
கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.
பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.
திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.
இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?
இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.
இந்தப் பதிவில் எந்தக் குறியீடும் எல்லை.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது aquarium, அபான வாயு, ஆபத்து, உரையாடல், உல்லாசம், எழுத்தாளர், ஒற்றுமை, கப்பல், சந்திப்பு, சிக்கல், சுற்றுலா, தகவல், திமிங்கலம், திமிங்கிலம், நியு இங்கிலாந்து, படகு, பயணம், பாஸ்டன், பிரச்சினை, பேச்சு, மூச்சு, வாந்தி, New England, whale watch