முதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.
மேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான்? பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது?
மஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.
ஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.
டிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன? அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்? கொஞ்சம் உள்மாந்தரம் கிடைக்கிறது.
H&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.
ராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.