கொஞ்ச காலம் முன்பு A.R. Venkatachalapathy (Professor of History, Madras Institute of Development Studies) சந்திக்கும் சமயம் கீழ்க்காணும் கேள்விக்கான பதிலை வாங்கித் தொகுத்துப் போடும் எண்ணம் இருந்தது. நேர்கண்ட பொழுதெல்லாம், பிற சுவாரசிய உரையாடலில் சென்றதினால், வினாக்கள் மட்டும் இங்கே…
1. அகாடெமிக்கில் இருப்பவர்கள் இலக்கியம் பக்கம் ஒதுங்குவது ரொம்பக் குறைவு. நீங்கள் எப்படி இரு பக்கமும் குதிரையோட்டுகிறீர்கள்?
2. கல்வித்துறை, ஆராய்ச்சியாளர்களின் கவனமும் நவீன தமிழிலக்கியம் மீதான ஆர்வமும் எந்த நிலையில் இருக்கிறது? வருங்காலப் போக்கு எப்படி இருக்கும்?
3. காலச்சுவடு ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாக பணியாற்றுகிறீர்கள். உங்களின் பங்களிப்பு, சாதனை என்ன? இன்னும் என்ன செய்ய திட்டம்? இன்னும் இதை செய்யமுடியவில்லையே என்று வருத்தம் ஏதாவதுண்டா?
4. தங்கள் புனைவுகள் அதிகம் வெளியானதில்லை. சிறு வயதில் கதை/கவிதை எழுதியதுண்டா? நாவல், சிறுகதை பக்கம் எட்டிப்பார்க்கும் திட்டமுள்ளதா? ஏன் தாங்கள் இன்னும் அந்தப் பக்கம் தலைவைக்கவில்லை?
5. லஷ்மி ஹால்ம்ஸ்ட்ராமுக்கு இயல் விருது கிடைத்தபோது எழுந்த கருத்துகளுக்கு தாங்கள் எந்த ஊடகவெளியிலும் பதிலளிக்கவில்லை. விருதுக்குழுவின் நடுவர்கள் தங்களின் தேர்வுமுறைகளுக்கான முடிவுகளைப் பொதுவில் பகிர்வதில் தவறில்லையே?
6. உங்கள் எழுத்துகளைப் படித்ததில், கேட்டதில், ‘மென்மையான கருத்துகளை முன்வைப்பவர்; பிரச்சினைகளுக்குள் செல்லாமல் விவகாரமான விஷயங்களை அலசுபவர்’ என்னும் எண்ணம் எழுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது? எங்காவது வம்பில் மாட்டிக் கொண்டதுண்டா?
7. மேற்கத்திய உலகின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். காலையில் பேட்டி கொடுக்கிறார்கள். புத்தகங்களையும் விற்று சிந்தனைகளையும் அலசி சவுன்ட் பைட்களும் தூவிச் செல்கிறார்கள். தமிழகச் சூழலில் டிவி கருத்தரங்கங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?
8. ஆராய்ச்சி எழுத்தாளர்கள் என்றறியப்படுபவர், தன் புத்தகத்தைத் தொடர்ந்து, அதைக் காட்சிப்படுத்தலுக்கு கொண்டு செல்கிறார்கள். அதே போல், ஆஷ் கட்டுரை, வ.உ.சி. புத்தகம், புதுமைப்பித்தன் தொகுப்பை ஆவணப்படமாக எடுப்பது சாத்தியமா? திட்டம் உள்ளதா?
9. குழந்தைகள் விரும்பும் fairy taleகளையும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் மீள்பார்வை கொடுத்து, கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தோ, மாற்றுக் கருவுருக்காமோ செய்வார்கள். அதே போல் கலாச்சார, சமூக, அரசியல் சரித்திரத்தை, புகழ்பெற்ற தலைவர்களின் கோணத்தில் வித்தியாச வரலாறாக செய்யும் எண்ணம் உண்டா? அப்படி உருவாக்கினால் எவரது பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்?
10. வரலாற்றாராய்ச்சி எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது? இன்னும் தமிழ் பண்பாட்டு ஆய்வில் என்ன என்ன இடங்களில் தொக்கி நிற்பதாக தாங்கள் கருதுகிறீர்கள்?
11. வாசகராகவோ இரசிகராகவோ இருந்து இலக்கியம் பற்றிய அடிப்படைகளின் மேல் நின்று விமர்சிப்பதற்கும், முனைவராகவோ பேராசிரியராகவோ இருந்து வரலாற்றுப் போக்கில் மதிப்பிடுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளனவா?
12. தமிழருக்கு என்று பல குணாதிசயங்கள் உரித்தாவதாக பண்டிதர்களும் அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். தங்கள் பார்வையில் தமிழ்நாட்டுக்கும் திராவிட இனத்திற்கும் சொந்தமான கண்டுபிடிப்புகள், அரிய அதிசயங்கள், சமூக முன்னெடுப்புகள், கலாச்சாரத் தாக்கங்கள் என்ன?
13. திராவிட இயக்க ஆய்வு குறித்த பல புத்தகங்களில் முக்கியமானதும், நம்பகத்தன்மை கொண்டதாக தாங்கள் பரிந்துரைப்பது எது?
14. உங்களை உருவாக்கியவர்களில், உங்கள் ஆதர்சங்களில் சிலருடனான அனுபவங்களைப் பகிர முடியுமா?
15. லன்டன், சிகாகோ, பாரிஸ்… பல ஊர்கள். உலகெங்கும் மனிதர்களிடையே சிந்தனையில் ஒற்றுமை உள்ளதா? கலாச்சாரமும் சமூக அமைப்பும் மாறுபடுவதால் குணங்களும் வேறுபடுகிறதா?
16. தங்கள் வசித்த, விசிட் அடித்த நகரங்களில் பிடித்த ஊர் எது? ஏன்?
17. மற்றவர்களின் கடுமையான விமர்சனங்கள் தங்களை எப்படி பாதிக்கிறது? பத்து வருட உழைப்புக்கு கிடைக்கும் பதிலடிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
18. சங்கப்பாடல்கள் குறித்தும், பழந்தமிழ் பாக்கள் குறித்தும் தங்கள் அவ்வப்பொழுது புதிய பரிமாணங்களை நயம்பட எடுத்துவைக்கிறீர்கள். இதைத் தொடராக, வெகுசன இதழ்களில் எழுதும் எழுதலாமே?
19. வைரமுத்துவிற்காக ‘காக்கை – நரி – வடை – கதை’ எழுதும் வெங்கடாசலபதியை காண முடிவதில்லையே? எப்பொழுது அடுத்து தென்படுவார்?
20. நாள்தோறும் ஐநூறு வார்த்தை பதிவுகளை எழுதும் தமிழ் வலையுலகத்திற்கு நடுவே, அவ்வப்போது மட்டுமே எழுதுவது ஏன்? அவ்வாறு நெடிய இடைவெளி விட்டு வெளியாகும்போது காணாமல் போகும் அபாயம் இருக்கிறதா?
21. தமிழிணையம் வாசிப்பதுண்டா? எந்த வலைத்தளங்கள் தாங்கள் அன்றாடம் செல்கிறீர்கள்?
22. Kindle, Nook, iPad என்று கையடக்கக் கணினி எங்கும் நிறைந்திருக்கும் இக்காலத்தில் தமிழில் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் குறித்த தங்கள் கணிப்பு என்ன?
23. அமெரிக்காவில் இப்பொழுதுதான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இங்கிருக்கும் அரசியல், பொது நிறுவனங்களின் கட்சி விளம்பரத்துக்கான காணிக்கை, பெரும் பொருட்செலவில் அரங்கேறும் தேர்தல் நிதிவசூல், கூடவே மக்கள் வரிப்பணமும் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கும் சட்டதிட்டம் ஆகியவை குறித்து இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?
24. தங்கள் மாணவர்களின் ஆராய்ச்சிகளில் எதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறீர்கள்? அடுத்த பெரிய பிராஜக்ட் என்ன?
சிறுகுறிப்பு
தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’ ‘முச்சந்தி இலக்கியம்’ போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக ‘புதுமைப்பித்தனின் சிறுகதைகளை’ கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்’ புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.