Monthly Archives: செப்ரெம்பர் 2011

9/11: பத்தாண்டு பலன்

இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.

செப்டம்பர் 11, 2001.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?

  1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்
  2. இஸ்லாமிய வெறுப்பு
  3. பொருளாதாரப் பின்னடைவு

இஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்

  • 88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
  • 83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.

  • அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.

அயல்நாட்டுப் போர்

  • ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
  • இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.

  • இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
    • வேலைவாய்ப்பின்மை
    • மருத்துவ சிகிச்சை தராமை
    • குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
    • மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
  • போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?

பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை

இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

  • இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
    • ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
    • அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!