Ideas for future Jeyamohan column in The Hindu


மூலப்பதிவு: தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது – எழுத்தாளர் ஜெயமோகன்

இரண்டாம் உலகப் போரில் ஒரு போஸ்டரைப் பார்த்தேன். ஐம்பதாயிரம் மனிதர்களின் ஒரு வருட உழைப்பை ஜலதோஷம் விழுங்கி விடும் என்று சொன்னது அது. பரபரப்பாக புகைப்பதால் ஒரு வருடத்தில் இரண்டரை நாள்தான் வீணாகும். அதிலும் பாதி சிகரெட் பிடித்தால், ஒரு நாளாக்கிவிடலாம்.

நம் இளைய தலைமுறை ஏராளமாக நோய்வாய்ப்படுகிறது. ஆனால், சீக்கு சொல்லி விடுப்பு எடுப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஜலதோஷம் பரவலாகிவருகிறது. கொசு நிறைந்த சூழலில் தொற்று நோயே அசௌகரியத்திற்கு தோற்றுவாய் என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் கொசுவே இங்கே நோயின் ஊற்றாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

டெங்குவும் சிக்குன்கன்யாவும் பரவுவதால் சிகரெட் கைவிடப்படுவதைக் கண்டு, அன்புமணி இராமதாஸும் முகேஷ் ஆவணப்படத்தைக் கட்டாயமாக்கினார். விளைவாக, குழந்தைகள் வில்ஸ் ஃபில்டரை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் புகைக்கின்றனர். ஆனால், மாரடைப்பும் நடுவயதில் வருவதாலே சிகரெட்டில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

டாஸ்மாக் சரக்கு அல்லது கஞ்சாவை எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அவற்றுக்கு அடிமையாகின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் சிகரெட்டைக் கற்கின்றன. அதாவது, போதை எளிதாக அடைவதற்கு மட்டுமே. தட்டுத்தடுமாறி புனைவு உருவாக்கவும் ஓரளவு கிறுக்கவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

Cigarette_Smoker_Puff_Hukkah_Mosquito_Repellant_Cigars_Lady_Kill_Cancerஅவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் கொசுவர்த்திச் சுருள் புகையையும் சிகரெட் புகையையும் எதிர் கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு நோயில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலப் பழக்கம் தேவைப்படுகிறது. ஆகவே, எதிர்ப்பு சக்திக்கு உதவாமல் வெறுமே கிளுகிளுப்புக்காக மட்டுமே புகைக்கப்படும் ஆறாம்விரலாம் வெண்குழல் சுருட்டை விட்டுவிடுகிறார்கள்.

வாய்க்கும் சுருட்டிற்குமான உறவு என்பது ஒரு கைப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வட்டமாகப் புகை விடுவது நமக்கு இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், பதின்ம வயதில் ரவுண்டு ரவுண்டாக சுருளவைக்கும் வெள்ளாவிக் கொணர்வது மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

செயின் ஸ்மோக்கிங் என்பது இன்னும் சிக்கலானது. சரித்திரவியலாளரான வில்லியம் டியுராண்ட் (Will Durant) “மாற்றம் வீட்டிலே துவங்க வேண்டும் என எனக்கு உதித்த நேரத்தில் இருந்து, உலகத்தை மாற்ற எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்கிறார். நீங்கள் “அண்ணாமலை” படம் பார்த்து இருப்பீர்கள். அதில் மகன் ரஜினிக்கு சுருட்டு ஆசை உண்டு. அவரின் அந்தப் பழக்கத்தை முறியடிக்க நாள் முழுக்க சுருட்டை மட்டுமே புகைக்க விடுவார் அப்பா ரஜினி. அந்த மாதிரி சித்திரவதையை சுயபோகத்திற்கு நினைத்துப் பாருங்கள்.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு கொசுக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. டெங்கு கொசுவிற்கு விளைக் களம் தூய நீர். அது அழுக்கு நீரில் இருப்பதில்லை. தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக் குறையால் குடிநீர் வீடுகளில் பாத்திரங்களில் சேகரிக்கப் படுகிறது. இது சரியாக மூடப் படாதபோது மற்றும் தேங்கும் மழை நீரிலிருந்து இக்கொசுக்கள் பரவுகின்றன. கொசுவை அடிப்பதில் நம் உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது.

கையை அடித்தாலும் சரி… கைவிரல்களுக்கு நடுவில் வைத்தாலும் சரி… புகை என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், விரலில் இடுக்கக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் கொசுவர்த்திச் சூழலிலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் பழக்கமாகக்கொண்ட புகை அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் வழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.

Mosquito coil and burner.நான் பதின்மூன்றாண்டு காலமாக புகைக்கிறேன். புகைக்கும் வேகத்தில் பற்றவைக்க முடியும் என்னால். கண்ணெதிரே சிகரெட் தெரிகிறது, என் கைகளில் நேவி கட்-கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. கொசுவர்த்திப் போட்ட இடத்தில் நான் சரளமாக புகைக்கவும் செய்வேன். ஏன் சிகரெட்டை இவ்வாறு கொசுவர்த்தியாலேயே செய்யக் கூடாது?

பெட்டிக் கடைகளில் இதை விற்றால், வீட்டிற்கு ஒரே ஒரு டார்டாயிஸ் வாங்கினால் போதும். அவர்கள் சிகரெட்டை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக இழுக்க அது உதவும் அல்லவா? நாம் மார்ல்போரோ புகைக்கும்வரை கொசு தள்ளியே இருக்கும். காசும் மிஞ்சும். ஜலதோஷம் வந்தால் மூக்கால் பேசுவது என்போம். இது மூக்கால் சிக்கன்குன்யாவை தடுக்கும் தந்திரம்.

உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

2 responses to “Ideas for future Jeyamohan column in The Hindu

  1. தகவல் பிழை. சிறு பிழை தான். திருத்திக் கொள்ள முடியும். 🙂 அப்படம் ‘அண்ணாமலை’ அல்ல. ‘அருணாசலம்’.

  2. நல்ல குசும்பு பாலா உங்களுக்கு 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.