ரிப்போர்ட் இங்கே: http://idlyvadai.blogspot.com/2012/01/42-live.html
வாயில் விரல் பொத்தி ஆச்சரியப்படுபவர்கள் இங்கே:

தினமணி
அதிமுகவுக்குத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும் என்றார் பத்திரிகையாளர் சோ.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
“எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.
இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றபோதும், அது நல்ல விஷயம்.
போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கியக் காரணமாக அமையும். ஆனால், இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை.
தேர்தலின்போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால், வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடத் தயங்குகின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல் ஜெயலலிதா இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காது.
அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அதிமுக என்றிருந்தது. ஆனால் பாஜகவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பாஜகவின் பிரச்னை.
குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.
அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில், அவரால்தான் பாஜகவையும் வழிநடத்த முடியும்.
பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால், அதுவே மிகப் பெரிய பிரச்னையையும் பாஜக-வுக்குள் ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற காரணங்களால், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல், பாஜக ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது.
இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.
ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படாவிட்டால், திமுகவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அதிமுகவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன்மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான, தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம்.
குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சிசெய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.
எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அதிமுக-வுக்குக் கொடுத்தால், குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்’ என்றார் சோ.
தினமலர்
“”அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணிக் கட்சி,” என, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி கூறினார். அவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் நேற்று சென்னை வந்தனர். அத்வானி, தனியார் விமானம் மூலம் டில்லியிலிருந்து நேற்று மதியம் 2.00 மணிக்கு வந்தார். மோடி, தனி விமானம் மூலம் ஆமதாபாத்திலிருந்து 2.45க்கு வந்தார். அவரை, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சமீபத்தில் காலமான, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டுக்குச் சென்ற இருவரும், அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். அங்கிருந்து கிளம்பி, “துக்ளக்’ ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. பார்லிமென்டில் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் பொதுவான கொள்கைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.
நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை, மத்திய அரசு, பழி வாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆண்டால், அவர்களை சகல வித்தைகளையும் கையாண்டு பழி வாங்குகிறது. சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய சாட்சியமாக நான் திகழ்கிறேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, நீதித்துறை என, தங்களின் கட்டுப்பாட்டில் எத்தனை துறைகள், முகமைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவு கொடுத்துப் பார்க்கிறது. வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறியிருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்பு, வளர்ச்சிப் பாதை, பொருளாதார முன்னேற்றம் என, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாக, மத்திய அரசு திகழ்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
“துக்ளக்’ ஆசிரியர் சோ பேசுகையில், “”எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ., ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் அத்வானி டில்லிக்கும், மோடி ஆமதாபாத்துக்கும் சென்றனர். முன்னதாக, இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசுவர் என செய்திகள் வெளியாகின. ஆனால், அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.