Monthly Archives: ஜூலை 2019

டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ?

I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno.                    —W. G. Sebald, The Rings of Saturn

செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?

அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.

செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.

“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.” 

WG Sebald, Austerlitz

  • ஸெபால்டின் நடையை சுருக்கமாகச் சொன்னால்
    • மனப்பதிவு கலந்த பயணக்குறிப்புகள்
    • புனைவில் கொஞ்சம் சரித்திரமும் தொன்மமும்
    • கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
    • அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
    • நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
    • ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
    • அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
    • ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
    • புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
    • யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்

செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.

“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.” 

― W.G. Sebald