Monthly Archives: மார்ச் 2014

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

உடனுறை விக்கினமூர்த்திகள்

சொல்வனத்தின் அசோகமித்திரன் சிறப்பிதழ் நடுவே அனுக்ரஹாவின் ’டைகர்’ சிறுகதையும் கிடைத்தது. நியூ யார்க்கர் போன்ற இடங்களில் எளிதில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்த சிறுகதை. அதன் தொடர்ச்சியாக…

ஔவையார் சொன்னது போல் உலகத்தில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஹாஸ்டலில் வசிப்போர்; ஹாஸ்டலில் வசிக்காதோர்.

முனிசிரேஷ்டர்களைப் போன்றோர் ஹாஸ்டலில் வசிப்போர். அவர்களுக்கு தவம் செய்வது மட்டுமே குறிக்கோள். யார் ஹோமகுண்டத்தைத் தயார் செய்தார்கள், ஆகுதிக்கான அவிஸ் எப்படி உண்டானது என்றெல்லாம் கவலையில்லை. அதே போல், ஹாஸ்டல்வாசிகளும் படிப்பு அல்லது தங்கள் குறிக்கோளுக்கான பாதை அமைப்பது மட்டுமே இலட்சியம். யாருடைய சோப்பு, என்ன நேரத்தில் சாப்பாடு என்பதெல்லாம் பொருட்டேயல்ல.

“பார்த்திபன் கனவு” படத்தில் வரும் டயலாக் போல், “வீடு என்ன மியூசியமா? வைத்தது வைத்த இடத்தில் அலங்காரமாக பொருந்தியிருக்க!” என்பது பெரும்பாலான மைலாப்பூர் வர்க்க நடுத்தர வருமான குடும்பங்களுக்குப் பொருந்தும். சொல்லப் போனால் அவர்கள்தான், முதல் முதலாக மேலாண்மையில் புகழ்பெற்ற ”Effective shop floor oranization” என்பதை பயன்படுத்தியவர்கள். அந்தந்தப் பொருள் ஒருங்கே கோர்த்து பொருத்தமாக வைத்திருப்பதை விட, இந்தப் பொருள் எதற்குத் தேவையோ அதை பயன்பட்டிற்கு அருகாமையில் வைப்பது என்னும் நுட்பத்தை “போட்டது போட்டபடி கெடக்கு” என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஹாஸ்டல்வாசிகளுக்கு பின்னிரவுகளில் படிப்பைத் துவங்குவதுதான் விருப்பமாக இருக்கும். உணவு அசுத்தமானது என்று சொல்லுமாறு எதையும் சமைக்கும் கட்டாயத்திலும் அவர்கள் இல்லை. படிக்கும் நேரத்தைத் தவிர்த்து கொஞ்சம் கல்லூரி சம்பந்தமான வேலை; அதையும் விட்டால் அரட்டை; அப்படியும் நேரம் கிடைத்தல் உறக்கம்; அதற்குப் பிறகு கடுமையான அண்டார்டிகா குளிர்காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் வாய்க்கப் பெற்றால் அறையை சுத்தம் செய்யலாம். பெரும்பாலான சமயங்களில் சிரத்தையை வருங்காலத்திலும் அசிரத்தையை புறத்தோற்றத்திலும் அமைத்துக் கொள்வதற்கு மின்தட்டுப்பாடு கூட காரணம்.

டெல்லியில் இருந்தபோதும் சரி… பெங்களுரில் இருந்தபோதும் சரி… தொண்ணூறுகளில் விலைவாசியும் வீட்டு வாடகையும் இவ்வளவு எகிறவில்லை. எப்பொழுதுமே வீட்டை வாடகைக்கு எடுத்து விடுவோம். அதன் பிறகு இரண்டு பெட்ரூமானால் நான்கைந்து பேர்; மூன்று பெட்ரூமானால் ஆறேழு பேர் பிடிப்போம். கிட்டத்தட்ட ஒத்த மனது கொண்டவர்கள்; பைசா பைசாவாகக் கணக்கு பார்த்து வட்டி போட்டு பைசல் பண்ணாதவர்களாக, சமைக்கத் தெரிந்தவர் ஒருத்தர், பாத்திரம் கழுவ மட்டுமே தெரிந்த ஒருத்தர் என்று கலவையாகத் தேர்ந்தெடுப்போம். அனேகமாக ஓரிரு பெண்களும் அமைந்து விடுவார்கள். எல்லோருக்கும் மாதத்திற்கு ஐநூறு ரூபாய் வாடகை வரும்.

எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே பகுதியில் வேலைக்குப் போவதால், திரும்பி வீட்டுக்கு வருவதிலும் சிக்கலில்லை. ஒருவருக்கு வேலை தாமதமானால், இன்னுமொருவராவது அவருக்காக அலுவலில் தாமதித்தே அவருடன் கிளம்புவார். இதனால், இரவு பத்து மணிக்கு பெண் தனியாக வந்தால் எதிர்கொள்ளும் சிரமங்களும் தவிர்க்கப்பட்டது.

பெண்களும் கூட இருப்பதால் அவர்கள் சொல்லியோ, அல்லது அவர்களுக்கு பயந்தோ அல்லது அவர்களின் உதவியானாலோ அறைகள் ஓரளவு ஒழுங்காக சுத்தமாகவே இருக்கும். இந்தக் கதையில் வரும் பேயிங் கெஸ்ட் பிரச்சினையை தொடர்ச்சியாக எதிர்கொண்டதில்லை. அந்தவகையில் எனக்குப் பெரிய கொடுப்பினை. ஆனால், அலுவல் சம்பந்தமாக பிறரோடு வீட்டைப் பகிர்ந்தபோது, கொடுமையான விஷயங்களை சந்தித்து இருக்கிறேன். நிச்சயமான பெண்ணுடன் போனில் பேசுவதை ஒட்டுக் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர்கள், இரண்டு டாலர் பிரெட் பாக்கெட்டில் இருந்து இரு ரொட்டிகளை எடுத்ததற்காக ஒரு டாலர் தர வேண்டும் என்று வசூலித்தவர்கள், என்று விதவிதமாக எரிச்சலூட்டுபவர்கள் அறிமுகமானார்கள்.

இன்றைய நிலையில் பாதுகாப்பு என்பதை விட சௌகரியம் என்பது மட்டுமே பேயிங் கெஸ்ட் ஆக பெண்களை வசிக்க வைக்கிறதோ?

நகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை

பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.

தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.

வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.