Returning back to an empty home


பள்ளிக்கூடம் ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் வீட்டில் கணவன் & மனைவி, இருவருமே வேலைக்கு செல்கிறீர்களா?

இந்தியா என்றால் கவலை இல்லை.

முந்தானை முடிச்சு + தலையணை மந்திரம் என்றால் அம்மாவின் பெற்றோர் இருப்பார்கள். பாரம்பரியம், பழமைவாதம் என்றால் மாமனார் + மாமியார். முற்போக்கு, நாகரிகம் என்றால் சமபங்காக இருவருக்கும் டூட்டி போட்டிருப்பீர்கள். அருணாச்சல் பிரதேசம் போன்ற சீனப் பிரதேசங்களில் வாசம் என்றால், சல்லிசாக பணியாட்களை நியமனம் செய்திருப்பீர்கள்.

அமெரிக்காவில்?

பள்ளியிலேயே ஐந்துமணி வரை வைத்திருக்கும் காப்பகம் உண்டு. அதில் எல்லா வகுப்புகளும் கலந்து கட்டியிருக்கும். Gangகள் இருக்கும். உங்கள் குழந்தையை விட பெரிய வகுப்பினரும் இருப்பார்கள். போதுமான அளவு பாதுகாப்பானது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் மிரட்டல், உருட்டல்களைக் கண்டு காணாமல் விட்டுவிடுவார்கள்.

After school daycareன் மேய்ப்பர்களே பல சமயம் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பது ஒரு காரணம். பாலியல் துன்புறுத்தல்கள், WWF சண்டைகள், கத்தியால் கிழித்து குருதி வருமளவு திரைமூடி பிணக்குகளை தீர்த்துவிடுவதிலேயே அவர்கள் நேரங்கழிந்து விடுவது இன்னொரு முக்கிய காரணம்.

பள்ளியில் விட்டு வைக்க முடியாது! அப்படியானால்?

பூட்டிய வீட்டைத் தானே திறந்து, தனிமையில் இருக்க வைக்கலாம். நண்பரின் வீட்டுக்கு சென்று விளையாடு என்று சொல்லிவிடலாம்.

நம்ம வீடுதானே? தெரிந்த தோழர்கள்தானே? அக்கம்பக்கத்திலும் ஆதுரமானவர்கள்தானே! என்ன ஆபத்து வந்துவிட முடியும்?

பத்மா அர்விந்த்தை சந்தித்தபோது சொன்ன நியு ஜெர்சியில் சம்பவம் நினைவிற்கு வந்தது.

பதின்ம வயதை எட்டிப் பார்க்கும் பொறுப்புள்ள பையன். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் பணத்தின் மதிப்பை அறிந்தவன். கூடப் படிக்கும் விடலை வகுப்பினர், ‘அந்த சைட்டுக்கு போய் காட்ட முடியுமா?’ என்று மிரட்டி உருட்டும் dareகளுக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாக புன்சிரிப்போடு ஒதுங்கும் பக்குவம் வாய்த்தவன்.

இப்படிப்பட்டவன் இப்போது சிறையில் இருக்கிறான். எந்தக் கைதியிடம் இருந்து எவ்வித கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றானோ!

ஏன் தண்டிக்கப்பட்டான்? எப்படி மாட்டிக் கொண்டான்? என்ன குற்றம் புரிந்தான்?

அவனுடைய பக்கத்துவீட்டுக்காரன் வலையகம் மூலம் கமிஷன் பார்த்து சம்பாதிப்பவன். தன்னுடைய போட்டியாளர்களின் கூகிள் விளம்பரங்களை முடக்கும் விதமாகவும், அவர்களின் வலையகங்களை DDoS போன்ற கொந்தர் நுட்பங்களில் செயலிழக்கவும் இவனை சூட்சுமமாக பயன்படுத்தி இருக்கிறான்.

அறியாத வயசு. கூடவே, ‘நீ இவ்வாறு செய்தால் உனக்கு இந்த குட்டிப் பரிசு! இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ!’ என்றெல்லாம் சன்மானங்களும் அளித்திருக்கிறான்.

தனிமையில் விடப்பட்ட மகனும், புதிய காலணிக்கு ஆசைப்பட்டு, அவன் சொன்ன உரல்களை விடாமல் சுட்டித் தள்ள, காவலரினால் விசாரிக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரலால் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூரியினால் கடுங்காவலில் விழுந்துவிட்டான்.

இப்போது எம்.ஐ.டி., ஹார்வார்டு கனவு போச்சு; வாலிபம் போயே போச்சு.

சில கேள்விகள்:

அ) பதின்ம வயதினர் செய்யும் குற்றங்களுக்கு, பெரியவர்களுக்கான நீதி பொருந்துமா? அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா? எந்த மீறல், எவ்விதம் என்று பகுப்பது?

ஆ) தாயும் தந்தையும் வேலைக்கு சென்றால்தான் ப்ரைவேட் பள்ளிக்கூடம், விசாலமான வீடு, ப்ளே-ஸ்டேசன் எல்லாம் சாத்தியம். ஒருவர் மட்டும் சம்பாதித்தால் கல்லூரிக்கு எப்படி பணங்கட்டுவது?

இ) தெருவிளக்கில் படித்து நீதிபதியானது, இந்தியாவில் தமிழ் மீடியத்தில் இருந்து அமெரிக்கா வந்தது என்பது போன்ற உதாரணங்கள், வருடத்திற்கு நாற்பதாயிரம் கோரும் தனியார் வாசகசாலையில் இல்லாமல், சாதாரண அமெரிக்க அரசுப் பள்ளிக்கு செல்வோருக்கும் பொருந்துமா?

ஈ) பசங்களுக்கு Bullying, பெண்களுக்கு barbie doll இலக்கணங்கள், இருபாலாருக்கும் dare செய்து பலான விஷயங்கள் செய்யவைப்பது போன்ற சூழலில் நான் கடைத்தேறிவிட்டேன். என் மக்கள்?

உ) குழந்தைகளின் கணினி பயன்பாட்டையும், தொலைக்காட்சி பார்த்தல்களையும் எவ்வளவு தூரம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்? எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும்? எது அத்துமீறி தணிக்கை என்று வரையறுப்பது?

தொடர்புள்ள சமீபத்திய பதிவுகள், செய்திக் கட்டுரைகள்:

1. The Walk-to-School Fight – NYTimes.com

2. Child protection: safeguarding without safeguards | Comment is free | The Guardian: Taking tough action that purports to protect children has long been thought a political trump card

3. Editorial – 12 and in Prison – NYTimes.com: “According to the study, every state allows juveniles to be tried as adults, and more than 20 states permit preadolescent children as young as 7 to be tried in adult courts.”

4. Parenting or Spying: Who’s Watching The Kids? — The Responsibility Project

5. Good Parenting or Bad Spying? — The Responsibility Project

6. Calling the Cops on Your Kids: Parenting vs. Policing — The Responsibility Project

6 responses to “Returning back to an empty home

 1. The School Issue – Preschool – Can the Right Kinds of Play Teach Self-Control? – NYTimes.com: “The Tools of the Mind program at a school in Red Bank, N.J., encourages “executive function” — the ability to think straight and self-regulate.”

 2. அட.. பாபா

  அசத்தலான பதிவு. நல்ல கேள்விகள்.

  தற்போது உள்ள சூழலில் பெற்றோர்களில் ஒருவர் நேரத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டு முடிந்த வரை விரைவாக வீடு திரும்புவது பல பிரச்சனைகளை தீர்க்கும், ஆனால் எல்லாருக்கும் / எப்போதும் செய்ய முடியுமா ? கஷ்டம்.

 3. இந்த கஷ்டம் இந்தியாவில், ஐடி தம்பதியினரில் அதிகம். கண்கூடாகப் பார்த்தது: அப்பா, அம்மா தம் ஐடி பணி நிமித்தம் ஒரு நாளைக்கு 14-16 மணி நேரம் உழைத்து/பயணித்து(!) போய்வர, பெண் குழந்தை, அவர்கள் வீட்டு ட்ரைவர் மற்றும் ஆயாவால் கவனிக்கப்பட்டார். மற்றவை உங்கள் கற்பனைக்கு:-( இப்படி வளர்கிற தலைமுறை என்ன ஆகும்?

  இந்திய அமெரிக்கக் குழந்தைகளுக்கு நான் பார்த்த வரை அதிகம். “என் தோழியின் மகன் மருத்துவராயிருக்கிறான்”; “அவர் வீட்டுப் பிள்ளைகள் குமோன் செய்கிறார்கள்” என்று ஒப்புநோக்குதல் நமக்கு அதிகம் தான். பெற்றோராய் நாம் சிலவருடம் அதைச் செய்தால், குழந்தைகளுக்கு வளர்ந்தபின்னும் ஒப்புநோக்கல் ஓரளவாவது இருக்கிறது. இதன் நல்ல பின்விளைவு, இந்த மாதிரி வம்புதும்புகளில் “மாட்டாமல்” இருப்பது (கவனிக்க, வம்புதும்பு செய்யாமல் இருப்பதுன்னு நான் சொல்லலை).

  இன்னும் எவ்வளவோ இருக்கு இந்திய வம்சாவளியல்லாத மற்ற பதின்மர் பற்றி எழுத. எதுக்கும் இமெயில் நோட்டிஃபை போட்டுக்கறேன்.

 4. இந்திய அமெரிக்கக் குழந்தைகளுக்கு நான் பார்த்த வரை Peer pressuer அதிகம் என்று படிக்கவும். நன்றி.

 5. என்ன கொடுமைங்க இது? ஒரு குற்றம் என்றால், அதன் காரண காரியங்கள் எல்லாம் பார்க்காமல், டைரக்டா தண்டனையா?

  தம்பதிகள் இருவருமே வேலைக்குப் போனால் தான் கல்லூரிக்குப் பணங்கட்ட முடியுமா? இதுக்கு இன்னொரு எ.கொ.ச

 6. நல்ல பதிவு. இன்றைய பிரச்சனைகளை பற்றி சரியாக அளவிட்டு இருக்கிறீர்கள். வேறொரு கோணத்தில் இருந்து இதை பார்க்கலாம். நமக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பு ஒரு கணவன் மனைவிக்கு ஒரு டஜன் அளவு கூட குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். அதிலும் பல கணவன்மார்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள். அந்த சூழலில் குழந்தைகளை காப்பாற்றுவதே கஷ்டமான காரியமாக இருந்திருக்க கூடும். அதனோடு இன்றைய தலைமுறையை ஒப்பிட்டால் இவர்கள் எவ்வளவோ குழந்தைகளுக்கான நலம்விரும்பிகளாக இருக்கிறார்கள் என புரியும். நீங்கள் சொன்ன வந்த விஷயம் அனைத்தும் உண்மை, கட்டாயம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய விஷயம். அதோடு வேறொரு கோணத்தை நான் சொல்லியிருக்கிறேன், அவ்வளவு தாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.