ரொம்ப நாளாக கூடவே ஓடுபவர். அன்றும் ஜிம்மில் பைக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் ஐந்து நிமிடம் ஓடுவதும் நான்கு நிமிடம் நடப்பதுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். காதில் தற்போதைய ஹிந்தி ரெஹ்மான் ஒலியை மீறி தடால் சப்தம் கேட்டது.
பக்கத்தில் சாதாரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர், கீழே விழுந்திருந்தார். 911 அழைத்தார்கள். அங்கே இருந்த எவருக்கும் முதலுதவி தெரியவில்லை.
ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே உயிர் பிரிந்து விட்டது. வயது 44.
அவர் என்னைப் போல் திடீரென்று ஓட வருபவர் அல்ல. பல வருடங்களாக தினசரி வருபவராம்.
மரணம் கண் முன்னே நிகழ்வதை கையாலாகாமல் பார்ப்பது இரண்டாவது தடவை. முதல் தடவை திருச்சானூர் கோவில் வாசற்படியில் அப்பா வழுக்கியபோது பதைபதைத்ததும் ஓடிப்போய் என்னென்னவோ செய்து பார்த்ததும்; சிரார்த்தம் நம்பிக்கையில்லாமல் போடாமல் இருப்பதும்; ‘நான் கூடப் போறேனில்ல! ஒண்ணுத்துக்கும் கவலை வேண்டாம்’ என்று வாக்குறுதி சுக்கலானதும்; வாழ்க்கை மாயை போன்ற அநித்தியங்கள் தோன்றியதும்; செய்த பாவக்கணக்கின் பட்டியலும்; சில இளையராஜா சோகப்பாடல்களும்; கடவுள் நம்பிக்கையும்; கடவுள் வெறுப்பும்; இலட்சிய வேட்கை கொழுந்துவிட்டெறிவதற்கான தாகசாந்தியும்; எதற்காக சின்னச் சின்ன விசயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வைகிறோம் என எல்லாம் ஒட்டுமொத்தமாய் வந்து போனது.
எதுவும் நிலைத்து இலயிக்கவில்லை.