Monthly Archives: பிப்ரவரி 2017

வால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்

உங்களுக்கு மாதந்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வேலை போய்விட்டது. என்ன செய்வீர்கள்?

முருகன் இட்லி கடையில் சேர்வீர்களா? காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை காலர் கசங்காமல் இருந்தவர், ஒரே நாளில் கழிவறை சுத்தம் செய்பவராக மாறுவீர்களா? ஒரு மணி நேரத்திற்கு ஒரு சந்திப்பு, மதிய உணவிற்கு ஒன்றரை மணி நேர ஒதுக்கல், எக்ஸெல் கோப்புகளை நிரப்புதல் என்றெல்லாம் காலந்தள்ளியவர் நான்கு டபரா காபியும் எட்டு தட்டு இட்லியும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் பம்பரமாகாச் சுழல்வீர்களா?

ஜேம்ஸ் ஆடம்ஸ் நிஜமாகவே செய்து பார்த்திருக்கிறார். அவர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். முதலீட்டாளர்களிடம் “இது அருமையான முதலீடு. உங்கள் சேமிப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பு ஆக்குவேன்!” என்று வார்த்தைஜாலத்தில் மயக்கி, பணம் பறித்தவர். 2008ல் துவங்கிய பொருளாதாரச் சரிவு 2009ல் விஸ்வரூபம் எடுத்தபோது, முதலீட்டாளர்களின் பொருள் எல்லாம் திவாலாகி விட, அந்தப் பணத்தை நிர்வகித்த ஜேம்ஸ் ஆடம்ஸும் வேலை நீக்கம் ஆகிறார்.

நானும் பலமுறை வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் அதே துறையிலேயே வேலை தேடி இருக்கிறேன். கணினி நிரலி எழுதுவதில் இருந்து கணினித்துறை ஆலோசகராக – பக்கத்து வீட்டிற்குத் தாவி இருக்கிறேன். தொலைத்தொடர்பு துறையில் இருந்து பொருளாதாரத் துறை; அங்கிருந்து சேமநலத்துறை என்று வெவ்வேறு துறைகளுக்குத் தாவினாலும் எல்லாமே கணினியும் நிரலியும் மென்பொருளும் நிர்வாகமும் சார்ந்த வேலைகள். ஒரு நாள் கூட இன்று மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை பார்க்கலாம் என்றோ பர்கர் கிங் கிளை ஒன்றைத் துவக்கலாம் என்றோ யோசித்ததே இல்லை.

இந்த மாதிரி சாதாரண மக்கள் யோசிப்பதில்லை. ஜேம்ஸ் ஆடம்ஸ் யோசிக்கிறார். ஏன்?

movies_films_waffle_street_james_adams_movie_images_wife_danny_glover_house

இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். முதலாவது… அவருடைய குடும்பப் பின்புலம். தாத்தா தொழில் செய்திருக்கிறார். டயர் விற்றிருக்கிறார். கார் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தியிருக்கிறார். அப்பாவும் அதே போல் பிறிதொரு பிஸினெஸ் நடத்தியிருக்கிறார். சர்க்கஸில் கீழே பாதுகாப்பு வளையம் இன்றி ஆடுபவர்கள் சாதாரணர்கள். ஆனால், சொந்தமும் பந்தமும் பக்கத்து ஊர்களில் இருப்பதும், அவர்களின் பணம் கொடுக்கும் துணைக்கரமும் கொண்டவர் ஜேம்ஸ்.

இரண்டாவது… மார்கன் ஸ்டான்லி அல்லது கோல்ட்மென் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரி பொய் வாக்குறுதி கொடுத்து செல்லாத பத்திரங்களை விற்று பெரும் பணம் ஈட்டியது. அதன் பிறகு, அந்த வருவாய் வருவதற்குக் காரணமாக இருந்த முகங்களை மாற்றியது. அந்த முகங்களில் ஒருவர் ஜேம்ஸ். புத்திசாலி நிதி வர்த்தகர். நிதியாளுமை தெரிந்தவர். வேலையை விட்டுத் தூக்கும்போது மூன்றாண்டு சம்பளம் கூட கொடுத்து சீட்டைக் கிழித்திருப்பார்கள். சிலர் இந்த பல்லாண்டு கால ஊதியத்தை வைத்துக் கொண்டு புதிய தொழில் தொடங்குவார்கள். ஜேம்ஸும் அது போல் யோசித்து இருப்பார்.

life-behind-the-lobby_-indian-american-motel-owners-and-the-american-dreamஆனால், பெரும்பாலான சப்வே உணாகங்களை குஜராத்திகள் நடத்துவதாக அமெரிக்க தேஸிகளுக்கு இடையே பேச்சு உண்டு. இது இன்னும் டிரம்ப் காதிற்கு எட்டியதா என்று தெரியவில்லை. அதே போல் உள்ளூர் காபிக் கடையான ‘டன்கின் டோண்ட்ஸ்’ உடனடி உணவகங்களும் இந்தியர்களே பெரும்பாலும் நடத்துகிறார்கள். இதைப் படித்த வெள்ளை இனவெறியர் எவராவது துப்பாக்கியும் கையுமாக டன்கின் டோனட்ஸுக்குச் சென்று அதன் முதலாளிகளை சுட்டுத் தள்ளாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல ஃபேஸ்புக்காரை வேண்டிக் கொள்கிறேன்.

இது போன்ற விரைவு உணவகங்களுக்கு வருமானம் ஓரளவு உத்தரவாதம். முதல் கிளையைத் துவக்கி நடத்துவதுதான் சிரமம். அதில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இரண்டாவது கிளை, மூன்றாவது கிளை என்று கடகடவென விரிவாக்கலாம். முதல் கிளையில் நாய் போல் உழைத்தவர்களை இரண்டாம் கிளையின் மேலாளர் ஆக்கலாம். அதை, அப்படியே விரிவாக்கி, ஒரு லயத்தில் செலுத்தினால் ஆறேழு கிளைகள் வரை எளிதாகக் கொண்டு சென்று நிம்மதியாக வாழலாம். ஆனால், முதல் கிளை மட்டும் ஒழுங்காக அமையாவிட்டால், முழு கட்டிடமும் விழுந்து விடும்.

mcfranchise_income

முதல் கிளை நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அங்கே கூட்டம் வர வேண்டும். சுவாரசியமான கூட்டமாக இருக்க வேண்டும். கிம் கர்டாஷியன் போன்றோர் எல்லாம் வாஃபுல் ஹவுஸ் பக்கம் வருவார்கள். அது நமது வாஃபுல் ஹவுஸ் ஆக இருக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு இருக்கக் கூடாது. சிப்பந்திகள் கர்ம சிரத்தையாக பணி புரிய வேண்டும். யாரும் கடன் சொல்லி ஏமாற்றி ஓடக் கூடாது. சும்மா சாப்பிடுபவர்களை விட இளைஞர் குழாம் வர வேண்டும். கல்லூரி மாணவிகள் வந்தால் மற்றெல்லோரும் தானாக வருவார்கள். எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாத சுகாதாரம் அமைய வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல். அதனால், முதல் கிளையில் உயிரைக் கொடுத்து நடத்த வேண்டும். அதன் பின், தன்னாலேயே கல்லா கட்டலாம்.

இதில் சில எட்டாக்கனிகளும் உண்டு. மெக்டொனால்ட் உணவகம் ஆரம்பிக்க ஐந்து மில்லியன் கேட்பார்கள். அதுவே சிபோட்லே துரித உணவகம் ஆரம்பிக்க வெறும் இரண்டு மில்லியன் போதும். வாஃபுல் ஸ்ட்ரீட் ஆரம்பிக்க 335,000 கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? எனவே, பலருக்கு இந்த தொழில் தொடங்குவது எல்லாம் ‘சீச்சீ… அந்தப் பழம் புளிக்கும்’ என்றே ஆகி விடுகிறது.

franchise-cost-chart1

இந்தத் திரைப்படம் எப்படி முக்கியமானது ஆகிறது:

1. வாழ்ந்துகெட்டவரின் வாழ்க்கையைச் சொல்கிறது. பந்தா பி.எம்.டபிள்யூ. கார். நான்கு படுக்கையறைகளும் அழகிய அறைகலன்களும் கொண்ட வீட்டைக் கொண்டவரின் நிஜவாழ்க்கை இது. எனக்கும் இது போல் நிகழ்ந்து, அமெரிக்காவில் நடுத்தெருவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்தும் கதை.

2. மேற்கத்திய உலகு இப்போது கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஒப்பந்தக்கார உலகிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதை இவரின் வாழ்க்கையும் சுட்டுகிறது. குமாஸ்தா வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்ன வேலையை முடிக்க இவ்வளவு டாலர் என்று பேரம் பேசுவோம். அந்த வேலையை செய்து முடித்தால் கையில் காசு. செய்து முடிக்காவிட்டால் பணமும் போச்சு; பேரும் போச்சு. கணித்துறை வல்லுநரோ, பயிலக குருவோ… எவரானாலும் காரியம் முடித்தால் மட்டுமே சோறு பொங்க முடியும்.

3. இந்த வேலை என்னால் செய்ய முடியும்; அந்த வேலையில் வருவாய் வரும் என்பதால் நாம் ஒரு பணியில் இருக்கிறோமா? அல்லது இந்த வேலையில் நயாபைசா லாபம் இல்லாவிட்டால் கூட செய்துகொண்டிருப்போமா? – இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒரு செயலை ஊதியத்திற்காக செய்தால் சிரத்தை இருக்கலாம்; நேர்த்தி கூட அமைந்து விடலாம்; நமக்கு திருப்தி கிடைக்குமா?