966) – “A Part of Speech” in Collected Poems in English]
துவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்
அமெரிக்க வந்த காரணம் என்ன? தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது?
சந்தித்த கதை
மீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.
அப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.
அனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.
சலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.
சளைக்காமல் கதைக்கக் கூடியவர்கள்.
அ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.
கேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.
மு. இளங்கோவனாரும் அதே ரகம்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
தமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.
நான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.
எனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.
அலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட்ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.
எம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.
நடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.
- முதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;
- ஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;
- படிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;
- யேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;
போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.
தமிழும் தமிழ் சார்ந்த கணினியும்
இளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.
ஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.
ஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.
நம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.
இனி அவர்…
தமிழ்க் கல்வி முறை
தமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன?
வலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
தமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி
யேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்
ஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா
கோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011
விழா மலர் வெளியீடு – பெட்னா 2011
பாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு
மேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்
பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை
பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.
எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.
இப்பொழுது கேள்விகள்:
1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?
2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?
3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?
4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)
5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?
6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?
7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?
8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?
9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?
10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், ஆய்வு, ஆராய்ச்சி, கல்வி, சம்பளம், சொல்வனம், ஜெயமோகன், திறமை, படிப்பு, பதில், பொறியியல், மாணவன், வேலை, Colleges, Comments, Compensation, Education, Employment, Engg, Engineering, Feedback, Jobs, Opportunities, Professors, Reply, Research, salary, Students, Study, Teachers, Tech, Technology, Thesis, University