பெண் அழகு.
பெண்ணின் கண் அவளினும் அழகு.
அவளின் கண்ணில் ஒளிரும் வெளிச்சம் எல்லாவற்றிலும் அழகு.
அந்த வெளிச்சம் நிலாவில் இன்று காணக் கிடைத்தது.
முழு சந்திரன் இருந்தார். அப்புறமாக அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ராகுவும் கேதுவும் விழுங்க ஆரம்பித்தார்கள். வெள்ளை நிலா, கறுப்பு வானத்தில் மறையத் துவங்கியது. ஆனாலும், பால் நிலாவின் வெளிச்சத்தில் முக்கால் பிறை கிருஷ்ணபஷம் போல்தான் தோன்றியது. அந்தக் கரிய நிறம், மெள்ள சிவப்பாக மாறி, செந்நிற வட்டமாகி விட்டது.
வீட்டின் எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு, பின் வாயில் வழியாக அந்த தகதகக்கும் சிவப்பு சோமனைப் பார்க்கின்ற வேளையில், மரத்தில் இருந்து ஏதோ பறவை ‘கெர்… கெர்’ என்று தன் துணையை அழைத்து அதே வட்ட நிலாவை தன்னுடைய தோழிக்கும் காட்டிக் கொண்டிருந்தது.
ஜெயமோகன் சொன்னது நினைவிற்கு வந்தது: “யாராவது இயற்கையை ரசிக்கும்போது, ‘அப்படி இருந்தால் நல்லாயிருக்கும்… நான் போனமுறைப் பார்த்தப்ப இன்னும் நல்லா இருந்துச்சு! இந்த சமயத்தில் கூடவே அது இருந்திருக்கணும்’ என்று ஒப்பிடாமல், ரசிக்கும்படி, அந்தப் பட்சியிடம் வேண்டிக் கொண்டேன். அவர்களும் மௌனமாக, அந்தச் சுடரை விழுங்கத் தொடங்கினார்கள்.
இத்தனை நாட்சத்திரங்கள். அமைதியாக உலாவும் வாவு. இத்தனையும் எப்போதும் காணக்கிடைக்க கண்.
தமிழகத்தில் பெரியார் எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கிறார்?
இந்தக் கேள்விக்கு விடையாக, கீழ்க்கண்ட தகவல்கள் தேவையாகின்றன:
தமிழ்நாடு அரசுத்துறையில் எவ்வளவு நூலகங்கள் இருக்கிறது?
தமிழில் எத்தனைப் பதிப்பகங்கள் இருக்கின்றன?
ஒரு பதிப்பகத்தில் இருந்து எத்தனை பெரியார் புத்தகங்கள் (எவ்வளவு ஆசிரியர்களின் பெயர் போட்டு) வருகின்றன?
ஒவ்வொரு வருடமும் (அல்லது எப்பொழுதெல்லாம் லைப்ரரி ஆர்டர் கொடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம்) தமிழக அரசு எவ்வளவு கோடியை பெரியார் புத்தகங்களுக்காக ஒதுக்குகிறது?
பஞ்சாயத்துதோறும் நூல் நிலையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது எவ்வளவு பணம் புத்தகங்களுக்காக திட்டமிடப்பட்டது? அவை எந்த / எவ்விதமான நூல்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டன?
பெரியார் நினைவு சமத்துவபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், போன்று தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் இருக்கின்றன?
பெரியார் உருவப்படங்கள் திறப்பிற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றன? ஆண்டுதோறும் வேறு எவர் எவர், பிறந்தநாளை முதலமைச்சரும் மந்திரிகளும் வலுக்கட்டாயமாகக் கொண்டாடுகின்றனர்?
ஈ.வெ.ரா. பெயரில் எத்தனை விருதுகள் இயங்குகின்றன? தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளும் பள்ளிப்படிப்பிற்கான ஸ்காலர்ஷிப்களும் அவருடைய பெயரின் தலைப்பில் இயங்குவதைப் போல் வேறு எவருக்காவது நடத்தப்படுகிறதா?
எத்தனை சாலைகள் அவருடைய பெயர் தாங்கி இருக்கிறது? எத்தனை இடங்களில் ஒரே பெயர், பெரியாரின் பெயரை தன் தலைப்பில் வைத்திருப்பதால் குழப்பம் உண்டாகிறது?
நீல் கெமன் எழுத்துக்கள் சுவாரசியமானவை. இங்கே தந்தைமை குணத்தைப் பற்றி பேசுகிறார். உருக்கமான சொற்பொழிவில் சிரிப்பும் வருகிறது. நகைச்சுவைக்கு நடுவே அழுகைத்துளிக் கூட வந்துவிடலாம்.
அவர் சொல்லும் சமபவங்களில் சில என் வாழ்வில் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது, இரு அணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். புளியங்கொட்டை போல் உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய விஷயத்தை இரு அணியின் கப்தான்களும் எடுத்துக் கொள்வார்கள். அதை ஒருவர், ‘எந்தக் கை’யில் வைத்திருக்கிறார் என்று இன்னொரு அணித்தலைவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால், முதலில் அழைக்க ஆரம்பிக்கலாம். தன் அணியில் எவர் விளையாடுவார் என்று ஒவ்வொருவராகக் கூப்பிடுவார்.
அவன் அந்த அணி; இவன் அந்த அணி என்று இரு பக்கமும் எல்லோரும் போய்விடுவார்கள். கடைசியில் இருவர் இருப்பார்கள். ஒரு பக்கம் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நான். இன்னொரு பக்கம், என்னைவிட நாலு வயது இளையவளான எதிர்வீட்டு இலச்சுமி. அப்போது, அவளைத் தேர்ந்தெடுத்து, என்னை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையாகச் சொல்வார் எதிரணியின் கேப்டன்.
கையில் திறன்பேசி இல்லாமலே, கற்பனைக் கோட்டையாக நகவிரலில் நகாசு செதுக்கி சிந்தனைவயப்பட்டிருக்கும்போது, ‘மொட்டை…. மொட்டை’ என்று எவரோ கதறுவது — கிணற்றுக்குள் இருந்து கூவுவது போல் அரசல்புரசலாகக் காதில் விழும். நிமிர்ந்து பார்த்தால், டென்னிஸ் பந்து என்னை நோக்கி விரையும். அதை அவதானித்து, கீழே விழுந்தபின் தூர்தர்ஷனில் பார்த்த அவார்டுப் படத்தில் வாசலில் கோமூத்திரமும் சாணமும் போடும்வரை காத்திருந்து, பின் ‘பஷூ’ என்று அழைக்கும் மலையாளக்காரர் போல், ‘பந்து’ என்று சொல்லும்போது, “ஏண்டா… உன்னை எனக்குக் கொடுத்தாங்க” என்று திட்டும் அணித் தலைவரை நினைவுகூறும் சமபவம், இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.
அவர்… பெரிய, முக்கியமான, புகழ்பெற்ற, விருதுகள் குவிக்கும் எழுத்தாளர். நான் இன்னும் உங்களுடன் பதிவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
பணத்தினால் வெற்றியை உருவாக்க முடியாது. ஆனால், பணத்தை உருவாக்கும் சுதந்திரத்தினால் வெற்றியைப் பெற்றுத் தர இயலும்.
– நெல்சன் மண்டேலா
பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும் பிட்காயினைப் பார்க்கலாம். அதே சமயம் அதே இறைவரை எங்கும் கண்டறியமுடியாத பேதைமை போல், பிட்காயின் ஒளிந்துகொண்டு மறைபொருளாக இருப்பதையும் சுட்ட முடியும்.
பிட்காயின் என்றால் என்ன? எதற்காக இந்த பிட்காயின் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்?
இது கணியுலகு. இலக்கங்களும் எண்ணியலும் சார்ந்த உலகு. இந்த எண்ணியல் (digital) உலகிற்கான எண்ணியல் நாணயமாக பிட்காயின் இருக்கிறது. அரசல புரசலாக செய்தித்தாள்களை புரட்டி இருந்தால் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து இருப்பீர்கள்:
1. மாலைமலர்: பிட்காயின் பயன்பாடு மோசடிக்கு வழிவகுக்கும்: இந்த நாணயத்தின் பயன்பாடு குறித்து எந்த நாடுகளும் தெளிவான ஒழுங்குமுறை விதிகளை இதுவரை வெளியிடவில்லை. இந்த நாணய முறைக்கென எந்த குறிப்பிட்ட விதிமுறைகளும் இல்லாமல் முதலீட்டுத் தயாரிப்பாக வளர்ந்து வரும் இதன் பிரபல்யம், மின்னணு பதிப்பின் மிகப் பெரிய முதலீட்டாளர் மோசடியாக வெடிக்கக்கூடும் என்ற கவலை அரசு அதிகாரிகளுக்கும், பொருளாதார நிபுணர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த நாணயமுறைக்கு எதிராக முடிவெடுத்துள்ளது.
2. தினகரன்: பிட்காயின்: இந்தியர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு: கடந்த மாதம் இந் நிறுவனம் திவால் நோட்டீஸ் அனுப்பியது. இதன் கணக்கில் இருந்த சுமார் ரூ.3,000 கோடி மதிப்புள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் பிட்காயின்கள் திருடு போனதாக அறிவித்தது. பிட்காயின் வர்த்தகத்தில் இந்தியர்கள் உட்பட 1.27 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ரூ.35 ஆயிரம் பிட்காயின் வைத்திருந்த இந்தியர்களுக்கு சுமார் ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
3. நாணயம் விகடன்: அமெரிக்காவை அல்லல்படுத்தும் புது மோசடி: பிட்காயின்… உஷார், உஷார்! : அமெரிக்க அரசாங்கமோ, இது முழுமை பெறாத அரைவேக்காட்டு சிஸ்டம். அமெரிக்காவுக்குள், பிட்காயின் பொருட்களுக்கு எதிராக மாற்றப்பட்டால் பண்டமாற்று சட்டம் அதைக் கண்காணிக்கும். யார் எத்தனை காயின் மாற்றுகிறார்கள், யாருக்குப் பணம் போனது என்று விசாரிப்போம் என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. இதுவும் தவிர, வருமானம், கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் என்ற குழப்பமெல்லாம் வேறு இதில் நிறையவே இருக்கிறது.
4. தி ஹிந்து: பிட்காயின் = நாணயமான நாணயமா? – இராம.சீனுவாசன்: பிட்காயின் சட்டவிரோத நடவடிக்கை களுக்கும் பயன்படுவதாக அமெரிக்க காவல் துறை கண்டுபிடித்துள்ளது. சில்க் ரோட் என்ற இணையதளம் மூலம் சட்டவிரோத வியாபாரம் செய்த ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையில் அவர்கள் 26 ஆயிரம் பிட்காயின்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதே போன்று மற்றொரு மெய்நிகர் பணம் 2006ல் உருவாக்கப்பட்டு பல சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து அழித்தது. இதனால்தான் இந்த மெய்நிகர் பணமான பிட்காயினை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகள் கூறுகின்றன.
5. தினமணி: பிட் காயின்: ஓர் எச்சரிக்கை மணி – எஸ். ராமன்: பிட் காயின்கள் எந்த ஒரு பொருளாதார கட்டுப்பாட்டுக்கும் உள்படாத, ஊக வணிகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட கற்பனை கஜானாவில் பிறந்த நாணய மாற்று முறை. அந்த நாணய புழக்கத்திற்கு பின்னால், அறிவிக்கப்பட்ட நிஜ சொத்துகள் கிடையாது. அதன் மதிப்பில் ஏற்படும், யூகங்களுக்கு அப்பாற்பட்ட ஏற்ற தாழ்வுகளால்,அந்த நாணய மாற்று முறையை பின்பற்றுபவர்களுக்கு பெருத்த நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்த பண பரிவர்த்தனை மூலம், போதை மருந்து கடத்தல் நடந்திருப்பதை கண்டுபிடித்த அமெரிக்க புலனாய்வு துறை, 28.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை பறிமுதல் செய்திருக்கிறது. போதை மருந்து கடத்தல் தவிர, 10 சதவீத அளவிலான சர்வதேச பிட் காயின் பண பரிவத்தனை, ஆன் லைன் சூதாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பல பாதுக்காப்பு வளையங்களையும் மீறி, பிட் காயின் கஜானாவில் சேமிக்கப்படும் தொகைகள், இணையதள கடத்தல் மூலம் களவு போய்க்கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவில்லை.
இவ்வளவு பேர் பயமுறுத்தும்போது, ஓரிரு ஆக்கபூர்வமான பார்வையும் கிட்டியது:
அ) ஆழம்: பிட்காயின் என்றொரு அதிசயம்: இந்திய ரிசர்வ் வங்கி,‘வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள், பிரச்னை என்றால் என்னைக் கேட்காதே’ என்பது மாதிரியான வழிகாட்டுதலையே அளித்திருக்கிறது. இதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 2013ல் ஒரு பிட்காயினின் மதிப்பு 16,000 ரூபாய். ஆனால் அடுத்த நாளே ஒரு ரூபாய் ஆனாலும் யாரையும் போய் கேட்கமுடியாது. .அதுமட்டுமில்லாமல் இதற்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும் வரைதான் அந்த மதிப்பு தக்கவைக்கப்படும். (இது எல்லா பண்டங்களுக்குமே பொருந்தும்).
– பிரசன்னா
ஆ) குங்குமம் : “பிட்காய்ன் என்ற மின்பணம்”: மறையீட்டுச் செலாவணி (CryptoCurrency) என்பது எண்ணியல் செலாவணியில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (Cryptography) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. I LOVE YOU என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடு தான். நடந்த பரிமாற்றம் Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில் பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும்.
– சி. சரவணகார்த்திகேயன்
மேற்கண்ட கட்டுரைகளைப் படித்தால், பிட்காய்ன் என்றால் என்ன, எப்படி அதைப் பெறுவது, எவ்வாறு அது உருவாகிறது என்பது தெரியவரும். சுருக்கமாக, பிடிகாயினின் ஆய பயன்கள் என்ன என்று பட்டியலிட்டால்:
சங்ககால பண்டமாற்றை தற்காலத்திற்பேற்ப இயக்கும் நவீன பணம்
தங்கத்தைப் போன்ற அசையா முதலீட்டுகளை நம்பாமல், பொருளுக்கேற்ற மதிப்பைப் பெற்றுதரும் நாணயம்
அமெரிக்காவின் டாலர், பெட்ரோல் பணம், ரிலையன்ஸ் பங்கு என்று வழக்கமாகக் கொழிப்போரைத் தவிர்க்கும் பரிமாற்றம்
நடுவே புகுந்து சேவைக் கட்டணம் விதிக்கும் தரகர்களும், வைப்பு நிதிக்குக் கூட மாதாந்திர கட்டணம் போடும் வங்கிகளையும் நீக்கும் சமச்சீர் உலகிற்கான மதிப்பீடு
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை நம்பகமாக மாற்றும் வலைச்சாதனம்
ஸ்கொயர், கூகுள் வாலெட் (Google Wallet), ஆப்பிள் பே (Apple Pay), பேபால் (PayPal) போல் இணையம் வழியாகவும் பெருநிறுவனங்களின் முதுகில் ஏறியும் சாதாரணர்களைப் பிணைக்க எண்ணாமல், தன்னார்வலர்களின் படைப்புத்திறனின் மூலமாகவும் தனிமனிதர்களின் கால்கோள் முயற்சிகளை ஒருங்கிணைப்பதாலும் உருவாகும் நாடுகளைக் கடந்த மெய்நிகர்நிதி (virtual currency)
பிட்காயின் எவ்வாறு மாறும், எப்படி முக்கியத்துவம் அடைகிறது என்பதற்கு தொலைபேசியை உதாரணமாகச் சொல்லலாம். துவக்க காலத்தில் தெருவிற்கு ஒரு தொலைபேசி இருக்கும். நான் கல்லூரிக்கு சென்றபோது, என்னுடைய பக்கத்துவீட்டிற்கு எதிர்த்த வீட்டிற்கு டிரங்க் கால் போட்டு, நான் ஐந்து நிமிடம் கழித்து அழைப்பதாகச் சொல்வேன். அவர்களும், என் வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தாரை அழைத்து வருவார்கள். ஐந்து நிமிடம் கழித்து, ஒரு நிமிடம் மட்டும் பேசிவிட்டு, வைத்துவிடுவேன். இப்போது எல்லோரின் கையிலும் செல்பேசி. எப்போது வேண்டுமோ, எப்படி வேண்டுமோ, அவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்.
அதே போல், தனியொரு மனிதனுக்கு முக்கியத்துவம் தரும் சாதனமாக பிட்காயின் உருவாகிறது. ஒவ்வொருவரைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு சாதனம் இருக்கிறது. சிலருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். சிலருக்கு ஸ்னாப்சாட் மூலம் படம் போட வேண்டும். சிலருக்கு வாட்ஸ்ஸாப். வேறு சிலருக்கு ஃபேஸ்புக் தூதுவன். இதே போல் தனி மனிதனின் விருப்பத்திற்கேற்ற உலகை ‘பிட்காயின்’ உண்டாக்குகிறது. குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு, மொத்த வரவு-செலவுக் கணக்கை அந்த ஒரு நிறுவனத்தின் மூலம் திருப்தி செய்த காலம் காலாவதியாகிக் கொண்டு இருக்கிறது.
வங்கிகளின் சேவையைப் பெறவியலாமல் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். சரியாகச் சொன்னால், உலகெங்கும் இருநூற்றைம்பது கோடி பேர்களுக்கு வைப்பகக் கணக்கு கிடைக்கவில்லை. அதாவது, இவர்களின் குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டால், கிட்டத்தட்ட ஐநூறு கோடி மக்களுக்கு வங்கி மூலமாக பணப் பரிமாற்றம் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியமாகவுள்ளது. சேமிப்புக் கணக்கு துவங்க இயலாது. நினைத்தவுடன் வேண்டாம்; நூறு மைல் நடந்தாலும், நடப்புக் கணக்கை ஆரம்பித்து, சம்பளத்தை பாங்கில் போட முடியாது. தவணை அட்டைப் பெற முடியாது; கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதில் ஒரேயொருவரின் கதையைப் பார்ப்போம்.
அகதியாக ஈரானில் புகலிடம் பெற்று, இலக்கியமும் அறிவியலும் படித்தவர் ஃபெரெஷ்டே ஃபொரோ (Fereshteh Forough). அதன்பிறகு 2012ல் தாய்நாடான ஆஃப்கானிஸ்தானிற்கே திரும்பச் செல்கிறார். ஆஃப்கானிஸ்தான் பெண்களை வறுமையில் இருந்தும் அடக்குமுறையிலும் இருந்து விடுவிப்பதற்காக ‘பெண்களுக்கான அடித்தள இணைப்பகம்’ (Women’s Annex Foundation) அமைப்பை நிறுவுகிறார். அந்த அமைப்பின் சார்பில் ஆஃப்கானிஸ்தானின் பல சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மகளிருக்கான கணினிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியும் கொடுக்கும் பள்ளிகளை அமைக்கிறார்.
கணினியில் நிரலி எழுதுபவர் பெங்களூரூவில் இருந்தால் என்ன? காபூல் நகரத்தில் பணிபுரிந்தால் என்ன? ஒடெஸ்க் (oDesk.com), ஈலான்ஸ் (Elance.com), ஃப்ரீலான்ஸர் (Freelancer.com), ஸ்டாஃப் (Staff.com), டாப்டால் (TopTal.com) என இணையம் மூலமாக இத்தனை ரூபாய்க்கு இன்ன வேலை என்று செய்து முடிக்கத் தெரிந்தவர்களை ஃபெரெஷ்டே ஃபொரோ உருவாக்குகிறார். ரூபி, ஜாவாஸ்க்ரிப்ட், மருத்துவக் குறிப்புகளை எழுதுதல் போன்றவற்றிற்கு ஆஃப்கான் பெண்மணிகளைத் தயார் செய்கிறார். இவர்களால் நுணுக்கமான தகவல்களை மணிக்கணக்காக பொறுமையாகவும் பிழையின்றியும் கணினியில் உள்நுழைக்க இயலும். வீட்டில் இருந்தே வேலை பார்க்கக் கூடிய தொழில்களை இராப்பகலாக செய்ய முடியும். பயனர்களோடு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெரியும்.
இருந்தாலும் வேலை கிடைக்கவில்லை. மேற்கண்ட வலையகங்களில் கடை விரித்தாலும், கொள்வாரில்லை. ஏன்?
இவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? உழைப்பதற்கான ஊதியத்தை எவ்வாறு தருவது என்பது சிக்கலாக இருந்தது. பணத்தைப் பரிமாற, வங்கிக் கணக்கு தேவை. வங்கிக் கணக்கைத் துவக்குவதற்கு வங்கிகள் தேவை. இதுவோ தாலிபான் பிரதேசம். தாலிபானோ, உள்ளூர் தாதாவோ, வங்கிகளைக் கொள்ளையடிக்கும் தேசம். அப்படியே வங்கிகள் இயங்கினாலும், ஆண்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் தேசம். இஸ்லாமியச் சட்டங்களின்படி கட்டுப்பெட்டியாக பெண்களை வங்கிக் கணக்கு துவக்கவிடாத தேசம். ’மனைவிக்கு பணம் தருவதா!’ என்று பிடுங்கி வைத்துக் கொள்ளும் தேசம்.
இங்கேதான் பிட்காயின் உள்ளே நுழைகிறது. கையில் செல்பேசி இருந்தால் போதும். செல்பேசியில் ஒரு பணப்பை (wallet) செயலியை நிறுவினால் போதும். வேலை செய்தால் கூலி. நடுவில் மூக்கை நுழைத்து கமிஷன் அள்ளும் இடைத்தரகர்கள் கிடையாது. அரசாங்கத்தின் வருமானவரி கிடையாது. உள்ளூர் காவல்துறையின் லஞ்சங்கள் கிடையாது. அடியாள் தாதா/ரவுடி கும்பல்களுக்குத் தரவேண்டிய மாமூல் கிடையாது. அப்படி தரகுப்பணம், வருமானவரி எல்லாம் நீக்கினாலும் கணவனின் பறிமுதலும் கிடையாது. அத்தனை பணமும் உழைத்தவருக்கே முழுமையாகச் சென்றடையும்.
இந்த ஆஃப்கானிஸ்தானிய பெண்கள் எல்லாம் கணி வித்தகர்கள் இல்லை. கொந்தர்கள் இல்லை. அறிபுனை படித்துத் திரியும் வருங்கால யுடோபிய கற்பனாவதிகள் இல்லை. அவர்கள் வாழ்விற்கு ஆதாரம் பணம். அது பெருவதற்கான கருவியாக பிட்காயின் அமைந்திருக்கிறது. அவ்வளவுதான்!
இது மாதிரி ஐநூறு கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிட்காயின் வரப்பிரசாதம்.
அடுத்த பகுதியில் இந்த பிட்காயின் ஏன் நிலைத்து நிற்கும் என்பதையும், எவ்வாறு இயங்குகிறது என்பதையும், போலி நோட்டு அச்சிடுவது எவ்வாறு இயலாது என்பதையும், மோசடிகளை எவ்வாறுத் தவிர்க்கிறது என்பதையும் பார்ப்போம்.
நோக்குநூல்கள்:
1. The Age of Cryptocurrency: How Bitcoin and Digital Money Are Challenging the Global Economic Order by Paul Vigna and Michael J. Casey
2. Bit by Bit: How P2P Is Freeing the World by Jeffrey Tucker
3. The Book Of Satoshi: The Collected Writings of Bitcoin Creator Satoshi Nakamoto by Phil Champagne
தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸ்ஸாப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை. நான் பழமைவிரும்பி என இந்தக் கால தலைமுறை நினைப்பார்கள்.
அதை நான் இவ்வாறும் பார்க்க நினைக்கிறேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் துள்ளலோடு இயங்குபவர்களை இரு வகையாகப் பார்க்கிறேன். முதல் பிரிவினர் செய்தியைக் கொண்டு செல்ல விரும்புபவர்கள். இரண்டாம் பிரிவினர் அந்தச் செய்திக்கான கருவியை விரும்புபவர்கள்.
நான் இதில் இரண்டாம் ரகம். எனவே அந்தப் பிரிவைப் பற்றி எளிதில் விவரிக்க முடியும். எனக்கு ஃபேஸ்புக், டம்ப்ளர், லிங்க்ட் இன், டிவிட்டர் போன்ற சமூக வலையகங்கள் பிடிக்கும். அதில் சமையலைக் குறித்தும் பதிவு செய்கிறேன். இலக்கியத்தைக் குறித்தும் பதிவு செய்கிறேன். ஃபெட்னா போன்ற நிகழ்வுகளில் நடக்கும் விஷயங்களை பத்திரிகை நிருபர் போல் நேரடியாகச் சென்று பதிவு செய்கிறேன். கிசுகிசு, கிறுக்கல், கவிதை, கட்டுரை எல்லாம் பதிவு செய்கிறேன்.
ஃபேஸ்புக், வலைப்பதிவு போன்றவை எனக்கு ஆயுதமாக இல்லை. துணைக்கருவியாக உதவுகிறது. இன்றைக்கு சினிமா விமர்சனம் போட நான் இந்த இடைமுகத்தை நாடுகிறேன். நாளை சினிமா என்னும் வஸ்து தீர்ந்துவிட்டால், மின்விசிறிகளின் நுட்பவியல் என்பது குறித்து எழுத அதே இடைமுகத்தை – என்னுடைய கருவியாக வைத்துக் கொள்வேன்.
இதை புத்தக வெளியீட்டோடு ஒப்பிடலாம். அது ஒரு கருவி. நூல்வகைகளில் தன்முன்னேற்றம், குழந்தை வளர்ப்பு, ஜோசியம், வாஸ்து என்று பலவிதமாக அச்சுத்தாள்களை நிரப்ப புத்தகங்கள் பயன்படுகின்றன. அதே நூல்கள் பல மொழிகளில் வெளியாகின்றன. அமேசான் கிண்டில், மின் புத்தகம், தடி அட்டை என பல சாதனங்களில் கிடைக்கின்றன. இரண்டாம் வகையினருக்கு கருவி முக்கியம். உள்ளடக்கம் அவ்வளவு முக்கியமில்லை.
இப்பொழுது முதல் சாராரைப் பார்ப்போம்.
இவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஆயுதங்களாகக் கருதுகிறார்கள். புத்தகத்தினால் புரட்சி ஏற்படுத்துவது, எழுதுவதினால் சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவது போன்றவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அந்த ஆர்வத்தை அவருடைய நம்பிக்கை என்று அவரை பின் தொடர்பவர்கள் எண்ணக்கூடும்.
என்னுடைய கார் நிறுத்தும் இடத்தில் திருகுகள், மரையாணிகள், திருப்புளி என நூற்றீபத்தியெட்டு விதமானக் கருவிகள் கொண்ட பெட்டி இருக்கும். இதனால் நான் மெக்கானிக் ஆகமுடியாது. என்னிடம் காடு மலைகள் ஏறுவதற்கான காலணிகள் இருக்கிறது. இதனால் நான் கடுமையான மலையேற்றங்களை மேற்கொள்பவன் என ஆகாது. என் வீட்டில் விலையுயர்ந்த பியானோ இருக்கும். இதனால் நான் இளையராஜா என எடுத்துக் கொள்ளமுடியாது.
இவ்வளவு ஏன்?
எனக்கு சி#, எச்.டி.எம்.எல். போன்ற நிரலிகள் எவ்வாறு எழுத வேண்டும் எனத் தெரியும். இதனால் நான் திறமையான நிரலாளர், வடிவான இணையத்தளங்களை உருவாக்குபவர் என்று சொல்லவியலாது.
கருவிகளைக் கையகத்தே வைத்திருப்பவர், திறமையானவர் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதே போல், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் புழங்குபவர் அவரவருக்கான தேர்ந்தெடுத்த துறைகளில் கரைகண்ட சாமர்த்தியசாலி என்றும் அறிய முடியவில்லை.
இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். ஃபிலிம்ஃபேர் விருதுகள் அல்லது ஐபிஎல் துவக்க விழாக்களை பார்க்கும்போது இது எளிதில் தெரியவரும். இந்த விழாக்கள் பிரும்மாண்டமானவை என்பது மனதில் பதியவைக்கப்படும். பல முக்கியஸ்தர்களும், புகழ்பெற்றவர்களும், கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் அல்லோல்லகல்லப்படும். கிரிக்கெட் பந்தயத்தில் எவ்வாறு போட்டி பலமாக நிலவுகிறது, அந்த ஆட்டம் எவ்வளவு சுவாரசியமாக இருந்தது என்பதை விட இடைவேளையில் எந்த கச்சேரி நடக்கிறது, எந்த நடிகர்கள் மேடையேறுகிறார்கள் என்பது முன்னிறுத்தப்படும். மோசமான சித்தாந்தத்தைக் கூட விலாவாரியான தயாரிப்பு வேலை முலாம் போடுவதால் மறைத்து, மட்டமான தயாரிப்பைக் கூட சந்தையில் விற்றுவிடலாம்.
ஃபேஸ்புக் கொந்தளிப்பாளர்களையும் இவ்வாறு சொல்லலாம். இவர்களுக்கு எந்த ஊடகத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பலவிதமான செல்பேசி அப்ளிகேஷன்களையும் திறன்பேசிக்கேற்ற முழக்கங்களையும் விளம்பரம் போல் எளிதில் விற்கமுடிகிறது. அதற்கு நிறைய நேரமும் தேவைப்படும். அதுவும் அபரிமிதமாக செலவிட இவர்களுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.
ஃபேஸ்புக்கில் எப்பொழுது பதிவிட்டால், எவ்வளவு கவனம் பெறும்? எவ்வாறு பதில்களை இட்டால், மேலும் மேலும் மறுமொழிகளைப் பெறலாம்? எவ்வகையில் படங்களை அமைத்தால் பெரும்பாலோரின் விருப்பத்திற்கேற்ப கவர்ச்சிகரமாக விளம்பர வாசகம் போல் ஈர்க்கும்? மூன்று விநாடிக்குள் வீடியோவிற்குள் விழவைத்து பார்வையாளரை சுண்டியிழுப்பது எப்படி? வெகுஜன ஊடகங்களுக்கு எவ்வாறு இந்தச் செய்தியை கொண்டுசெல்வது? லைக்குகளையும் மறுமொழிகளையும் எங்ஙனம் பொறுக்குவது? பொதுநலச்சேவை என்னும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, எவ்வாறு விவாதத்தை திசை திருப்புவது? – போன்றவற்றிற்கு இந்த முதலாம் ரகத்தினர் வழிகாட்டி எழுதுளவு தேர்ச்சிப் பெற்றவர்கள்.
—–
தங்களின் பதிவுகளுக்கு பதில் போடுவது போல், ’வெண்முரசு’க்கும் பதில் போட வேண்டும். அதற்கு இன்னும் நிறைய உழைப்பு தேவை.
அன்புடன்
பாஸ்டன் பாலா
நம்முடைய கைபேசியிலோ, கணினியிலோ, இணைய இணைப்பு இல்லாத போதும் வாசிப்பதற்கு வசதியாக பதாகை இதழ் பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கிறது. அதைப் பற்றி சில குறிப்புகள்.
முதலில் உள்ளடக்கம்: இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கும் அளவுதான் இருக்கிறது, வாரந்தோறும் வெளிவருவதால், இந்த சுருக்கமான 27 பக்க இதழ் என்று முடிவெடுத்திருப்பார்கள்.
மொழியாக்க கதைகள், சுவாரசியமான கட்டுரைகள், தொடர்கதையின் பகுதிகள் என்று எல்லாமும் கிடைக்கிறது. இந்த இதழ் வெளியானவுடன் ‘To Kill a Mockingbird’ கதை உருவான கதை வாசித்தேன். அந்தக் கட்டுரையை தமிழுக்குக் கொணர்ந்த உடனடித்தனமும் அந்த சம்பவங்களின் சுவாரசியமும் நம்முடைய இந்தியச் சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்க வைக்கும் உறுத்தாத மொழிபெயர்ப்பும் – இந்த இதழை முக்கியமாக்குகின்றன.
இனி *பிடிஎஃப்* புறத்தோற்றம் பற்றிய எண்ணங்கள்:
1. பிடிஎஃப் கோப்பின் முதல் பக்கத்தில் எந்த இதழ், எத்தனையாவது வெளியீடு, எப்பொழுது வந்தது போன்ற முகப்பு தலைப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.
2. இரண்டாம பக்கமாக – இம்பிரிண்ட் விவரங்களைப் போடலாம். யாரைத் தொடர்பு கொள்வது, எவ்வாறு படைப்புகளை அனுப்புவது, யார் இதை இணையத்தில் போடுகிறார்கள் என்றும் காப்புரிமை குறித்த விவரங்களையும் சேர்க்கலாம்.
3. தலைப்பிலேயே ஆசிரியர் பெயர் போடுவது உவப்பாக இல்லை. எழுதியவர் பெயரை – இன்னொரு எழுத்துருவிலும் (அல்லது சிறிய எழுத்து அளவில்); மொழியாக்கியவர் பெயரை மற்றொரு lineல் கொடுத்தால் – யார் படைப்பாளி என்பது தெளிவாகத் தெரியும்.
4. லூயிஸ் கரோலின் Alice’s Adventures in Wonderland நாவல் குறித்த பதிவு நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
5. சுட்டிகளை க்ளிக் செய்தால், அந்த தளத்தின் முகவரிக்கே செல்லுமாறு அமைக்கலாம். இப்பொழுது, காபி/பேஸ்ட் செய்துதான் அந்த உரல்களைச் சென்றடைய முடிகிறது.
7. Header and Footer போடலாம். ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பில், பதாகையின் இதழ் எண், எந்த நாளில் வெளியானது என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்தின் அடியில் எந்தக் கட்டுரையை வாசிக்கிறோம் என்பதைச் சொல்லலாம்.
8. எல்லாக் கவிதைகளும் இடது பக்கமாக alignment கொண்டிருப்பதற்கு பதில், சிலவற்றை நடுவாந்தரமாக போடுவது, சிலதை வலதுபக்கமாக நெறிப்படுத்துவது என்று வித்தியாசமாக செய்தால், வாசகருக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
9. ஆக்கங்களின் பக்க இறுதியில், தொக்கி நிற்கும் கவிதை பத்திகளோ, கட்டுரையின் பாக்கி சொச்சங்களோ இல்லாமல், புதிய பாராக்கள், புதிய பக்கத்தில் துவங்குமாறு செய்யலாம்.
அந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.
பள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.
’மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.
இந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.
இதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.
உதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.
’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ?” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்!” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.
படம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.
படத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.
அந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.
நான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்?
இந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா?” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.
இரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.
சில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.
இந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:
– குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது!?
– மன்மத லீலையை வென்றார் உண்டோ?
– சட்டி சுட்டதடா…
இதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்!’
பல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.
‘காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.
மேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ?!’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.
அந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.
கிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா? அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா!
ஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde