Monthly Archives: ஜூன் 2013

Conspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்

புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.

பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.

அவர்கள் ஏன் வெல்வார்கள்?

சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…

இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.

இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.

கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.

மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.

இரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா

ஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.

அசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.

இப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.

அவர்களைப் போய்… ஏன்?

ஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.

இவ்வளவு பெரிய திட்டம்! அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.

இத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா?

Argo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் காதில் கிசுகிசுக்கிறது.

அப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா? அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா?

அனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன்? எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா?

பிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.

இப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.

இவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்பு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.

நமது இலக்கியநுட்பம்

இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு நாவல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள். உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது

பதிப்புத்துறையில் உயர நிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நூலாவது முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு இலக்கியமாக செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’

நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை!

இன்றுவரை கதை, கவிதை, கட்டுரை, நாவல் எதுவாக இருந்தாலும் ஒரு குறை என வந்துவிட்டால் அதை கடைசிவரை சரிசெய்யவேமுடியாது என்பதுதான் என் அனுபவம். என்னுடைய நாவலை 1998ல் எழுதும்போதே புதுமையில் ஒரு புரியாமை கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை பல விமர்சகர்கள் படித்தும் அது சரிசெய்யப்படவில்லை. மொத்தமாக இடித்து வேறு நாவல் எழுதுமென்று கடைசியாக பதிப்பாளர் சொல்லிவிட்டார்.

திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்வார்கள். அத்தியாயங்களை மாற்றுவார்கள். கலைத்து திரும்பப் பூட்டுவார்கள். சிலசமயம் தற்காலிகமாகக் கோர்வையாகும். நாலைந்துமுறை அப்படிச் செய்தபின் சரியாகவில்லை என்றால் ‘போய்டிச்சு சார்…மொத்தமா மாத்தணும்’ என்பார்கள்.

நான் அதைச் சொன்னேன். நண்பர் சொன்னார் ‘தமிழகத்தில் சமையல் சார்ந்த எந்த விஷயங்களுக்கும் நிரந்தரமாக தீர்வு கிடையாது. அதைச் செய்யத் தெரிந்த எவரும் தமிழர் இல்லை. கொழுப்பு ஏறுவது முதல் உங்கள் மூதாதையர் கைமணம் வரை எதையும் நம்மால் முழுமையாகச் சரிசெய்ய முடியாது, செய்யபப்ட்டதும் இல்லை’

மறுவாரம் மடப்பள்ளியில் என் மனைவியுடன் சமைத்துக்கொண்டிருக்கையில் அதைச் சொன்னேன். அவர்தான் என் வீட்டில் தொண்ணூறுசதம் சமைப்பவர். சிரித்தபடி ‘இது இப்போதா தெரிகிறது உங்களுக்கு? நான் முப்பதாண்டுகளில் ஐம்பதாயிரம் இல்லத்தரசிகளையும் செஃப்களையும் கண்டிருப்பேன். என்னிடம் ஆயிரத்தைநூறு கடை மசாலா இருக்கும். ஒரு சாம்பார் எப்படி ஓடுகிறது என்று தெரிந்த ஒரு தமிழ் சமையற்காரரையோ சாப்பாட்டுக்காரரையோ நான் இதுவரை பார்த்ததில்லை’

மிகவும் அதிகப்படியான கூற்று என்றே நான் நினைத்தேன். அவர் சொன்னார் ‘உண்மை…கொஞ்சம்கூட மிகை கிடையாது. மொத்த சாம்பாரையும் கொட்டிவிட்டு திரும்ப அள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த நளபாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சாம்பாரின் இதயத்தைப்பற்றி தெரிந்த தமிழர் என எவரும் இலலை’

அவரது தொழிலில் நூற்றுக்கணக்கானமுறை மலச்சிக்கல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆந்திர, கர்நாடக நிபுணர்களை வரவழைத்துத்தான் சரிசெய்திருக்கிறார். பற்பலமடங்கு செல்வில். அவர்களால் மட்டுமே பிரச்சினையைக் கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் கண்டுபிடித்த பிரச்சினையை அவர்கள் விளக்கும்போது கேட்டுப்புரிந்துகொள்பவர்கள்கூட நம் தொழில்நுட்பர்களில் ஆயிரத்தில் நாலைந்துபேர்தான்.

ஏன் என்று அவர் சொன்னார். ‘நமக்கு எங்கேயுமே ஆர்ட்ஸ் சொல்லித்தருவதில்லை. ஒரு சாம்பார் நூற்றுக்கணக்கான இடுபொருள்களின்படி உருவாகக்கூடியது. அந்த கலையை ஓவியம் போல் தீட்டத் தெரிந்துகொண்டு அவற்றை பலகோணங்களில் யோசித்தும் செய்தும் உள்வாங்கிக் கொண்டால்தான் மலச்சிக்கலின் சயன்ஸ் தெரியும். நம்மூரில் வாந்தி செய்து திருப்பி தப்பிலல்லாமல் எடுக்கத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்மூர் செஃப்கள் கடைசி கடுகு தாளித்ததுமே அதுவரை போட்டது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். ஆய் போனபின் ஆய் போகாத மூத்த பணியாளரிடமிருமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்தது…’

என் பதிப்பாளரும் அதையே சொன்னார். ஒரு கவிதையை எவரேனும் வெளிநாட்டில் எழுதினால் அதை முழுமூச்சாக அமர்ந்து மொழிபெயர்க்கத்தான் நம்மவர்களால் முடியும். அது என்ன என தெரியாது. அதன் இடம், பொருள் தெரியாது. அதற்கு காப்புரிமையும் கொடுப்பதில்லை. ராயல்டிக்கான விகிதமும் அதற்குள் ஏப்பம் விட்டிருக்கும். ’ஆங்கில அறிவு, அகராதி பார்த்தல் இரண்டைக்கொண்டும் சமாளித்துப்போகிறவர்கள்தான் இங்கே வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றார் அவர்

ஜெயமோகன் எழுதிய இந்தக்கட்டுரையை ருசிக்கையில் ஒருவகையான லப்டப்புதான் வந்தது.

ஒத்திசைவு எழுதிய இந்தக்கட்டுரையை படிக்கையில் நாலு பேருக்கு நல்ல விதமா சாம்பார் போடறத வுட்டுட்டு டீ ஆத்தறாரேனு ஆதங்கமாச்சு.