சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது. போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது. அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை. அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.
வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு. நிறைய இலக்கிய அரட்டை. கொஞ்சம் போல் சொந்தக் கதை.
ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது. இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.
Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.
Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.
நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!
பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.
ஸ்ரீ அரவிந்தரின் கரடு முரடான கவிதையை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ள மீனாக்ஷி – திறம்பட செயல்படுகிறார். – தேவையான அளவு புராணம்; கச்சிதமான செதுக்கிய கவித்துவம்; மூலத்துக்கு இம்மியளவும் பிசகாத தமிழாக்கம் – ஆன்மிகமும் தத்துவமும் தொன்மமும் சரியாகக் கலந்த உச்சம்!
அரிசோனனின் சண்டை விமானங்கள் தொடர் இந்த இதழோடு நிறைவடைகிறது. நிறைய தகவல். இரு போதைகள் – மனிதன் எவ்வாறு மிதக்கத் துவங்கினான் என்பதை அருணாச்சலம் ரமணனும் லோகமாதேவியும் கோடிட்டு விவரிக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் சிகரம் – வழக்கம் போல் சுரேஷ் ப்ரதீப்பின் மௌனி குறித்த பதிவு. இதுவரை எழுதிய, வெளியாகிய எல்லா விமர்சனங்களையும் தொகுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின் தன் பார்வையை முன் வைக்கிறார். தமிழுக்கு சிறப்பே இந்த மாதிரியான காத்திரமான தீவிரமான உரையாடல் எழுத்து தான். செமையாக இருந்தது!
புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:
1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்: நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.
கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.
இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.
இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?
“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.
நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.
இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.
Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.
தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.
மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?
அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.
இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்
இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது. அதி புனைவா… உண்டு அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு
இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.
நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்
தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.
சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!
கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.
இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்: 1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)
2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்
அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)
இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)
வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம் காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.
சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!
மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.
அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”
இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.
இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.
கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.
அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.
இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்; கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்; மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்; தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்
லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.
சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.
இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.
1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது. அவள் அப்படித்தான் தப்புத் தாளங்கள் சிகப்பு ரோஜாக்கள் பைலட் பிரேம்நாத் தாய் மீது சத்தியம் மனிதரில் இத்தனை நிறங்களா வண்டிக்காரன் மகன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தங்கரங்கன் கண்ணாமூச்சி அதிர்ஷ்டக்காரன்
இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்
உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.
ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.
தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.
இந்தக் கதை ஏன் கவர்கிறது?
சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.
முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?
ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.
பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.
நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்
ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.
இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.
ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.
நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.
வாழ்க்கை என்பது அபத்தமானதா? இது இந்தக் கதையின் தொடர்பு.
நான் இந்த வாழ்க்கை அபத்தம் என்பேன். ஏன்? இரு காரணங்கள். ஒன்று அண்டவெளி; மற்றொன்று காலம். இந்தத் திரண்ட அகிலத்தில், நாம் வெறும் நகத்துணுக்கு. அதே போல், நம் ஆயுள் காலமும், யுகம் யுகமாக, டிரையாசிக், ஜுராசிக் என நீளும் இடையூழி காலத்தின் மிகச் சிறிய தொடர்ச்சியின் துகளாகும்.
வால்டேரின் தத்துவ புனைவான “மைக்ரோமேகாஸ்” ஞாபகமிருக்கிறதா? சிரியஸ் நட்சத்திரத்தில் இருந்து இராட்சஸ் உருக் கொண்ட பூதம், பூமிக்கு சுற்றுலா வருகிறது. தன் பூதக் கண்ணாடியினால், நம்முலகைப் பார்க்கிறது. எதுவும் தெரியவில்லை. ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை. கட்டாங்கடைசியில் மாபெரும் கடலில் ஒரு சிறிய கப்பலில் நிறைய மனிதர்களை கண்டுபிடிக்கிறது.
“அட… பார்வைக்கு புலனாகாத பூச்சிகள்!” என ஆச்சரியப்பட்டு, அந்த ஜந்துக்களுக்குக் கூட இதயம் இருப்பதை கண்டுகொள்கிறது. அதன் பிறகு, மானுடர்களின் அற்ப உடல் அளவு, அவர்களை அற்ப பதர் என்றே அழைக்க வைக்க வேண்டுமோ என எண்ணுகிறது.
“ஏ, புத்திசாலி அணுக்களே! நீங்கள் இவ்வுலகின் சுகங்களை ரசித்து மகிழ்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான சிந்தையிலும், சந்தோஷமான காதலிலும் திளைத்து உற்சாகத்தில் திளைக்கிறீர்கள்… இல்லையா?”
இதற்கு பதிலாக அந்த மானுடர்கள் அரிஸ்டாடிலின் தத்துவத்தையும் டெஸ்கார்தேயின் மெய்யியல் அனர்த்தங்களையும் படு தீவிரமாக விளக்க ஆரம்பிக்கின்றன. இப்போது, பூதத்தால் தன் நகைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த சிறிய மனிதனை மாற்று கிரகபூதம் பார்த்தது போல் இந்தச் சிறுகதையை நான் பார்ப்பேன். இதில் நிறைய பகுதிகள் இருக்கின்றன; நிறைய துகள்கள் இருக்கின்றன; நம்முடைய புற+அக உலகம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
மேலும்: Devotions Upon Emergent Occasions, by John Donne
Man consists of more pieces, more parts, than the world. And if those pieces were extended, and stretched out in man as they are in the world, man would be the giant, and the world the dwarf; the world but the map, and the man the world. சிறுகதை » மீர்ச்சா கர்த்தரெஸ்கோ — காலத்துகள்
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde