Monthly Archives: ஏப்ரல் 2022

உசேனி நட்சத்திரம்

என்றுமே நட்சத்திர எழுத்தாளர்களுக்கான வாசகர் பட்டாளம் அதிசயிக்க வைப்பவை.

அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்;
கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்;
மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்;
தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்

லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.

சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.

இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.

1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது.
அவள் அப்படித்தான்
தப்புத் தாளங்கள்
சிகப்பு ரோஜாக்கள்
பைலட் பிரேம்நாத்
தாய் மீது சத்தியம்
மனிதரில் இத்தனை நிறங்களா
வண்டிக்காரன் மகன்
ஸ்ரீ காஞ்சி காமாட்சி
தங்கரங்கன்
கண்ணாமூச்சி
அதிர்ஷ்டக்காரன்

இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்

உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

பெட்டிகளும் பூட்டுகளும் திறப்புகளும்

ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.

ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.

தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.

இந்தக் கதை ஏன் கவர்கிறது?

  • சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
  • சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
  • சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
  • அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
  • எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.

முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?

தபால் பெட்டிக்குள் உங்களால் புக முடிந்ததா?

சொல்லுங்களேன்…