Tag Archives: பாலு மஹேந்திரா

பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’

சில குறிப்புகள்:

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை,
என்றும் அது கலைவதில்லை,
எண்ணங்களும் மறைவதில்லை

பாலு மஹேந்திராவின் முதல் தமிழ்ப்படம்.

உதவி இயக்குநராக ஷோபா பணியாற்றி இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாள் நடிகை ஷோபா இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்!

பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பல அதிர்ச்சிகளை எதிர்பார்த்த சமயத்தில், எந்த அதிர்ச்சிகரமான திருப்பங்களும் இல்லாமல் முடிந்ததே அதிர்ச்சியைத் தந்தது. என் கற்பனையில் சிலவற்றை எதிர்நோக்கி இருந்தேன்:

– சிறுவர்களை முதன்மையாகக் கொண்டு வரும் படங்கள் தோல்வி அடையும். முக்கிய கதாபாத்திரமாக ஆண் இல்லாவிட்டால், அந்தப் படத்துடன் ரசிகர்கள் ஒன்றமாட்டார்கள். (கிடையாது)
– குண்டுப்பையன் தான் முதலில் வரும் கமல் (கிடையாது)
– அந்தச் சிறுவன், இந்து டீச்சரின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான் (கிடையாது)
– பிரதாப் போத்தன் அநியாயமாய் சாகப் போகிறார்; வெண்ணிறாடை மூர்த்திக்கும் ஷோபாவிற்கும் திருமணம் என்னும் க்ளைமாக்ஸ் (கிடையாது)

ஆனால் படத்தில் நிறைய உதாரண காட்சிகள், இலட்சிய இலக்குகள் உண்டு:

– கிராமம் என்றால் ஜாலி.
– புருஷன், பொண்டாட்டி என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக, இணைந்து சுகமாக காலம் கழிப்பார்கள்.
– பெண்கள் எல்லோரும் ஆற்றில் சுதந்திரமாகக் குளிப்பார்கள்.

இதெல்லாம் எப்படி சாத்தியம், இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராயாமல், படத்தை அனுபவியுங்கள்.

கானா பிரபா வழியாக: “அழியாத கோலங்கள்” பாடல் பிறந்த கதை | றேடியோஸ்பதி: “நான் என்னும் பொழுது…” என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள்

“அழியாத கோலங்கள்” விட்டுச் சென்றுள்ள பாலு மகேந்திரா! | Selliyal – செல்லியல்:

விடலைப் பையன்களின் காதல் உணர்வுகளையும், அவர்களது இளம் வயது பள்ளிப் பிராயத்து சம்பவங்களையும் வைத்து உருவான படம் ‘அழியாத கோலங்கள்’. கத்தி முனையில் நடப்பது போன்ற, மாணவர்களிடையே காணப்படும் சில ‘ஆபாசமான’ சம்பவங்களைக் கொண்டிருந்த அழியாத கோலங்களைத் திறமையாகக் கையாண்டது.

 

Warrior: அழியாத கோலங்கள்…!தேவா சுப்பையா :

ஒரு ஆறு, ஒரு ஏரி, மரங்கள் சூழ்ந்த சாலை, வயல்வெளிகள், வாய்க்கால்கள், பூக்கள், வானம், உறுத்தல் இல்லாத வீதிகள், வீடுகள், இயல்பான சினிமாத்தனம் இல்லாத மனிதர்கள் அவ்வளவுதான் அழியாத கோலங்கள் படம் முழுதும்.

தன்னை வெளிப்படுத்தி தான் இருப்பதை அழுத்தமாய் தெரிவித்து விட்டு தன் இல்லாமையையும் ஆழமாய் பதிவு செய்து சென்ற ஒரு எரிநட்சத்திரம் என்றுதான் அவர் ஷோபாவை சொல்கிறார். ஷோபா அவருக்கு அவர் நித்தம் காணும் வானத்தின் வித்தியாச கோணத்தைப் போன்றவள், மரங்கள் அடர்ந்த பகுதியில் படிந்து கிடக்கும் பெரு நிழலைப் போன்றவள், ஓடும் ஆற்றில் ததும்பி நகரும் அலை அவள், பட்டாம்பூச்சியின் படபடப்பும், புற்களின் மீது படிந்திருக்கும் பனித்திவலைகளும் எப்படியோ அப்படித்தான் ஷோபா பாலு சார்க்கு. ஷோபா ஒரு அதிசயம். அத்தனை ஒரு இயல்பான பெண்ணை அதுவரையில் அவர் பார்த்திருக்கவே இல்லை. ஏன் அவர் மட்டுமா மொத்த தமிழ் ரசிகர்களும்தான்.

நெஞ்சில் இட்ட கோலம்எஸ் ராமகிருஷ்ணன்:

பாலுமகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது:

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்

பி,சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி, இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை.

சிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப் போல அவர்களும் இயற்கையின் ஒருபகுதியே என்பது போல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.

நாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார், அந்தச் சிரிப்பு வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது, ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது, அடிக்கடி தன் மூக்கை தடவி கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டுச் செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலை கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பது போல அவனோடு இணையாக நடப்பதும் எனக் காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.

ஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசியபடியோ நடந்து செல்லுவதும், ஷோபா சொல்வதை மௌனமாகப் பிரதாப் கேட்டுக் கொண்டிருப்பதும் மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன.

இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை

என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது.

ரகு ஒருவன் தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான், அதனால் தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும் போது பெண் உடல் பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கி காணமுடியாமல் தயங்கி தயங்கி பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஒடிவிடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கி கொள்கிறான்.

அதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும் போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து எனத் தெரியாமல் நண்பன் சொல்லிய மஞசள் தாவனி பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அது தான் அவன் மன இயல்பு.

அழியாத கோலங்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மிக முக்கியமானபடம். காரணம் இப்படம் போல அசலாகப் பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்த்தேயில்லை. அதுவும் வசனங்கள் அதிகமில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டி பார்ப்பது போலப் படம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

மான்டேஜ் மனசு 2 – இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்!க.நாகப்பன்

பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார்.

ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.

“10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க” என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல்.

“டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா… எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை… நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா… இந்து டீச்சர் இல்ல… நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா” என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.

அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது.

ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம். ‘அழியாத கோலங்கள்’ படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது.

“என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா” என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, “எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்” என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர்.

சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது.

மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?


பாலு மகேந்திரா

“அப்ப எனக்கு பதினஞ்சு வயதிருக்கும், என் அத்தை பொண்ணு எங்க கிராமத்து வீட்டுக்கு வந்திருந்தா. அவள் எங்க வீட்ல தங்கி இருந்த நாட்கள் ரொம்ப விஷேசமானது, அவள் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பெண். மெல்லிசா ஒரு குறுகுறுப்பு, ஈர்ப்பு, தயக்கம், வெட்கம், அவள் உடல் பற்றிய ஆர்வம், பாலுணர்வு பத்தின யோசனைகள் எல்லாம் சேர்த்து முதிராத இளம் மீசை ரோமங்கள் ஆக முகத்தில் எட்டிப் பார்த்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கு…” என்றார் பாலு மகேந்திரா.

“என் கூட, என் பால்ய காலத் தோழன், என் அண்டை வீட்டுக் காரன் இன்னொருவனும் உண்டு” என்றார் பாலு. அவரின் வழி நெருப்பு வரி. ஈழம் சுமக்கும் இதயம். கவியில் தமிழரின் மானம் உணர்த்துபவர். காசி ஆனந்தன் அவர் பெயர். அழியாத கோலங்களின் மூன்று சிறுவரில் ஒரு கதாபாத்திரம்.

அம்மூவரில் வயது குறைந்த, மற்ற இருவரின் சோதனை எலி ரகு. வெளேரென்று, வெண்ணெய் திரண்ட உடல் அமைப்புடன், பருத்து தொங்கும் மார்புகளுடன், வயதுக்கு மீறிய பார்வையுடன். பால்யத்தின் சூட்சமங்கள் இவர்கள். இவர்களின் சட்ஜம் காமம்.

அன்றைய கிராமம் ஒன்றின் சூட்சமதாரிகள் யாரேனும் இருக்கலாம் இவர்களில். போஸ்ட் மாஸ்டர், ரயில் நிலையம், தண்டவாளங்கள், பாழடைந்த கோயில், ரயில்வே கேட், ஓடைகள், வயல் வெளிகள், ஒற்றை வரப்புகள், ஊர் தாண்டிய கூத்தாடிகள் தங்கும் வீடு, கல்யாணம் ஆகாத யுவதிகள், அவர்களைச் சீண்டிப் பார்க்கும் முன் வழுக்கை மனங்கள், களவாடக் கிடக்கும் மாந்தோப்புகள், உப்பு பரப்பி, மாங்காய் குத்த எதுவாய் சாலையோர சிமெண்ட் அல்லது கல் பெஞ்சுகள், ஒற்றை மளிகைக் கடை, ராமாயணமும், கிருஷ்ண லீலாவும் மட்டுமே ஓட்டும் டூரிங் டாக்கிஸ்கள், பேருந்து அண்டா ஊர் எல்லைகள், காற்றும், புற்களும் மட்டுமே துணை இருக்கும் விடலைகளின் வானம் பார்த்த படுக்கை அறைகள், மற்றும் ஒரே ஒரு பள்ளிக் கூடம்.

இவை அனைத்தும் ததும்பி வழியும் அழியாத கோலங்களின் முதல் பகுதியில்.இந்து டீச்சரும் இம்மூவரும் தான் அடுத்த பகுதி. இதுவே அழியாத கோலங்களின் மய்யம்.

கிஸேப் தொர்னதொரவை (Giuseppe Tornatore) என்ற இத்தாலிய இயக்குனரின் பால்ய காதல், உலக சினிமாவாகிறது. சினிமா பாரடிசோவை தெரிந்திருக்கும். பெட்ரிகோ பெல்லினியின் அநேகப் படங்கள் பால்ய அவஸ்தைகளை சுமந்து அலைபவை. அமர்கார்ட் (amarcord – 1974) அவற்றுள் மிக முக்கியமானது. டொர்னடோரின் பெல்லினியின் சாயல் சுமப்பவர், பாலு.

சினிமாவை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவின் மொழியில் சினிமாவைச் சொன்னவர் பாலு மகேந்திரா. ஒளியின், காட்சியின், நிழலின், முகபாவங்களின், மன இருண்மையின், மழையின்,மலையின்,மனப் பிறழ்வுகளின், ஆணாதிக்கத்தின், பெண்ணியத்தின், காதலின், காமத்தின், இசையின், மௌனத்தின், இயற்கையின், அறையின் செயற்கையின், வசனங்களின், பேசா மொழியின்,வன் மனதின், மென் இயல்பின், தத்துவங்களின், விசாரங்களின், வாழ்க்கை விளையாட்டுக்களின், வன்ம விதியைத் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் நிறுவியவர் பாலுமகேந்திரா.

ரெட்டை வால் குருவி – திரைப்படம்

Titles_Arivumathy_Balu_Magendhira_director_Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

அந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.

பள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.

மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.

இந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.

இதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

இந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.

உதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.

’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ?” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்!” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.

படம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.

படத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.

அந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.

நான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்?

Rettai_Vaal_Kuruvi_Archana_Mohan_Films_Balu_Mahendra_Songs_Cinema

இந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா?” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.

அதான்… சொல்லிவிட்டேனே… நொஸ்டால்ஜியாவிற்கு கை, கால், புருவம், இமை, பொட்டு, உதடு எல்லாம் வைத்தால் துளசி = அர்ச்சனா.

இரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema_Radhika_Mohan_Baalu_Mahendira

சில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.

’விஷயம் முடிஞ்சாப் போதுமே… அப்புறம் தொட வுடமாட்டியே…’ (துளசி)
’மூக்கும் முழியுமா… இல்ல! முழியும் முழியுமா!!’ (ராதா)
– ’ஒட்டிக்கறதுக்கு மட்டும் வர…’ (யாரா இருந்தால் என்ன… நிதர்சனம் : )
’நான் பார்க்காத வியாழக்கெழமையா கண்ணு!’ (பூக்காரி – பாட்டி)

இந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:

குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது!?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
சட்டி சுட்டதடா…

இதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்!’

பல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.

காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.

மேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ?!’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.

அந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.

கிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா? அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா!

ஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.