Monthly Archives: ஜனவரி 2019

விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

முதல் கேள்விக்கான விடை பொதுபுத்தியில் எளிதானது. காற்றடிப்பதால் கொடி அசைகிறது. ஆனால், அமாவாசை அன்றும் மலர் மலர்ந்தால், இரண்டாம் கேள்விக்கான பதில் சிக்கலாகிறது. அதைப் போன்ற சில கஷ்டமான வினாக்களை பார்ப்போம்.

கீழ்க்கண்டவற்றில் மெய்யாலுமே சொல்லப்பட்ட காரணத்தினால்தான், இந்த முடிவு நிகழ்ந்ததா?

  • புரதச் சத்து மிக்க உணவு உண்டால் எடை குறையும்.
  • தினசரி ஆஸ்ப்ரின் மாத்திரை போட்டுக் கொண்டால் இதய நோயைத் தடுத்து விடலாம்.
  • பெண்ணுரிமைப் போராட்டங்களினால் குழந்தைப் பிறப்பு குறைந்து, மக்கள்தொகை சுருங்கும்.
  • தேடு பொத்தானை பெரிதாக வைப்பதன் மூலம் நிறைய பார்வையாளரைப் பெறலாம்.
  • பாலுடன் ஊட்டச்சத்துகள் கலந்து கொடுத்தால் சிறார்களின் உயரம் அதிகமாகும்.
  • வகுப்பில் குறைந்த அளவில் மாணவர்களை அமர்த்துவதன் மூலம் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தலாம்.
  • வரியைக் குறைப்பதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கலாம்.
  • குறைந்த வட்டிவிகிதத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
  • நிறைய சம்பளம் கொடுப்பதன் மூலம் ஊழியர்களின் பணிவிலகலைத் தடுக்கலாம்.

ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான  மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?

தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் (Judea Pearl) என்பவரும் & டானா மாக்கென்ஸி (Dana Mackenzie) என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.

கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியராக ஜூடேயா பெர்ல் இருக்கிறார். 2011ல் ட்யூரிங் விருது பெற்றவர். இவர் மகன் டேனியல் பேர்ல் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவரின் பேட்டி சொல்வனத்தின் இந்த இதழில் வெளியாகி உள்ளது.

புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் “தூண்டு காரணம்” எப்படி, எப்பொழுது தோன்றியது என்பதைப் பார்க்கலாம்.

புராணகாலத்தில், 1. ஹிரண்யகசிபு & ஹிரண்யாக்ஷன், 2. இராவணன் & கும்பகர்ணன் 3. கம்சன் & சிசுபாலன் – ஏன் பிறந்தார்கள்? வைகுண்டத்தில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணரை சனகாதி முனிவர்கள் தரிசிக்க வருகிறார்கள். அவர்களை “ஜெய – விஜயர்” என்னும் துவார பாலகர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த அவமானத்தால் சினம் கொண்ட அம்முனிவர்களின் சாபத்தினால் இந்த அரக்கர்கள் தீமை உருவானார்கள்.

அடுத்து அரிஸ்டாட்டில் (300 பொ.மு.) – ஒன்றை உருவாக்கும் செயல், அல்லது வழிமுறையை சொல்கிறார்: மாற்றம் என்பது மாயை அல்ல. இயற்கையின் வழியாக மாற்றத்தை மனிதர் உணர்கிறார். உண்மை நிலவரம் என்பது எங்கோ நிலவுவது அல்ல. நாம் உணர்வதுதான் எதார்த்தம். மனிதர் தன் அனுபவத்தை நம்பலாம். சொல்லப் போனால், உணர்வது மட்டுமே நிஜத்தை அறியும் ஒரே வழி.

அரிஸ்டாட்டிலின் உலகத்தில் உயிரியலின் அடிப்படையில் இயற்பியல் கட்டமைக்கப் பட்டிருந்தது. அரிஸ்டாட்டிலை பொருத்தவரை, மனிதரின் (அதே போல் மிருகங்களின்) நடத்தைக்கு, குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன. ஒன்றின் தேவையைப் புரிந்துகொண்டால், அது எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரிஸ்டாட்டிலின் நான்கு காரணங்களைப் பார்த்தால், ஒரு பொருளின் நோக்கத்தை அறியலாம்:

1. ஒன்றின் உருவ, வடிவ குறிக்கோள்: இது இட்ட நோக்கம். ஒன்றின் உள்ளார்ந்த வளர்ச்சியினால் உண்டாவது.
2. பொருண்ம குறிக்கோள்: இது அந்தப் பொருள் எதனால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து உண்டாவது.
3. செயல்திறன் குறிக்கோள்: இது மற்றொன்றினால் நிகழ்வது. எப்படி மற்ற செயல்களால் மாறுதல் நிகழும் என்பதை விளக்கும்.
4. அறுதி குறிக்கோள்: மாற்றத்தினால் உண்டாகும் ஆய பயன் என்ன?

ஒரு உதாரணம் பார்க்கலாம். இராவண வதத்திற்குப் பின் சிவபெருமானை வழிபட ராமர் தீர்மானிக்கிறார். சிவலிங்கம் கொண்டு வருமாறு கூறி அனுமனை காசிக்கு அனுப்பினார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால், சீதாதேவி இராமேஸ்வரம் கடற் கரையில் உள்ள மணலிலேயே ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தருகிறாள். இது “செயல்திறன் குறிக்கோள்”. மணல் என்பது “பொருண்ம குறிக்கோள்”. காசிலிங்கம் என்பது “ஒன்றின் உருவ, வடிவ குறிக்கோள்”. சீதையின் தவவலிமையால், மணல் லிங்கமானது, இறுகிய பாறை போன்று உறுதியாக நின்றது, “இறுதி குறிக்கோள்”.

கொஞ்ச நாள் கழித்து கலிலீயோ வருகிறார். கூடவே பேக்கன், தாமஸ் ஹாப்ஸ் போன்றோரும் அணி சேர்கிறார்கள். மண்ணுக்கும் மணலுக்கும் ஆசை இருக்கிறது என்பதும் மனிதரைப் போல் அவையும் உன்னத நிலையை தங்கள் குறிக்கோளால் அடையும் என்பதும் சுத்த பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள்.

அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் உயிரியலில் முக்கியமானதாக முன்னெடுக்கப்பட்டு, சார்லஸ் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சி கொள்கைக்கும் பாதை வகுக்கிறது. ஆனால், பௌதிகத்தில் கலிலீயோ அல்ஜீப்ரா என்னும் அயல்மொழியைக் கொண்டு இயற்பியல் கோட்பாடுகளை விளக்குகிறார். கலிலீயோவிற்கு “எப்படி” என்பது முதலில் முக்கியம்; அதன் பிறகு “ஏன்” என்பதை பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். கலிலீயோவிற்கு முதலில் ஒரு விஷயத்தை விளக்க வேண்டும். அதுவும் கணித சமன்பாடு(கள்) கொண்டு விளக்க வேண்டும்.

அதன் தொடர்ச்சியாக டெஸ்கார்ட்டே (Descartes) 1600-களில் இவர் நான்கு சிந்தனை ஆணைகளை முன்வைக்கிறார்:
1. என்னிடம் ஏற்கனவே நிரூபிக்கப்படாத எதையும் உண்மை என்று ஒப்புக் கொள்ள வேண்டாம்
2. என்னிடம் வரும் மலை போன்ற சிக்கல்களை, ஆராய்ந்த ஆய்வின் மூலம் குட்டி குட்டி பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்
3. ஒவ்வொன்றையும் விலாவாரியாக யோசிக்கவும்; முதலில் எளிய, புரியக்கூடிய விஷயங்களில் துவங்கவும்; படிப்படியாக முன்னேறி முழு சிக்கலையும் புரிந்து கொள்ளவும்.
4. விலாவாரியாக ஒவ்வொரு நுணுக்கத்தையும் விளக்கவும்; பொதுப்படையாக விவரிப்பதன் மூலம் எந்தவொரு சின்ன விஷயத்தையும் தவறவிடுவதை தடுக்கவும்.

அவருக்குப் பின் டேவிட் ஹ்யூம் (David Hume) 1711 –1776. கணித சமன்பாடுகள் இயந்திரங்களுக்கும் இயற்பியலுக்கும் மட்டுமல்ல. மனிதர்களின் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்கிறார். “நெருப்பைத் தொட்டால் சுடுமென்று சின்ன வயசில் அண்ணன் சொல்லுமடா! மீறி தொட்டேண்டா!” என்னும் டி ராஜேந்தர் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பின்விளைவு என்ன என்பதை பழக்கவழக்கத்தின் மூலம் மூளைக்குக் கற்றுக் கொடுக்கலாம். ஒன்றினால் இன்னொன்று விளைந்தது, பிற்காலத்திலும் அவ்வாறே நடக்கும் என்பதைப் பழக்கப்படுத்தாலாம் என்கிறார். கோழி கூவுவதால் சூரியன் உதயமாகியதா அல்லது கோழி குருமா வைத்த பின்னும் சூரியன் உதயமானாரா என்பதை மூளை தானியங்கியாக உணரும் வித்தையை விதிகளாக்கி எழுதுகிறார்.

கொஞ்ச நாள் கழித்து பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் வருகிறார். அவர் ரமணா படத்தில் விஜயகாந்த் சொல்வது போல், “எனக்கு காரணவியம் (Causation) என்பது அறிவியலில் பிடிக்காத கோட்பாடு” என்கிறார். ”எல்லா தத்துவவியலாளர்களும் காரணவியம் என்பது அறிவியலின் ஆதார மெய்ம்மை என்னும் கற்பனையில் திளைக்கிறார்கள். ஆனால், மேம்பட்ட அறிவியலில் ‘காரணம்’ என்னும் பேச்சுக்கே இடமில்லை. காரணவியக் கோட்பாடு என்பது காலாவதியான காலத்தின் எச்சமே. இன்னும் கூட ராஜா-ராணிகள் ஆள்வதால் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் எந்தவித சிக்கலும் வராது என்று நினைத்து ஒரு ஒரமாக விட்டுவைப்பது போல் ‘காரணம்’ என்னும் சிந்தனையும் அறிவியலில் மூலையில் தூசு படிந்து வாழ்கிறது.” என்கிறார்.

இதற்கும் இவருக்கும் பதிலாக ஒட்டுறவு (Correlation) & சார்புள்ளமை (Dependence) தோன்றுகிறது. ஃப்ரான்சிஸ் கால்ட்டன் (Francis Galton) மற்றும் கார்ல் பியர்ஸன் (Karl Pearson) உதயமாகிறார்கள்.

 

ஒருவருக்கு முழங்கை அதிக நீளம் இருந்தால், அவர் உயரமானவராக இருப்பார். இது இரு அளவைகளுக்கு இடையே உள்ள உறவை இயைபுபடுத்துகின்றன. இது ஒட்டுறவு. இரு கணித மாறிகளுக்கு (mathematical variables) இடையே ஆன தொடர்பை அளவிட்டுச் சொல்வது ஒட்டுறவு.

ஒட்டுறவு அதிகமாக இருப்பதால் மட்டுமே, ‘அதனால் இது நிகழ்ந்தது’ என்று சொல்ல முடியாது. “காக்கை உட்கார பனங்காய் விழுந்தது” என்பது போல், எதை வேண்டுமானாலும் ஒட்டுறவாக்கும் சாமர்த்தியமான தரவுகளைக் கொண்டு ஒப்பேற்றலாம். சென்னையில் சூறாவளி வரும்போதெல்லாம் மழை அடிக்கும். அதனால் சூறாவளிதான் மழைக்கு மூல காரணம் என்று நிறுவ முடியாது அல்லவா!? மழை பெய்வதற்கு பல காரணங்கள் இருக்கும்.

இதன் நீட்சியாக “இயைபிலா சோதனை”யை (Randomized Controlled Trials) சர் ரொனால்ட் ஃபிஷர் (Sir Ronald Fisher) தோற்றுவிக்கிறார். தரவுகளில் இருந்து காரணங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பதற்கும் மூல காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும் இந்த சமவாய்ப்புள்ள சோதனை உதவுகிறது.

மூன்று கட்டளைகளை ரொனால்ட் ஃபிஷர் முன்வைக்கிறார்:

1. ஒட்டுறவு: காரணமும் தாக்கமும் ஒன்றொடன்று இயைபாக நகர வேண்டும்.

2. நேர வரிசை: தாக்கத்திற்கு முன் காரணம் நிகழ வேண்டும்.

3. போலியற்ற தன்மை: காரணத்திற்கும் தாக்கத்திற்கும் உள்ள தொடர்பை மூன்றாம் பொருளைக் கொண்டு விளக்க முடியாமல் இருக்க வேண்டும்.

இது பொறியியல் போன்ற அறிவியலின் எல்லா பகுதிகளிலும் பயன்படுகிறது. தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பதை A/B சோதனை முறை என அழைக்கிறோம். இணையம் வழியாக இந்த மாதிரி சோதனைகளை செய்து பார்ப்பது மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆண்டுதோறும் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளை கூகுள் செய்து பார்க்கிறது. அதன் முடிவுகளின் அடிப்படையில் பத்து சதவிகித மாற்றங்களை உண்டாக்குகிறது.

சரித்திரம் போதும். ஜுடேயா பெர்ல் புத்தகத்திற்கு வந்து விடலாம்.

கீழ்க்கண்ட பன்மாறி தொடர்புப் போக்கு பகுப்பாய்வை (multiple regression analysis) பார்க்கவும். இந்தப் படம், உங்கள் வேலையில் உங்களுக்கு திருப்தி கிடைக்குமா என்பதை மூலக்காரணங்கள் கொண்டு அலசுகிறது. உங்கள் வயது என்பது ஒரு முக்கியமான மூல காரணம். உங்கள் வேலையில் உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்பது இன்னொரு மூல காரணம். உங்கள் சமபளம் எவ்வளவு என்பதையும் கணக்கில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு ஊக அளவை நிர்ணயித்து, அதன் மூலம் ‘உங்களுக்கு எவ்வளவு திருப்தி கிடைக்கும்?’ என்பதை நிகழ்தகவாக (probability) சொல்கிறது.

அதை மீறி வேலைக்கு செல்லும் தூரம், பாதையில் ஏற்படும் நெரிசல்கள், சக ஊழியர்களுடன் ஆன நேசம், அந்தஸ்து, வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதி, சமகால பொருளாதார நிலை போன்ற பற்பல விஷயங்களை இந்தப் படம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இது எளிமையான பாதை வரைபடம். இந்த சாதாரண சுருக்கமான படத்தின் மூலமே, ஒரேயொரு சமன்பாட்டைக் கொண்டு மொத்த பேசுபொருளையும் விளக்க முடியாது என்பதை அறிய முடிகிறது. பேயிசிய தொடர்முனைகள் (Bayesian Networks) கொண்டு இந்த காரண சமன்பாடுகளை அணுகவேண்டும் என்கிறார் பேர்ல். நிகழக்கூடியதன்மை கொண்டு இவ்வாறு பின்விளைவுகள் இருக்கும் என்பதை எவ்வாறு உறுதியாகக் கணக்கிடலாம் என்பதை ஜுடேயா பேர்ல் விவரிக்கிறார்.

எந்திர தற்கற்றலுக்கு பாதை அமைக்க ஜுடேயா பேர்லின் ஆராய்ச்சி – பாதை அமைக்கின்றது. புள்ளிவிவர கோட்பாடுகளை மட்டுமே கணக்கில் எடுக்காமல், எதிர்மெய் (அல்லது) மறு உண்மை எவ்வாறு செயற்கை நுண்ணறிவிற்கு உதவலாம் என்பதை இவ்வாறு பகுத்துப் பார்க்கலாம் என்கிறார்:

அடுக்கு (குறியீடு) செயல்பாடு கேள்விகள் உதாரணங்கள்
இணைதல் (அ) சேர்த்தல்

P(y|x)

பார்த்தல் * அது என்ன?

* ஒன்றைப் பார்ப்பதால் என் நம்பிக்கை எப்படி மாறும்?

1. அறிகுறிகள், நோயைக் குறித்து என்ன சொல்கின்றன?

2. கருத்துக்கணிப்புகள், தேர்தல் முடிவைக் குறித்து என்ன சொல்கின்றன?

குறுக்கிடுதல் (அ) தலையிடுதல்

P(y|do(x), z)

செய்தல் * ஒரு வேளை அப்படி நடந்தால்…

* நான் இதைச் செய்தால் என்ன ஆகும்?

1. ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக்கொண்டால், என் தலைவலி போய்விடுமா?

2. சிகரெட்களை தடை செய்தால் என்ன நடக்கும்?

எதிர்மெய் (அ) மறு உண்மை

P(yx|x`,y`)

கற்பனை செய்தல்,

பின் திரும்பி அவதானித்தல்

* ஏன்?

* இந்த செயலினால் அந்த நிகழ்வு நடந்ததா?

* நான் மட்டும் அதை செய்யாதிருந்தால் அல்லது வேறு மாதிரி நடந்து கொண்டிருந்தால் என்ன ஆகி இருக்கும்?

1.ஆஸ்ப்ரின் மாத்திரையினால் மட்டுமே என் தலைவலி நிவாரணம் பெற்றதா?

2. கோட்ஸே சுடாவிட்டால், காந்தி உயிர் வாழ்ந்திருப்பாரா?

3. கடந்த இரண்டு வருடங்களாக நான் புகை பிடிக்காமல் இருந்தால் என்ன நடக்கும்?

 

அடுத்த பகுதியில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு “ஏனின் புத்தகம்” மூலம் விடை காண முயலுவோம்:

1. மார்கழி மாதமே அக்னி நட்சத்திரம் போல் வெந்து உருகுவதற்கும் உலக வெப்ப ஏற்றத்திற்கும் சம்பந்தம் உண்டா? எப்படி கண்டறிந்து நிறுவி நிரூபிப்பது?

2. சில காலம் முன்பு வரை கணித அறிஞர்களிடம் ‘காரணத்தினால் உண்டான விளைவு’ என்பது தீண்டத்தகாத சொல்லாக இருந்தது. எல்லோரும் ஒட்டுறவு என்பதை மட்டுமே நம்பினோம். ஏன் அது தவறு?

3. ‘தகவல் மட்டுமே உதவும்; தரவுகள் மட்டுமே முடிவுகளுக்கு அடிகோலும்’ – என்னும் தகவல் ஆய்வாளர்களின் தாரக மந்திரம்  இறுதி உண்மையா?

4. எல்லா விஷயங்களையும் ஒரேயொரு கோட்டில் (Line of Best Fit) பொருத்துவது எவ்வளவு பெரிய அனர்த்தமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்?

5. ‘அதெல்லாம் கணிக்கவே முடியாது’ என்பது போன்ற விஷயங்களுக்குக் கூட எப்படி நமபகமாக விடைக்கான பாதையை ஒவ்வொரு தடவையும் எவ்வாறு போடுவது?

மேலும்:

  • Causality: Models, Reasoning, and Inference – Judea Pearl, 2nd Edition
  • A Tutorial on Learning With Bayesian Networks , David Heckerman – Technical Report, Microsoft Research.
  • Bayesian Networks without Tears, Eugene Cherniak – AI Magazine, 1991
  • If Correlation does not imply Causation, what does ? – Michael Nielson blog
  • Complexity and Management: Fad Or Radical Challenge to Systems Thinking?
    By Ralph D. Stacey, Douglas Griffin, Patricia Shaw

Asokamithiran on Jeyamohan

தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”

ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”

அசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.

அதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.

அதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.

‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.

படைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்

நேர்காணல்: கனடாவைக் குறித்து எனக்குத் தெரியாது.

அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இந்தியாவில் தமிழ் இலக்கியம் பரவலாக சென்றடையாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்தான்.

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் வாசிக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு நூலாவது படித்து முடித்து விடுகிறார்கள். இந்தியாவில் ரமணி சந்திரன் படித்தாலே பெரிய படிப்பாளி.

அமெரிக்காவில் எல்லோருமே ஒரு புத்தகமாவது எழுதுகிறார்கள்… அவர்களின் அனுபவம் சார்ந்து; துறை சார்ந்து; சொந்த வாழ்க்கை சார்ந்து…

தமிழரில் புத்தகம் போட்டால், ‘தமிழ் வாழ்க’ என்றோ ‘சிலப்பதிகாரம், திருக்குறள்’ சார்ந்தோ மட்டுமே மருத்துவ டாக்டர்கள் முதற்கொண்டு ஆய்வு பிஎச்டிக்கள் வரை எழுதுகிறார்கள். அவர்களே தங்களின் ஸ்பெஷலைசேஷனில் பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

அமெரிக்காவில் பாதிப் பேர் கம்ப்யூட்டர்; மீதி பேர் பிஸினஸ். கணினி மொழி குறித்தும் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்தும் தமிழில் எழுதலாம்தான்.

காலச்சுவடுகளும் குமுதங்களும் அதை பரவலாக மக்களிடம் கொண்டு செல்லாது. காசும் பெயராது. அதற்கு பதில் அந்த நாலும் மணி நேரம் நிரலில் எழுதி நானூறு டாலர் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

All Politics is Local


அறிவா உள்ளுணர்வா?  | திண்ணை

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்

குரங்கில் இருந்து பிறந்து…

ape:
வினைச்சொல்:
மற்றவரைப் போல் நடி; குறிப்பாக – சிந்திக்காமலோ பொருளற்ற நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த வகையில் நடத்தைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்று.
ஒத்தச்சொல்: கண்டுபாவித்தல், விகடன், ஒற்றிப் பிரதியெடுத்தல், கிளி, இன்னொருவரின் செய்கையை கண்டுசெய்தல், பகடி, பரிகசித்தல்

இது நம்முடைய அர்த்தம். ஒன்றைக் கண்டு பிரதிபலித்தலை ‘ஏப்’ (ape) என்கிறோம். அகரமுதலியில் ‘ஏப்’ எனத் தேடினால், பாவித்தல், பாசாங்கு செய்தல், கிளிப்பிள்ளை போல் யோசிக்காமல் பிரதிபலித்தல் என அர்த்தம் சொல்கிறார்கள்.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியின் படி பார்த்தால் ஒரு விஷயத்தைக் காண்பித்தால் மனிதக் குரங்கு அதனை நினைவில் வைத்திருக்கிறது.  வெறுமனே கண்ணாடியாக புத்தியில்லாமல் பிரதிபலிப்பதில்லை. அந்தச் செய்கையை வருங்காலத்தில் எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு செயலையும் நினைவுகூர்ந்து அதற்கேற்ப தன் கண்ணோட்டத்தைச் சொல்கிறது. சொல்லையும் அதற்கேற்ற செய்கையையும் அந்த செய்கையின் பின் விளைவுகளையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குரங்குகள், சிந்தித்த பின் செயல்படுகிறது. நான் கூட இவ்வளவு நிதானமாக என் தரப்பின் செய்கைகளுக்கு, யோசித்து நிதானமாகச் செயல்படுவதில்லை

செய்தி: Great Apes Make Anticipatory Looks Based on Long-Term Memory of Single Events: Current Biology

கொரில்லாக் குரங்கு மட்டுமல்ல… நாய் கூட ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறது. நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிறது. நம்மிடம் பதிலுக்கு பதில் உரையாடாமல், நாம் சொல்லும் வார்த்தையை வைத்து, அது ஒரு பொருளா அல்லது வினைச் சொல் கட்டளையா என பகுக்கத் தெரிந்திருக்கிறது. நாம் உரைப்பது – பந்தா, எந்த நிறப் பந்து, அல்லது எந்த பொம்மை என்று புரிந்து கொண்டு, அதற்கேற்ப ஈடு கொடுக்கிறது: What a Border Collie Taught a Linguist About Language | WIRED

மொழி எவ்வாறு உருவானது? கபிகள் பேசுமா? சைகை மொழியை சிம்பன்ஸிக்கு எப்படிக் கற்றுத் தருவது? மிருகங்களை சுதந்திரமாக வாழவிடாமல், நம் கண்காட்சிக்கென, விலங்கியல் பூங்காவில் அடைத்து வைப்பது தகுமா? அவற்றின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன் என்னும் சாக்கு சொல்லி, வீட்டிற்குக் கொண்டு வந்து தத்துவவியல் விஞ்ஞானியோ அறிவியல் ஆய்வாளரோ ஆராயலாமா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலாக அல்லது நீட்சியாக இந்த ஆராய்ச்சியை படிக்கலாம்: There is a moral argument for keeping great apes in zoos | Aeon Ideas

இதெல்லாம் மிருகங்களைப் பற்றின செய்திகள். மனிதனுக்கு ஆறறிவு இருக்கிறது. அவனுக்கும் இந்த மந்தைக் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் உறுமுவது எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

நடிகர் சூர்யாவின் உயரம் 5′ 7″
நடிகை அனுஷ்காவின் 5′ 10″
சிங்கம் படப்பிடிப்பில் ஸ்டூல் போட்டார்களா அல்லது சூர்யாவிற்கு ஹை- ஹீல்ஸ் செருப்பு கொடுத்தார்களா என்பதை பட்டிமன்றத் தலைப்பாக்கலாம். இது மிருகத்தின் சுபாவம். மண்டியிட வைப்பது மன்னனின் சுபாவம் என்றால், ஆண்மகனுடன் டூயட் பாடும் காதலி தாழ்தளத்தில் நின்று சிருங்கார ரசம் முகத்தில் கொணர வேண்டும் என்பது சினிமா சுபாவம்.

அது சினிமா. நிஜமல்ல. அதைக் கூட விட்டுவிடலாம். நீங்கள் தற்படம் (செல்ஃபீ) எடுப்பதையும் அது எவ்வாறு நம் முன்னோரின் குணநலனோடு ஒத்துப் போகிறது என்பதையும் எவ்வாறு ஒவ்வொரு சுய புகைப்படத்திலும் உங்களின் விலங்கு மனோபாவம் வெளிப்படுகிறது என்பதையும் இங்கே ஆராய்கிறார்கள்: The Psychology of Selfies | Psychology Today

இது தற்கால ஆராய்ச்சி. கொஞ்சம் சங்க காலத்திற்குச் செல்வோம். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. குமரி முனையிலிருநது இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். அதில், ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டில்:

பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன்
– (மணிமேகலை 5133 – 38)

குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு என்பது பொருள். குரங்கு செய்கடல் என்றது தென்கடலை அறிவிக்கிறது. குமரி என்பது கன்னியாகுமரியைக் குறிக்கிறது.

”நம் உலகத்தில் இரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்: ஒருவர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பவர்; இன்னொருவர் உலகை இரண்டாகப் பிரிப்பவர்கள்.” என்பதற்கேற்ப, 1968ல் முதன் முதலாக ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ படப்பிடிப்பு நடத்தியபோது அந்த சம்பவம் நடந்தது. திரைப்படத்தில் இரு தரப்பினருக்கு இடையே போர் நிகழுமாறு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு தரப்பில் கொரில்லாக்கள். அவர்களுக்கு எதிராக குரங்குகளாக ஆயிரக்கணக்கான துணைநடிகர்கள் போர் புரிந்தார்கள். இடைவேளை வந்தது. கொரில்லாவாக வேஷம் கட்டியவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் சேர்ந்து உணவு உட்கொண்டார்கள். அதன் எதிர்ப்புறம் குரங்காக வேடம் தரித்தவர்கள் கொரில்லா வேஷதாரிகளிடம் இருந்து விலகி தனியே உணவு உண்டார்கள். நாம் எங்கே பார்த்தாலும் பேதம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்: Why Your Brain Hates Other People: And how to make it think differently – Overcoming Us vs. Them

’பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ வரிசைப் படங்கள் இதையெல்லாம் சற்றே நீட்டித்து அறிவியல் புனைவாக, கற்பனை செய்து பார்க்கின்றன:

இந்த ஜூலை மாதம் ”வார் ஃபார் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்” வெளிவந்தது. சமீபத்தில் தூசி தட்டி மீண்டும் இந்த குரங்கு சாம்ராஜ்யத்தை படமாக்கத் துவங்கிய பிறகு, வரும் மூன்றாம் படம் இது. இந்தப் படத்திலும் குரங்குகள் பேசுகின்றன. மனிதர்கள் மெதுவாகப் பேச்சை இழந்து வருகிறார்கள். மனிதனின் அறிவியல் ஆற்றல் அவனின் அழிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சண்டை ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்க தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தும் வர்க்கமாக மானுடம் சித்தரிக்கப்படுகிறது. குடியுரிமைக்காகக் குரங்குகள் குரல் எழுப்புகின்றன. சம அந்தஸ்துடன் வாழாவிட்டாலும், தங்களின் காட்டில், ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக, மனிதனின் நகரங்களுக்குள் வராமல் ஒளிந்து வாழப் போராடுகின்றன.

2011-ல் முதல் பகுதி வந்தது – ஏற்றம்: rise
2014-ல் இரண்டாம் பகுதி வெள்ளித்திரையில் வெளியானது – வைகறை: dawn
இந்த வருடம் இறுதி பாகம் – யுத்தம்: war

ஹாலிவுட் மசாலப் படங்களைப் பார்க்கும்போது மூளையைக் கழற்றிவைத்து விட்டு பார்ப்பது உங்களின் அறிவிற்கு குந்தகம் விளைவிக்காது. அதற்காகவே இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இந்தப் படம் நிஜத்திலேயே நடக்கும் என்னும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தும் உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டேன். அந்தச் செய்திகளைப் போல் இந்தப் படமும் படு தீவிரமாக குரங்குகளின் ராஜாங்கத்தை விளக்குகிறது. வந்தியத்தேவனை குதிரையில் கற்பனை செய்த எனக்கு, ஒராங்குட்டான் அதே குதிரையை ஓட்டுவதை திரையில் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், இந்தப் படமும் முந்தையப் படங்கள் போலவே வெறுமனே கேலி செய்து ஒதுக்க முடியாதபடி யோசிக்கவும் வைத்தன.

அது எப்படி சாத்தியமாகிறது?

முதலில் சீஸராக நடித்தது மனிதன். அவர் பெயர் ஆண்டி செர்கிஸ். கோச்சடையான் படத்தின் ரஜினி போல் நிழல் உருவமாக உயிர் கொடுக்கிறார்.

இரண்டாவதாக படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம் பாடாத குறையொன்றுதான் படத்தில் பாக்கி.

சக மனிதர்களைக் கொல்லத் துடிக்கும் கர்னல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தன் சக உயிர்களைக் காத்து பேண நினைக்கும் சீஸர். சாதாரண மாஸ் ஹீரோ படத்தில் கர்னலை வில்லன் என்று நிலைநிறுத்துவார்கள். இந்தப் பக்கம் சீஸரை தலைவராக, அதிநாயகராக உயர்வு நவிற்சியில் அமிழ்த்துவார்கள். கர்னலின் ஒரு கொடூரச் செய்கையைக் காட்டிவிட்டு; அதற்கு மாற்றாக சீஸரின் உன்னதமான பதிலை காட்சியாக நிறுத்துவார்கள். அப்படியெல்லாம் அல்பத்தனம் இந்தப் படத்தில் இல்லை. சீஸர் கம்பியெண்ணுகிறாரா… நாமும் கூண்டில் இருக்கிறோம். சீஸர் பிரம்படி வாங்குகிறாரா… நமக்கும் ரத்தம் வருகிறது. சீஸர் மண் சுமக்கிறாரா… நமக்கு பாரம் அழுத்துகிறது. கையாலாகவராக சீஸர் இருக்கிறாரா… நமக்கும் அடுத்து எப்படி அவரின் நண்பர்கள் யோசிப்பார்கள்; எவ்வாறு தைரியமாக செயலில் இறங்குவார்கள், அதில் எவ்வளவு வெற்றி பெறுவாரகள் என்பதெல்லாம் அவ்வப்போதுதான் தெரிகிறது.

படத்துவக்கத்தில் குரங்கிற்கு கோபம் வந்தால் மனிதத்தன்மையை இழக்குமா என்பது கேட்கப்படுகிறது. மனிதத்தன்மை என்பதை மன்னித்தருள்வது என்று பார்க்கிறேன். மனிதனே காருண்யத்தை விட்டுவிட்டு ஒரு கண்ணிற்கு இரண்டு கண் என்று பிடுங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. எனவே, ஆத்திரம் அட்டுமீறினால், மனிதன் குரங்காவானா? கொஞ்சம் நேரம் கழித்து சூதானம் திரும்பியவுடன் குரங்காக நடந்தவரை மனிதனாகக் கருதலாமா?

ஸ்காட் எஃப் ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழியில் சொல்வதனால்:

“முதல் தரமான புத்திசாலித்தனத்திற்கான சோதனை எதுவென்றால் – மண்டைக்குள் எதிரும் புதிருமான இரு கருத்துகளை மோதவிட்டுக் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் எந்த சுகவீனமும் இல்லாமல் இருத்தல்”

நம் சிந்தனையை நாம் இழந்தால் அப்போதும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வோமோ? மொழி என்னும் பேசும் சக்தியை ஏதோவொரு கொடிய வியாதி தாக்கி கொள்ளை போய்விட்டால், அப்போது எப்படி யோசிப்போம்? மனிதனோடு வளர்வதால் உரையாடும் சக்தி பெற்ற குரங்கு, தன் சொந்த பாஷையான ஊளை சத்தத்தை மறந்து விடுமா? ஆந்தை அலறும், யானை பிளிறும் என்பது போல் குரங்கு அலப்பும் என்பது மரபு. விலங்கியல் பூங்காவில் வளரும் குரங்கு சகமாந்தர் போல் பேசினால் மனிதர் எனக் கருதலாமா?

பாகுபலி போன்ற மெகா பட்ஜெட் இந்தியப் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் யானைகளைப் பார்த்தால் கேலிச் சித்திரங்கள் போல் விழுந்து விழுந்து விலா நோக சிரிக்கவைக்கின்றன. ஆங்கிலப் படங்களில் இந்தக் குறை கிடையாது. செய்வதை செவ்வனே சிறப்பாகச் செய்கிறார்கள். அரைகுறை வேலை கிடையவே கிடையாது. அந்தக் குரங்கு பேசினால் வாயசைப்பு முதல் உடல் மொழி வரை மனதில் நம்பவைக்கும்படி இருக்கிறது. அதன் கண்ணில் அப்படியொரு தீவிரம். அதன் முகத்தில் தலைமைப் பண்பு. தோள் அசைவில் ”முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே” என முழங்க வைக்கும் பாவம். குரங்குகள் அழுதால் நானும் கிட்டத்தட்ட பரிதாபம் கலந்த சோக மனநிலைக்குச் செல்கிறேன். அந்த ஜந்துக்கள் மனிதரைப் போல் தன்னைத் தானே ஆராய்ந்து அலசி சுய பகுப்பாய்வு செய்தால், அப்படித்தானே ஒருவர் தன் வாழ்வின் முடிவுகளை ஆராய்வார் என எண்ணுகிறேன்.

அதை சிறைப் பிடித்து குரங்கைக் கூண்டில் அடைத்தால், ஏதோ தப்பாக செய்வதாக உணரவைப்பதில் திரைக்கதாசிரியரும் மாயாஜால வடிவமைப்பாளரும் வாகை சூடுகிறார்கள். குரங்குகளும் மனிதர்கள்தானே என தோன்றவைப்பதில் இந்தத் திரைப்படம் வெற்றியைடைகிறது.

அடுத்த படத்தில் டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் தன் கருத்தை வெளிப்படுத்தி, “ஓவியா ஆர்மி”யை உருவாக்கும் என தோன்றவைப்பதில் பிக் பாஸ் யார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது நான் மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருப்பேன்.