Monthly Archives: திசெம்பர் 2021

சீனாவின் மோசடி விளம்பரங்கள்

காசு கொடுத்தால் பத்திரிகைகள் விளம்பரம் கொடுக்கும். தேர்தல் நாளன்று முதல் பக்கத்தை தாரை வார்த்துத் தரும். நடிகர் பணம் கொடுத்தால், அவரின் படத்தை அட்டையில் போடும்.

அமெரிக்காவை விட பணக்கார நாடாகி வரும் சீனா சும்மா இருக்குமா?

எங்களிடம் பாலும் தேனும் ஓடுகிறது. எல்லோரும் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். கம்யூனிசத் தலைவர்கள் எல்லோரும் உத்தமர்கள். எந்த டென்னிஸ் வீராங்கனைகளையும் வன்புணர்வு எதுவும் செய்வதில்லை. பேச்சுரிமை இருந்தாலும் எவரும் வாய்திறப்பதில்லை. அவ்வளவு கேளிக்கைமயமாக குடிமக்கள் பொழுதுபோக்குகிறார்கள். எப்போதும் இயற்கையோடு ஒன்றோடு ஒன்றாக இயைந்து வாழ்கிறார்கள். ஆடல், பாடல், இசை என உற்சாகமாக ஓய்வெடுக்கிறார்கள். நஞ்சில்லா வேளாண்மை உணவை சல்லிசாக சோஷலிசம் விற்பதால் எல்லோரும் நலமாக உண்கிறார்கள்.

திராவிட மேடை தோற்றது! கட்சிப் பிரச்சாரங்கள் கூசி நாணும் அளவு சீனாவை எப்படி உலகிற்கு சந்தையாக்கம் செய்கிறார்கள்?

நீங்களும் சைனாவின் மூளைச்சலவைக்கு உள்ளாகி விட்டீர்களா?

உத்ராவின் #சொல்வனம் கட்டுரையை வாசியுங்கள்:

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

சென்னையில் மருந்தகங்களே மருத்துவராக மாறி நோயை குணப்படுத்துவார்கள். மேற்கத்திய உலகில் சட்டங்களும் திட்டங்களும் அதிகம். தெருமுக்கில் ஒற்றை அறையில் உங்களை நாடி பிடித்து குணப்படுத்தும் நம்பகமான ஐந்து ரூபாய் டாக்டர் கிடையாது.

அவசர அவசரமாக உடனடியாக சிகிச்சை பெற வேண்டுமானால் உயர்தரமான சேமநல காப்பீடு வேண்டும். அந்த மாதிரி முன் ஜாக்கிரதையாக இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மாற்றாக ஒபாமா-கேர் வரப் பார்த்தது. மாஸசூஸட்ஸ் மாநிலத்தை முன் மாதிரியாக வைத்து உருவான சகலருக்குமான காப்புறுதி திட்டம் அது. பராக் ஒபாமாவின் காலத்திலேயே அது நீர்த்துப் போய் பேருக்கு காப்புறுதி கொடுத்தது. டொனால்டு டிரம்ப் வந்து அந்த ஹெல்த்-கேர் திட்டங்களை இன்னும் காலாவதியாக்கினார்.

அதில் விட்டதையும் தொட்டதையும் தற்போதைய அதிபர் பைடன் சட்டமாக்கப் பார்க்கிறார். எக்கச்சக்க விலை கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகளை சகாயமாக அணுகக் கூடிய விலையில் தர முயல்கிறார்.

அது சோஷலிசமா?

சமத்துவமா?

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

லதா குப்பாவின் #சொல்வனம் கட்டுரையை வாசியுங்கள்.

This May Be Democrats’ Best Chance to Lower Drug Prices | Democrats Add Drug Cost Curbs to Social Policy Plan, Pushing for Vote #solvanam

வெப்3.0 – ராவோடு ராவாக மில்லியனர் ஆவது எப்படி?

தொடர்புள்ள பதிவு:

“வெப்3-இல் வேலை செய்ய $500,000 சம்பளம் கொடுக்கிறோம். வாங்க…” என்கிறார்கள்.

‘அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்.எஃப்.டி.-இல் கிடைத்த லாபத்தை வைத்து சான் ஹோஸே நகரத்தில் மூன்று மில்லியன் டாலர்கள் ரொக்கமாகக் கொடுத்து வீடு வாங்கிவிட்டேன்!” என்கிறார்கள்.

இதெல்லாம் கட்டுக்கதை இல்லை. நிஜமாகவே பற்பலரின் அனுபவம்.

கணினி, மென்பொருள், சொவ்வறை – இதெல்லாம் 90கள்

இணையம், வலை, டாட் காம் – 2000கள்

சமூக ஊடகம், நேரடிச் சந்தை, இடைத் தரகரில்லாத வியாபாரம் – 2010கள்

இப்பொழுது க்ரிப்டோ, பிட்காயின், ப்ளாக்செயின், மாற்றமுடியா முத்திரை (NFT), மெய்யுரு (non fungible token), மெட்டா, மெய்நிகர் உலகம் – 2020கள்.

இந்த நுட்பங்களுக்கு நுழைவாயிலாக பானுமதி ந. எழுதும் தொடர் அமைந்திருக்கிறது. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக கட்டுரைகள் இருக்கின்றன:

1. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த சங்கேத பட்டுவாடாக்களை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

2. இந்த Decentralized Autonomous Organization, DeFi எல்லாம் வைத்து செல்வம் சேர்ப்பது ஒரு சிலரால் மட்டுமே ஆக்கிரமிப்புக்குள் அடங்கி, மற்ற எல்லாருக்கும் சில்லறைக் காசு மட்டுமே அள்ளித் தெளிக்கப்படுகிறதா?

3. ஃபேஸ்புக் மெட்டா, ஆக்குலஸ் ரிஃப்ட் போன்ற கற்பனாலோகங்களில் சஞ்சரித்து கல்லா கட்டுவது எப்படி?

பணம் மட்டுமல்ல. நீங்கள் எந்தத் துறையாக இருந்தாலும்… பயணத்துறை, கல்வித்துறை, விவசாயம், கட்டுமானம், மருந்து, உடல்நலம், உணவு, கேளிக்கை, இலக்கியம், அச்சு, செய்தித்துறை, இசை – எதுவாக இருந்தாலும் நுண்நாணயம் தன் வீச்சை செலுத்தப் போகிறது. அதை பயன்படுத்த நீங்கள் தயாரா?

முதல் பகுதிக்கான அறிமுகம்:

நாய் மனிதனைக் கடித்தால் செய்தி இல்லை; மனிதன் நாயைக் கடித்தால் செய்தி.

அது போல் உங்கள் நிறுவனத்தையோ நகரத்தையோ கள்வர்கள் வந்து கணினியை முடக்கினால் செய்தி இல்லை. நீங்கள் அந்தக் கயவர்கள் யார், எவர் எனத் தெரிந்து கொண்டால் மட்டுமே செய்தி.

இதைக் குறித்த விரிவான கட்டுரையை இந்த சொல்வனம் இதழில் வாசிக்கலாம்.

சின்ன கம்பெனி முதல் பெரிய ஃபார்ச்சூன் 500 அமைப்பு வரை எல்லோரும் கொந்தர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்கள் கேட்கும் பிட்காயின் / எதிரீயம் தொகையை பட்டுவாடா செய்கிறார்கள். அதன் பின் தங்கள் வியாபாரத்தை நிர்வாகத்தைத் தொடர்கிறார்கள்.

நாடுகளே இதில் தங்கள் ஆள்களை உலவ விட்டிருக்கிறார்கள். சீனா, ருஷியா போன்ற நாடுகளுக்கு இது அதிகாரபூர்வமற்ற திருட்டு வியாபாரம். உக்ரைன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இது கண்ணாமூச்சி ஆட்டம்.

முதல் பகுதியை ந. பானுமதி சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக:

– எவ்வாறு வர்த்தக ரகசியங்கள் களவாடப்படுகிறது?

– அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் இதனால் என்ன லாபம்?

– கள்ள இணையம் எனப்படும் டார்க் வெப் எப்படி இயங்குகிறது?

– கறுப்பை வெளுப்பாக்குவது போல் புலப்படா இணையப் பணம் எவ்வாறு அமெரிக்கன் டாலராக மாறி நிதிப் புழக்கத்திற்கு விடப்படுகிறது?

– காப்பீடு நிறுவனங்கள், கஞ்சா விற்பவர்கள், தகாத செயல்கள் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகளாக இருந்த காலம் மாறி எப்படி முறைசார்ந்த அடுக்குமுறை அதிகாரவர்க்கத்தின் அடியில் ஒழுங்காக இயங்குகிறார்கள்?

Where have you looked?

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.