புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் ஒரு சமயம் தவில் நாதஸ்வரம் முதலானவை இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவை என்ன என்று கேட்டபோது நாதஸ்வரம் வாசிக்கக் பழகிக் கொள்கிறேன் என்று கூறி, ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதும் போது நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது என்று கேட்டு விட்டுச் சிரித்தார்.
திமிரி, பாரி என நாகசுரத்தில் இருவகை உண்டு. பாரி என்னும் கருவியே இன்று பெரு வழக்கத்தில் உள்ளது. இது ஆச்சா மரத்தினால் கடைந்து செய்யப்படும். இதில் செருகப்படும் சீவாளி வழி காற்று ஊதப்படும். கருவியிலுள்ள ஏழு துளைகளில் விரல்களால் இசை பெருக்கப்படும். நாகசுர இசைக்கு ஆதார சுருதி வழங்கும் கருவி ‘ஒத்து’ எனப்படும்.
ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.
பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.
நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்
ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.
இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.
ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.
நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.
திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்
நான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.
அதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.
இன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.
க.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.
இந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார்கள் என்பது என் கருத்து.
இந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.
ஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.
நன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு எழுதியவர் – தமிழவன் முதல் பதிப்பு: 2014 வெளியீடு: அடையாளம் விலை: ₹ 180 பக்கங்கள்: 237
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde