Tag Archives: சினிமா

ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்

சென்ற வார இலக்கியம் – சென்ற மாத இலக்கியம் போல் ஆகி விட்டது.
ஜூலை நான்கு அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி ஆரம்பித்த பல் வலி பல்கிப் பெருகி ஒடிஸியில் வரும் பிரும்மாண்ட தெய்வங்களாக மிரட்ட ஆரம்பித்தது ஒரு காரணம்.
சொல்வனத்தின் இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழ் இன்னொரு காரணம்.
கோடை என்றால் கொண்டாட்டம் என்பது முக்கிய காரணம்.

ஸ்டோரி ஜட்ஜ் நிகழ்விற்காக எழுதிய பேச்சின் சுருக்க வடிவு இங்கே.

சிவா (தமிழோசை ஆன் ஏர்) அவர்களுக்கு நன்றி!

https://www.youtube.com/@tamilosaionair2738/videos

காலச்சுவடு தமிழின் முக்கியமான இதழ்.
நிகழ்வுகளாகட்டும்; விமர்சனங்களாட்டும்; ஆம்லெட்டில் எல்லாவிதமான காய்கறிகளும் போட்டு வண்ணமயமாக வருவது போல் சுட்டுத் தருகிறார்கள்.
எனினும், கதைகளில் மட்டும் நிலைய வித்துவான்களையே ஆதரிக்கிறார்கள்.
அது போகட்டும்.
அச்சிதழ்.
பக்கங்களை தங்கள் பக்கம் ஆதரிப்பவர் பக்கம் கொடுப்பது இயற்கைதானே?

இந்த மாதக் கதைகள்:
1. தீ இனிது : பெருமாள்முருகன்
2. பாடிங்க்டன் கரடி : கோகுலக்கண்ணன்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா, ”247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்” என்னும் பத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்கவும்.

முன்பெல்லாம் அஞ்சலி என்றால் ஆசான் ஜெயமோகன் என்றிருந்தது.
தமிழ் விக்கியும் யுனைட்டெட் முழுமையறிவு விஸ்டமும் வந்த பிறகு அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க கா.சு. மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது:
– மு. பரமசிவம் (1934 – 2026) : பாட்டாளிப் படைப்பாளி : ஆ.இரா. வேங்கடாசலபதி
– பல்லடம் மாணிக்கம் (1936 – 2026) புத்தக மாணிக்கம் : கண. குறிஞ்சி
– பாரதிராஜா (1941 – 2026) : மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்

சுகுமாரனின் கட்டுரைகளை முன்வைத்து, எம். கோபாலகிருஷ்ணன், “கலையை எழுதுதல்” அலசுகிறார். முக்கியமான விமர்சனப் பார்வை.

#நறுக்: ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர…

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வை இஸ்க்ரா விரிவாகப் பகிர்கிறார். “அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் #மருதன் , பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்தவர்” என்கிறார்

ஏன்?

ராமச்சந்திர #குஹா பத்தியை தமிழில் மருதன் மொழியாக்கியிருக்கிறார்: மெய்யுரைப்பேன் மனமே!
மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்

சோழியன் குடுமி சும்மா ஆடுமா!?

நீளிரா திரைப்படம் குறித்து #சொர்ணவேல் திரைப்பார்வை.
ம. சோனியா, “சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய பரிசல் வெளியீடான பட்டறை நாவல் குறித்த அறிமுகப் பார்வை.

நிகழ்வுப்பார்வை: திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தி, முதல் விருதை முனைவர் ப. சரவணனுக்கு வழங்கியிருக்கிறது.

இது காலச்சுவடு மட்டும்.

வாசகசாலை இதழில் – நாற்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்.
காலச்சுவடு மாதத்திற்கு ஒரு தடவை வருவது நியாயம். அதற்கு செல்வாகும்.
இணைய இதழ்களும் மாதத்திற்கு ஒரு தடவை வெளியாவது நாம் பழச மறக்க மாட்டோம் என்பதற்கான உதாரணம்.

தினசரி வெளியிடுவதை ஒழுங்காகச் செய்பவர்கள் அகழ்.
அவர்களின் இணையக் கூடுகைகள் முக்கியமான செயல்பாடு.

குவிகம் அமைப்பும் வாரந்தோறும் வலை வழியே சந்திக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்.
பலரையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அனைவரையும் பேச வருக வருக எனக் ஜூம் கம்பளம் இட்டு வரவேற்கிறார்கள்.

இது போன்ற சந்திப்புகள் ஒவ்வொரு இதழுக்கும் அவசியம்.

அதை நெடுங்காலமாக செய்து வருபவர் ஜெயமோகன் + விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

ரஜினி x கமல்
ஜானகி x சுசீலா
ரெஹ்மான் x ராஜா

என்பது போல் கா.சு. வந்தால் ஜெ.மோ. வர வேண்டுமே : )

அவரின் பரிவாரங்களில் அகழ் இதழை ஏற்கனவே கவனித்து விட்டோம்.
அடுத்து வல்லினம்; கவிதைகள்.இன்;

அந்திமழை.

‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’ என்னும் தலைப்பில் தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ. ஞானசந்திர ஜாண்சன் உடன் பேட்டி இடம்பெற்றிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பேட்டி என்றால் இணையம் வழியாகக் கேள்விகளை அனுப்பி அந்த பதில்களை அப்படியே வெளியிடுவது.
தட்டச்சும் வேலை கிடையாது!
பலுக்கப் பிழை பார்க்கும் உழைப்பு கோராது!!
முக்கியமாக, ஒலிப்பதிவை வரிவடிவமாக மாற்றும் சுமை இல்லவே இல்லை!!!
பருத்தி புடைவையாகவே காய்க்கும் காலம்.

நல்ல பதில்கள்.

இன்னொரு பேட்டி: வல்லினம் இதழில் சாமிநாதன் முனிசாமி உடன் ஆன “மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!”. சுவாரசியமான ஆய்வு.

இரண்டையும் வாசித்தால் உத்வேகமும் பெறலாம்; வித்தியாசமான ஆளுமைகள் குறிடததும் அறியலாம்.

இறுதியாக மயிர்.இன் மூன்று படைப்புகளை முன்வைக்கிறேன்:
1. போதி எழுதிய சிறுகதை: “மலர் நீட்டம்” – இனி தான் வாசிக்க வேண்டும்.
2. ஆவுடை எழுத்தில் அப்பாவின் நினைவிடம் – இதையும் நீங்கள் படித்து தேறுமா எனச் சொல்லுங்கள்.
3. செல்வி.சுஜாதா ஆனந்த ராவ் அசோகமித்திரனின் “ஆண்கள் பெண்கள் குழந்தைகள்” என அலசியிருக்கிறார்.

அதில் இருந்து நறுக்:

இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.

விடுபட்டதைச் சொல்லுங்கள்.
வாசிப்போம்.

அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி

எஸ். ஜானகியை எனக்கு எப்படித் தெரியும்?
விவித்பாரதியில் “கண்ணா நீ எங்கே? வா வா நீ இங்கே!” வழியாக மிமிக்ரி கலைஞர் மாதிரி என அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னேலேயே தெற்கு மாட வீதி வன்னியர் மண்டபத்தில் அமர்க்களமாய் “மச்சானப் பார்த்தீங்களா!” பாடினவர் என்றறியேன்.
இந்தக் கதையை அம்மாவிடம் சொல்ல, அவர் கொஞ்சும் சலங்கை “சிங்கார வேலனே தேவா”விற்கு அழைத்துச் சென்றார்.
அக்காவோ அவருக்குப் பிடித்த, நெஞ்சத்தைக் கிள்ளாதே, “உறவெனும் புதிய வானில்” மூழ்கச் செய்தார்.

அம்மாவிற்கு குங்குமம் படத்தின் காட்சியமைப்பான “சின்னஞ்சிறிய வண்ணப் பறவை” பிடிக்கும். அதில் சாரதா பதைபதைப்பார். அந்தக் குரலும் ஜானகி.
எனக்கு ஸ்ரீதேவி. “செந்தூரப் பூவே” முதல் தர்மயுத்தம் “ஆகாய கங்கை பூந்தேன் மலர்” என நடிகை மட்டுமே தெரிவார். எத்தனை ஆலாபனை! என்ன ஹம்மிங்!
அக்கா நிச்சயமாய் “காற்றுக்கென்ன வேலி” சொல்லி சுஜாதாவின் பாய்ச்சல் கலந்த துள்ளல் குரலை உணர்த்தியிருப்பார்.
பாரதியார், “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” சொல்வார்.

குரலை வைத்து ஆளை எடை போடக் கூடாது.
அன்றில் இருந்து எஸ்.பி.பி.யை ‘பொம்பள ஜானகி’ என்றழைக்க ஆரம்பித்தேன்.
அவருக்கு “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்றால், ஜானகிக்கு “சிப்பியிருக்குது முத்துமிருக்குது! திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி!” கதை.

வேலையில் ஒன்றிப் போய் ஊறிக் கிடக்கும் ப்ளேலிஸ்ட் பட்டியலில் அவர் நிரந்தர முதல்வி:
– உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (அவளுக்கென ஒரு மனம்)
– சொல்லத்தான் நினைக்கிறேன்
– தேன் சிந்துதே வானம் (பொண்ணுக்குத் தங்க மனசு)
– அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் (தீபம்)
– ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)
– அழகிய கண்ணே (உதிரிப்பூக்கள்)
– காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
– பொன்வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)

மேலே சொன்னதெல்லாம் “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” என்றால் அடுத்து வருவது “குயிலே கவிக்குயிலே” என நினைவேக்க நனவோடை:
* அடி ஆத்தாடி (கடலோரக் கவிதைகள்)
* நல்ல நேரம் நாளும் யோகம் (ஜெயமாலினி!)
* நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)
* புத்தம் புது காலை (அலைகள் ஓய்வதில்லை)
* வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)
* தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சட்திரம்)
* இந்த மல்லிக மனச (டி ராஜேந்தர்)

அடுத்த தலைமுறையையும் அவர் விடவில்லை!
– சுந்தரி கண்ணால் ஒரு சேதி
– கண்மணி அன்போட காதலன்
– தென்றல் வந்து தீண்டும் போது
– மார்கழித் திங்கள் அல்லவா

மனம் அலைபாயும் போது “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” என நிழல்கள் ஓடும்.
சாந்தோம் பள்ளியில் ஒலித்த ஒரே சினிமாப் பாடல் “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்!”.
அதைக் கேட்டு மதம் மாறலாம் என்ற எண்ணம் எழுமளவு மெய்யுருக்கம்.
அதன் பின் “அலைகள் ஒய்வதில்லை” படத்தைப் பார்த்து முடிவை மாற்றி விட்டேன்.

நடுவே எம்.பி3 யுகம். அப்பொழுது எஸ் ஜானகி ஹிட்ஸ் எனப் போட்டு ~170 சொச்சம் பாடல் சிடி கிடைத்தது.
96 போன்ற படங்களில் அவருக்கு மரியாதை செய்தபோது ஜானு என்னும் பெயர் சந்தோஷம் தந்தது.

பக்திப் பாடலோ… பஜனோ… கஜலோ!

உங்களுக்கு என்ன ஜானகி நினைவு?
எஸ்.ஜே. என்றால் எந்தப் பாடல்?

இது அரசியல் பதிவல்ல

தமிழ் சினிமா பாடல்களில் குளிராடி அணிந்து கொண்டு குத்துப் பாட்டு ஆடுவது எந்த படத்தில் /எந்தப் பாடலில் இருந்து துவங்கியது?

நான் ஏதோ ரஜினி தான் துவக்கி வைத்தார் என்று நினைத்திருந்தேன்.

நீக் படத்தில் கோல்டன் ஸ்பேரோ அதற்கு முன்பே தயாராகி விட்டதோ!

இதற்கெல்லாம் முன்பு அஜித் தன் பாட்டுக்கு ஆடி இருக்கிறார்!

இன்னும் என்னவெல்லாம் தவறவிட்டேனோ?

காஞ்சனா, ஸ்ரீப்ரியா, படாஃபட், ஜெயசித்ரா என்றெல்லாம் யோசிக்காமல் கடந்த 20 ஆண்டுகளுக்குள் எந்தப் பாடலில் எந்த நாயகன் முதன்முதலாக தன் கூட ஆடுபவர்களுக்கு சன் கிளாஸ் 😎 போட்டு விட்டார்?

தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

  1. படம் பிடித்திருந்ததா? – ஓம்; ஆம்! ஆமாங்க…
  2. ஏன்? – காக்கி சட்டை, மகாநதி, புன்னகை மன்னன் என பல முக்கிய கமல் படங்கள் அவ்வப்போது தெரிந்தாலும், இது புத்தம்புதிய ‘நாயகன்’
  3. முதல் பாதி எப்படி? – உச்சஸ்தாயி. அழுத்தம். பாசாங்கற்ற பளிச்.
  4. இரண்டாம் பாதி? – தக் லைஃப் இரண்டிற்காக பாக்கி வைக்காமல் எடுத்ததற்கு ஷொட்டு
  5. ஏமாற்றிய தருணங்கள் – நாசர் நடிப்பு/கதாபாத்திரம்; நாலு பேரால் நினைவில் வைக்க முடியாத வசனம்; அண்ணன் – தங்கை பாசமலர்
  6. உற்சாக தருணங்கள் – பாலைவனம், பனிவனம், டெல்லிவனம், அலைவனம் என கேமிரா; ரீங்கரிக்கும் பொருத்தமான இசை; நான் எப்பொழுதாவது சொல்வேன் என்று நினைத்திரவே இராத: ‘சிம்பு அவர்களின் நடிப்பு!’
  7. த்ரிஷா – 96 போன்ற குப்பை படங்களில் பொம்மையாக வந்தவர் சும்மா ராணியாக ஜொலிக்கிறார்.
  8. பாடல்கள் – பாதிப் பாடல் மட்டுமே வெள்ளித் திரையில். மீதி அடுத்த அராஜக வாழ்க்கையில்
  9. பிடிக்கவில்லை என்பவர்கள் – நன்றாயிருக்கிறது என்றால் கண்ணியவான் வேசம் போய்விடுமோ என்னும் பயம் கொண்டவர்கள்
  10. மொத்தத்தில் – கமல் ரசிகன் என்றால் கண்ணிலேயே நிற்கும். மணி ரத்னம் விரும்பி என்றால் மனதில் லயிக்கும். பூமர் என்றால் ரசிக்கும்.

தக் லைஃப் – குறியீடுகள்

1. டெல்லி ராஜ்ஜிய போட்டிகள்:
– இந்திரா காந்தி x சஞ்சய் காந்தி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – ராஜீவ் காந்தி
– சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ராகுல் காந்தி
– அசோக் செல்வன் – ஜெயப்ரகாஷ் நாராயண்
– நாசர் – லால் பகதூர் சாஸ்திரி
– ஜோஜு ஜார்ஜ் – மொரார்ஜி தேசாய்
– மகேஷ் மஞ்சரேகர் – ஜனாதிபதி நிக்சன்
– த்ரிஷா – மாருதி சுஸூகி
—-

2. ஈடிபஸ் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

3. ஏகலைவன் – சிம்பு
உயிர் போன்ற கட்டைவிரலைக் கேட்பார் துரோணர்.
வளர்ச்சியையும் திறமையையும் கண்டு அச்சம் கலந்த பொறாமை கொள்வார் அர்ச்சுனர் கமல்.
மாறாப்பற்றைப் போன்ற அடிமைத்தனத்தை எதிர்பார்ப்பார் கமல் என்னும் ஆசான்.
—-

4. ஒரே பெண்ணை ராமனும் விரும்புகிறார்.
பத்து தல அசுரனும் நாடுகிறார்.
அவர் –> த்ரிஷா.
ராவணன் என்னும் சிம்பு, சீதையை சிறையெடுக்கிறான்.

5. புராணத்து சீதையை நிஜ வாழ்வில் த்ரிஷா என்னும் நட்சத்திரத்தின் குறியீடு.
இது உங்களைக் குழப்பலாம்.
கமல்தனமாக யோசியுங்கள்.
விண்ணைத் தாண்டி வந்த மன்மதன் அம்பு எவ்வாறு இரு முரடர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது?
—-

6. சீஸர் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

7. அபிமன்யு – கமல்
துரியோதனன் (சிம்பு)
துரோணாச்சாரியார் (நாசர்)
கர்ணன் (ஜோஜு ஜார்ஜ்)
கிருபர் (பகவதி பெருமாள் (அ) பக்ஸ்)
துச்சாதனன் (அர்ஜுன் சிதம்பரம்)
பீஷ்மர் (இளங்கோ குமாரவேல்)
—-

8. மகாபாரதம் என்றாலே வெண்முரசு.
ஜெயமோகன் போன்ற இலக்கிய பிதாமகர் பாத்திரத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர்!
அவரின் அண்ணன் போன்ற சுந்தர ராமசாமி ஆக நாஸர்.
அவரின் மகன் போன்ற வழித்தோன்றல்களை நாயக்கரே உருவாக்குகிறார்.
சதானந்த் போன்ற சாநி… மன்னிக்க… எதிரணிக்காரர்களுக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்து நேசக்கரம் கொடுக்கிறார்.
நாயக்கரைத் தவிர அவரின் அடிப்பொடியை நாடி, அமரன் பக்கம் வெகுஜனம் சாயும் போது விமர்சன மழையைப் பொழிகிறார்.
அப்படி என்றால், ‘இந்திராணி’ யார்? – சாகித்ய அகடெமியா? ஞானபீடமா??

9. ரொம்ப யோசிக்காதீங்க – இது நவீன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்

10. அதுவும் இல்லை – சிலப்பதிகாரம் + மணிமேகலை
– கோவலன் – த்ரிஷா
– கண்ணகி x மாதவி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – கவுந்தி அடிகள்
– கருணாநிதி – மணிமேகலை
– அட்சய பாத்திரம் – தமிழ் நாடு
– நெடுஞ்செழியன் – பார்வையாளர் ஆகிய நீங்கள்
– கோப்பெருந்தேவி – வாசிக்கும் தாங்கள் தான்!

வேட்டையன் வ.கே.கே.

1. இது ரஜினி படமா?
ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்

2. அனிருத் இசை எப்படி?
ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!

3. படம் எப்படி இருக்கு?
ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.

4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா?
நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.

5. அபிராமி?
முத்தமென்றால் கமலின் விருமாண்டி..
நடிப்பென்றால் ரஜினியின் வேட்டையன்.
நினைப்பென்றால் ஹம்மா… ஹம்மா (மிடில் கிளாஸ் மாதவன்)

6. வெள்ளித்திரையில் ஓடுமா?
தீபாவளிக்கு சன் டிவி.
கிறிஸ்துமசுக்கு அமேசான்.
அதன் பிறகு ஐபிடிவி.

7. இது யாருடைய படம்?
ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.

8. கதையும் வசனமும்?
அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.

9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா?
இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.

10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா?
அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.

அவதூறு வழக்கும் அவதூதர்களும்

மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.

எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார்.
தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார்.
அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.

நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.

இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…

சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.

இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம்.
முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.

ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன்
மைனே பியார் கியா – சல்மான் கான்
சான்வரியா – ரன்பீர் கபூர்
கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன்
பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங்
பாபி – ரிஷி கபூர்
ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப்
பர்சாத் – பாபி தியோல்
கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான்
தீவானா – ஷாரூக் கான்

எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.

ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.

மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.

ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.

ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?

தி.மு.க.வும் லவ்வர் திரைப்படமும்

”லவ்வர்” திரைப்படத்தைக் குறித்து பக்கம் பக்கமாக நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.

பட்டியல் கொஞ்சம் பெரிய பட்டியல்: சுரேஷ் கண்ணன் மட்டும் ஐந்தாறு தடவை; அபிலாஷ் இரண்டு, மூன்று முறை; அரவிந்த் வடசேரி; ச.ந. கண்ணன்; ஹரன் பிரசன்னா கொஞ்சம் காண்டாகி இருக்கிறார்; சுகுணா திவாகர்; தாமிரா ஆதி; அய்யனார் விஸ்வநாத்; விஷ்வக்சேனன்; பிரபு தர்மராஜ்; தமிழினி கோகுல் ப்ரசாத்; பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் யமுனா இராஜேந்திரன் (நாலந்து வரிகள்தான்); சௌம்யா ராகவன்; தனுஜா ஜெயராமன்; ப்ரீதம் பீதாம்பரம்; தமிழ்ப்பிரபா; சிவகுமார் வெங்கடாசலம்

இவர்களின் விரிவான பார்வையைத் தாண்டி என்ன புதியதாய் எழுதி விட இயலும்?

முன்னெல்லாம் விகடன் மதிப்பெண் போட்டால் சரியாக இருக்கும் என்பார்கள்.
இப்பொழுது வெ. சுரேஷோ ஹரன் பிரசன்னாவோ சுரேஷ் கண்னனோ சொன்னால் சரியாக இருக்கும் எனலாம்.

லவ்வர் நல்ல படம். தமிழில் இந்த மாதிரி தரமான சம்பவங்கள் எப்பொழுதாவது மட்டுமே நிகழும். வசனம், கதாபார்த்திரம், இடம், சூழல், என எல்லாம் களை கட்டும் படம்.

எல்லா பிம்பங்களையும் இரு வேறு பார்வையால் உடைக்கும் ஆக்கம்:
1. பெண்கள் பின்னாடி போகும் ஆண் என்றால் அந்தக் காரணம் மட்டுமே.
2. கல்லானாலும் காதலன்; புல்லானாலும் புருஷன் என்பது ஆணுக்கும் பொருந்தும்.
3. கல்லூரி காலத்தில் ‘மின்னலே’ என ‘அலைபாயுதே’ மணம் புரிந்து ஐந்தாண்டுகள் ஆனால் என்ன நடக்கும்?
4. தம் அடித்தால் கெத்தாக இருக்கும்; ஆனால், ஜம்மென்று மலையேறுவது எல்லாம் நாக்கு தள்ளும்.
5. 96 மாதிரி கல்லூரி மீள் சந்திப்பிற்கு வருவோருக்கு எல்லாம் ஒரே குறிக்கோள்: ‘நீ நல்ல, பெரிய ஆளாயிட்டியா? உன்ன விட எனக்கு சம்பளம் ஜாஸ்தியா?’
6. அர்ஜுன் ரெட்டி, அனிமல், வரிசையில் படம் எடுத்தால் பெண்களும் ரசிப்பார்கள்

7. படமே ஒரு பெரிய குறியீடு:

  • அ) மணிகண்டன் – திராவிடக் கட்சிகள்
  • ஆ) கௌரி ப்ரியா – தமிழக மக்கள் / வாக்காளர்கள்
  • இ) சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவளுடைய மேலாளராக (அல்லது டீம் லீடர்) – அண்ணாமலை
  • ஈ) அலுவலகக் குழு – பா.ஜ.க.
  • உ) ‘அம்மா’ கீதா கைலாசம் – சசிகலா (புருஷனும் சரியில்லை; பையனும் ஆதரவில்லை)
  • ஊ) ’அப்பா’ சரவணன் – இராகுல் காந்தி (எல்லோருக்கும் சம பங்கில் லட்சங்களைப் பிரித்துக் கொடுக்கிறார்)

இந்த பின் நவீனத்துவ புரிதலுடன் அச்சுறுத்தல், பயம், ஆசை, சொத்து, உல்லாசம் எல்லாவற்றையும் இன்னொரு தடவை பாருங்கள்!

Merry Christmas: Movie Review

‘மெரி கிறிஸ்துமஸ்’ ரசிக்க வேண்டிய படம்.

வசந்தபாலனின் ‘வெயில்’ மாதிரி மறந்துவிடக் கூடிய அபாயம் இருந்தாலும்…
ஆதவனின் சிறுகதைகள் மாதிரி இந்தக் கால இளைஞரைக் கவராமல் போனாலும்…
எம்.எஸ்.வி.யின் குரல் ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் குரல் கொடுத்து ‘காதலா… காதலா’விலும் நடித்தது போல் விஜய் சேதுபதி தமிழிலும் ஹிந்தியிலும் பின்னி இருந்தாலும் திராவிட நிறம் என்பதாலும்…

எவளாவது மொத முத நாளன்று ஊரு பேரு தெரியாதவன வீட்டுக்குக் கூப்பிடுவாளா?
இந்தக் கால Badoo, Bumble, eHarmony, Grindr, HER, Hinge, Match, OkCupid, Plenty of Fish, Tinder, Zoosk காலகட்டத்தில் இது சகஜம்.
இது முதல் முடிச்சு.

’96’ மாதிரி பள்ளிலிக்கும் பள்ளி பிராய அபிலாஷை எல்லாம் தாடி நரைத்த காலகட்டத்தில் நடக்கிற காரியமா?
காதல் என்பது காமத்தில் துவங்கி சற்றே ஒற்றை மோற்று விஸ்கி கலந்து வருங்காலத்தை யோசித்து வருவது என்பது நிஜம்.
இது இரண்டாம் முடிச்சு

கிறிஸ்துமல் படங்களுக்கு என்று ஹாலிவுட்டில் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது மீறுகிற விஷயமா?
விடுமுறைக் காலம். எல்லோரும் ஜோடி ஜோடியாக உலாவுகிறார்கள். குடும்பத்திற்கு பாரம்பரியமும் LGBTQIA2S+ அல்லாததும் முக்கியம். இந்த நிர்ப்பந்தத்தை கேலி செய்வது ஸ்ரீராம் ராகவனுக்கு அவசியம்.
இது மூன்றாம் முடிச்சு,

நான்காம் முடிச்சு முக்கியமான முடிச்சு. அதை நெட்ஃப்ளிக்ஸ் திரையில் பாருங்கள்.

இந்தப் படம் கொண்டாட்ட மனநிலையில் உணர்ச்சிகரமாக ருசிக்க வேண்டியது. Domaine de la Romanee-Conti சரக்கு ஏன் அதிக விலை என்றெல்லாம் கேட்காமல் விரும்பப்படுவது போல் சுவைக்க வேண்டியது.
நீங்கள் மும்பை நகரத்தை பம்பாய் என்று அழைக்கப் பட்ட காலத்தில் இருந்து உழன்றவரா?
கத்தோலிக்கர்கள் மட்டும் நத்தார் தினத்தைக் கொண்டாடுவார்கள் என்று நம்பாமல் அஞ்சலையையும் மேரியையும் டாவு அடித்தவரா?
ஐயங்கார் பேக்கரியில் கேக்கும்; திருப்பலியில் ரொட்டிக்காவும் வைனுக்காகவும் பங்கெடுக்காமல் குட்டைக் கால் பாவாடைகளுக்காவும் ஜெஸ்ஸிக்காவும் யேசுவை ஸ்தோத்திரம் செய்தவரா?

அதெல்லாம் நினைவேக்கம். கழிவேற்ற சிந்தனை. பழைய நெனப்புடா பேராண்டி!
ஆனால், படம் என்பது பின்னணி இசை; துள்ளல் திரைக்கதை; நினைவில் நிற்கும் நற்செய்தி!!
வெள்ளித்திரையில் பார்க்கவில்லையே என வருத்தப்பட வைக்கும் ஆக்கிரமிப்பும் இப்படியெல்லாம் கத்ரினா கைஃபை இதுவரைக்கும் சாகடித்திருக்கிறீரகளே என்னும் கடுப்பும் கொண்டிருப்பவர்களுக்கு சாலச் சிறந்த ஆக்கம்!!

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

தடுப்பும் தண்டவாளப் பயணமும்

ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
அ) இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பு கிடையாது.
ஆ) பதவியோ, பணமோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் மதிப்பு.
இ) நூற்றைம்பது கோடி பேரில் 15,000 பேர் இறப்பதெல்லாம் ஒரு சங்கதியே கிடையாது.
ஈ) மறுபிறவி, ஜனனமும் மரணமும் சுழற்சி என்றிருப்பதை இந்தியர்கள் அறிவதால் பிற உயிர்கள் இறப்பதை அலட்சியம் செய்கிறார்கள்.

1984-இல் ‘தி ஹிந்து’ நாளிதழின் கடைசி பக்கங்களைத் தவிர முகப்புப் பக்கத்தையும் படிக்கத் துவங்கிய காலம். நவம்பர் 84 முழுக்க இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்து வாரிசு ராஜீவ் அரசராக ஆன கதையும் அலங்கரித்தது. டிசம்பரில் போபால் விபத்து குறித்து அந்தத் தலைப்புச் செய்தியை பார்த்தபோது, கையாலாகாத்தனமும் கோபமும் ஆத்திரமும் அழுகையும் எல்லாமுமாக குழப்பமாக, இந்த அரசு மீதும், அதன் அதிகாரிகள் மீதும், நாடு மீதும், நாட்டின் விதிகள் மீதும், அசூயை கலந்த வெறுப்பு எழுந்தது.

எனக்குத் தெரிந்த யூனியன் கார்பைட் நிறுவனம் ‘எவரெடி’ (Eveready) பாட்டரி தயாரித்தது. என்னவர்களின் கண்களையும் எண்ணற்றவர்களின் உயிர்களையும் பறிக்கக் காரணமுமாய் இருந்தது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று படங்கள் வந்த காலம். வெள்ளித்திரையில் கண்கவர் நாயகிகள் எளிதில் காதலில் விழுவது போல், திரைப்படங்களில் மட்டுமே புரட்சி வெடிக்கும் என விளங்கத் துவங்கியது. நிஜத்தில் வில்லன்கள் சௌகரியமாக படகுக் கார்களில் பவனி செல்வார்கள். ஐந்தரை இலட்சம் பேரை முடமாக்கினாலும் எந்தவித பின் விளைவுகளும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சொகுசாக அடுத்த கைங்கர்யத்தில் இறங்கி விடுவார்கள்.

எத்தனை சாலை விபத்துகள்?
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இரயில் தடம்புரண்டு, எதிருக்கெதிர் ட்ரெயின் மோதிக் கொண்ட இறப்புகள்?
சூரத்தில் கொடுந்தொற்று, சென்னையில் புயல், கடலில் சூறாவளியில் மீனவர்கள், நிலநடுக்கம், பூகம்பம், மழை வெள்ளம்…
அதெல்லாவற்றையும் விட திறமைக்கு வேலைகொடுக்காத சூழல். கொடும் பசி நிலவிய சமூகம்.

இந்திய தினசரிகளுக்கு எதிர்மறையாய் செய்திகளைத் தருவதில் இருந்த அசுரத்தனமா?
அல்லது நம் நாட்டில் நிஜமாகவே அலட்சியமும் அசட்டைத்தனமும் அசமஞ்சமும் சேர்ந்த நிர்வாகத் திறமையின்மையா?
ஒவ்வொரு அதிகாரியும் லஞ்சம் வாங்கக் கூசாதவர்களாக, அராஜகம் செய்தால் எந்தவித எதிர்விளைவும் கிடைக்காத சாக்கடைத்தனமா?

நெட்ஃப்ளிக்ஸில் ’ரெயில்வே மென்’ (The Railway Men) பார்த்தவுடன் தோன்றியது —> இன்று இதெல்லாம் மாறியிருக்கிறதா?
அல்லது செயல்துடிப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்கள், ‘கடமையைச் செய! பலனை எதிர்பாராதே!!’ ரகமா?

குறைந்த பட்சம் நல்லவர்களும் நேர்மையாக இயங்கியவர்களும் தன்னலம் பாராது இயங்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். என் ‘துரியோதனப்’ பார்வைக்கு அவர்கள் தென்படவில்லை.
பாலும் தேனும் இன்னும் இந்தியாவில் ஓடவில்லை. அவற்றை ஒடவைப்பதற்காக உண்மையாக உழைப்பவர்களை நாமும் கண்டுகொள்ளவில்லை.

நன்றி: https://aqli.epic.uchicago.edu/country-spotlight/india/