வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி – 1.8.5)
உட்பொருள்
அயல் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் கிடைத்ததை அளைந்து, கைகளில் அகப்பட்டதை மகிழ்ச்சியுடன் உண்ட அமெரிக்கா, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று நம்மில் கலந்தான்.
அராபியர் கடைந்த எண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு உலகின் அணுகலன்களும் அமெரிக்காவிற்கு விருப்பமானதாயிற்று என்பது உரை.
அமெரிக்காவிற்கு மூன்று கவலைகள்:
1. தங்களை விட பராக்கிரமத்துடன் இன்னொரு இடம் வளர்ந்துவிட்டதாக உலகம் நினைக்கத் துவங்கிவிடுமோ?
2. தங்களுக்கான காரியங்களை சாதிக்கக் கூடிய குறைவான செலவில் நிறைவான லாபம் தரும் ஸ்தலங்கள் குறைந்துவிடுமோ!
3. தங்களின் முதல் மரியாதையான இந்திர பதவி போன்ற ஸ்திரதன்மைக்கு இந்தியா போன்ற குடியரசு வல்லரசு கோருமோ?
இந்த அச்சங்களை நீக்க அமெரிக்கா பல உபாயங்களைக் கையாளுகிறது. அதில் ஒரு அஸ்திரம் திரு உதயக்குமார்.
உலகெங்கும் உள்ள அணு உலைகள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது. முன்னும் ஒரு காலத்தில் இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே அணு உலை வைத்திருந்தது. ஒன்று அமெரிக்கா; இன்னொன்று ருசியா.
கொஞ்ச நாள்போக்கில் நட்பு நாடுகளான இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் அமெரிக்கா அணுப் பொருட்களைக் கொடுத்தது. சீனாவும் அணுகுண்டு வெடிக்கும் நாடாக வளர்ந்தது.
பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்தியா அணு சோதனை செய்து பறைசாற்ற, இராவோடு ராவாக பாகிஸ்தானும் இந்த ஐவரோடு இணைந்து எழுவரானது.
இன்றைய அளவில் இஸ்ரேல் – நம்பர் எட்டு.
வட கொரியாவால் தம்மாத்துண்டு வெடியாவது போட முடியும் – ஒன்பது.
இரான் கடும் பிரயத்தனத்தில் இருப்பதால் – #10.
இப்படியே போனால், சங்கரன்கோவில் வாக்காளர் எல்லோருக்கும் யுரேனியம் தருவதாக ஜெயலலிதா அறிவிக்கும் நாள் தூரத்தில் இல்லை.
இந்த மாதிரி உலகெங்கும் அதிகாரமும் அணுவும் சிதறி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இருப்பதை எல்லாம் தன்னிடம் கொண்டு வரவேண்டும். இனிமேல் எவருக்கும் தாரை வார்க்கக் கூடாது என்பது ஒபாமா சித்தாந்தம்.
இதில் பையன் ஜார்ஜ் புஷ் வேறு ரகம். நல்ல நாடாக இருந்தால் அவர்களிடமும் கொஞ்சம் கொடுத்து வைப்பதில் தவறில்லை என்று பார்ப்பது ரிபப்ளிகன் கட்சி. உற்ற தோழனாக இருந்தாலும், நாம் படியளந்தால் மட்டுமே பாக்கெட் மணி என்று கெட்டியாக இருப்பது டெமொக்ரடிக் கட்சி.
அமெரிக்க அரசியல் நினைவுக்கு வந்தது.
அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குழுவை அமெரிக்காவில் டெமொக்ரட்ஸ் என்கிறார்கள். ஒபாமா கட்சி. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது என்று எண்ணுபவர்கள் இவர்கள் பக்கம். மக்களிடமே நல்லது கெட்டதை விட்டுவிட்டால், சுயநலமாக இருப்பார்கள்; எனவே, அதிகாரம்தான் பொதுவுடைமையாக இயங்க வேண்டும் என்று கருதுபவர்களும் இவர்கள் பக்கம்.
பொறுப்பைக் கையில் எடுக்கும் குழுவை ரிபப்ளிகன் கட்சி என்கிறார்கள். மிட் ராம்னியின் கட்சி. இன்னொருத்தருக்கு என்னுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் இவர்கள் பக்கம். தூண்டி விட வேண்டிய திரியாக இருப்பதை விட மெழுகுவர்த்தியாக எரிய விரும்புபவர்கள்.
இந்தியாவில் தன்னிறைவு வரக்கூடாது. மின் உற்பத்தி இடைஞ்சல் செய்ய வேண்டும். இதனால் அயல் முதலீட்டாளர்களுக்கும் கவலை பிறக்கும். எவனோ, எவளோ…. எப்போது பார்த்தாலும் எதற்காவது செங்கொடி தூக்கி வேலை நிறுத்த போராட்டம் செய்யும் நாடு என்னும் பிம்பம் எழும்…
இது பங்குச்சந்தையைக் கவிழ்ப்பதற்கு நல்லது.
அணு மின்சாரம் என்றால் ஏதோ நாக பாணம் போல் சயனைட் குப்பி பயம் எழுப்புவதால் உள் கட்டுமானங்களில் சுணக்கம் விழும். நம்பகமான நாடு அல்ல என்னும் பிம்பத்தை சுமத்தலாம்.
டாலர் கீழே படுத்திருக்கும் இந்த நிலையில் இது பேஷ்.
கிடைத்தார் உதயகுமார். குருஷேத்திரமாகிறது கூடங்குளம்.
Situation Hopeless… But Not Serious
தொடர்புள்ள சுட்டிகள்:
1. NNSA HEU removal featured on The Rachel Maddow Show | National Nuclear Security Administration
2. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar
3. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.
4. பத்ரி சேஷாத்ரி: எந்த மின்சாரம் ‘நல்லது’?
5. பத்ரி சேஷாத்ரி: கூடங்குளம் போராட்டம்
6. கூடங்குளமும் தி.நகரும் « நேசமுடன்
7. கூடு :: இலக்கியம் :: குறும்படம்: “குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல் – சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.”
8. தமிழ்ஹிந்து – கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1 & விஸ்வாமித்ரா
9. அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை | ஆர்.பாலாஜி
10. எஸ்.குருமூர்த்தி » கூடங்குளம் போராட்டம்- திரைக்குப் பின்னால் யார்?